பத்மா கோபால்
🌺🌺🌹🌺🌺🌺🌺🌹🌺
(திருவல்லிக்கேணி பெண்பிள்ளை ரகசியம்..) (பகுதி −5..)
தான் கூறுவதை எல்லாம் மாமுனிகள் மிகவும் உன்னிப்பாகக் கவனிக்கிறார் என்பதை உணர்ந்த திருவல்லிக்கேணி அம்மையார் மேலும் தொடர்ந்தார்..
"ஸ்வாமி... மணற்பாக்கத்து நம்பிகள் ஆசார்யன் மேல இருக்கற அபிமானத்துல, பார்த்து பார்த்து அவருக்கும், அவரோட குமாரத்திகளுக்கும் கைங்கர்யம் செய்துண்டிருந்தார்...
அதனால ஆசார்யரும் மனசு குளிர்ந்து, அவருக்கு ஸகல ஸாஸ்திரங்களையும் உபதேசம் பண்ணினார்னு தெரியறது....
அடியேனோ இதுவரையிலும், தேவரீருக்கு எந்தக் கைங்கர்யமும் பண்ணதில்ல!..
இருந்தாலும் பரவாயில்லைனு தேவரீருக்கு அடியேனிடம் ஒரு க்ருபை உண்டாகி,
"இந்த ஆத்மாவுக்கு ஏதாது அனுக்ரஹிக்கணும்.."னு ஒரு ஸங்கல்பம் பண்ணிண்டு,
"ஒனக்கு என்ன வேணும்?.."னு அடியேனைத் தேவரீர் கேட்கப் புகுந்தாலும்,
பாங்கான ஒரு பதில தரதுக்கு, அடியேன் என்ன,
#ஒரு கோல் துறை பெற்றேனோ அம்மையார் போலே?# என்று வார்த்தை சொல்லி,
ஜீயரின் திருமுகத்தைச் சற்றே ஆராய்ந்தாள்..
"அம்மணி...அது என்ன சரித்திரம்?...
கொஞ்சம் விஸ்தாரமா சொல்லேன்.." என்று நியமித்தார் மாமுனிகள்..
திருவல்லிக்கேணி அம்மையாரும் வாய் திறந்தார்..
"ஶ்ரீரங்கத்துல "நம்பிள்ளை"னு ஒரு ப்ரஸித்தியான ஆசாரியார் வாஸம் பண்ணிண்டு இருந்தார்..
அவரோட திருமாளிகை ரொம்பவும் சின்னது..
உபன்யாசம், காலட்சேபம் எல்லாமும் அந்த சின்னத் திருமாளிகையிலயே தெனமும் நடந்துண்டு இருந்தது..
அவருக்கு சிஷ்ய ஜனங்கள் அநேகம்பேர் இருந்ததால, இட நெருக்கடி ரொம்ப இருந்தது..
அந்த சமயத்துல, நம்பிள்ளையோட திருமாளிகைக்குப் பக்கத்துலயே ஒரு வைஷ்ணவ அம்மையாரும் வாஸம் பண்ணிண்டு இருந்தா..
அம்மையாரோட குடில் சின்னதா இருந்தாலும், அந்தக் குடிலைச் சுத்தி நெறைய இடம் இருந்தது..
அந்த அம்மையாரும் நம்பிள்ளையோட சிஷ்யைங்கறதால, நம்பிள்ளையோட சிஷ்யர்கள்ல ஒருத்தர் அம்மையார அணுகி,
"இவ்ளோ இடம் உன் ஒருத்திக்குத் தேவையில்லயே அம்மா!..
ஆசாரியன் திருமாளிகையில் இடப் பற்றாக்குறை இருக்கறது ஒனக்கும் தெரியுமே!..
ஒன்னோட எடத்துல ஒரு கோல் துறை தந்தா ஆகாதோ?.." என்று அம்மையாரிடம் வினவினார்..
ஒரு கோல் துறை என்பது...
கோல் − மூங்கில்
ஒரு மூங்கிலின் நீளம் சுமார் பதினைந்து அடி அளவு என்பர்..
ஒரு கோல் துறை − ஒரு நீளமான மூங்கிலின் அளவு நிலம்..
....மேற்படி சிஷ்யர் பலமுறை கேட்டும், அந்த அம்மையார் வாயே தெறக்கல!..
அப்போ அந்த சிஷ்யர் தன்னோட ஆசார்யரான நம்பிள்ளையிடம்,
"பக்கத்து மனையில் ஒரு கோல் துறையை ஸ்வாமியே கேட்டீரானால், அந்த அம்மையார் கொடுத்துடுவார்..
அந்த நெலம் கெடைச்சாச்சுன்னா, அடியோங்கள் எல்லாம் சேர்ந்து திருமாளிகையை விரிவாக்கிடுவோம்..!" என்று விண்ணப்பிக்கவும்,
நம்பிள்ளையும் அந்த அம்மையாரை அழைத்து,
"உமக்கு ஒரு சரீரத்துக்கு சிறிது இடமன்றோ வேண்டுவது?..
முதலிகளின் இடம் உபன்யாச, காலட்சேபங்கள் செய்ய முடியாதபடி நெருக்கமாயிருக்கிறது..
உமது ஒரு கோல் துறையை நமக்குத் தர வேணும்.." என்று கேட்டார்..
ஸ்வாமியே நேரிடையாகக் கேட்டதும், அம்மையார் உடனே இசைந்து,
"ஸ்வாமி!.. தேவரீர் நியமனப்படியே செய்கிறேன்!..
ஆனால், தேவரீர் பரமபதத்தில் அடியேனுக்கு ஒரு கோல் துறை தந்தருள வேணும்!.." எனக் கேட்க,
பிள்ளை, "அது ஶ்ரீவைகுண்டநாதனே தரவேணும்....
நாம் தேவரீர் சார்பாக, பெருமானிடத்தில் விண்ணப்பம் செய்து கொள்கிறோம்.." என்றருளிச் செய்தார்..
அதுகேட்ட அவ்வம்மையார்,
"அடியேன் பேதைப்பெண்..
தேவரீர் சொல்லில் விஸ்வாஸம் இருப்பினும், தாம் எழுத்திட்டுக் கொடுக்க வேணும்!.. " என்று கேட்டாள்..
"இப்படியும் நம்மெழுத்தில் விஸ்வாஸம் இருக்கிறதே!.." என்று பிள்ளையும் மிக உவந்து,
ஒரு முறியில் (ஓலைச்சுவடியில்) ஆண்டு, மாதம், தேதி, நாள் எல்லாம் குறிப்பிட்டு,
"இன்று இந்த அம்மையாருக்குத் திருக்கலிகன்றி தாசனாகிய அடியேன் பரமபதத்தில் ஒரு கோல் துறை எழுதிக் கொடுத்தேன்..
அகில லோக ஸ்வாமியும்,
அஸ்மத் (எம்முடைய) ஸ்வாமியுமான ஶ்ரீவைகுண்டநாதன், இவ்வம்மையாருக்கு க்ரயம் செலுத்திக் கொடுத்தருள வேணும்.." என்று சாஸனம் எழுதி, திருக்கையெழுத்துச் சாற்றிக் கொடுத்தார்..
அம்மையார் பரம ப்ரீதியுடன் அந்த ஶ்ரீமுகத்தைப் பெற்று, கண்களில் ஒத்திக் கொண்டு, தலைமேல் வைத்துக் கொண்டு, பிள்ளைகளிடமிருந்து தீர்த்த ப்ரஸாதங்களை ஸ்வீகரித்துக் கொண்டாள்..
அன்றும், மறுநாளும் பிள்ளையைச் சேவித்திருந்தவள், மூன்றாம் நாளே திருநாடு அலங்கரித்தாள்..
இப்படி... பரமபதமே தரவல்ல ஆசாரியன்,
ஒருவேளை அடியேனிடம்,
"வேண்டுவது யாது?.." எனக் கேட்க நேர்ந்தாலும்,
அடியேனுக்குத் தகுந்ததொரு பதிலும் சொல்லத் தெரியாதே ஸ்வாமி..."
என்று தலைகுனிந்தாள் திருவல்லிக்கேணி அம்மையார்..
(வளரும்..)
No comments:
Post a Comment