Sunday, December 19, 2021

கனியுமோகாதல்_74

கனியுமோகாதல்_74

By பாஸ்கர் சத்யா 

தலையை குனிந்து கொண்டு இரு கை விரல்களாலும் பீங்கான் கப்பை பிடித்துக் கொண்டு அவள் காஃபி பருகுவதை பார்த்தும் பார்க்காதைப் போல பார்த்து ரசிக்கிறான்.

நடுநடுவே அவள் பீங்கான் கப்பை ஸாஸரில் வைக்கும்போது வந்த சப்தம் டைப்ரைட்டரில் தேடித் தேடி எழுத்துகளை அன்று அழுத்தியபோது அவனுக்கு கிடைத்த சப்தத்தை நினைவுக்கு வந்து மனதில் ஒரு ஜில் சிரிப்பு.

அவளையும் அறியாமல் ஸாஸரில் வைக்கிறோம் என்று   டேபிளில் கப்பை வைத்து அது ஏற்படுத்திய வட்டமான காஃபி முத்திரை.  அந்த க்ஷணத்தில் அதைத் துடைக்க கைத் துணிக்காக அவள் காட்டிய பரபரப்பு.

ஒன்றும் அவன் கண்களிடமிருந்து தப்பவில்லை.  ரசிக்கிறான்.  மனதோடு ரசிக்கிறான்.  காஃபி கொடுக்கும் அமைதியில் அவளிடமிருந்தும் அங்குமிங்கும் அலைபாயும் ஓரப் பார்வைகள்.  மின்னலான பார்வைகளும் மனங்களும் பேசாமல் பேசுவதில் எப்போதுமே அழகு இருக்காதா என்ன?

'பார்க்கணும், பார்க்க இடமும் கொடுக்கணும்.' பருவப் பார்வைகளின் அரிச்சுவடி பரிமாற்றங்களின் தியரி இது.  முடிவுகளுக்கு மத்தியில் திண்டாடும் இமைப் பறவைகளின் படபடப்புப் பார்வைகள்.  அர்த்தங்களோடு பார்க்கும் தைரியம் அவைகளுக்கு இருப்பதில்லை.  ஆனால் அர்த்தங்களுக்கு மனதில் விடை தேடும் பார்வைகள் ஒன்றுக்கொன்று விலகிவிட்டால்.

'இட்ஸ் ஓகே மிஸ் மைதிலி.  தாத்தா பார்த்து துடச்சுப்பார்.  ஃபீல் ரிலாக்ஸ்ட்.'

'நான் கிளம்பறேன்.  லேட்டாகறது.  அம்மா கவலைப் படுவா லேட்டாச்சுன்னா?'

'நீங்க கிளம்பினா நான் கவலைப் படுவேனே?  ஜஸ்ட் எ ஜோக்.  பத்து நிமிஷம்னு நான் ஃபிக்ஸ் பண்ணியிருக்க கூடாது.  மை மிஸ்டேக்.  எனிவே, த்தேங்க்ஸ் எ லாட்.'

'நீங்க உங்க ஆஃபீஸ ஹன்ட்ரெட் பர்ஸன்ட் க்ளென்லினெஸ்ஸோட வெச்சிருக்கீங்க.'

'ஓ.  இட்ஸ் எ க்ரேட் ஆனர்.  ஐ திங்க் யூ ஹேவ் மை விஸிடிங் கார்ட்.  எனிவே யூ ஹாவ் ஒன் மோர்.  உங்க கலீக்ஸோட பேசிட்டு சொல்லுங்க.  நாம போய் நம்ம ஃப்ளேட்ட பார்க்கலாம்.  எங்காத்துக்கு பக்கத்து தெருவில தான் இருக்கு.  ஜஸ்ட் எ வாக்கபிள் டிஸ்டன்ஸ் தான்.'

'ஏன்?  உங்க ஆஃபீஸ அங்க ஷிப்ட் பண்ணலாமே?  எதுக்கு இவ்வளவு தூரம் வரணும் தினமும் நீங்க?'

'இப்ப சப்திக்கு நீங்க தான் ஆஃபீஸ் இல்லாம கஷ்டப் படறீங்க.  ஸோ உங்களுக்குதான் ப்ரையாரிட்டி.'

'அப்படி வேண்டாம்.  எங்களுக்கு சின்ன ஆஃபீஸ் ஸ்பேஸ் இருந்தா போதும்.  அரௌண்ட் ஹை கோர்ட்டு எங்களுக்கும் கிடைக்கும்.'

'நோ நோ நோ... எனக்கு இந்த தி. நகரும் ரொம்ப சௌகர்யமான இடம்தான்.  நிறைய க்ளையண்ட்ஸ் வந்து போக சௌகர்யமா இருக்கு.  என்ன பத்தி் யோசிக்காதீங்க.'

'எனக்காக எதுக்கு சிரமப் படறேள்னுதான்.  அப்பா அம்மா கிட்ட கேட்க வேண்டாமா?'

'அம்மா கிட்ட இதச் சொன்னா இன்னிக்கே உங்க கைய பிடிச்சி தர தரன்னு இழுத்துண்டு போய் உங்க கையால வெளக்கேத்த சொல்லிட்டு கீய கொடுத்துட்டு வந்துடுவா.  தே ஆர் தட் மச் க்ரேஸி எபௌட் யூ.'

'நீங்க ஸைடுல கவிதையெல்லாம் எழுதுவீங்களோ?  ஆனாலும் இந்த ஃப்ளேட்டரி கொஞ்சம் ஓவர்.'

'லெட் மீ பீ ஃப்ரேங்க் வித் யூ.  என்னோட பேரண்ட்ஸ் என்னை விட ரொம்ப ஆங்க்‌ஷியஸா இருக்காங்க நீங்க எங்காத்துக்கு வரதுல.  எனிவே, ஐ ஜஸ்ட் லீவ் திஸ் டு யூ.  இன்னார்க்கு இன்னாரென்று எழுத வைத்தானே தேவன் அன்று.  அவள் ஒரு தொடர்கதை.  நான் இந்த பாட்டு வந்த படத்த சொன்னேன்.'

'சார், நீங்க ஒரு சினிமா வசன கர்த்தாவா போயிருக்கலாம்.'

'பரவாயில்லையே, உங்களுக்கும் ஃப்ளேட்டரி வர்ரதே.  லைஃபை ஸீரியஸாவே பார்த்துண்டிருக்கறவன் இல்ல நான்.  வேலை நேரத்துல வேலை.  மத்த நேரங்கள்ல ஜாலியா இருக்கணும், மனசுக்கு பிடிச்சவங்க சுத்தி் இருக்கணும்.  அந்த மாதிரி ஒரு க்ஷணத்துல பொக்குனு போனா கூட நோ ரெக்ரட்ஸ்.'

'சாரி, எமோஷன்ஸ் உங்களுக்கு செட்டாகல.'

'கொஞ்சம் அதிகப் பிரசங்கி?'

'கொஞ்சம் இல்ல.  நிறைய.'

சிரிக்கிறார்கள் இருவரும்.  விடை பெறுகிறாள்.

'நானும் வேணா உங்க கூட ... ஷாப்பிங்.'

'ஒண்ணும் வேண்டாம்.  நீங்க உங்க வேலைய பாருங்க.  ஐ திங்க் ஐ ஹாவ் டேகன் மச் ஆஃப் யுவர் டைம் அல்ரெடி.'

எல்லா ஸ்டாஃப்களிடமும் சொல்லிக் கொண்டு கிளம்புகிறாள்.

படிக்கட்டுகள் இறங்கி வரும்போது அங்கு கணேச தாத்தா அவளைப் பார்க்கிறாள்.

'நீங்க யாருன்னு தெரியாது.  உங்கள இது வரைக்கும் நான் இங்க பார்த்ததா கூட ஞாபகம் இல்ல.  எங்க முரளிக்கு சீக்கிரம் கல்யாணம் ஆகணும்னு பகவான் கிட்ட வேண்டிக்கோம்மா.'

'நீங்க முரளி சாருக்கு உறவா?'

'இல்லம்மா.  ஒரு வருஷம் முன்னாடி ஒரு டீக்கடை முன்னாடி அவன் கிட்ட டீ கேட்டேன்.  டீ வாங்கி கொடுத்ததோட இல்லாம எனக்கு இங்க உத்யோகத்த போட்டுக் கொடுத்து... பிடிப்பே இல்லாம இருந்தவனுக்கு பகவானா வந்தவன் அவன்.  புள்ளையும் மாட்டுப்பொண்ணும் தொறத்தினவன இந்த முரளி பக்கத்துல வெச்சுண்டுட்டான்.  பெரிய கதை.  நேரமாகும்.  நீங்க கிளம்புங்கோ.  ஏதோ உங்கள பார்த்தோண தத்து பித்துனு உளற ஆரம்பிச்சுட்டேன்.  அவன் காதுல விழுந்தா சத்தம் போடுவான்.'

'சரி மாமா.  நான் வரேன்.'

'இந்த கிழவன மாமான்னெல்லாம் கூப்பட வேண்டாம்.  அவன் கூப்பிடற மாதிரியே தாத்தான்னே கூப்பிடும்மா'

வேகவேகமாக ஷாப்பிங் முடித்து விட்டு பனகல் பார்க் வந்து 12B பஸ்ஸை பிடித்து கச்சேரி ரோடுக்கு டிக்கெட் எடுக்கிறாள்.

மனம் முழுவதும் ராமசாமி தெருவில்.  அந்த படிக்கட்டுகளில், அந்த ஸ்டாஃபுகள், அந்த அறை.  அந்த ஏஸி, அந்த ஷோ கேஸ், அந்த ஸ்வாமி படங்கள், அந்த உலக உருண்டை, அந்த படம், அந்த சம்பாஷணைகள், அந்த காஃபி, அந்த தாத்தா.  பஸ்ஸில் பயணித்தவர்களும், படிகள் ஏறி இறங்கியவர்களும் பக்கத்தில் நின்றவர்களும் அவள் கண்களுக்கு தெரியவே இல்லை.

'காமதேனு தியேட்டர்... லஸ்.'

கண்டெக்டரின் அறிவிப்புக்குப் பின் பிகில் சப்தம் நினைவுகளுக்கு விடை கொடுக்க முயற்சித்தது.

'அடுத்த ஸ்டாப்பிங்கில் இறங்கணும்.'

வாங்கிய பெட்டிகோட்டுகளையும், ஸாரி ஃபால்ஸுகளையும், இத்யாதிகளையும் ஒருமுறை சரி பார்க்கிறாள்.

'ஏண்டி, இத்தனை நாழியாயிடுத்தா?  கை கால அலம்பிண்டு சாப்பிட ஒக்கார்.  சேர்ந்து சாப்பிடுவோம்.  உனக்கு பிடிச்ச பீர்க்கங்காய் தொகையலும் கத்திரிக்கா கூட்டும்.'

கொஞ்சம் அலச்சல் அசதி.  சாப்பிட்டுவிட்டு லோ வால்யூமில் விவத பாரதியை ஆன் செய்து விட்டு கட்டிலில் படுக்கிறாள்.

'இந்த முரளியோட அப்ரோச் வித்யாசமா இருக்கே.  வெரி டிப்ளமாடிக், கைண்ட் டு ஹிஸ் ஸ்டாஃப், கண்ணியம், பயஸ், அபௌவ் ஆல் ஹைலி ஆப்டிமிஸ்டிக்.  அப்பியர்ஸ் இன்டெலிஜெண்ட் டூ.'

'என்ன ரொம்ப இவன் டிஸ்டர்ப் பண்றானோ?  இவன் கிட்ட பிடி கொடுத்தே பேசாம இருந்தாலும் இவன் ஏன் என்னையே சுத்தி வரணும்.'

'கல்யாணம் கல்யாணம் கல்யாணம்...  இது ஒண்ணுல ஏன் தான் பொண்ண பெத்தவா குறியா இருக்காளோ.  இப்பத்தான் சந்தர்பங்களெல்லாம் ப்ரொஃபஷன்ல கூட வர்ரது.  இப்ப மிஸ் பண்ணிட்டா ...'

'முரளி எல்லாத்துக்கும் உதவியா இருப்பேங்கறான்.  அவன் எடத்துல ஆஃபீஸ நடத்திக்கோங்கறான்.  ஆனா கடைசி வரைக்கும்?'

'நன்னா இருக்கே கதை?  ஏதோ அவனையே நம்பற மாதிரி இருக்கே என் போக்கு?  என்ன ஆச்சு இன்னிக்கு எனக்கு?'

'பகவான் ஏதேதோ வழிய காமிச்சிண்டு வரார்.  நாம தான் அதெல்லாத்தையும் பத்திண்டு முன்னேறணும்.'

'ஒரு வாரம் பத்து நாள் டைம் கேட்டிருக்கோம்.  அதுவும் முடியப்போறது ரெண்டு மூணு நாளுல.  நாம மாட்டேன்னு சொன்னா, அவன் இப்ப சொல்ற உதவியெல்லாம் பண்ணுவானா என்ன?'

'இம்ப்ரெஸ் பண்றான்.  இல்லைனு சொல்ல முடியாது.  ஆனா அதுக்காக இவன எப்படி நம்பறது?'

'எந்த நம்பிக்கைல ஸ்ரீ மேல ஆசப்பட்டோம்?  என்ன அவனோட பல வருஷம் பேசியிருக்கோம் பழகியிருக்கோம்.  அதனால நம்பிக்கை இருக்கறதா நெனச்சிண்டிருக்கேனோ என்னிக்காவது?'

'முரளியாத்துல என்ன சொல்லப்போறேன்னு அப்பா கேட்டா என்ன சொல்றது?  எத்தனை நாள் இவா கிட்ட சாக்கு போக்கு சொல்லிண்டிருக்கறது?'

'மனசுக்கு என்ன, அது பாட்டுக்கும் தான் வேலைய ஒழுங்கா செய்யறது.   யோசனை மேல யோசனையா கொடுத்துண்டே இருக்கு.  நாம தான் தீர்மானம் பண்ண முடியாம தவிச்சிண்டு இருக்கோம்.'

'ஆஃபீஸ்ல சித்த நாழிலே முடிவெடுத்துடறோம்.  நீ இத்த செய், நீ அத்த செய்யுனு அதிகாரத்துல பொளந்து கட்டறோம்.  ஆனா கல்யாணம்னு வரும்போது ஏன் இப்படி தயங்கறோம்னே தெரியல.'

'கொழம்பிண்டே இருந்தா கொழம்பிண்டே இருக்க வேண்டியது தான்.  இனிமேலைக்கு ஸ்ரீ இல்லைனு ஆயிடுத்து.  எதுக்கு பெத்தவாளையும் மத்தவாளையும் நம்ம முடிவ சொல்லாம தேவையில்லாம கஷ்டப் படுத்திண்டு?'

சிந்தனைகளை சிறிது தள்ளி வைத்து விட்டு கண்ணை மூடுகிறாள்.

விவித் பாரதியில் ஏதோ ஒரு பாடல்:

'ஆறு அது ஆழமில்ல.  அது சேரும் கடலும் ஆழமில்ல.  ஆழம் அது ஐயா, அது பொம்பள மனசுதாய்யா...'

சிரித்துக் கொண்டே ட்ரான்ஸிஸ்டரை ஆஃப் செய்து விட்டு தலைகாணியை பக்கத்தில் போட்டுக்கொண்டு அதை செல்லமாக அணைத்துக் கொண்டு கண்ணயர்கிறாள்.

தொடரும்...

No comments:

Post a Comment