உறவுபோட்டமுடிச்சு_71
ஒரு நிலையிலிருந்து வேறு பட்ட குணாதிசியங்களில் ஒருவர் மாறுவது அவ்வளவு எளிதாகி விடுமா என்ன?
சாப்பாட்டை முடித்தவுடன் கீதா தன் பெரியம்மா பெரியப்பாவிடம் சொல்லிக் கொண்டு கிளம்ப ஆயத்தமாகிறாள்.
'பெரியப்பா, நான் கிளம்பறேன். சாரி, நீங்க எல்லாரும் ஒரு பிரச்சனைய பேசிண்டிருக்கும் போது நான் உள்ளே நுழஞ்சிருக்க கூடாது தான். நானும் வாசலோடேயே திரும்பத்தான் நெனச்சேன். ஆனா ஆத்துக்குள்ளேந்து சத்தமா செத்துப் போறேன்னு ஜானா சொன்னதும் அதுக்கு நீங்க ஸ்ரார்த்தம் பண்ணுவேன்னு சொன்னதும் என் மனச ரொம்ப பாதிச்சிடுத்து.'
'எனக்கு உங்களுக்குள்ள உள்ள பிரச்சனை என்னங்கறத என் கிட்ட சொல்லனும்னு எதிர்பார்க்கறது ஞாயம் இல்ல. ஏன்னா, உறவுகளா இருந்தாலும் இதுவரைக்கும் அவ்வளவு அபிமானம் ஒருத்தருக் கொருத்தர் வெச்சு நாம பழகல. ஒருவேள உங்காத்துல ஒருத்தியா நான் வந்து போயிண்டு இருந்தாலாவது எதிர்ப்பார்க்கறதுல ஞாயம் இருக்குமோ என்னவோ? பரஸ்பரங்கறதே மனசு நெனச்சாலும் காலத்தாலையும் தூரத்தாலயும் சூழ்நிலைகளாலேயையும் சிதஞ்சு போயிடறது.'
'சுருக்கமா சொல்றேன் பெரியப்பா. என்ன மாதிரி ஜானாவும் சின்னப் பொண்ணு. ஆத்திரத்தாலேயும் கோபத்தாலேயும் அவள உங்க பேச்சு கேட்க வைக்கணும்னு நெனைக்காம அன்பாவே சொல்லுங்கோ. புரிஞ்சுப்பா. அப்படி அன்பா பேசும்போது அவளையும் நீங்க புரிஞ்சுக்க சந்தர்பம் கிடைக்கலாம்.'
'உங்க பதவி, அதிகாரம் அனுபவம் இதுக்கெல்லாம் முன்னாடி நான் ஒண்ணுமே இல்ல. இந்த அளவுக்கு பேசறதுக்கு கூட எனக்கு தகுதியில்லைங்கறது எனக்கு நன்னாவே புரியறது. இருந்தாலும் உசுர மாச்சுக்கற அளவுக்கு ஒரு பிரச்சனையை போக விடக்கூடாது. அப்படி போனா குடும்பத்துல இருக்கற சந்தோஷம் அமைதி எல்லாத்தையும் வழிச்சு எடுத்துண்டு போயிடும்.'
'கோபத்த கட்டுப் படுத்த முடியலையா? அமைதியா ஹேண்டில் பண்ற மனுஷா கிட்ட ஷேர் பண்ணி தீர்வு காணுங்கோ.'
'நானும் எங்க அம்மாவும் அப்பா போனதுக்கப்பறமும் ஓரளவு நிமிர்ந்திருக்கோம்னா அது மத்தவா எங்க மேல காட்டின அன்பும் கருணையும் தான்.'
'இப்ப நீங்க அனுமதிச்சேள்னா ஜானாவ என் கூட பூவனூக்கு அழச்சிண்டு போறேன். மாமா வாத்துல ரெண்டு நாள் இருக்கட்டும். அவ இல்லாத போது நீங்களும் பெரியம்மாவும் அமைதியா பேசி முடிவெடுங்கோ. அவளும் பூவனூர்ல உக்காந்து பெத்தவாளோட கஷ்டங்கள யோசிச்சு புரிஞ்சுக்கட்டும்.'
இத்துடன் சற்று தன் பேச்சை நிறுத்துகிறாள். மூவரையும் பார்க்கிறாள். மூன்று பேருமே எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தாலும் அவர்கள் ஒவ்வொருவர் மனதிலும் ஆயிரம் எண்ணங்கள் ஓடிக்கொண்டிருப்பதை கீதாவால் உணர முடிகிறது.
'சரி, பெரியம்மா. சரி, பெரியப்பா. நான் கிளம்பறேன். மாமாவுக்கு மருந்து வாங்கிண்டு பஸ்ஸ புடிச்சு போகணும். கழனி வேல வேற இருக்கு.'
'சரி கீதா. எங்க பிரச்சனைய நாங்க பார்த்துக்கறோம். நீ கவலப் படாம ஊர் போய் சேர். இந்த தெருக்கோடிக்கு போனா மெயின் ரோடு வரும். அங்கேயே ரிக்ஷாவும் கெடைக்கும்.'
'தெரியும் பெரியப்பா. வரும்போதே பார்த்துண்டு தான் வந்தேன். பெரியம்மா வரேன். ஜானா, அப்பா அம்மா கிட்ட கோப படாம பேசு. அடுத்த மாசம் மாமாவோட முடிஞ்சா வரேன்.'
'அம்மா, நா வேணா கீதாவோட பூவனூர் போகட்டுமா?'
பவானியிடம் ஜானா கேட்ட கேள்விக்கு ராமநாதனிடமிருந்து கோபமாக பதில் வருகிறது. 'ஒண்ணும் வேணாம்.'
பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள வாசன் மெடிகல்ஸில் மருந்துகளை வாங்கும் போது அங்கிருந்த டாக்டர் பசுபதி கீதாவை பார்க்கிறார்.
'என்ன இன்னும் ஊருக்கு போகலையா?'
அவரிடம் வணக்கம் சொல்லி சிரித்துக் கொண்டே, 'சொந்தக்காராத்துக்கு போயிட்டு வரேன். மருந்து வாங்கிட்டேன். பஸ்ஸ இப்ப பிடிக்கப் போறேன்.'
'சரிம்மா. ஜாக்ரதையா போ. குட் கேர்ல் .'
'டாக்டர், மாமா தலைக்கு குளிக்கலாமான்னும் கேட்டுண்டு வர சொன்னா? மறந்துட்டேன் கேட்க உங்க கிட்ட கார்த்தால. மூணு மாசமா அமாவசை தர்ப்பணம் பண்ணலையாம். ரொம்ப வருத்தப் படறார்.'
'ஹாட் வாட்டர்ல டர்க்கி டவல மொக்கி பிழிஞ்சு தலைய லேசா ஈரம் பண்ணிக்க சொல்லு. அப்பறம் கையோட காஞ்ச துண்டுல துவட்டிக்கட்டும்.
ஜலதோஷம் இருமல் வராம ஜாக்ரதையா இருக்கணும். இருமல் ஜலதோஷம் வந்துட்டா இன்ஃபெக்ஷன் வந்துடும்.'
'புரிஞ்சிண்டேன். த்தேங்க்ஸ் டாக்டர்'
பஸ் பிடித்து பூவனூர் வீடு வரும் போது மணி நான்கு.
மாமாவிடம் டாக்டர் சொன்னவைகளை சொல்லிவிட்டு மாமியையும் வைத்துக் கொண்டு பெரியம்மாவாத்து சமாசாரங்களை மெல்ல ஆரம்பிக்கிறாள்.
'ஜானாக்கு ஒரு பையன பிடிச்சிருக்கு. திருச்சில காலேஜிக்கு போகும் போது பழக்கமாம். நல்ல பையனாம். ஆனா ஏழையாம். நல்ல உத்யோகத்துல அவன் சேர்ந்தோண்ண அப்பா அம்மா கிட்ட சொல்லலாம்னு இருந்தாளாம். அதுக்குள்ள பெரியப்பாவுக்கு விஷயம் தெரிஞ்சு பெரிய சண்டை நான் அவாத்துக்கு போகும் போது. இது ஜானா மெல்ல என் காதுல சாப்டும்போது சொன்னது.'
பிறகு ஒன்று விடாமல் நடந்தவைகளை சொல்கிறாள்.
'மாமா, பூவனூர் வர வரைக்கும் ஜானா நெனப்பு தான் எனக்கு. அந்த அசடு ஒண்ணும் பண்ணின்டிருக்காதே?'
'ஒண்ணும் ஆயிருக்காது ஜானாக்கு. கவலப் படாதே.'
'நான் பேசினதுல தப்பு ஒண்ணுமில்லையே மாமா?'
'சரியாத்தான் பேசியிருக்க. எப்ப உன்னோட பேச்சுக்கு எல்லாரும் மெளனமா இருந்தாளோ, அவா உன் பேச்ச கூர்ந்து கவனிச்சிருக்கான்னு அர்த்தம். இன்னொருத்தரா இருந்தா உன்னை மதிச்சு உன்னோட அந்த சப்ஜக்ட டிஸ்கஸ் பண்ணியிருப்பா. ஆனா அத்திம்பேரோட வரட்டு ஜம்பம் தடுத்திருக்கு அவரன்னு நெனைக்கிறேன். ஒரு சின்ன ஸைகாலஜிய வெச்சு சொல்றேன், இனிமே ரொம்ப அதிர்ந்து பேசிக்க மாட்டான்னு தான் தோணறது எனக்கு.'
'உங்க கிட்ட வந்தா ஹெல்ப் பண்ணுவேளா?'
'பார்க்கலாம். மொதல்ல அவா வரட்டும். கடைசில இவ்வளவு தூரம் போயும் உன் வேல விஷயமா அவரும் பேசல நீயும் கேட்கல அப்படித்தான?'
'எப்படி மாமா பேசறது? இந்த மாதிரி சமயத்துல எப்படி முடியும்?'
'சரி, பரவாயில்ல. கடைசில நீ சொல்லிண்டிருக்கற மாதிரி டிகிரி முடிச்சிட்டு தான் வேல தேடப் போற போல இருக்கு.'
'அன்னா, நீங்க தான் அவள அங்க போகச் சொன்னதா? அவா எக்கேடு கெட்டுப் போனா உனக்கென்ன கீதா ? நீ இவ்வளவு நல்ல தனம் சொல்லியும் உன்ன மதிச்ச மாதிரியே தெரியலையே. அவா கிட்ட போய் வேலைக்காக நீ ஒண்ணும் கைகட்டி நிக்கணுங்கற அவசியம் இல்ல. மாமா சொல்றதல்லாம் கேக்காத. நீ வேணா பாரேன். நீ படிப்ப முடிச்சோன்ன சாமுண்டி உங்காத்து கதவ தட்டி ஆர்டர கொடுப்பா.'
சபேசன் சிரிக்கிறார். 'ஏன் ஞானம், கல்யாணி கொடுக்க மாட்டாளாக்கும்?'
'எங்க கீதா குட்டிக்கு சாமுண்டியத் தான் பிடிக்கும். அதனால அவதான் கொடுப்பா.'
'சரி கீதா, அலஞ்சுட்டு வந்திருக்க. கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கோ. எனக்கு ஒரு சந்தோஷம். பவானி ஆத்துல நீ அவா மேல பகைமை காட்டலன்னு நன்னா புரியும்படி சொல்லிட்டு வந்தது.'
'மாமா, உண்மையா சொல்லணும்னா, நீங்க ரொம்ப நேரம் கிளம்பறதுக்கு முன்னாடி அட்வைஸ் பண்ணி அனுப்பிச்சதால ரொம்ப நல்ல பொண்ணாட்டம் ரொம்ப பதிவிசா பேசினேன்.'
'ஓஹோ. அப்ப நீ நல்ல பொண்ணு இல்லையாக்கும்.'
சிரிக்கிறாள் கீதா மாமா இப்படிக் கேட்டவுடன்.
'உங்க அட்வைஸ் மாத்திரம் இல்ல மாமா. ஜானா எனக்கு என்னவோ ரொம்ப பாவமா தெரிஞ்சா.'
'ஒண்ணும் ஆகாது கீதா அவாத்து பொண்ணுக்கு. நமக்கும் முழு விவரம் தெரியாது. ஜானா சொன்னது மட்டும்தான உனக்கு தெரியும்? உடம்பு நன்னா இருந்தா பார்த்துட்டு வருவேன். அப்புறம் கீதா, இனிமே அவாளா உன்ன கூப்டால ஒழிய இந்த விஷயத்துல தலையிடக் கூடாது. இதல்லாம் பெரியவா விஷயம். தேவையில்லாம ஆஜாரகி உன் பேர் கெட்டுப் போயிடும்.'
கீதாவும் மனதளவில் அப்படித்தான் நினைத்திருந்தாள். இருந்தாலும் ஜானா பற்றிய கவலை ஒருபுறம் இருந்து கொண்டுதான் இருந்தது.
'மாமி, கொஞ்ச நாழி கழிச்சு என் ஃப்ரெண்ட்ஸோட பெரிய கோவிலுக்கு போட்டு வரட்டுமா?'
'எதுக்கு பெரிய கோவில்னு எனக்கு தெரியாதுன்னு நெனச்சிண்டு இருக்கியாக்கும்? அந்த ஜானாக்கு ஒண்ணும் ஆக கூடாதுன்னு சாமுண்டிகிட்ட வேண்டிண்டு வரணுமாக்கும்.'
'ஆமாம் மாமி. மனசே சரியில்ல'
'சரி, போயிட்டு வா.'
தொடரும்....
No comments:
Post a Comment