Sunday, December 19, 2021

உறவுபோட்டமுடிச்சு_80

உறவுபோட்டமுடிச்சு_80

தீபாவளி.  இரவு தூக்கம் சரியாக இல்லை.  இருந்தாலும் அலாரம் அடிக்க நாலரை மணிக்கு முழிப்பு.  பாயை விட்டு எழுந்தவுடன் அங்குமிங்கும் பார்க்கிறாள்.

'ஒருவேளை வந்திருப்பானோ?'

பார்வை அது அனுபவித்த ஏமாற்றத்தை மனதுக்குள் அனுப்பி விடுகிறது.  இனி மனம் படும் பாட்டைப் பற்றி அதற்கு கவலையில்லை.

சமையல் அறை லைட்டின் ஒளி சாத்தியிருக்கும் கதவையையும் தாண்டி ஒரு நீளக் கோட்டை ஹாலுக்குள் பதித்துக் கொண்டிருக்கிறது.

'அம்மா, எப்ப எழுந்த?'

'வா, எழுந்துட்டியா?  நாலு மணிக்குதான் எழுந்தேன்.  கங்கா ஸ்நான எண்ணெய் காஞ்சிண்டிருக்கு.  பல் தேச்சு முகமெல்லாம் அலம்பிண்டு வா.  சரியாயிருக்கும்.  தலைக்கு வெச்சு விடறேன்.'

'ஃபைவ் மினிட்ஸ் மா.'  அதாவது அம்மா மடியில் அஞ்சு நிமிஷம்.

'ஏண்டா, தூக்கம் கலையலையா?'

கனவு கலைந்தால் தூக்கம் கலையுமோ என்னவோ?

'ம்ம்ம்....'  இப்போது மரவட்டை சுருட்டல்.

'அம்மாவும் பொண்ணும் என்ன பண்றேள்?' 

கேட்டுக் கொண்டே ஞானம் இவர்களோடு சேர்ந்து கொள்கிறாள்.

'இப்படித்தான் மெட்ராஸ்லேந்து வரும்போதெல்லாம் பாலாஜி என் மடியில படுத்துண்டு லேஸில எழுந்துக்க மாட்டான்.  வந்திருக்கலாம்'

'வருத்தத்த போக்கிக்கலாம்னு அம்மா மடியில படுத்துண்டா பாலாஜிய ஞாபகப் படுத்தி வருத்தத்த கூட்டறா.'

ஞானத்தின் மீது மனதோடு ஒரு சின்ன கோபம்.  சட்டென்று எழுந்து காலைக் கடன்களை துரிதமாக முடிக்கிறாள்.  காப்பி முடிந்தவுடன் கோலம் போடப்பட்டிருந்த பலகையில் அமர்கிறாள் பிள்ளையார் துண்டை மேலே போர்த்திக் கொண்டு.

மாமி ஆசைப்பட்டு அவள் கையால் முதல் ஸ்பூன் எண்ணெயை கீதாவின் தலையில் கையோடு சேர்த்து அழுத்தி வைக்கிறாள்.

'சீக்கிரம் இந்தாத்துக்கு மாட்டுப் பொண்ணா வந்து நாலோ அஞ்சோ பெத்துப் போடு.  நானும் சீதாவும் தான் அசடா ஒண்ணோட நிறுத்திண்டுட்டோம்.  நீயாவது சமத்தா இரு.'

இந்த ஆசையில் மாத்திரம் கிட்டத்தட்ட எல்லா பெற்றோர்களும் அந்த காலகட்டத்தில் ஒன்றுதான்.

மாமியின் சாஸ்திர துவக்கம் முடிந்தவுடன் அம்மாவின் அராஜகம் கீதாவின் மண்டையில் தூள் பறக்கிறது.  'மொள்ளம்மா .. வலிக்கறது.  மண்ட கழண்டுடும் போல இருக்கு.'

'கீதா, நாகத்தாத்துல உனக்கு வாசன சீயக்கா பொடி கொடுத்துருக்கா.  அத எடுத்துக்கோ. எங்களுக்கு புலி மார்க் சீயக்கா பொடி போதும்.'

'மாமி, பிரமாத வாசனையா இருக்கே.  சித்ரா அம்மா கிட்ட எப்படி பண்ணினான்னு கேட்டு தெரிஞ்சுக்கறேன்.'

துணிமணிகள் வாசனைப் பொடியுடன் குளியலறை சென்று தாழப்பாள் போட்டுக் கொள்கிறாள்.  போன வருடம் கல்கி தியேட்டரில் பார்த்த படத்திலிருந்து பாடுகிறாள்.

'நெஞ்சில் குடியிருக்கும் அன்பருக்கு நானிருக்கும்
நிலைமை என்னவென்று தெரியுமா?
நிலைமை என்னவென்று தெரியுமா?'

ஆரம்பித்தவுடனேயே மனதோடு தைக்கப் பட்டிருந்தவன் இவளிடம் சொல்லாமலே வெளியே வந்து விட்டான்.  இனி பாடலின் சரணத்திற்கு எங்கே போகப் போகிறாள்?

'வந்திருக்கலாம் டா நீ.  இப்பல்லாம் உன்னோட நெனப்பாவே இருக்கு பாலாஜி.  ஏதோ உன் கிட்ட தோத்துண்டே இருக்கணும் போல இருக்கு.  ரெண்டு மூணு வருஷம்.... ஓ.  முடியாது போலத்தான் இருக்கு.'

ஈரம் மனசுலேயும் வீரம் உதட்டுலேயும் இருக்கறதா காட்டிக் கொண்டாலும் மாறி அல்லவா இருக்கிறது உண்மை நிலவரம்.

குளியல் முடிந்து குங்குமம் ஓரத்தில் தடவிய புது துணிமணியை வாங்கிக் கொண்டு உதட்டோரம் சிரிப்புடன் ரேழி அறைக்கு செல்கிறாள்.

மஜந்தா, கத்தரிப்பூ, பிங்க்,ஆரஞ்சு, சிவப்பு ... ஈஸ்ட்மேன் கலரில் ட்யூப்ளிகேட் ஜரிகை ப்ளஸ் எம்ப்ராய்டரி வேலைப்பாட்டில் பாவாடை தாவணி, ரவிக்கை காஸ்ட்யூமில் அலங்காரம் முடிந்து ரூமைத் திறந்து வெளியே வரும் போது மூன்று பேர் கண்களும் அவளின் அழகையே ரசிக்கின்றன.

'மாமா, நன்னா இருக்கா?'

'இருக்காவா?  தேவதையே ஆத்துல இருக்கற மாதிரி இருக்கு.'

'மாமி, நன்னா இருக்கா?'

'புடவ வாங்கிக்கலையா?'

'இல்ல மாமி.  கல்யாணத்துக்கப்பறம் எங்க இது மாதிரியெல்லாம் போட முடியும்?  நீங்களும் சம்மதிக்க மாட்டேள் இல்லையா? அதான். ஆச தீர இந்த மாதிரி கல்யாணம் வரைக்கும் எல்லா தீபாவளிக்கும் இப்படியே வாங்கலாம்னு இருக்கேன்.  நன்னா இருக்கோன்னோ?'

'ரொம்ப நன்னா இருக்கு.  பாலாஜி முன்னாடி இப்படி நின்ன, உடனே நிச்சயதார்த்தம் பண்ண சொல்லிடுவான்.  இந்த பாவாட தாவணியும் வித்யாசமாத்தான் இருக்கு.  இன்னும் சின்ன பொண்ணு தான நீ.  இருபது தான ஆகறது.'

'அம்மா....'  எப்படி இருக்குன்னு அம்மாவிடம் கேட்கவில்லை.  ஆனால் அவள் சுற்றிய தட்டாமாலை சீதாவிடம் கேட்டது.

'நன்னா இருக்கு. மாமா மாமிக்கு நமஸ்காரம் bபாவமா இப்போ பண்ணிக்கோ.  அவ ரெடியானோன்ன நன்னா நமஸ்காரம் பண்ணிக்கலாம்.  சாமி முன்னாடி லக்ஷ்மி ஸ்தோத்திரம் சொல்லிட்டு ரெண்டு மத்தாப்ப சாமிக்கு காட்டு.'

'மாமா மாமி ஸ்ட்ரெயிட்டா நில்லுங்கோ.  தலைய குனியறேன்.  நமஸ்காரமா ஏத்துக்கோங்கோ.'

'கட்டி சமத்துடி நீ.  இந்த ட்ரெஸ்ல உன்ன பார்க்க பாலாஜிக்கு கொடுத்து வைக்கல.  இன்னொரு நாள் மன்னார்குடி போகும்போது ஸ்டூடியோல இதே ட்ரஸ் போட்டுண்டு ஃபோட்டோ எடுத்து பாலாஜிக்கு அனுப்பு.'

'அம்மா என்ன ஆசிர்வாதம் பண்ணும்மா.'

'பாலாஜிய பண்ணின்டு மாமா மாமிகிட்ட எப்போதும் நல்ல பேர் எடுத்துண்டு சந்தோஷமா இரு.'

இப்படி ஆசிர்வாதம் பண்ணிவிட்டு உணர்ச்சி வசப் படுகிறாள்.  ஞானம் அவள் கைகளைப் பற்றுகிறாள்.

'என்ன சீதா.  நாளும் கிழமையுமா அழுதுண்டு.  அவ  எங்காத்து பொண்ணாகி நாலு மாசத்துக்கு மேல ஆகறது.  அவ சமத்து உனக்கும் எனக்குமே கிடையாது.  அழாத.  கொஞ்சம் எல்லாரும் தாலி கழுத்துல ஏறர வரைக்கும் பொறுமையா இருக்கனும்.  இப்பவே என் புள்ள அவ கழுத்துல முடிச்சு போட மாட்டானான்னு தான் இருக்கு எனக்கும்.  என்ன பண்றது, பொழப்புன்னு ஒண்ணு இருக்கே.'

ஸ்லோகத்தை சொல்லிவிட்டு வாசலுக்கு வந்து திண்ணைப் பகுதியில் பத்து பனிரெண்டு அகல் விளக்கை ஏற்றி விட்டு அக்ரஹாரத்தை நோட்டமிடுகிறாள்.

யாரோ ஒருவர் தோளில் பையுடன் வேகமாக நடந்து வருவது அரைகுறை இருட்டில் தெரிகிறது.

'ஒருவேளை..... பா...லா.... ஜி.  எஸ் ... அவனே தான்.'

அவனென்று உறுதியாகவில்லை.  உறுதியாக்கி விட்டாள் அவன்தான் என்று.  மனசு முழுவதும் சங்கு சக்கரம்.  மனசு முழுவதும் கம்பி மத்தாப்பு.  மனசு முழுவதும் பூச்சட்டி புஸ்வாணம்.

வருகிறவன் ஒரு அடி இவளை நோக்கி வர, இவள் கண்கள் இரண்டடி விசாலப் பார்வையை வீச .... பொறுமை இல்லை.  ஓடுகிறாள் அவனை நோக்கி.  அவனே தான்.

'பாலாஜி..... நீ ரொம்ப மோசம்.  உன்னோடு பேசமாட்டேன்.'

'ஏய் கீதா.... அதான் வந்துட்டேனே.'

'முடியல டா.  யூ ஆர் கில்லிங் மீ டெய்லி.'

'ஏய் கீதா.  ரிலாக்ஸ். நீ மன்னார்குடில இருப்பேன்னு நெனச்சேன்.'

'முதல்ல ஆத்துக்கு வா.  நெறைய  பேசுவோம்.  ரொம்ப டயர்டா தெரியற.'

'பஸ்ஸில ரொம்ப ரஷ்.  அல்மோஸ்ட் ஸ்டான்டிங்ல வந்தேன்.  பை தி பை,  ரொம்ப ரொம்ப ப்யூடிஃபுலா இருக்க இந்த ட்ரெஸ்ல.  பார், மறந்தே போயிட்டேன் உன்ன விஷ் பண்ண.  ஹாப்பி தீபாவளி.'

'த்தேங்கஸ்,  ரோடா இருக்கு.  ஆத்துக்குள்ள வா.  நானும் உன்ன விஷ் பண்றேன் கைகுலுக்கி.'

'ஆஆஆ.... என் கீதாவா இத சொல்றது?  கேட்கவே ஜில்லுனு இருக்கே.'

'ஒன்லி ஹேண்ட் ஷேக்.  நோ மோர்.  நோ லெஸ்.'

'ஐ ஆம் ஆனர்ட் மை டியர் ப்ரின்ஸஸ்.'

ஆம் வந்தாச்சு.  வாசலிலிருந்தே கீதாவின் குரல்.  தப்பு தப்பு, கத்தல்.

'அம்மாஆஆஆ.....மாமிஇஇஇ .... மாமா ஆஆஆ....  ட்டொட்டொடைண்..... பாலாஜி அரைவட்.'

எல்லா பெரிய மத்தாப்புகள் முகத்திலும் சிரிப்பு.... தப்பு தப்பு.... பூரிப்பு.

'நாளைக்கு ஏதோ பரீட்சை.  வர முடியாதுன்னு லெட்டர் போட்டிருந்தியே?'

'மாமி, இதுக்கு பதில் நான் சொல்றேன்.  ஜயா நம்ம கிட்ட மெட்ராஸ் அல்டல் அல்டிண்டார். இவர் கடுதாசிய பார்த்துட்டு எல்லாரும் கண்ணீரும் கம்பலையுமா இருப்போமாம்.  அப்ப திடீர்னு வந்து நின்னு எல்லாருக்கும் ஷாக் கொடுப்பாராம்.  நாம என்ன அப்படியா இருந்தோம்.  நன்னா அசோகா அல்வா நேத்திலேந்து சாப்டுண்டு எவ்வளவு ஜாலியா இருந்தோம்.'

'அசோகா வா அத்தை?'

'அம்மா, பாலாஜிக்கு கொடுக்காத.  நம்ம எல்லாரையும் ஏமாத்தினதுக்கு அசோகா ஒரு பிட்டு கூட கிடையாது.'

'போதும் கீதா.  வந்ததும் வராததுமா அவன் கிட்ட சண்ட போடாத.  வெளிச்சம் நன்னா வரதுக்கு முன்னாடி அவன் கங்கா ஸ்நானம் பண்ணட்டும் முதல்ல.'

'பாலாஜி, நீ கொண்டு வந்த பை இந்த கனம் கனக்கறது.  என்ன இருக்கு அப்படி இதுல'

'நான் ப்ரஷ்ஷ எடுத்துண்டுடறேன்.  நீயே பிரிச்சு எல்லாருக்கும் காமி கீதா.'

'மாமா, மாமி, அம்மா.... எல்லாரும் வாங்கோ என் கிட்டக்க.'

'அன்டா காக்கஸம் அபு காக்கஸம் திறந்திடு ஸீஸேம்.'

ஸிப்பை திறந்து ஒவ்வொன்றாக வெளியில் எடுக்கிறாள்.  மாமாவுக்கு ஜரிகை வேஷ்டி அங்கவஸ்திரம்.  மாமிக்கும் அம்மாவுக்கும் நைன் யார்ட்ஸ் புடவைகள்.  அவனுக்கு வேஷ்டி ஜிப்பா.  கடைசியாக கீதாவுக்கு பட்டு சாரி.  பட்டு சாரி பெட்டியைப் பார்த்தவுடன் பையை அப்படியே அம்போன்னு போட்டு விட்டு அதை எடுத்துக் கொண்டு வெளிச்சத்திற்கு ஓடுகிறாள்.

'ஃபண்டாஸ்டிக்.  சூப்பர் கத்திரிப்பூ கலர்.  டிஸைன் பட்டு. இரண்டு இஞ்சு பார்ட்ர்.  கற்பனையே செய்திருக்க முடியாத தலைப்பு.   உடம்பு முழுவதும் ஃப்ளவர்ஸ்.  பர்ஃபக்ட் மேட்சிங் ப்ளவுஸ் பிட்.'

எக்ஸைட்மென்ட் ஓவர் பெளண்ட்.

பெட்டியை தூக்கிக் கொண்டு முகம் அலம்பிக் கொண்டிருந்தவனிடம் ஓடுகிறாள்.

'உன் செலக்ஷனா பாலாஜி?'

'நான் கடையில உன் அழகப் பத்தி சொல்லிண்டே வந்தேனா?  பத்ம விஜயம் மாமாவோட மாட்டுப் பொண்ணு சித்த நாழில புடிச்சுட்டா.  ஒரு ஐடியா கெடச்சுடுத்து.  இனிமே நானும் நன்னா ஸெலக்ட் பண்ண கத்துண்டுடுவேன்.'

'ரொம்ப நன்னா இருக்கு பாலாஜி.  அவா கிட்டேயும் சொல்லு.'

தொடரும்.....

No comments:

Post a Comment