Monday, December 27, 2021

தாமிரபரணியில் பாபநாச ஸ்நானம்

 தாமிரபரணி புராணத்தில்  கூறப்பட்டுள்ள மார்கழி மாதத்தில் பாபநாசத்தில் நீராடுவது தொடர்பான  

அரிய தகவல்:

பாபநாச ஸ்நானம்:- தாமிரபரணி புராணத்தில் இந்த அரிய தகவல் கூறப்பட்டுள்ளது.

ஆதிகாலத்தில், அகத்தியப் பெருமான் உத்தரவுடன், ஸ்ரீ தாமிரபரணி தேவியானவள், சிவபெருமானை நோக்கி, பூசித்து, தவமிருந்தாள்.

அப்படி தவம் இருந்த இடம்தான்  திருநெல்வேலியில் இன்றுள்ள பாபநாசம் என்கிற ஊர்.

ஸ்ரீ தாமிரபரணி தாயின் தவத்தில் மகிழ்ந்து, சிவபெருமான் காட்சி கொடுத்து தாமிரபரணித் தாய் கேட்டுக் கொண்டதற்கு இணங்கி பலவரங்களை கொடுத்து பின் அந்த கோவிலில் உள்ள சிவலிங்கத்தில் உறைந்து போனார்.

ஸ்ரீ தாமிரபரணித் தாய் நமக்காக கேட்டு வாங்கித் தந்த வரங்களில் ஒன்று ........

"மார்கழி மாதத்தில் இவ்விடத்தில் எனது தீர்த்தத்தில் ஸ்நானம் பண்ணி (நீராடி) தங்களை தரிசனம் பண்ணுவோர், மறுபடியும் இந்த பூமியிற் பிறக்ககூடாது" என்று வரம் கேட்டாள்.

சிவபெருமானும் தாமிரபரணி அன்னையின் வரம் நிறைவேறட்டும் என்று வரமளித்தார்.

பிறகு மலையகுமாரியான இம்மகா நதியானவள் சதாசிவத்தினிடமிருந்து இவ்விதம் வரம் பெற்று அகஸ்திய மாமுனியுடன் அமர்ந்து அவருக்கு குருபூசை முதலியவை செய்து, பின்னர் மார்கழி மாதத்தில் தன் இருப்பிடம் ஏகினாள்.

ஸ்ரீ தாமிரபரணித் தாய் நமக்காக கேட்டு வாங்கித் தந்த வரமான மார்கழி மாதத்தில்  பாபநாச ஸ்நானம் செய்ய வேண்டிய நாட்கள் இந்த வருடம் 16/12/2020முதல் 13/01/2021க்குள் வருகிறது.

பாபநாசம் தாமிரபரணியில் ஸ்நானம் செய்ய குறிப்பிட்ட நாளை கூறாமல்,  

29 நாட்களை அளித்து இறைவனின் அருளை அள்ளிச்செல்ல அகத்தியப் பெருமான் நமக்கெல்லாம் வழி காட்டுகிறார்.

எனவே அவரவர் வசதிப்படி, 16/12/2020முதல் 13/01/2021க்குள் ஏதாவது ஒரு நாள் பாபநாசம் சென்று  தாமிரபரணி நதியில்  அருள்மிகு பாபநாசநாதர் திருக்கோயில்  

கோவில்முன் உள்ள படித்துறையில் ஸ்நானம் செய்து, பின் உலகம்மை உடனுறை பாபநாசநாரை  தரிசித்து, தங்களது வேண்டுதல் விண்ணப்பத்தை சமர்ப்பித்து, இப்பூமியில் மறுபிறவி இல்லாத நிலையை பெற்று வாருங்கள் என்று அனைவரையும் வேண்டி கேட்டு கொள்கிறேன்.

நவகைலாயங்களில் முதல் தலமான பாபநாசம் முதல் கிரகமான சூரியனுக்குரியதானது.

சூரிய தலம் என்றும் சூரிய கைலாயம் என்றும் அழைக்கப்படுகிறது.

இந்திரனின் பாவத்தை நீக்கிய சிவன் என்பதால் இவரை "பாபநாசநாதர்' என்கின்றனர். இத்தலத்திற்கு "இந்திரகீழ க்ஷேத்திரம்' என்ற பெயரும் இருக்கிறது.

இத்தலத்து பிரகாரத்தில் உள்ள லிங்கத்திற்கு " முக்கிளா லிங்கம்' என்ற பெயர் உண்டு.

கருவறையில் ருத்ராட்ச வடிவிலும், பிரகாரத்தில் முக்கிளா மரத்தின் கீழும் பாபநாசர் இருக்கிறார்.

ரிக், யஜுர், சாமம் ஆகிய மூன்று வேதங்களே கிளா மரமாக மாறி இறைவனுக்கு நிழல் தந்தும், அதர்வண வேதம் ஆகாயமாக இருந்தும் இவரை வழிபட்டது.

எனவே சிவனுக்கு இப்பெயர் வந்ததாக சொல்கிறார்கள்.

அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது விமலை சக்திபீடமாகும்.

கிரக ரீதியாகவோ, ஜாதக ரீதியாகவோ குழந்தைகளுக்கு தோஷம் இருந்தால் அவர்களை இறைவனுக்கு தத்து கொடுத்து வாங்க உகந்த ஸ்தலம் இது.

இங்கு செல்பவர்கள், அம்பாள் சன்னதிக்கு நேர் எதிரில் இருக்கும் உரலில் மஞ்சளை போட்டு (அதுவும் அங்கேயே இருக்கும். வாங்கி செல்ல வேண்டும் என்பதில்லை!) இடித்து, அங்கு வருபவர்களுக்கு அளித்து, சிறிது பிரசாதத்தை வீட்டுக்கு கொண்டு செல்லும் படியும் தெரிவித்துக் கொள்கிறேன்

உலகம்மைக்கு அபிஷேகிக்கப்படும் மஞ்சள் தீர்த்தத்தை சிறிது அருந்தினால், திருமண, புத்திர பாக்கியங்கள் கிடைக்கும், பெண்கள் தீர்க்க சுமங்கலியாக இருப்பர்.

இப்படிப்பட்ட  மிக மிக அரிதான தகவலை நமக்கு தந்து உதவிய "சித்தன் அருள்" அக்னிலிங்கம் அருணாச்சலம் அவர்களுக்கு கோடானு கோடி நன்றி!



No comments:

Post a Comment