Sunday, December 19, 2021

திருவல்லிக்கேணி பெண்பிள்ளை ரகசியம் பகுதி −3

 பத்மா கோபால்

(திருவல்லிக்கேணி பெண்பிள்ளை ரகசியம்..)(பகுதி −3..)

தம் எதிரே வருந்தியவாறு நின்றிருந்த  அப்பெண்மணியை மாமுனிகள் தமது இதமான வார்த்தைகளால் தேற்றினார்..

"அம்மா!.. அந்த எம்பெருமான் நமக்கும் கார்யம் செய்வான் மா..

அவன் மேல நாம விஸ்வாஸத்தோட (நம்பிக்கையோட) இருந்தா, நிச்சயம் அவன் நம்ம கைவிடவே மாட்டான்.."

...ஜீயரின் வார்த்தைகளைக் கேட்டவள், சற்றே தன்னைச் சுதாரித்துக் கொண்டாள்..

இருந்தும், தன்னை ஒருகணம் அடியவர்களோடு ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்டாள்..

அதனால், அவள் அறியாமலேயே அவளது  இதழ் ஓரத்தில் ஒரு இகழ்ச்சியான சிரிப்பு உண்டாகியது..

உடனே ஜீயரைப் பார்த்து, ஸ்வாமி... அடியேன் என்ன,

# ஆடக் கண்டேனோ சோமாசியாண்டானைப் போல# என்று வருத்தம் மேலிட வார்த்தை சொன்னாள்...

அதைக் கேட்டதும்தான் தாமதம்..ஜீயருக்கு இந்தப் பெண்மணியின் ஞானத்தை முழுவதுமாக அனுபவித்துப் பார்க்க வேண்டும் என்ற விழைவு உண்டாகியது..

அதனால்....

"அது என்னம்மா விருத்தாந்தம்?.." என்று ஏதுமறியாதவர் போல் வினவினார் ஜீயர்...

"சொல்கிறேன் ஸ்வாமி... 

முழுவதும் கேட்டுவிட்டு, தாமே அடியேனுக்கு ஒரு தீர்ப்பு சொல்லுங்கள்..."

....என்ற பீடிகையுடன், திருவல்லிக்கேணி மாதரசி சோமாசியாண்டானின் கதையைக் கூற ஆரம்பித்தாள்...

"இந்த சோமாசியாண்டான் (சோமயாஜி ஆண்டான்) எம்பெருமானாருடைய சிஷ்யர்கள்ல ஒருத்தர்..

இவரும் மேல்கோட்டையில உடையவரோட இருந்து, கோயில் திருப்பணிகள்ல தன்ன முழுசா ஈடுபடுத்திக் கொண்டவர்..

அதனால, அவருக்குச் செல்லப்பிள்ளை மேல விசேஷமான ஆசை உண்டாகி, அதுவே நாளடைவில பெரிசா வளரவும் செய்தது..

இந்த சோமயாஜி ரொம்பவும் இனிமையாப் பாடக் கூடியவர்.. 

கையில தாளக்கட்டைய வெச்சுண்டு இவர் பாட ஆரம்பிச்சார்னா, 

அந்தப் பாட்டோட இனிமைக்கு, செல்லப்பிள்ளை தன்னோட அர்ச்சா ஸமாதியைக் கடந்து, சிறுபிள்ளையாகத் தோன்றி, இவர் பாட்டுக்குச் சேர ஆடுவான்!..

பெருமானின் ஆட்டம்கண்டு, சோமயாஜியும் ரொம்ப மகிழ்ந்திருப்பார்..

காலப்போக்கில், செல்லப்பிள்ளை தமக்கு விசேஷமாக அனுக்ரஹிப்பதைக் குறித்து, சோமயாஜி கர்வம் கொள்ள ஆரம்பித்தார்..

இது ஸ்வரூப நாசமாகையால், எம்பெருமானார் இவரைத் திருத்த எண்ணம் கொண்டார்..

அதனால், ஒருநாள் அவரை அருகழைத்து,

"ஆண்டான்! உமது பாட்டுக்கு உகந்து செல்லப்பிள்ளை தினமும் ஆடறானே...

நமது மனதில் ஒரு ஸம்சயம் (சந்தேகம்) உண்டு...

ஆசார்ய நியமனத்தை மீறி, எம்பெருமான் ஒருவருக்கு அனுக்ரஹிப்பானா என்று அவனை கேட்டுச் சொல்லுமே..." என்று கூறினார்..

ஆண்டானும் அன்றிரவே இவ்விஷயத்தை, செல்லப்பிள்ளையிடம் ப்ரஸ்தாபிக்க,

"உபயவிபூதியும் அவரிட்ட வழக்கு என்று தெற்குத் திருவீட்டில் அவரிடம் நாம் சொன்னது பொய்யாகாது!.. அவருக்கு மனதில் எந்த ஒரு ஸம்சயமும் வேண்டாம்!.." என்று திருவாய் மலர்ந்தருளினான்..

மறுநாள் ஆண்டான் இதை ஸ்வாமியிடம் விண்ணப்பித்தார்..

அதுகேட்டு உகந்த உடையவர்,

"உமக்குப் பேறு உண்டா? என்று இன்று அவனிடம் கேளும்!.." என்று ஆண்டானை நியமிக்க,

ஆண்டான் "இதுவென்ன ஸ்வாமி இப்படிக் கேட்கச் சொல்கிறாரே..." என்று திகிலடைந்தவராய், அன்றிரவே செல்லப்பிள்ளையிடம், "தாம் அடியேனுக்கு மோக்ஷப்ராப்தத்தை நிராகரிப்பீரா என்ன?.." என்று கவலையோடு வினவினார்..

அதற்கு செல்லப்பிள்ளை, தனது புன்னகை கொஞ்சமும் மாறாமல்,

"வாரீர் சோமாசியாண்டானே!..

நீர் பாடினீர்; நாம் உகந்து ஆடினோம்.. அது கண்டீரே!..

...பாட்டுக்கும் ஆட்டத்துக்கும் சரியாயிற்று!..

இனி, உபயவிபூதி ஐஸ்வர்யத்தையும் உடைய உமது ஆசார்யனான உடையவர் உமக்குப் பேறு தந்தால்தான் உண்டு!.." என்று சொல்லிவிட,

ஆண்டான் தாம் அகங்காரம் கொண்டதற்கு மிகவும் அனுதாபப்பட்டு, அதன் பின்னே, தம்மைத் திருத்திப் பணிகொண்ட ஆசார்யர்பால் மிக்க பக்தியோடு வாழ்ந்திருந்தார்..

இப்போது சொல்லும் ஜீயரே!...

எம்பெருமான் இல்லை என்று சொன்னாலும், எம் ஆசார்யன் அப்படிச் சொல்வதில்லை என்ற விஸ்வாஸத்தினால்தானே இந்த ஏழையும் உம் வாசல் வந்து நிற்பது!... தாம் அடியேனுக்கு அபயம் தர வேண்டாவோ?..."

.....என்று வினயத்தோடு கேட்டு நின்றாள்...

(வளரும்..)

No comments:

Post a Comment