Sunday, December 19, 2021

உறவுபோட்டமுடிச்சு_73

உறவுபோட்டமுடிச்சு_73

By பாஸ்கர் சத்யா 

காலை ஒரு ரவுண்டு வயல் பரப்பு முழுவதும் சுற்றிப் பார்த்து விட்டு வந்துவிட்டாள் கீதா.  இன்னும் இரண்டு தினங்களில் நாற்றங்கால் வேலைகள் இனி ஒவ்வொன்றாக துவங்க வேண்டும்.

ஒரு பாட்டம் இயற்கை உரங்களும் தழைச் சத்து உரங்களும் பூச்சி கொல்லி மருந்துகள் தேவையான அளவிலும் கலந்து பூமா தேவியிடம் சமர்பிச்சாச்சு.  இனி நாற்றுகள் நடும் போது தன் நாற்று பிள்ளைகளுக்கு அவள் அதை ஊட்டி அவைகளை வளர்க்க வேண்டும்.

மாமாவிடம் வயல் விஸிட் ரிபோர்ட் பண்ணியாச்சு. அவருடைய நாளைக்கான ஆலோசனைகளையும் குறித்து கொண்டாகி விட்டது.

'நீ முதல் தடவை வயல் வேலையில இறங்கியிருக்கியே.  உன் அபிப்ராயத்துல விளச்சல் எப்படி இருக்கும்?  சரியா இருக்கணும்னு அவசியம் இல்ல.  நீ எப்படி கணிக்கறேன்னு தான் பார்ப்போமே?'

'மாமா, இது ரொம்ப ஓவர் மாமா.  என்ன பார்த்தா பாவமா தோணலையா?  செடியெல்லாம் அடர்த்தியா இருக்கு.  அத எல்லாத்தையும் எடுத்து கட்டி பிரிச்சு வேற எடத்துல நட்டு அதெல்லாம் குட்டி போட்டு..... மாமா, இப்ப சொல்றதா இருந்தா ஜோஸ்யம் தான் சொல்ல முடியும்.'

'ஜோஸ்யம் தான் சொல்வேன்.'

'ஏக்கருக்கு நாலு டன்? ஓரளவு சரியா மாமா?'  மொத்தத்துல 250 டன்னு எதிர்பார்க்கிறேன் மாமா.'

'குட்.  நல்ல உழப்பும் பொருட்களும் போட்டுருக்கியே.  இது சாத்தியம் தான்.  உனக்கு நல்ல தன்னம்பிக்கை இருக்கு கீதா.  சரி, இது இருக்கட்டும்.  எனக்கு ஒரு உதவி செய்யணுமே.'

'சொல்லுங்கோ மாமா.  செய்யறேன்.'

'நீ இப்ப மன்னார்குடிக்கு போகணும்.  அங்க தாலுகா ஆபீஸ் போய், அன்னிக்கு என்ன பார்க்க வந்தாரே மஹாலிங்கம் தாசில்தார்.  அவர பார்த்து ஜமாபந்தி கிளியரன்ஸ் கடுதாசி ரெடியாயுடுத்தான்னு கேட்டுட்டு வரணும்.  இவ்வளவு சொல்லியும் இன்னும் அனுப்பாம இருக்கான்.'

'ஒரு வேளை கணக்கு பிள்ளைக்கு வந்திருக்குமோ?'

'வரலையாம்.  கேட்டுட்டேன்.  இப்பதான் என்ன வந்து பாத்துட்டு போனார்.  போயிட்டு அப்படியே உங்க அம்மாவையும் பார்த்துட்டு நாளைக்கு கார்த்தால திரும்பினா போறும்.  அம்மாவும் தன்னோட குழந்தைய பார்காம வருத்தப் பட்டுண்டிருப்பா தானே.'

கீதாவுக்கும் அம்மாவைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி இருந்ததால் உடனே சாப்பிட்டு விட்டு உடனே மன்னார்குடிக்கு கிளம்பி விட்டாள்.

தாசில்தார் ஆஃபீஸ் வரும்போது மணி இரண்டு.  நல்ல வேளை தாசில்தார் இருந்தார்.  சிறிது காத்திருப்புக்குப் பின் தாசில்தார் அறைக்குள் அழைக்கப்பட்டாள் கீதா.  மாமா அவளை அனுப்பிய காரணத்தை கூறுகிறாள்.

'கொஞ்சம் இரும்மா. அந்த லெட்டர உன் கண்ணுல காட்டிட்டு இன்னிக்கே தபால்ல அனுப்ப சொல்றேன்.  நேத்திக்கே ரெடியாயிடுத்து.'

பிறகு யாரையோ கூப்பிட்டு இது விஷயமாக ஏதோ சொல்லி விட்டு இவள் பக்கம் திரும்புகிறார்.

'கீதா, கல்யாணம் சீக்கிரம் வர்றது போல இருக்கே?'

'யாருக்கு?  யாருக்கு கல்யாணம் சார்?'

'ஒண்ணுமே தெரியாத மாதிரி கேட்கறையே?  கூடிய சீக்கிரம் நீயும் நானும் உறவுக் காராளா போகப் போறோம்.'

'நீங்க என்ன சொல்ல வரேன்னே எனக்கு புரியல.'

'விளக்கமா நானே சொன்னாதான் ஒத்துப்பியாக்கும்.  அதான், மெட்ராஸில இருக்கிற என் உறவுக்காரர் சந்திரசேகர் பையன் சுரேஷுக்கு ஒன்ன பார்க்கப் போறாளாமே.  நேத்திக்கு எனக்கு மெட்ராஸ்லேந்து ஃபோன் வந்தது.  நல்ல பையன்.  செருவாமணி பூர்வீகம்.  நல்ல குடும்பம்.  காசு பணத்துக்கு ஒரு கொற கிடையாது அவாகிட்ட.'

'சுத்தமா நீங்க சொல்றது எனக்கு எதுவுமே புரியல.  ஏதோ நீங்க கன்ஃப்யூஸ் பண்ணிண்டிருக்கேள்னு நெனைக்கிறேன்.'

'சபேஸய்யர் மருமாள் தான நீ.  அப்ப நீ தான்.  அவாத்துல என்ன கேட்டா, உன்ன தெரியுமான்னு.  நான் பேஷா தெரியும்.  உன்ன மாதிரி ஒரு பொண்ணு அமையறது கஷ்டம். உடனே முடிச்சிடுங்கோ.  பணம் காசெல்லாம் பார்க்காதீங்கோ. அப்படின்னு சொல்லிட்டேன்.'

'என்னப்பத்தியா கேட்டா?  நெஜமாவா சார்?'

'உன்னப் பத்திதாஆஆஆன் கேட்டா.  உங்காத்துல உள்ள பெரியவா உன்கிட்ட ஒண்ணும் சொல்லலையோ ஒரு வேள. நான்தான் ஸஸ்பென்ஸ போட்டு உடச்சிட்டேன்னு நெனைக்கிறேன்.'

பேசிக் கொண்டிருக்கும் போது அந்த லெட்டர் வருகிறது.  கோப்பு அட்டையின் மேலே வைத்து ஃப்ளாப் மற்றும் நாடா போட்டு.

'கீதா, அப்படியே வெச்சி நன்னா படிம்மா.  ஒரு தடவைக்கு ரெண்டு தடவையா படி.  வாசகங்கள நன்னா க்ரஹிச்சிண்டு சபேஸன் கிட்ட போய் சொல்லு.  ரெண்டு நாளுல தபால்ல வந்துடும்னும் சொல்லு.  சந்தோஷப் படுவான்.'

அவர் சொன்ன படியே படித்துவிட்டு கோப்பை திருப்ப அவரிடமே கொடுத்து விட்டு நன்றியோடு எழுந்து கொள்கிறாள்.

'உன்னோட அலையன்ஸ் விஷயமா மெட்ராஸ்லேந்து சந்த்ரு வரேன்னு சொல்லியிருக்கான். அவன் வந்தோண்ண அவன அழச்சிண்டு உங்காத்துக்கு வரேன்.  அப்படியே கார வெச்சிண்டு சபேசனையும் பார்த்துட்டு வருவோம்.  நான் சொல்லிட்டேன் சந்துரு கிட்ட, சுரேஷ் ரொம்ப அதிர்ஷ்டக்காரப் பய உன்ன பண்ணிண்டான்னு.'

'சார், நீங்க சொல்றது எனக்கு ஒண்ணும் புரியல.  போய் அம்மா கிட்ட கேட்கறேன்.'

சொல்லிவிட்டு கிளம்புகிறாள்.  ஒரு கிலோ மீட்டர் நடந்தாக வேண்டும் ஆம் வந்து சேருவதற்கு.  வழி முழுவதும் தாசில்தார் சொன்னவைகளை வைத்து சிந்தனைகள்.

'என் கிட்ட சொல்லாம அம்மா வரன் பார்க்க ஆரம்பிச்சுட்டாளா?  இருக்கவே இருக்காது.'

'யார் சந்திரசேகர்? யார் சுரேஷ்? மெட்ராஸ்ல இருக்கறவான்னு சொன்னாரே? மெட்ராஸ் வரைக்கும் நம்ம ஜாதகம் எப்படி போயிருக்கும்?'

'பணக்காராள்ன்னு அவர் சொன்ன மாதிரி ஞாபகம்.  இந்த ஏழப் பக்கம் எப்படிப்பா பணக்காரா காத்து அடிக்கும்?'

'தாசில்தாருக்கு திடும்னு பித்து பிடிச்சு போச்சா?  நன்னா தானே பேசினார். அப்படி ஒண்ணும் பித்து பிடிச்ச மாதிரியும் பார்த்தா தோணலையே.'

சட்டென்று ஒரு சந்தேகம் கீதாவுக்கு.

'சபேஸய்யர் மருமாள்னு தான கேட்டார்.  எந்த மருமாள்னு ?  ஒருவேள ஏதோ ஒரு மருமாள அவா கேட்க இந்த கிழம் என்னைனு நெனச்சிண்டு பதில் சொல்லிடுத்தா அவா கிட்ட.  எஸ்.  திஸ் இஸ் பாஸிபிள்.'

'அப்படின்னா எந்த மருமாள்?  ஒரு வேள பவானி பெரியம்மாவாத்துல ஜானாவ கண்டிச்சு சம்மதிக்க வெச்சு அவசரம் அவசரமா இறங்கறாளா?  ஏன் இருக்க கூடாது?  எஸ்.  இப்படித்தான் இருக்கணும்.'

'பாவம் ஜானா.  பெரியப்பாவோட கண்டிப்புல அவளோட வைராக்யம் தோத்துருக்கும்.  என்ன மனுஷா இவாள்லாம்?  மனசுக்குள்ள ஒருத்தன் கழுத்துக்கு ஒருத்தன், இப்படி பண்ணி பார்க்கறதுல எப்படிதான் மனசு வர்றதோ?'

'அன்னிக்கு கொஞ்சம் எனக்கு எடம் கொடுத்து பேசியிருந்தாலாவது ஜானாக்கு ஏதாவது ஹெல்ப் பண்ணியிருக்கலாம்.'

'நம்ம ஆளு பாலாஜிய விட்டுட்டு எவனுக்கும் நான் கழுத்த நீட்ட மாட்டேம்ப்பா.'

'ஏய் சுரேஷு, தப்பித் தவறி மெட்ராஸ்ல என் ஹீரோவ பார்த்து அவன் கிட்ட சபேஸய்யர் மருமாள கட்டிக்கப் போறேன்னு மொட்ட தாத்தா குட்டேல விழுந்தான்னு சொல்லிடாத.  ஒரே வெட்டா வெட்டிடுவான்.'

'எங்க லவ் எந்த மாதிரி லவ்?  யாருக்குமே தெரியாம செங்கிப் பட்டியிலே கன்ஃபர்ம் பண்ணிண்ட லவ்வாக்கும்.'

'சுரேஷு, நீ வேணா பணக்காரனா இருக்கலாம்.  எங்க பாலாஜி கிட்ட இருக்கற அழகும் அறிவும் உனக்கு கட்டு போட்டாலும் கிடையாது.'

இளமை குறும்பு எப்போதுமே இப்படித்தான்.  கற்பனையில் மிதந்து விட்டால் மனதோடு அது பாடும் பாட்டும் கூத்தும் இதயத்துக்கு மாத்திரம் நல விருந்தை கொடுக்கும்.

'அம்மா ஆஆ....' 

கன்றின் குரல் தெரியாத பசுவா?  சீதா தன் கை ஈரத்தை தொடைப்பகுதி புடவையில் துடைத்துக் கொண்டே ஓட்டமும் நடையுமாக சமையலுள்ளிலிருந்து வாசலுக்கு வருகிறாள்.

'ஏது ஏது?  அம்மா ஞாபகம் வந்துட்டுதாக்கும்?  பூவனூர விட்டு வர எப்படி என் செல்லக் குட்டிக்கு மனசு வந்தது?'

'போடி சீதா.  உன்ன பார்க்க யார் வந்தா? என் ஃப்ரெண்ட்ஸ பார்க்க வந்தேனாக்கும்.'

சீதாவின் ஓட்டிய பள்ளக் கன்னத்தை குடைந்து ஒரு கிள்ளு.

'ஏய், ஏய்.. பைத்தியம்.  கைய எடுடி.  வலிக்கறது.  உன்ன மாதிரி பம்ளிமாஸ் கன்னமா இது .'

சிறு விளையாட்டுகளை முடிக்கின்றன கன்றும் பசுவும்.

'சீதா, பசிக்கறது டீ எனக்கு?'

'பிசாசே, இப்படி திடும்னு வந்து பயமுறுத்தினா என் கிட்ட என்ன இருக்கும்?  உடனே வேணும்னா நாலு உளுந்த இல்லாட்டி நாலு அரிசிய வேணா சுட்டு போடறேன்.  காபி சூடா கலந்து தரேன்.   சீக்கிரம் வேணும்னா குமுட்டியில பண்ணா லேட்டாகும் ஸ்டவ்ல தான் சுடணும்.  அப்பறம் மண்ணண்ண நாத்தம் வரதுன்னு அடிக்க வரக்கூடாது சரியா?'

அப்பளம் மற்றும் காப்பி ஏற்பாடுகள் நடக்கும் போதே அம்மா மடியில் சயனம்.

'அம்மா, என்ன எனக்கு தெரியாம நிறைய நடக்குது போல இருக்கு?'

'என்ன? என்ன?  அப்படி ஒண்னும் உனக்கு தெரியாம நடந்துடலேயே டி.'

'என் கல்யாண விஷயமா?'

வேண்டுமென்றே விளையாட்டாக சுரேஷ் விஷயத்தை சொல்வதற்காக சீண்டலோடு ஆரம்பிக்கிறாள் கீதா.  அது தெரியாதே சீதாவுக்கு.

'மாமி சொல்லிட்டாளாக்கும் உன்கிட்ட.'

ஒரு நிமிடம் ஆச்சர்ய மெளனம் கீதாவிடம்.  'நமக்கு தெரியாம வேற ஏதோ நடந்திருக்கு போல தெரியறது.  காப்பி சாட்டுட்டு போட்டு வாங்கறேன்.'

சுட்ட அப்பளங்களின் பிரத்யேக நறுமணம் மற்றும் டிகிரி காப்பியின் வாசனை அம்மாவின் ஸ்பெஷாலிடியை கூட்டியது.

தொடரும் ....

No comments:

Post a Comment