Sunday, December 19, 2021

திருவல்லிக்கேணி பெண்பிள்ளை ரகசியம் பகுதி −6

 (திருவல்லிக்கேணி பெண்பிள்ளை ரகசியம்..)  (பகுதி −6..)

தம் எதிரே நிற்பது சாதாரணமானப் பெண்மணி இல்லை, சம்பிரதாய விஷயங்களில் நல்ல பற்றுடையவள் என்பது இப்போது தெளிவாகத் தெரிந்தது மாமுனிகளுக்கு..

...இவள் சொல்லி பகவத், பாகவத விஷயங்களை இன்னும் சற்று நேரம் ஆனந்தமாய் அனுபவிக்கலாம் என்ற எண்ணம் தற்பொழுது அவருக்கு உண்டானது..

அதனால், அந்தப் பெண்பிள்ளையிடம் மெல்லப் பேச்சுக் கொடுத்தார்..

"பெண்ணே!.. 

ஆசார்யனுக்குக் கைங்கர்யம் செய்வதில் நீ ரொம்பவும் ஊற்றமுடையவளாய்த் தெரியறயே!...

வயோதிகம் நெருங்கிண்டு இருக்கற இந்த சமயத்தில, ஒன்னால ஓடிஆடி ஆசார்யனுக்கு கைங்கர்யம்லாம் செய்ய முடியுமா?.. 

அதுக்கு ஒன்னோட தேஹம் எடம் கொடுக்க வேணாமா?.."

....மாமுனிகளின் நியாயமான சந்தேகத்திற்கு விடையளிக்க, தற்பொழுது திருவல்லிக்கேணி அம்மாள் பேச ஆரம்பித்தாள்...

"ஸ்வாமி... தாம் கூறுவது நியாயமே!.. 

அடியேனுக்கு எவ்ளோ தூரத்துக்கு ஸாத்யமோ, அவ்ளோ தூரத்துக்கு ஆசாரிய கைங்கர்யம் பண்ணணும்னு உத்தேசம்..

அடியேன் என்ன

#ஆரோக்யம் வேண்டினேனோ பின்பழகியார் போலே?..#

...என்று கேட்டு, மாமுனிகள் இது சம்பந்தமாய் முழு விருத்தாந்தமும் கேட்க ஆசைப்படுவார் என்பதை உணர்ந்தவளாய், தானே அதைக் கூறவும் ஆரம்பித்தாள்..

"நம்பிள்ளையின் அந்தரங்க சிஷ்யர் இந்தப் "பின்பழகராம் பெருமாள் ஜீயர்"...

இவர் நம்பிள்ளைக்கு ரொம்ப ஆசையோட அடிமைகள் செஞ்சுண்டு இருந்தார்..

ஒரு சமயம் இந்த ஜீயருக்கு ஒடம்பு ரொம்ப முடியாம போயிடுத்து..

அவரால, வழக்கம்போல நம்பிள்ளைக்குச் செய்யற கைங்கர்யங்களத் தொடர முடியல..

அப்போ, அவர் நம்பிள்ளையோட சில சிஷ்யர்களக் கூப்பிட்டு,

"நீங்கள்ளாம், "ஏழை ஏதலன்", 

"ஆழி எழ" இந்தப் பதிகங்கள எம்பெருமான் முன்ன விண்ணப்பம் செஞ்சு, 

எனக்குத் தேக ஆரோக்யத்த தந்தருளும்படி ப்ரார்த்தனை பண்ணுங்கோ!.."னு கேட்டுண்டார்..

இந்த விஷயத்தை அந்த சிஷ்யர்கள் பிள்ளையிடம் கொண்டு சென்று ப்ரஸ்தாபித்தார்கள்..

"ஒரு ஶ்ரீவைஷ்ணவன் பெருமாள்கிட்ட தனக்கு ஆயுளையும் ஆரோக்யத்தையும் வேண்டலாமா?..

இது ரொம்பவும் தப்பில்லையா?..

ஆயிரம்தான் உபதேசம் கேட்டாலும், இங்கத்திய வாழ்க்கையில ஜீயருக்கு இன்னும் பற்று விடலையே!.."னு அங்கலாய்ச்சா..

பிள்ளைக்கு ஜீயரோட திருவுள்ளத்துல என்ன எண்ணம் ஓடறதுனு நன்னாத் தெரியும்!..

ஆனாலும் மீதி சிஷ்யாக்களும் அத உள்ளபடியே உணரணும்னு ஆசப்பட்டு, ஜீயரக் கூப்பிட்டு,


"நீரிப்படி பெரிய பெருமாள நிர்ப்பந்திக்கலாமா?..

இது ஒம்ம ஸ்வருபத்துக்கு விருத்தம் அன்றோ?..(உம்முடைய தகுதிக்கு ஏற்புடையதோ?..)

என்று கேட்கவும், ஜீயர் பிள்ளைகிட்ட தம்மோட உள்ளக் கருத்தை வெளியிட்டார்..

"தேவரீர் நீராடி எழுந்தருளியதும், தமது மார்பிலும் முதுகிலும் குறுவேர்வை முத்துக்களாக அரும்ப,

அடியேன் ஆலவட்டத்தைச் சுழற்றி அதைக் களைய வேணும்...

தேவரீரோட வஸ்திரங்களத் தோய்க்கவும், உலர்த்தவும் செய்து, தேவரீர் உபயோகத்துக்குப் பாங்காக ஆக்கித் தரணும்..

தேவரீர் களைச்சுப் போய் சோர்வா இருக்கச்சே, தேவரீரோட கால்பிடிச்சு விடவும், கை அமுக்கி விடவும் செஞ்சு, தேவரீருக்குத் தேஹ சௌக்யத்த உண்டாக்கணும்...

....இன்னும் இதுபோல அடியேனால் ஆன சகல விதமான உபசாரங்களையும், தேவரீருக்கு செய்யணும்னு ஆசப்படறேன்..

இந்தக் கைங்கர்யங்களை அடியேன் இழக்க விரும்பாததனாலத்தான் அப்படிப் பெருமானிடம் கேட்கச் சொன்னேன்..

மத்தபடி, இந்த வாழ்க்கையில, அடியேனுக்கு வேறு எந்தவிதமான பிடிப்பும் இல்ல ஸ்வாமி..." என்று விண்ணப்பம் செய்தார்..

....இந்தமாதிரி, ஸ்வரூப விருத்தம்னு (தகுதிக்கு ஏற்றதல்ல) தெரிஞ்சும், ஜீயர் பெருமாள்கிட்ட அப்படி ஒரு ப்ரார்த்தனை பண்ணிக்கணும்னா, அவருக்கு ஆசார்ய கைங்கர்யத்துல எவ்ளோ ஈடுபாடு இருக்கணும்?..

அடியேன் என்ன அப்படியா ஸ்வாமி?..

முடிஞ்ச போது செய்வேன்...

முடியலைனா, விட்டுடுவேன்...

அடியேனோட ஆசார்ய பக்தி அவ்வளவுதான்!.."

....என்று குற்ற உணர்வோடு சொல்லித் தலை குனிந்தாள் திருவல்லிக்கேணி அம்மையார்...

(வளரும்..)

No comments:

Post a Comment