Sunday, December 19, 2021

சென்னை To பெங்களூரு பகுதி 11

 சென்னை To பெங்களூரு 2500 கிமீ(சுஜாதா & வெங்கடேசன்)தமிழக -கர்நாடக சுற்றுப்பயணம் பகுதி 11

🥀🌺🌹🥀🌺🌹🥀🌺🌹

நரசிப்பூர் பஸ்ல ஏறிக்கறோம்.  கூட்டம். நிக்கதான் எடம் கிடைக்கறது. பர்சை திறந்து தலக்காடு டிக்கட் வாங்கறார். கீழ ஒரு 500/- ரூ நோட்டு இருக்கறத பாத்து எடுத்து தரேன்.இவர் திரு திருனு முழிக்கவும் எடுத்தத பாத்த இன்னொரு பையன் தன்னோடதுன்னு சொல்லி வாங்கி வச்சுக்கறான். 

அடுத்த ஊர்ல உக்கார எடம் கிடைக்கறது. 

பின்னாடி சீட்ல வீரப்பன் கதைய சொன்ன பெரியவரைப்பார்த்து மீதி கதையைக்கேட்கற ஆர்வத்துல இவர் அங்க போய் உக்காருரார். 

பெரியவர் இவரப்பார்த்ததும் அடையாளம் தெரிஞ்சு சொல்ல ஆரம்பிக்கறார். 

‘’எனக்கெல்லாம் வீரப்பனை அவ்ளோ கிட்ட பார்த்ததும் வெலவெலத்துப் போச்சு. முத ஒரு அஞ்சு பேரு சுத்தினாங்க... பார்த்திட்டே இருக்கோம், அப்படியே அந்தப் பக்கத்துலருந்து அவரு வர்றாப்ல. அந்த நிமிஷத்த இப்ப நினைச்சாலும் என் உடம்பெல்லாம் ஏதோ பண்ணும். அந்த மீசையும், அந்தப் பார்வையும் போதும் தம்பி ஒருத்தன அப்படியே பயந்து நடுங்க வச்சிடும்... நாங்க உயிர் பொழச்சு ஊரு போய் சேருவோமான்னு பயத்துல இருந்தோம். கையில இருந்த துப்பாக்கிய அப்படியே தோள்பட்டையில போட்டுக்கிட்டு எங்கக்கிட்ட வந்தாரு...

'யார்றா நீங்க... எந்த ஊரு? இங்க என்ன பண்ணிட்டிருக்கீங்க'ன்னு ரொம்ப சாதாரணமாத்தான் கேட்டார். என் கூட்டாளிக்குப் பேச்சே வரலை... அப்புறம் நான்தான் எங்க ஊரு,பேரெல்லாம் சொல்லி பலாக்காய எடுத்து அவருக்குக் காட்டினேன். அப்புறம் இன்னும் சில விஷயங்கள விசாரிச்சாரு... அவங்க ஆளுங்க எங்கள முழுசா சோதனப் போட்டு பார்த்தாங்க. எதுவுமில்லைன்னு தெரிஞ்சதும்...'சரி வாங்க' அப்படின்னு சொல்லி கொஞ்ச தூரம் கூட்டிப் போனாங்க. அந்தப் பக்கம் ஒரு பாறை இருக்கும். அந்த இடத்துக்கெல்லாம் நான் எத்தனையோ தடவை வந்திருக்கேன். ஆனா, அங்க இப்படி ஒரு இடம் இருக்குறதே எனக்குத் தெரியாது. இந்தப் பாறைக்கு அந்தப் பக்கம் நல்ல மறைவான இடம். அங்க அவரு ஆளுங்க சமைச்சிட்டிருந்தாங்க. என்னைப் பார்த்து,

'வாய்யா...வந்து உட்காரு. சாப்பிடலாம்'ன்னு சொன்னாரு. நாங்களும் கொலப்பசில இருந்தோம். நல்லா சாப்பிட்டோம். அப்படியே கொஞ்ச நேரம் ஊரு நிலவரம், ஊருக்குள்ள அவர பத்தி என்ன பேசிக்குறாங்க, போலீஸ்காரங்களோட அராஜகங்கள்ன்னு கேட்டு விசாரிச்சாரு. ஒரு மணி நேரம் ஆகியிருக்கும். 

'சரி கிளம்புங்கடா...இருட்டுறதுக்குள்ள ஊரு போய் சேருங்க. அங்க போய் இங்க பார்த்த கதயெல்லாம் பேசிக்கிட்டிருக்காதீங்க. இந்தாங்க...' என்று சொல்லி ஆளுக்கு 500 ரூபாய் எடுத்துக் கொடுத்தார். அன்னிய தேதிக்கு 500 ரூபாங்குறது எங்களுக்கு மிகப் பெரியத் தொகை. நாங்க இதெல்லாம் பேசிக்கிட்டிருக்கும் போது, அவங்கக் கூட்டத்து ஓரத்துல அந்த ஜடாமுடி சாமி உட்கார்ந்திட்டிருந்துச்சு. அது எதுவுமே பேசுல. சும்மா சோளிய உருட்டிக்கிட்டு இருந்துச்சு." என்று சொல்லிக் கொண்டிருந்த ராசு அண்ணன், சீட்ல சாஞ்சுண்டு கொஞ்சம் இளைப்பாறினார். 

எனக்கு மொத்தக் களைப்பும் கலைந்து, பெரும் உற்சாகம்தான் மூண்டிருந்தது. வெயிலும் பெருமளவு குறைந்துவிட்டிருந்தது. 

"யாருன்னா அந்த சாமி?"

"அது யாருன்னே தெரியில தம்பி... ஊர்க்காரங்க நிறைய பேரு அந்த ஜடாமுடி சாமிய பத்தி பேசுவாங்க. வீரப்பன் எது செய்றதுன்னாலும், அந்த சாமி சொல்றதக் கேட்டுதான் செய்வாறாம். ஆனா, அவரு யாரு, என்னங்குற விவரம்ல்லாம் தெரியாது. ஊர்க்காருங்க மலைக்குள்ள போகும்போது சமயத்துல அந்த சாமி தவம் பண்ணிட்டிருக்குறத பார்த்ததா சொல்லுவாங்க. அதுல என்னன்னா அவரு கண் இமைக்குற நேரத்துல காணாமப் போயிடுவாரு.

இவர் இன்னும் எதோ பேசிக்கொண்டிருக்க எனக்கு சுவாரசியம் கொறஞ்சு வேடிக்கை பார்க்க ஆரம்பிக்கறேன். 

இன்னும் காடு தாண்டலை

சத்தியமங்கலம் காடு 5 வகைகளைக் கொண்டதாக உள்ளது. அதில், வெப்ப மண்டல பசுமையான, அரை பசுமையான, கலப்பு – இலையுதிர், முள் காடுகள் மற்றும் உலர்ந்த இலையுதிர் காடுகள்னு கலவையா வரது. 

யானை, கரடி, சிறுத்தை, வங்காள புலி, கருங்குரங்கு, மான், காட்டுப்பன்றி, ஆற்று நீர் நாய், செம்புல்லிப் பூனை, கடமான், கள்ள மான், காட்டெருமை, செந்நாய் உள்பட 35 வகை பாலூட்டிகளும், 40க்கும் மேற்பட்ட புலிகள் உள்ளதாக கணக்கெடுப்புகள் சொல்றதா இவர் பீதி கெளப்புறார். 

தலக்காடு வந்ததும் எறங்கறோம். 

ஊரே மண் மேடாக காட்சி அளிக்கிறது. சிவன்,விஷ்ணு இருவருக்கும் தனித்தனி கோயில்கள். இருட்ட ஆரம்பித்த தருணம். நைசான மணலில் கோயிலின் பல்வேறு பகுதிகள் புதைந்துஇருந்தாலும் டூரிஸ்ட் கும்பல்….  இதுவும் ஆர்க்கியாலாஜிகல் கோவில்தான்...ஏன் இவ்வளவு மணல்?

 ஒரு கைடு வந்து கதை சொல்ல துவங்குகிறார்...

திருமலை ராஜா நோய்வாய் பட்டிருந்த தருணம் அது. திருமலைராஜா தன் இரண்டாவது மனைவியை (அலமேலம்மா) சிம்மாசனத்தில் அமர்த்தி விட்டு முதல் மனைவியுடன் தலக்காட்டில் உள்ள வைத்தீஸ்வரன் கோவில் நோக்கி செல்கிறார். வைத்தியர்களால் குணப்படுத்த முடியாத நோயாக இருந்ததால் வைத்தீஸ்வரனே துணை என்று இறைவனை நாடி சென்றார். நாட்கள் உருண்டோடின. அவர் உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை. மாறாக கவலைக்கிடமான நிலைமைக்கு வந்தது. அலமேலம்மாவிற்கு தகவல் சொல்லபடுகிறது. அலமேலம்மா தலக்காடு சென்றடையும் போது கணவரின் உயிர் பிரிந்தது. பருந்து பார்வையுடன் காத்திருந்த மைசூர் ராஜ உடையார் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தனது படை பரிவாரங்களுடன் சென்று ஸ்ரீ ரங்கபட்டினத்தை கைப்பற்றினார். மீண்டும் தன் ராஜ்ஜியத்திற்கு திரும்ப முடியாத அலமேலம்மா காவிரியின் மற்றொரு கரையில் அமைந்துள்ள ஊரான மலாங்கியில் தங்கி விடுகிறார். மைசூர் மன்னர்களின் ராஜ்ஜியம் அன்றிலிருந்து தொடங்கியது.

அலமேலம்மா செல்லும்பொழுது தன்னுடன் அரச குடும்பத்தின் நகைகளையும் எடுத்து செல்கிறார். ஸ்ரீ ரங்கபட்டினத்தின் ராணியான அலமேலம்மா எப்பொழுதும் வாரத்தின் ஓரிரு நாட்கள் ஸ்ரீ ரங்கபட்டின ரங்கநாயகி அம்மனுக்கு நகைகளை சாத்தி வழிபடுவது வழக்கம். ராஜ்ஜியத்தில் நகைகள் இல்லாததை கண்ட மைசூர் ராஜ உடையார் ஒரு சில வீரர்களை அனுப்பி நகைகளை பெற்று வருமாறு கட்டளையிட்டார். அலமேலம்மா அதற்கு மறுப்பு தெரிவிக்கிறார். ராஜ உடையார் மீண்டும் வீரர்களை அனுப்பி கட்டாயமாக நகைகளோடு வர ஆனையிடுகிறார். இம்முறை அலமேலம்மா நகைகளுடன் ஓட மன்னரின் கட்டளைக்கு அடிபணித்து அவரை வீரர்கள் துரத்துகின்றனர். 

அலமேலம்மாவுக்கு என்ன ஆயிற்று ?



No comments:

Post a Comment