கனியுமோகாதல்_73
By பாஸ்கர் சத்யா
அந்த வாரத்தில் ஒரு நாள் கோர்ட் விடுமுறை. மைதிலி எல்லோரையும் ஆஃபீஸுக்கு வரச் சொல்லக் கேட்டால் அனைவரும் அழாத குறை.
குளித்து விட்டு ப்ரேக்ஃபாஸ்ட் முடித்துவிட்டு சட்ட புத்தகங்களை அரை மணி நேரம் படிக்கிறாள். அப்பா ஆஃபீஸ் கிளம்பியாச்சு.
'அம்மா, எனக்கு கொஞ்சம் ட்ரெஸ் வாங்கணும். தி. நகர் ரெங்கநாதன் தெருவுக்கு போய் வாங்கிண்டு வரேன்.'
'விலை கொஞ்சம் முன்ன பின்ன இருந்தாலும் இங்கேயே மைலாப்பூர்லியே வாங்கிக் கோயேன். ஏன் வீணா அலையற.'
'ரொம்ப bபோர் அடிக்கறதும்மா. அதான்.'
'சரி, ஜாக்ரதையா போயிட்டு வா.'
12B பஸ்ஸில் ஏறி பனகல் பார்க்கில் இறங்கி விட்டாள். ஒவ்வொரு ப்ளாட்ஃபார்ம் கடையாக பார்த்துக் கொண்டே வந்து கொண்டிருக்கிறாள்.
'ஹலோ மைதிலி. எப்படி இருக்கீங்க.'
சமீபத்தில் கேட்ட குரல். சட்டென்று ஞாபகம் வரவில்லை. திரும்பி பார்க்கிறாள். எதிரே முரளி.
'என்ன இப்படி, இங்கே, இவ்வளவு தூரம்?'
'ஷாப்பிங்குக்காக வந்தேன். நீங்க எங்கே இப்படி?'
'நல்லா கேட்டீங்க. இதோ இந்த ராமசாமி தெருவுல தான நம்ம ஆஃபீஸ். நாளைக்கு ஒரு க்ளையண்டுக்கு ரிப்போர்ட் ரெடி பண்ணிண்டு இருக்கோம். கொஞ்சம் தர்ஸ்டியா இருந்தது. அதான் கீதாஞ்சலி ஹோட்டல்ல ஒரு சப்போட்டா ஜூஸ் சாப்டுட்டு ஆஃபீஸுக்கு போறப்பதான் உங்கள பார்த்தேன்.'
மேற்கொண்டு என்ன பேசுவதென்று புரியாமல் புன்னகையை மட்டும் மைதிலி உதிர்த்துக் கொண்டிருந்தாள்.
'மிஸ் மைதிலி. நீங்க இப்ப எங்க ஆஃபீஸுக்கு வந்தே ஆகணும். நோ எக்ஸ்க்யூஸ். இங்கேந்து நாலாவது பில்டிங்தான். ஜஸ்ட் ஃபைவ் டு டென் மினிட்ஸ்.'
'இன்னொரு நாள் வரேன், ப்ளீஸ். இன்னும் பர்சேஸே ஆரம்பிக்கல.'
'ஏற்கனவே சொல்லிட்டேனே நோ எக்ஸ்க்யூஸுனு. எனக்காக ப்ளீஸ் வந்தே ஆகணும்.'
இதற்குமேலும் மைதிலியால் மறுக்க முடியவில்லை.
நம்பர் நாலு. ராமசாமி தெரு. முதல் மாடி. ப்ராஸ் லெட்டர்களில் 'S.M. ASSOCIATES' போர்ட் பளிச். நடுவில் ஒரு குங்குமப் பொட்டும் சந்தனத் தெளிப்பையும் ஏற்றிருந்தது.
மைதிலி நுழையும்போது அவளது காலைப் பார்க்கிறான் முரளி.
'அப்பா, வலது கால்தான்.'
இப்படி ஒரு ஸென்டிமென்டல் சிந்தனைச் சிரிப்பு.
ஒரு அழகான யுவதியுடன் முரளி நுழைந்தது அங்கிருந்த ஸ்டாஃபுகளிடையே ஒரு சலசலப்பை உருவாக்கியிருக்க வேண்டும். கிட்டத்தட்ட அனைவருமே அவரவர் இருக்கையை விட்டு விட்டு மைதிலியை அருகில் பார்க்க ஹாலுக்கு வந்து விட்டார்கள்.
மூன்று பெண்கள். இருவர் ஆண். ஒருவர் மட்டும் தான் உண்டு தன் வேலையுண்டு என்று அவர் இருக்கையிலேயே இருந்ததை அவளால் பார்க்க முடிகிறது. தடுப்பு தடுப்பாக கேபின்கள். ஸீ த்ரூ க்ளாஸ்களுடன். ஆஃபீஸின் அமைப்பும் இன்ட்டீரியரும் நல்ல இம்ப்ரஷனை அவளிடம் பதித்துக் கொண்டிருந்தது.
'ஹலோ ஃப்ரெண்ட்ஸ். இவங்க மிஸ் மைதிலி. லீடிங் அட்வகேட். வெரி ஹார்ட் ஒர்க்கிங் அண்ட் அ ஒண்டர்ஃபுல் லீடர்.'
அவளைப் பற்றிய அறிமுகம் அவளை நெளிய வைத்தது.
'உங்க சார் இஸ் டூ ஜெனரஸ். லீடிங் லாயர்லாம் இல்ல. ஜஸ்ட் அன் அட்வகேட்.'
'பை தி பை மிஸ் மைதிலி, இவங்க எல்லாரும் இங்க ஒர்க் பண்றவங்க... நித்யாநந்தன், அசோகன், ஹரிணி, ப்ரபா, விஜயா... அங்க உட்கார்ந்து வேலை பார்த்திண்டிருக்கவர் ப்ரேம். இவங்க சொல்றத அப்படியே நான் தினமும் கேட்கணும். இப்படித்தான் என் பொழப்பு ஓடறது.'
'மேடம், இவர் எப்போதும் இப்படித்தான். இப்படி சொல்றாரே தவிர எங்க பேச்ச காதுலையே வாங்க மாட்டார்...'
கலகல சிரிப்பு எல்லோரிடத்திலும்.
'மேடம், நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க. இந்த ஸாரிலே யூ லுக் இன்னும் கார்ஜியஸ். இஸ் இட் ஆர்கண்டி?'
'எஸ் இட் இஸ். எனிவே த்தேங்க்ஸ் ஃபார் தி காம்ப்ளிமெண்ட்.'
'ஃப்ரெண்ட்ஸ், எனக்கு இவங்க பத்து நிமிஷம்தான் கொடுத்திருக்காங்க. இன்னொரு நாள் உங்களுக்காக வருவாங்கன்னு நெனைக்கிறேன். இப்ப என்னோட கேபினுக்கு அழச்சிண்டு போகறேன். கணேச தாத்தா இருக்காரா? அவர் கிட்ட நல்ல ஸ்ட்ராங்கா ஒரு ஃபில்டர் காஃபி போட்டு உள்ள கொண்டு வர சொல்லுங்க. மேடம் லைக்ஸ் காஃபி வெரி மச்.'
மைதிலிக்கு ஒரு அடி முன்னால் சென்று தன்னுடைய கேபின் கதவைத் திறந்து ஒரு ஏர் இந்தியா ஸ்டைலில் அவளை வரவேற்கிறான் முரளி.
'ஐ ஆம் ஆனர்ட் டுடே. வெல்கம். ப்ளீஸ் பீ ஸீட்டெட்.'
அவனுடைய அறை மிகவும் பிரத்யேகமாக இருந்தது. இருபத்து நாலில் வைத்திருந்த ஏஸி மைல்ட் குளிரை கொடுத்துக் கொண்டிருந்தது. அழுக்கில்லா டேபிள் ஆறுக்கு நாலில். மேலே கண்ணாடி டேபிள் டாப். பங்காரு காமாக்ஷி அம்பாள் படம் மல்லிகைச் சரத்துடன், ஆசி வழங்கும் ப்போஸுடன் காஞ்சி மஹான் படம் ஒரு சிறிய உத்ராக்ஷ மாலையுடன். டேபிளில் ஒரு உலக மேப் உருண்டை சிறியதாக, பென் ஸ்டாண்ட் கலைநயத்துடன். அம்மாவுக்கும் அப்பாவுக்கும் இடையில் தலையை நீட்டிக்கொண்டு, ஒரு கையை அம்மா மீதும் ஒரு கையை அப்பா மீதும் போட்டுக்கொண்டு சிரித்த முகத்துடன் கூடிய முரளியின் படம் அதன் பக்கத்தில்.
ரூம் ஸ்ப்ரே ரோஜா நறுமணத்தை இதமாக கொடுத்துக் கொண்டிருந்தது. நடந்து வந்த அவளது களைப்பை இந்த அறை சில நிமிடங்களிலேயே விரட்டி விட்டது.
முன்னால் ரோல் ச்சேரில் முரளி. எதிரிலே உள்ள இரண்டு குஷன் ச்சேர்களில் ஒன்றில் மைதிலி.
ஒரு சின்ன ஷோ கேஸ் அவள் எதிரில். நெருக்கமாக வைக்கப் பட்டிருந்த மெட்டல் கப்புகளும் ஷீல்டுகளும் அந்த ஷோ கேஸில். இரண்டு மூன்று ஃப்ரேம் போடப்பட்ட சான்றிதழ்கள் இரு பக்க சுவர்களில்.
'இதுதான் என்னோட சின்ன ஆஃபீஸ். ரெண்டு வருஷமா இங்கதான். ரெண்டட் தான். ஆனா ரெண்ட் கிடையாது. அதுக்கு பதிலா ஹவுஸ் ஓனரோட வருமான கணக்கு, சொத்து பத்துகளுக்கு நான் தான் ஆடிட்டர். பண்டமாற்று முறை இன்னிக்கும் நடைமுறையில இருக்குன்னும் புரிஞ்சுக்கலாம். ஒரு கஷ்டமும் உண்டு. முரளின்னு அவர் கீழேந்து கத்தினா நான் மேலேந்து ஓடிப் போகணும். அவர் காரை ஸர்வீஸுக்கு எடுத்துண்டு போய் அழச்சிண்டு வரணும். அவரோட பெட் dடாக்குக்கு மன்த்லி செக் அப்புக்கு டாக்டர ஏற்பாடு பண்ணனும். மொத்தத்துல நான் அவருக்கு ஒரு எடுபிடி ஆடிட்டர்.'
'பாருங்க, நான் பாட்டுக்கும் சுய புராணம் பேசிகிட்டே இருக்கேன். பை தி பை, நீங்க எப்படி இருக்கீங்க. உங்க உத்யோக பிரச்சனையெல்லாம் எப்படி இருக்கு? அமிகப்ளா ஸால்வாயிடுத்தா நீங்க எதிர் பார்த்த மாதிரி?'
கொஞ்சம் தயங்கினாள். என்ன தோன்றியதோ ஸ்ரீனிவாசனுடன் நடத்திய பேச்சு வார்த்தைகளை ப்ரீஃபாக சொன்னாள்.
'ஓ. க்ரேட் மேடம். உழைக்கறவங்களுக்கு பகவான் எப்போதுமே உறுதுணையா இருப்பார். நீங்க சொன்னதுலேந்து இப்ப உங்களுக்கு இருக்கறது உங்க கிட்ட ஒரே பிரச்சனைதான். அதான்.. எடம் பார்க்கறது. கவலைய விடுங்க. ராயப்பேட்டைல நான் வாங்கியிருக்கிற ஃப்ளேட் (flat) ரெண்டு மாஸத்துல ரெடியாயிடும். நீங்க தாராளமா அங்கேயே உங்க ஆஃபீஸ வெச்சுக்கலாம். நல்ல ஷெகர்ல இடம். ஸெக்யூரிடி எல்லாம் இருக்கு. நீங்க எப்படி கேட்கிறீங்களோ அப்படி இன்ட்டீரியர் பண்ணி கொடுக்க சொல்றேன். எனக்கும் இன்டீரியர்ல ரொம்ப இண்டெரெஸ்ட் உண்டு. ஜமாய்ச்சுடலாம். ஆறாம் நம்பர் ஃப்ளேட். ஆறு நூறாகும்னு பெரியவாள்லாம் சொல்லுவா. நீங்க ப்ரமாதமா வருவேள்.'
'அது இல்ல...'
'நீங்க ஒண்ணும் இழுக்க வேண்டாம். வாடகையெல்லாம் வேண்டாம். எனக்கு இங்க ஒரு ஹவுஸ் ஓனர் கெடச்ச மாதிரி, உங்களுக்கு நான் அங்க ஹவுஸ் ஓனர். என்னோட க்ளையண்டுகள் கேஸ்கள தரேன். கூட்டிக் கழிச்சு கணக்கு பார்த்துக்கலாம் நீங்க ரொம்ப எம்பராஸ்டா ஃபீல் பண்ணினீங்கன்னா?'
'நான் மாத்திரம் இதுல முடிவெடுக்க முடியாது. மத்தவங்க கிட்டேயும் பேசணும்.'
'நல்லா பேசுங்க. அவங்களையும் அழச்சிட்டு வாங்க. உட்கார்ந்து விலாவாரியா பேசுவோம். நான் அன்னிக்கே சொன்னதுதான். உங்களோட ஒவ்வொரு வளர்ச்சியிலேயும் நான் இருக்கணும்னு ஆசைப் படறேன். சில பேர பார்த்தா சட்டுனு பிடிச்சுடும் இல்லையா? அப்படித்தான் நீங்க எனக்கு.'
'நான் கொஞ்சம் ப்ரொஃபஷன்ல கால ஊணிக்காம எந்த கமிட்மெண்டையும் தர முடியாத சூழல்ல இருக்கேன்.'
'அய்யய்யே... உங்கள யாருங்க அதையெல்லாம் முடிச்சு போட சொன்னா. நீங்க ஒரு வாரம் பத்து நாள் டைம் கேட்டிருக்கீங்க. அதுக்கே இன்னும் ரெண்டு மூணு நாள் இருக்கே. ஆனாலும் என் மனசுக்குள்ள ஒரு நப்பாசை ஓடிண்டுதான் இருக்கு. இப்பவே எஸ்ஸுனு சொல்ல மாட்டீங்களான்னு.'
இப்படி சொல்லி விட்டு ஒரு புன் சிரிப்புடன் மைதிலியின் முகத்தைப் பார்க்கிறான். சலனமில்லை. ஆனாலும் சட்டென்று வந்து மறைந்த ஒரு புன் முறுவலை அவன் கவனிக்க தவறவில்லை.
'மிஸ் மைதிலி. லெட் அஸ் நாட் டாக் அபௌட் தட் ஹியர். நீங்க என் ரிக்வெஸ்ட ஏத்துண்டு என்ன விஷ் பண்ண வந்த ஒரு கெஸ்ட். ஐ ஆம் த்ரில்ட் டுடே உங்களோட வரவால. எனக்கு எல்லாத்துலேயும் பிராப்தம் உண்டு. எனக்கு கெடச்ச பெத்தவங்க, படிப்பு, பேர், ஆஃபீஸ், ஸ்டாஃப், க்ளையண்ட்ஸ்... எல்லாமே எனக்கு ப்ளெஸ்ட் டிலைட்ஸ். நான் கேட்டது எனக்கு கிடைக்கும்ங்கற நம்பிக்கை. தைரியமும் நம்பிக்கையும்தான் ஒருத்தனுக்கு ப்ளெஸ்ஸிங்க்ஸா திரும்ப வருது. அதுல நான் எப்போதும் உறுதியா இருப்பேன்'.
'சாரி, இதுக்கெல்லாம் நான் இப்ப இருக்கற நிலைமைல எப்படி ரியாக்ட் பண்றதுன்னு கூட தெரியல.'
இப்போது ட்ரேயில் காஃபியோடு எழுபது வயதுக்கு மேல் தோற்றமளித்த ஒரு முதியவர் கேபின் கதவை லேஸாக தட்டிவிட்டு உள்ளே நுழைகிறார். புரிந்து கொள்கிறாள் அவர்தான் கணேஸ தாத்தா என்று.
'தாத்தா, நேத்திக்கு மயக்கமா வரதுன்னு சொன்னேளே. இப்ப சரியா போச்சா.'
'முரளி, நீதான என்ன நேத்திக்கு டாக்டர் கிட்ட அழச்சிண்டு போன. பின்ன சரியா போகாம எப்படி இருக்கும்?'
'இன்னிக்கு ரெஸ்ட் எடுத்துண்டு நாளைக்கு ஆஃபீஸ் வர வேண்டியது தான? நான்தான் நேத்திக்கே சொன்னேனே?'
'அதான் சரியாயிடுத்தே. உன்ன பார்க்காம ஒரு நாள் இருந்துட்டா மனச ரொம்ப பெசையறதுடா. பிச்சக்காரனா இருந்தவனுக்கு அரண்மணைய கட்டிக் கொடுத்தவனாச்சே நீ. மயக்கத்துல உசுரு போனா போகட்டுமே உனக்காக.'
'போதும் தாத்தா. ஏற்கனவே ஏஸி குளுர்ரது. நீங்க கெளம்புங்கோ.'
'மேடம் காப்பி குடிச்சோண்ண பெல்ல அடி. வந்து ட்ரேய எடுத்துண்டு போறேன். பெல்லடிக்க மறந்துடாத. அப்புறம் ஈயும் எறும்பும் ரூமுக்கு வந்துடும்.'
'சரி தாத்தா.'
அவர் ரூமிலிருந்து சென்றவுடன், 'மேடம், ஹாட்டா இருக்கா காஃபி?'
'ம்ம்ம்.'
தொடரும்.....
No comments:
Post a Comment