சென்னை To பெங்களூரு 2500 கிமீ(சுஜாதா & வெங்கடேசன்)தமிழக -கர்நாடக சுற்றுப்பயணம் பகுதி 10
🥀🌺🌹🥀🌺🌹🥀🌺🌹
கொதிக்கற வெயிலில் செருப்பில்லாமல் ப்ராகாரத்தை சுற்றி (ஓடி)வந்து கோயிலை விட்டு வெளியே வரோம். கர்நாடகா உள்ள போகற T நரசிப்பூர் பஸ்ஸுக்கு வெயிட் பண்றோம். ஒரு மணி நேரம் ஆகும்னு சொல்லி கொஞ்ச தூரம் வேடிக்கை பார்த்துட்டு பாத்ரூம் போய் வரேன்னு கிளம்பறார்.
இனி இவர் பேசுவார்.
நாங்கள் நின்றுகொண்டிருக்கும் இந்த இடத்தில்... ஒரு முறையோ, இரண்டு முறையோ, மூன்று முறையோ, இன்னும், இன்னும் பல முறை வீரப்பனின் காலடி பட்டிருக்கக்கூடும். வீரப்பன் இங்கு நின்றிருக்கலாம். உட்கார்ந்திருக்கலாம். உறங்கியிருக்கலாம். சமைத்திருக்கலாம். வேட்டையாடி இருக்கலாம். இது இன்று சத்தியமங்கலம் வனத்தின் ஏதோவோர் இடம். ஆனால், அன்று இது "வீரப்பன் காடு".
பஸ் வர கொஞ்ச நேரம் ஆகும்கறதால இவளை கோயில் வாசல்ல பத்ரமா உக்கார சொல்லிட்டு காட்டுக்குள்ள போறேன். வழில முள்ளு செடிகள்.
கைகளில் ஏகப்பட்ட கீறல்கள். ரத்தம். அடித்த வெயில் பெரும் தகதகப்பைக் கொடுத்தது. வியர்வையும், ரத்தமும் கலந்து அந்தக் கீறல்களில் படர்ந்து பெரும் எரிச்சலை ஏற்படுத்தியது. நிச்சயம் ஏதாவது நிழலுக்குப் போயாக வேண்டும். அந்த நிழலில் கொஞ்ச நேரம் ஓய்வெடுக்க வேண்டும். நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். கொஞ்ச நேரம் குட்டித் தூக்கம் போட்டால் கூட நன்றாக இருக்கும்.
கோயிலுக்கு வந்திருந்த ஒரு பெரியவரை பார்த்தேன். எந்தச் சலனமும் இல்லாமல், தலை நிமிர்த்தி சுற்றியிருந்த மலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தார்.
பெரியவரே ...கொஞ்ச நேரம் எங்கயாவது உட்காருலாமா "என்கிறேன்
"போலாம் தம்பி... அந்தப் பக்கம் ஒரு சின்ன ஓடை இருக்கு. அங்க போய் உட்கார்லாம் வாங்க" என்று முன்னால் நடக்க ஆரம்பித்தார்.
அது அத்தனை ஆசுவாசமாக இருந்தது. ஓடையில் தண்ணீர் மிகவும் குறைவாகவே இருந்தது. ஓடும் அளவிற்குக் கூட இல்லை. தண்ணீர் தேங்கித்தான் இருந்தது. ஓடையையொட்டியிருந்த ஒரு மரத்தின் அடியில் "அக்கடா" என போய் விழுந்தேன். இருந்த கொஞ்சம் தண்ணீரைக் குடித்து முடித்தேன். பெரியவர் உட்காரவில்லை. ஏதோ ஒரு செடியின் இலைகளைப் பிடுங்கி நுகர்ந்து பார்த்துக் கொண்டிருந்தார். ஓர் இடத்திலேயே அவர் நிற்கவில்லை. அவருக்கு ஓய்வு தேவைப்படவில்லை. அங்குமிங்குமாக நடந்து கொண்டேயிருந்தார். ஓடையையொட்டி நிலம் சேறும், சகதியுமாகச் சொதசொதப்பாக இருந்தது. அங்கு போய் உட்கார்ந்து எதையோ பார்த்தவர்...
"தம்பி இங்க வந்து பாரு... நேத்து ராத்திரி யானை வந்து போயிருக்குது." என்று அவர் சொன்ன நொடி, அத்தனை களைப்பும் மறைந்து போய் பெரும் உற்சாகம் ஆட்கொண்டது. மரத்தடியிலிருந்து துள்ளி எழுந்து, பெரியவர் இருந்த இடத்திற்கு ஓடினேன். "ஜூராசிக் பார்க்" படத்தில் இது போன்ற ஒரு காட்சியைப் பார்த்ததாக நினைவு. அந்த சேற்றில் யானையின் பெரிய காலடித் தடம் இருந்தது.
"தம்பி அந்த எதிர் கரையில பாரு...அந்த பள்ளத்துல இறங்கும் போது கொஞ்சம் சறுக்கி விட்ருக்கும் அதுக்கு. அந்தத் தடத்த பாரு... சரிஞ்சு போயிருக்கு. யானைங்க எந்த மேட்டுலயும் அசால்ட்டா ஏறிடும். ஆனா, சின்ன எறக்கம்ன்னா கூட பெரும் பாடு பட்ரும். என்னிக்காவது மலை, காட்டுல சுத்தும் போது யானை துரத்துச்சுன்னா, யோசிக்காம ஏதாவது பள்ளத்துப் பக்கமா பார்த்து ஓடிடுங்க. தப்பித் தவறி கூட மேட்டுலயோ, நேரான பாதையிலோ ஓடிராதீங்க. நீங்க நினைக்குற மாதிரி இல்ல, யானையோட உருவத்துக்கும் ஓட்டத்துக்கும் சம்பந்தமே இருக்காது. சட்டுனு வேகமெடுத்திடும். இதோ... இங்க பாரு இது குட்டி யானையோட கால்தடம். நைட்டு நல்லா சாப்புட்டு, இங்க வந்து தண்ணிய குடிச்சிட்டு போயிருக்குதுங்க..." என்று அந்த வெளிச்சமான பகலில், முந்தைய இரவில் நடந்த கதைகளை அப்படியே நம் கண் முன் நிறுத்தினார் பெரியவர்.
மீண்டும் நடை தொடங்கியது. இப்போது அத்தனை சோர்வு இல்லை. ராசு அண்ணன் அளவாகத்தான் பேசுவார். பெரும்பாலும் காட்டிக்குள் நடக்கும்போது காட்டின் ஓசைகளைக் கேட்பதுதான் ஆகச் சிறந்த இசை அவருக்கு. இருந்தும் அவரை தொந்தரவு செய்தேன்...
.. ஒரு நாள் நடக்கவே இவ்வளவு கஷ்டமா இருக்கே. வீரப்பன்ல்லாம் எப்படித்தான் இங்க அத்தனை வருஷம் இருந்தாருன்னு தெரியிலயே?" என்று கேள்வியாகத்தான் அதைக் கேட்டேன்.
"ம்ம்ம்..." என்று சொன்னவர் பதிலாக ஏதும் சொல்லவில்லை. அமைதியாகவே நடந்தார்.
நானும். அவரின் கைகளையே பார்த்துக் கொண்டிருந்தேன். அந்த புடைத்த நரம்புகள் அவரின் வலுவை எடுத்துக்காட்டும் விதத்தில் இருந்தது.
சில நிமிடங்கள் கழித்து, அவராகவே பேசத் தொடங்கினார்...
"அது இருக்கும் 15, 20 வருசத்துக்கு முன்னாடி தம்பி. நாங்கெல்லாம் இருளர் பழங்குடி...இருளர் கேள்விப்பட்டிருக்கீங்களா? இங்கதான் இந்த மலையடிவாரத்துல இருக்க காட்டுக்குள்ளத்தான் எங்க கிராமம். அப்போ எனக்கு என்ன ஒரு 25 வயசு இருக்கும். ஊர்க்காரங்க எல்லாம் நிறைய வீரப்பன பத்தி பேசுவாங்க. ரொம்ப மரியாதையாதான் பேசிக்குவாங்க. நமக்கெல்லாம் அவரு மனசுல பெரிய ஹீரோ மாதிரி. என்ன மனுஷன்ய்யா இவரு? இவ்வளவு பெரிய காட்டுக்கே காவச்சாமியா இருக்குறாருன்னு... அவரை பத்தி நினைச்சாலே பெரிய பிரமிப்பா இருக்கும். கூடவே கொஞ்சம் பயமாவும் இருக்கும். பெரும் கோபக்கார மனுசன் வேற." என்று அவர் தொடர்ந்து கொண்டுதான் இருந்தார். ஆர்வமிகுதியில் இடைமறித்து...
"நீங்க நேர்ல பார்த்திருக்கீங்களா?" என்று கேட்டேன்.
"அன்னிக்கு அப்படித்தான் தம்பி. நாங்க வழக்கமா கழுதைய இழுத்துகிட்டு காட்டுக்குள்ள பலாக்காய் எடுக்கப் போவோம். நான் எங்க பசங்கன்னு, நாங்க ஒரு 6 பேரு... நாலு மூட்டைய நிரப்பிக் கட்டிட்டு, கொஞ்சம் விறகு, சுள்ளி எல்லாம் பொறுக்கிக் கட்டிட்டு கழுதைய ஓட்டி வந்திட்டிருந்தோம். அப்போ ஒரு இடத்துல வரும்போது, மக்கள் சலசலப்பு கொஞ்சம் கேட்டது. எங்களுக்குப் புரிஞ்சிடுச்சு. பயத்துல பசங்க ஆளுக்கு ஒரு பக்கம் பாய்ஞ்சு ஓடுறாங்க. நானும், என் கூட்டாளி ஒருத்தனும் மட்டும் டக்குன்னு என்ன பண்றதுன்னு தெரியாம கழுதைய புடிச்சிட்டு நின்னுட்டிருந்தோம். அதுக்குள்ள அவங்க ஆளுங்க எங்கள சுத்திட்டாங்க..."
எனக்கெல்லாம் வெலவெலத்துப் போச்சு. முத ஒரு அஞ்சு பேரு சுத்தினாங்க... பார்த்திட்டே இருக்கோம், அப்படியே அந்தப் பக்கத்துலருந்து அவரு வர்றாப்ல. அந்த நிமிஷத்த இப்ப நினைச்சாலும் என் உடம்பெல்லாம் ஏதோ பண்ணும். அந்த மீசையும், அந்தப் பார்வையும் போதும் தம்பி ஒருத்தன அப்படியே பயந்து நடுங்க வச்சிடும்... நாங்க உயிர் பொழச்சு ஊரு போய் சேருவோமான்னு பயத்துல இருந்தோம். கையில இருந்த துப்பாக்கிய அப்படியே தோள்பட்டையில போட்டுக்கிட்டு எங்கக்கிட்ட வந்தாரு…
மீதி கதையை கேட்பதற்குள் தூரத்தில் பஸ் வர சத்தமும் இவள் பொறுப்பில்லாமல் தன்னை உட்கார வைத்து விட்டு யாருடமோ கதை அளந்து கொண்டிருப்பதையும் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க பார்ப்பது தெரிந்து சஸ்பென்சை மறந்து கோயிலை நோக்கி ஓடுகிறேன்…
No comments:
Post a Comment