சென்னை To பெங்களூரு 2500 கிமீ(சுஜாதா & வெங்கடேசன்)தமிழக -கர்நாடக சுற்றுப்பயணம் பகுதி 8
🥀🌺🌹🥀🌺🌹🥀🌺🌹
ஒரு வழியா மாதேஸ்வரன் மலைக்கு வரோம்
இவர் இந்த கோயில் கதையை சொல்றார்…
மாதேஸ்வரன் மலை
உயர்ந்த மலை. அதிலே அடர்ந்த காடுகள். மலைப்பகுதி கண்களுக்கு இதமானது. பசுமை நிறைந்த காடும், மலையும் நம் மனதை உற்சாகப்படுத்துகின்றன. மலைவாசம் நம் மனச்சுமைகளை இறக்கி வைக்க அருமையான இடம். குளுமையான அந்த மலையிலே, அருமையான தெய்வம் அங்கே ஒரு கோயிலில் குடிகொண்டிருந்தால், நம் ஐம்புலன்களையும் அடக்கி ஆழ்ந்த தியானத்தை மேற்கொள்வதற்கு ஆனந்தமான ஒரு ஆற்றலைப் பெறுவதற்கு ஏற்றதாகவும் அந்தச் சூழல் அமைந்து விடுகிறது.மேற்குத்தொடர்ச்சி மலையின் ஒரு
பகுதியான காடும், மலையும் கர்நாடக மாநிலத்தில் வந்து சேர்கின்றன. இந்த அழகிய மலைச்சாரலில் ‘மாதேஸ்வரன்’ என்ற பரமேஸ்வரன் குடி கொண்டிருக்கும் மலை ‘மாதேஸ்வரன் மலை’ என்று அழைக்கப்படுகிறது.அங்குள்ள 14ம் நூற்றாண்டுகால கல்வெட்டுகள் மாதேஸ்வரன் என்ற ஒரு சிறுவன், பரமேஸ்வரனின் அருளால் அந்த ஈஸ்வரனுக்குப் பணிவிடை செய்யும் பொருட்டு வானத்திலிருந்து பூமிக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகத் தெரிவிக்கின்றன. வானத்திலிருந்து தோன்றிய அந்த சிறுவன் ‘சித்தநஞ்ச தேசிகர்’ என்ற ஒரு சித்புருஷர் தனது ‘சுத்தூர்’மாட சிம்மாசமான மடத்தில் பணியாற்ற தனது சீடனாக ஏற்றுக் கொண்டார்.
அந்த சீடனுக்கு ‘சிவசக்தியின்’ அருட்கடாட்சத்தைப் பலவகையிலும் கற்றுக் கொடுத்து, அந்த ஈசனின் அருளால் அவனுக்கு வாரி வழங்கி அந்த சிறுவனை ஒரு சிவபக்தனாக வளர்த்தார். அந்தச் சிறுவனிடம் அவ்வப்போது அதிசயத்தக்க சில மாற்றங்கள் தோன்றிக்கொண்டே இருந்தன. அவன் சில அற்புதங்களை அவ்வப்போது அந்த மடத்திலே ஈசனின் அருளால் நிகழ்த்திக் காட்டினான்.ஒரு சமயம் பரமேஸ்வரனுக்குப் பூஜை செய்ய மலர்களைப் பறித்துவர அந்தச் சிறுவனையும், அவனுடன் மற்ற சீடர்களையும் அந்த வனப்பகுதிக்குள் அனுப்பினார், சித்தநந்ததேசிகர். குருவின் கட்டளைப்படி இதர சீடர்கள் பூப்பறித்து வந்து நின்றனர். ஆனால், அந்த சிறுவனைக் காணவில்லை. அவன் எங்கே என்று மற்ற சீடர்களைக் கேட்டார், குரு. அவன் தங்களை விட்டுப் பிரிந்து தனியாக சென்று விட்டான் என்று பதில் வந்தது.
சற்று நேரத்திற்கெல்லாம் அந்தச் சிறுவன் காட்டுப்புலி ஒன்றின்மீது அமர்ந்து கொண்டு, பூக்களுக்குப் பதில் தேள், பூரான், பாம்பு, அரணை போன்ற விஷப் பூச்சிகளைப் பூக்கூடையில் நிரப்பிக் கொண்டு வந்தான்.
இப்படி சொல்லி கதையை பாதியில நிறுத்திட்டு அதோ அங்க என்ன வரது பாருன்னு பஸ்லேர்ந்து கை காட்டறார்.
இவர் சொல்ற கதையும் வீரப்பன் பயமும் இப்ப இந்த காடு புலிகள் சரணாலயம்ங்கற விஷயமும் எனக்கு அடி வயத்த மறுபடியும் கலக்கறது.
பெருமாளே இந்த மனுஷனுக்கு புத்தி கொடுன்னு வேண்டிக்கறேன்.
பின்ன ?நான் ஊர் ஒலகத்துல எல்லாரும் போற மாதிரி திருப்பதி போலாம்மான்னு கேட்டா கூட்டமா இருக்கற எடத்துக்கு ஏன் போய் கஷ்டப்படணும். அவர்தான் சர்வ வியாபி ஆச்சே ..அவர காட்டுல ,மலையில இயற்கையோடு கூட்டமில்லாம சேவிக்கலாம்னு கூட்டிண்டு வந்து அவஸ்தை படுத்தறாரே?
அவர் காட்டின எடத்துல ஒரு காட்டெருமை கூட்டம்
...நல்ல வேளையா பஸ் வேற ஒரு திருப்பத்துல திரும்பிடறது.
அதிகமான வாகனதெரிசலோ, ஜன நெரிசலோ இருக்கவே இருக்காது. ஆபத்தான விஷயமும் அதுவே தான்… ஆள் அரவமற்ற மலை அது. எப்போதாவது தமிழ்நாட்டு போக்குவரத்து பஸ்களோ, கர்நாடகா பஸ்களோ கடந்து செல்லும், ஞாயிற்று கிழமையாக இருந்தால் சில கார்களும் கடந்து செல்லும், மற்றப்படி லோக்கல் ஆட்கள் எப்போதாவது தான் அவ்வழியே வருவார்கள்… வனவிலங்குகள் எப்போதேனும் குறுக்கிடும் பகுதி அது…
பல இடங்களில் , sine wave வடிவத்தை ஒத்த ரோடுகள் உண்டு, நீங்கள் ஒரு பள்ளத்தில் இருக்கும் போது, அடுத்த பள்ளத்தில் என்ன இருக்கிறது என்பது தெரியாது. அப்படி, ஒரு முறை ஒரு மேடு ஏறி, அதன் முகட்டிற்கு வரும் போது பார்த்தால்…. மூன்று யானைகள்… முழுவதுமாக சாலையை கடந்து புதரிற்குள் செல்லும் குட்டியானை, குட்டியானைக்கு ஒட்டினாற்போல் நடந்து செல்லும் ஒரு மீடியம் சைஸ் யானை, பாதி சாலையை அடைத்து நிற்கும் கம்பீரமான உயரமான ஆண் யானை…
இனி ப்ரேக் அடித்தாலும் யானைக்கு அருகில் போய் நின்று ஹலோ சொல்லி கை குலுக்க வேண்டியது தான் பாக்கி… யானை சொல்லும் ஹலோ தனி ரகமாய் இருக்குமென்பதால், ஓடி விடுவது ஒன்று தான் வழி என்று டிரைவர் ஆக்ஸிலரேட்டரை முறுக்கி, அடுத்த மேட்டில் கஷ்டப்பட்டு ஏற்றி தப்பித்தோம். இது அத்தனையும் யானை சுதாரிப்பதற்குள் நடந்தது. இதை அறிந்த யானை துரத்த ஆரம்பித்தது. அது இருக்கும் சைஸிற்கு 4 எட்டு எடுத்து வைத்தாலே பிடித்து விடும் தூரத்தில் தான் இருந்தார்கள். யானை சுதாரிப்பதற்குள் அடுத்த மேட்டின் முகட்டிற்கு வந்து வண்டியை பள்ளத்தில் செலுத்த ஆரம்பித்ததால், வண்டி வேகம் பிடித்து வந்து விட்டது.
கதையை நிறுத்திட்டு திக்பிரமை பிடிச்சு நிக்கறார். நான் யானை போயிடுத்து கதைய சொல்லுங்கோங்கறேன்
No comments:
Post a Comment