(திருவல்லிக்கேணி பெண்பிள்ளை ரகசியம்..) (பகுதி −4..)
தன் எதிரே நிற்கின்ற பெண்ணை, பரிவு மேலிட நோக்கினார் மாமுனிகள்...
"....அம்மா...மாதரசி!...
நீதான் ஆசார்யன் மேல எவ்ளோ விஸ்வாஸம் வெச்சுருக்க!..
நீ பேசறத பாக்கச்சே, ஒனக்கு இளம் ப்ராயத்துலேந்தே இந்த ஆசார்ய அபிமானம் இருந்துருக்கும்னு தோணறது!..
....ஒன்னமாதிரி சிஷ்யைகள் கெடைக்கறதுக்கு, இந்த ஆசார்யனும் ரொம்ப கொடுத்து வெச்சுருக்கேன்..."
....மாமுனிகளின் வார்த்தைகளைக் கேட்டு மறுப்பாகத் தலை அசைத்தாள் திருவல்லிக்கேணி அம்மாள்...
"க்ஷமிக்கணும் ஸ்வாமி..
தாம் சொல்ற மாதிரி அடியேனுக்கு ஆசார்ய பக்தியோ, அபிமானமோ இருக்கற மாதிரி தெரியல...
தற்சமயம்தான், ஆசார்யன அணுகணும்னே அடியேனுக்குத் தோணிருக்கு!...
ஏனோ, நம் பூர்வர்கள் அத்தனப் பேர் ஆசார்ய அபிமானத்தோட வாழ்ந்து காட்டிட்டு போயிருந்தாலும், ஆசார்யன் மேல ஒரு ஸ்ரத்தையும் பக்தியும் இதுநாள் வரையிலும் அடியேனுக்கு ஏற்படவே இல்லைங்கறதுதான் நிதர்ஸனம்!..
சொல்லிக்கற மாதிரி ஆசார்ய கைங்கர்யம் பண்ணறதுக்கு, அடியேன் என்ன,
#சேற்றில் படுத்தேனோ, மணக்கால் நம்பியைப் போலே?..#
என்று தாபத்தோடு ஜீயரை வினவியவளின் குரலில் ஆதங்கம் தென்பட்டது....
புருவம் சுருங்க, அந்தப் பெண்மணியை, "என்ன விஷயம் அது?.." என்பதுபோல் ஜீயர் ஏறிடவும்,
வினயத்தோடு விளக்கம் சொல்ல முற்பட்டாள் திருவல்லிக்கேணி அம்மாள்...
"ஸ்வாமி... ஶ்ரீமந் நாத முனிகளுக்கு இருந்த முக்யமான ஐந்து சிஷ்யர்கள்ல, முதன்மையானவர்தான் இந்த மணக்கால் நம்பிகள்..
ஶ்ரீராமசந்திரமூர்த்திக்கு எப்படி இளைய பெருமாள், "அஹம் ஸர்வம் கரிஷ்யாமி" (எல்லா காரியங்களையும் உமக்கு நானே செய்வேனாக!..) என்று ஸங்கல்பித்துக் கொண்டு, அத்தனைக் கைங்கர்யங்களையும் செய்தாரோ, அதே போல இந்த நம்பிகளும்,
தமது ஆசார்யரான உய்யக்கொண்டாருக்கு ஸகலவிதமான கைங்கர்யங்களையும் பண்ணிக் கொண்டிருந்தார்..
ஒருநாள், ரெண்டுநாள் இல்ல... வருஷக் கணக்கில இப்படி ஆசார்யனுக்குக் கைங்கர்யத்தை, ஆசையோட தொடர்ந்து பண்ணிண்டு இருந்தார்..
அந்த சமயம், உய்யக்கொண்டாரின் தேவிகளான ஆண்டாள் திருநாட்டுக்கு ஏகிவிட, நம்பிகள் திருமாளிகைக் கைங்கர்யங்கள் அத்தனையையும் தாமே உவந்து ஏற்றுக் கொண்டார்..
ஆசார்யரின் இரண்டு குமாரத்திகளுக்கும் இவரே தாயாக மாறிப்போனார்..
அவர்களை விடியலில் துயிலெழுப்புவதிலிருந்து, இறவு உறங்க வைக்கின்ற வரையிலுமுள்ள அனைத்துக் காரியங்களையும் நம்பிகளே நிர்வகித்து வந்தார்...
ஒருநாள் ஆசாரியரின் குமாரத்திகளை ஆற்றில் நீராட்டி அழைத்து வந்தார் நம்பிகள்..
அப்பொழுது இடையே சேறும் சகதியுமாக ஒரு வாய்க்கால் குறுக்கிட்டது..
குழந்தைகள் இருவரும் அந்த வாய்க்காலை எப்படிக் கடப்பது என்று திகைத்து நிற்க,
நம்பிகள் சற்றும் தாமதியாமல், தாமே அந்த சேற்றில் படியாக விழுந்து கிடந்து, அக்குழந்தைகள் தம்மீது அடியிட்டு நடந்து அச்சேற்றைக் கடந்து போகும்படி செய்தார்..
இப்படி அவரது ஆசார்ய பக்தி, ஆசார்யரின் திருக்குமாரத்திகள் வரையிலும் நீண்டு இருந்தது....
இவரோட இந்த செய்கையால, "ஶ்ரீராம மிஸ்ரர்" கற இவரோட இயற்பெயரும் நாளடைவில மறந்துபோய், ஆசார்ய குமாரத்திகளோட மணற் கால்களைத் தாங்கினதால, "மணற்கால் நம்பி"ங்கற திருநாமமே இவருக்கு நிலைச்சுடுத்து!..
அடியேன் நம்பிகளைப் போன்றவர்க்கெல்லாம் என்னிக்காவது ஈடாவேனோ ஸ்வாமி!..
அடியேனுக்குப் போய் ஆசார்ய பக்தி இருக்குனு ஸ்லாகிக்கறேளே..."
....அவளது ஒப்பீட்டைக் கண்டு பிரமித்துப் போன மாமுனிகள், தமது திருக்கரத்தை உயர்த்தி அவளை ஆசீர்வதித்தார்...
(வளரும்..)
No comments:
Post a Comment