உறவுபோட்டமுடிச்சு_75
பூவனூர் செல்லும் பஸ்ஸில் ஏறியவுடனேயே கீதாவின் மனம் சிந்தனைகளை செக்கில் போட்டதைப் போல சின்னா பின்னமாக அவைகளை அரைத்துக் கொண்டிருந்தது. கடும் பாரங்களை மனம் சுமக்கும் போது பயணங்கள் இனிமையாக இருப்பதில்லை. இதுவரை நடந்தவைகளில் பழுது இல்லை என்றாலும் ஏதோ ஒன்று, இனம் புரியாத ஒன்று, சீதாவை சுற்றி, சீதாவின் சிரமங்களை சுற்றிச் சுற்றி. எப்படியெல்லாம் யோச்சாலும் கடைசியில் ஒன்றில் தான் விழுகிறது: 'முட்டி மோதினாலும் கஷ்டங்களை தடுத்து நிறுத்த முடியாது. எல்லாம் பகவான் விட்ட வழி.'
பூவனூர் வந்தாச்சு. மாமாவிடம் தாசில்தார் சொன்ன அந்த க்ளியரன்ஸ் லெட்டரைப் பற்றி சொல்லிவிட்டாள்.
பிறகு அந்த தாசில்தார் தன்னையும் அவருடைய உறவினர் வரனையும் இணைத்து குழப்பிக் கொண்டு சொன்னவைகளையும் சொல்கிறாள்.
'ஏன் கீதா, எனக்கு என்னோட மாமா பாலாஜியோடத்தான் கல்யாணம் பண்ணி வைக்கப் போரா. உங்க உறவுக்கார பையனுக்கு வேற எடம் பார்த்துக்கோங்கோன்னு சொல்லியிருக்க வேண்டியது தான? ஒரு வேள அந்த சுரேஷ பத்தி சொன்னோன பிடிச்சுப் போச்சோக்கும் உனக்கு?'
'போங்கோ மாமா.... உங்க பேச்சு எனக்கு பிடிக்கல. நான் மன்னார்குடிக்கு போறேன்.'
'இந்த பார்ரா. இந்த கீதா பொண்ணுக்கு வர்ற கோபத்த. இன்னும் பாலாஜியோட கல்யாணமே ஆகல. அதுக்குள்ள கோச்சிண்டு கோச்சிண்டு பொறந்தாத்துக்கு போயிடுவேன் போயிடுவேன்னு மிரட்டிண்டே இருக்கியே? சரி, இன்னும் ரெண்டு வருஷம் பொறுத்துக்கோ. பாலாஜி வேலைக்கு சேர்ந்த உடனேயே கெட்டி மேளம் கொட்டச் சொல்லிடுவோம்.'
வெட்கத்துடன் அவளிடமிருந்து வந்த 'போங்கோ மாமா' வை ரசித்து சிரிக்கிறார்.
'எனக்கென்னவோ சந்திரசேகராத்துல பார்த்துருக்கறது பெரிய அத்திம்பேரோட பொண்ணு சுபத்ராவா இருக்கும்னு தான் தோணறது கீதா. ஜானாவா இருக்க வாய்ப்பில்ல. ஏன்னா ரெண்டு நாளுக்குள்ள மெட்ராஸ் ஜாதகத்த பேசி முடிக்கற அளவுக்கு போயிருக்க முடியாது அவாளுக்கு இப்ப இருக்கற சிரமமான கால கட்டத்துல.'
'எஸ் மாமா. நான் இப்படி யோசிக்கவே இல்ல. பாஸிபிள் மாமா.'
'எனக்கு சந்திரசேகர நன்னா தெரியும். வந்து கேட்டா முடிச்சுக் கொடுப்போம்.'
'ஆமாம். மாமா. கண்டிப்பா முடிச்சு கொடுங்கோ மாமா.'
'அப்றம் நேத்திக்கு சடகோபன் வந்திருந்தான். அவன் இட்ட நாளன்னிக்கு நாத்து வேல ஆரம்பிக்கறத பத்தி சொல்லிட்டேன். அப்படியே பட்டாமணி உத்யோகத்தை விடறத பத்தியும் சொல்லிட்டேன். குதியோ குதியோன்னு குதிச்சான். ஒரு வழியா சமாதான படுத்திட்டேன் அவன. லெட்டர் கைக்கு வந்தோன்ன கணக்குப் புள்ளையையும் கூப்ட்டு பேசணும். லெட்டர் எழுதி கையெழுத்துப் போட்டு ரெடியா வெச்சுட்டேன். டேட் மாத்திரம் தான் போடணும்.'
'ராஜினாமா பண்ணினோன்ன, சகோதரிகள கூப்டு சொத்து விஷயமா பேசணும். வயல்லேந்து வர்ர இந்த வருஷ வருமானம் பாலாஜியும் நீயும் வேலைக்கு சேர்ர வரைக்கும் தாங்கும். தைரியமா பேசலாம் எல்லார் கிட்டேயும்.'
'சரி, நன்னா எல்லாத்தையும் யோசிஞ்சுண்டுட்டேளேன்னோ ? அப்பறம் வருத்தப்படக் கூடாது என்னடா இப்படி செஞ்சிருக்க வேண்டாமேன்னு. மாமி கிட்ட பேசப் போறேன்னு சொன்னேளே, பேசினேளா மாமா?'
'எல்லாத்தையும் சொன்னேன். புரிஞ்சிண்டா. அவளும் நீ சொல்ற மாதிரி தான் யோசிச்சு செய்யுங்கோன்னு சொல்றா. என் மேல உள்ள நம்பிக்கையோ என்னவோ பெரிசா ஒண்ணும் இந்த விஷயங்கள எடுத்துண்டதா தெரியல. இன்னோன்னும் சொன்னா. கீதா கெட்டிக்காரியா இருக்கா, அவ கிட்டேயும் கேட்டுக்கோங்கான்னா.'
மாமா, இதுலயே மனச போட்டு அலட்டிக்காதீங்கோ. டாக்டர்தான் நிறைய நடக்க சொல்லியிருக்காரே. வயலுக்கு வேணா வரேளா என்ன கைத்தாங்கலா புடிச்சிண்டு? ச்சேன்ஜா இருக்கும்.'
'இன்னிக்கு வேண்டாம். நாத்து வேல ஆரம்பிக்கும் போது வந்து பார்க்கறேன். உன்னால என் வெயிட்ட தாங்கிண்டு வர முடியாது. சந்தானமோ வேற யாரோ இருந்தா பெட்டர். எனக்கும் சடகோபன் வந்து சொன்னதுலேந்து பார்க்கணும் போலத்தான் இருக்கு.'
மாமாவுடன் கீதா பேசிக்கொண்டிருக்கும் போது மாமி அங்கு வருகிறாள்.
'ஏண்டி கீதா. இந்தாத்துல நானும் ஒருத்தி இருக்கேன். மாமா மாத்திரம் உசத்தி இல்ல. வந்ததும் வராததுமா அது என்ன மாமா கிட்ட மாத்திரம் அரட்ட?'
'சாரி, சாரி, சாரி மாமி. உங்க கிட்ட இன்டரஸ்டிங் நியூஸ் சொல்லப்போறேன். சமையல் உள்ளுக்கு வாங்கோ.'
மாமியை பின்புறமாக தோள்களில் கைகளை வைத்து தள்ளிக் கொண்டே வருகிறாள்.
'அம்மா எப்படி இருக்கா? அவ மாத்திரம் ஏன் தனியா இருக்கணும். இங்க அழச்சிண்டு வந்துடு. கஞ்சியோ கூழோ எப்படியோ பார்த்துக்கலாம்.'
'மாமி, அதப்பத்தி அப்பறம் பேசறேன். இங்க வந்தாரே தாசில்தார், அவர் எனக்கு வரன் பார்த்திருக்கார். நேத்திக்கு அவர மாமா விஷயமா பார்த்தேனேன்னோ அவர் ஆஃபீஸ்ல , அப்ப சொன்னார். பையன் அழகாம். சொத்து பத்தல்லாம் எக்கச்சக்கமாம். மெட்ராஸாம். அவருக்கு சொந்தமாம். பணம் காசலலாம் கேட்க மாட்டாளாம். நான் சரின்னு சொல்லிட்டேன்.'
'ஏய்.... பொய்தான?'
'இல்ல மாமி. எத்தன நாள் தான் அம்மாவுக்கு பாரமா இருக்கறது சொல்லுங்கோ. எனக்கும் வயசாயிண்டே போறதோன்னோ? அம்மா காசு சேர்க்கறதுக்குள்ள நான் கிழவியாயிடுவேன் இல்லையா?'
'ஏய்..... நான் நம்ம மாட்டேன் இத. அம்மா என்ன சொன்னா?'
'அம்மாவுக்கு தெரியாது இது. நீங்கதான் எப்படியாவது அம்மாவ சம்மதிக்க வைக்கணும்.'
சமையல் உள்ளிலிருந்து ஓட்டமும் நடையுமாக சபேஸய்யரிடம் வருகிறாள் ஞானம்.
'அன்னா, இவ சொன்னத கேட்டேளா? என்னவோ வரனாம், தாஸில்தாராம், உறவாம்.... உங்க கிட்ட சொன்னாளா?'
மாமியின் பின்னாலிலிருந்து கீதா சிரித்துக் கொண்டே சைகை காட்டுகிறாள். ஞானத்தோடு சின்னதாக விளையாடி அவருக்கும் தான் ரொம்ப காலம் ஆகிவிட்டதே. அவரும் கீதாவோடு விளையாட்டில் இறங்குகிறார்.
'ஆமாம் ஞானம். சொன்னா. நல்ல வரனாத்தான் தோணறது எனக்கும். மாப்பிள்ள பையன கீதா பார்க்கட்டும். கீதாக்கு பிடிச்சிருந்தா பண்ணிக்கட்டுமே?'
'இதுக்கு உங்க தங்க சீதா ஒத்துக்கவே மாட்டா. மொதல்ல பொண் பார்க்கறதுக்கே ஒத்துக்க மாட்டா.'
'நீயும் நானும் தான் சீதாவ இதுக்கு சம்மதிக்க வைக்கணும். செய்வியோன்னோ?'
'நான் மாட்டேன். ஒருக்காலும் மாட்டேன். நீங்களும் சம்மதம் கொடுக்க கூடாது சொல்லிட்டேன். அப்பறம் எனக்கு கெட்ட கோபம் வரும்.'
'ஏன் ஞானம்? கீதாவுக்கு ஏதாவது வரன் பார்த்து வெச்சிருக்கியா?'
'கீதா நம்மாத்து மாட்டுப் பொண்ணுன்னு நான் தீர்மானம் பண்ணி வெச்சிருக்கேன். அவ நம்மளோட தான் இருக்கணும். சொல்லிட்டேன்.'
சொல்லிவிட்டு கோபத்துடன் திரும்பிய ஞானத்தின் கால்களில் கீதா. ஞானத்திற்கு ஒன்றும் புரியவில்லை. சபேஸய்யரின் சிரிப்பு அவளுக்கு நடந்து கொண்டிருப்பவை நாடகம் என்று புரிய வைக்கிறது.
'என்ன இது? எழுந்துரு தடிச்சி. மாமாவோட சேர்ந்துண்டு நாடகமா போடற.'
'இல்ல மாமி. எல்லாரும் சரின்னு சொல்லிட்டா. உங்க வாயால நீங்களே சொல்லணும்னுதான்.....'
'எல்லாருமா ? மாமா கூடவா? பாலாஜியும் சரின்னு சொல்லிட்டானா? எனக்கு தெரியாம என்னன்னெல்லாம் நடந்திருக்கு?'
சொல்லி விட்டு ஞானம் அழ ஆரம்பிக்கிறாள். கீதா அவளை சமாதானப் படுத்துகிறாள் .
'ஸாரி மாமி. மாமா தான் யார் கிட்டேயும் ....'
'ஏய் கீதா, என்னையா மாட்டி உடறே? அது ஒண்ணுமில்லடி ஞானம். நம்ம பையன் கீதாவப் பார்க்கும்போதெல்லாம் ஈன்னு இளிச்சிண்டிருந்தான். கீதா கிட்ட சாதாரணமாத் தான் கேட்டேன். பாலாஜிய பண்ணிக்கறையான்னு. உடனே எப்ப முகூர்த்தம்னு கேட்கறா. உன் சம்மதம் இருந்தாத்தான்னு அடிச்சு அப்பவே சொல்லிட்டேன். அதுக்காக இப்படி ஒரு ட்ராமா போட்டுருக்கா கீதா உன் கிட்ட.'
கொஞ்சம் கொஞ்சமாக சிரிப்பு வருகிறது ஞானத்திற்கு. அருகில் கீதாவை அழைத்து அவள் தலையை தடவுகிறாள்.
'என்ன ரொம்ப பயமுறுத்திட்டேள் ரெண்டு பேருமா சேர்ந்து. இனிமே இப்படி பண்ணக் கூடாது.'
'சாரிம்மா... இனிமே இப்படி பண்ண மாட்டேன்.'
'என் புள்ளைக்கு உன்ன விட்டா நல்ல பொண்ணு யார் கிடைப்பா சொல்லு. நீ இங்க வந்து ஒரு வாரத்திலேயே நீ தான் என் மாட்டுப் பொண்ணுன்னு மனசுல வெச்சிண்டுட்டேன்.'
'நீங்க என் மேல வெச்சிருக்கற நம்பிக்கைக்கு பழுதில்லாம குடும்பத்த பார்த்துப்பேம்மா. என்னோட அம்மா கிட்ட நீங்களே சொல்றேளா நானே சொல்லட்டுமா இந்த விஷயத்த.'
'அன்னா, உங்க பக்கத்துல இருக்கற வாக்கிங் ஸ்டிக்க இப்படி போடுங்கோ சித்த. நம்ம வருங்கால மாட்டுப் பொண்னுக்கு அட அடான்னு வர்றது. ரெண்டு முதுகுல போட்டா சரியா போயிடும்.'
சபேஸய்யரும் கீதாவும் ஞானத்துடன் சேர்ந்து சிரிக்கிறார்கள்.
'அம்மா, பாலாஜி நன்னா படிச்சு நல்ல உத்யோகத்துல சேர்ற வரைக்கும் நான் வெயிட் பண்ணுவேன். உங்க கௌரவத்துக்கும் எந்த பாதகமும் என்னால வராது.'
'நீ இத என் கிட்ட சொல்லவே வேண்டாம். என் மருமாளப் பத்தி எனக்கு நன்னாவே தெரியும். இந்த பூவனூரே உங்க ரெண்டு பேர் கல்யாணத்த பத்திதான் பேசிண்டே இருக்கா. பகவான் சீக்கிரம் இத நடத்திக் கொடுக்கணும். நீயும் வேண்டிக்கோ. உங்க அம்மா இங்க வரும்போது நான் பேசிக்கறேன்.'
'என்ன கீதா. சந்தோஷமா ஞானம் ஒப்புதல் கொடுத்திருக்கா. ஸ்வீட் ஒண்ணும் பண்ணித் தர மாட்டியா?
'மாமி, உங்க ஆத்துக்காரருக்கு அப்படி என்ன தான் ஜவ்வரிசி பாயஸத்து மேல ஆசையோ? ஏதாவது இப்படித் தான் உங்கள கேட்டுண்டே இருப்பாராக்கும்.'
'கீதா, மாமா மாமான்னு உருகினது போக இப்ப நான் ஞானத்து ஆத்துக் காரனாயிட்டேனா? பய வரட்டும். நன்னா கவனிக்க சொல்றேன் உன்ன.'
'சரி, கீதா. ஜவ்வரிசி இல்ல. உங்க மாமா ஏதோ ஆசப்படறார். பரவாயில்ல. ரவா இருக்கு, ஒரு சலிப்பு சலிச்சிட்டு ரெண்டு பிரட்டு பிரட்டிட்டு ஒரு கேசரியா சாயந்திரம் உன் கையாலேயே பண்ணு. கோவிலுக்கு போயிட்டு கல்யாணி கண்ணுல கேசரிய காமிச்சிட்டு அப்பறம் கொடுக்கலாம் அவருக்கு.
'சரிம்மா.'
எல்லா தடைகளும் நீங்கிய ஒரு புதுமணப் பெண்ணாகவே கீதா ஜொலித்தாள். கண்ணில் அவவப்போது பொங்கி வரும் சந்தோஷக் கண்ணீரைத்தான் அவளால் நிறுத்த முடியவில்லை. ஏன் நிறுத்த வேண்டும்?
யதார்த்தம் என்னும் கடமைக்குள் அவள் வரும்வரை அவள் கண்கள் சந்தோஷத்தை பெருக்கிக் கொண்டுதான் இருக்கட்டுமே!
தொடரும்.....
No comments:
Post a Comment