Sunday, December 19, 2021

கனியுமோகாதல்_78

கனியுமோகாதல்_78

இரண்டு ச்சேர்களை எதிர் எதிராக போட்டு ஒன்றில் மைதிலியை உட்காரச் சொல்கிறான் முரளி.

அந்த படுக்கை அறையில் இருக்கும் பெட்டில் உட்கார்ந்து பேசுவது அவளுக்கு சங்கோஜமாக இருக்கும் என்று நினைத்தே இரண்டு ச்சேர்களை கொண்டு வந்தான்.

'ஐ அம் ஸாரி மைதிலி.  நான் கொஞ்சம் ஹார்ஷா பேசியிருக்க கூடாது.  எனிவே ஐ அம் gக்லாட் யூ அக்ரீdட் டு மேரி மீ.'

'கடைசியாக நீங்க நெனச்சத சாதிச்சுட்டீங்கன்னு வெச்சுக்கலாமா?  இட் இஸ் மோர் ஆர் லெஸ் அப்பியர்ஸ் எ கம்பெல்ஷன்.  நான் ஓரளவு ப்ரொஃபஷன்ல காலை ஊணிண்டதுக்கு அப்புறம் தான் மேரேஜ பத்தி யோசிக்கணும்னு நெனச்சிண்டிருந்தேன்.  நாம நெனைக்கறது என்னிக்கு எப்போதும் நடக்கறது?'

'கம் ஆன் மைதிலி.  இதை ஒரு கம்பெல்ஷனா நெனைக்காத.  எனக்கும் முப்பது ஆச்சு.  உனக்கும் இருபத்தஞ்சு தாண்டிடுத்து.  ஏதோ பகவான் சங்கல்பம் நம்மள சேர்த்து வைக்கறது.  கல்யாணம்னா ஏதோ அங்கேயும் இங்கேயும் கைய பிடிச்சிண்டு சுத்தறதா நெனைக்கல.  உன்னோட பேரண்ட்ஸ் மாதிரி, இல்லாட்டி எங்க பேரண்ட்ஸ் மாதிரி ஒருத்தொருக்கொருத்தர் நன்னா புரிஞ்சிண்டு மனசு விட்டு பேசிண்டு, ஏன் சில சமயம் தர்க்கம் கூட பண்ணிண்டு, பொறுப்போட சந்ததிய வளக்கறதுல தான் இருக்கு.  உன் ப்ரொஃபஷன்ல உனக்கு இருக்கற மாதிரி எனக்கும் என் ஆடிட்டிங் மேல pபேஷன் அசாத்யமாவே இருக்கு.  சாதிச்சுட்டுத்தான் கல்யாணம்னா எப்படி ஏத்துக்க முடியும் சொல்லு.  கல்யாணத்துக்கு முன்னேயோ பின்னேயோ நம்ம ப்ரொஃபஷன்ல இருக்கற ப்பேஷன்ல டீவியேஷன் இல்லாம நம்பிக்கையோட முயற்சி செஞ்சாலே போதும்.  நன்னா வருவோம்.  என்னதான் சொல்லு மைதிலி, ஊக்கம்ங்கறது தம்பதியருக்குள்ள பரிமாற்றமா இருந்ததுன்னா சாதிக்கரது சுலபமாகும்ங்கறது என்னோட பார்வை.'

'இவ்வளவு சொல்றேள்.  கல்யாணத்துக்கப்பறம்.... பார்க்கத்தானே போறேன்.'

'இன்னும் உனக்கு இதுல சந்தேகம் இருந்துண்டே இருக்குன்னு நெனைக்கிறேன்.  எனக்கு லவ் மேரேஜுல ஆரம்பத்துலேந்தே ஒரு பெரிய அபிப்ராயம் இல்ல.  கல்யாணத்துக்கு முன்னாடி பேசற லவ்வர்ஸோட பேச்சும் கல்யாணத்துக்கு அப்புறம் பேசற பேச்சும் அப்படியே இருந்துடுமா என்ன?  மே பி ஸம் எக்ஸெப்ஷன்ஸ்.  கிட்டத்தட்ட உன்னோட சந்தேகமும் அப்படித்தான் உன்கிட்ட அல்லாடிண்டிருக்குன்னு நெனைக்கிறேன்.  நம்பிக்கை தாம்மா வாழ்க்கை.'

'என்னவோ தெரியல.  சில பேரை பார்த்தாலே நமக்கு பிடிச்சு போயிடும்.  அப்படித்தான் உன்ன எனக்கு பிடிச்சிருந்தது.  அப்புறம் உங்க கிட்ட பேசினது, ஸ்ரீதர் சார் உன்ன பத்தி உயர்வா சொன்னது, பிக்‌ஷேஸ்வரன் சாரோட ரிலேடிவ் மூலம் உங்க குருநாதர் உங்க மேல வெச்சிருக்கிற அபிப்ராயங்கள கேட்டது.... இதெல்லாம் சேர்ந்து உன்னத்தான் பண்ணிக்கணும்னு மனசுல ஆழமா பதிந்துடுச்சு.'

'ஸ்ரீதர் என்ன சொன்னான் என்ன பத்தி உங்க கிட்டே.'

'ஒரு உண்மைய சொல்லட்டுமா?  தப்பா நெனைக்க கூடாது என்னை, என்ன?  எனக்கு ஒரு டவுட் இருந்துது.  நீங்க ரெண்டு பேரும் ஒண்ணா படிச்சிருக்கேள்.  பல வருஷம் பழகியிருக்கேள்.  உங்க ரெண்டு பேருக்குள்ள கல்யாண அபிப்ராயம் இருக்குமோன்னு எனக்கு ஒரு டவுட் இருந்தது.  எதுக்கும் அவர் கிட்ட எங்காத்துக்கு வந்த உங்க ஜாதகத்த பத்தி பேசினேன்.  அவர் பேசறதுலேயே அவருக்கு அப்படி ஒரு எண்ணம் இல்லைனு தெரிஞ்சுண்டேன்.  டு பீ ஹானஸ்ட், அப்புறம்தான் எனக்கு மூச்சே வந்தது.'

இதைக் கேட்டவுடன் மைதிலியின் எண்ணங்கள் ஸ்ரீதரை சுற்றி சுற்றி.

'எல்லாத்தையும் மறச்சுட்டியேடா இப்படி?  எனக்கு தெரியாமலேயே என்னன்னவோ நடந்திருக்கும் போல இருக்கே.  அவன் அப்பா சொன்னது, ஜெயஸ்ரீ சொன்னது...  இதெல்லாம் வெச்சி பார்க்கும்போது உன்னோட காம்ப்ளெக்ஸே உனக்கு சத்ருவா இருந்திருக்கும் போல இருக்கே.  அரேஞ்ச்ட் மேரேஜுல முரளிக்கு இருக்கற தைரியத்துல என்னோட ரொம்ப வருஷம் பழகின உன் கிட்ட இல்லையேடா.'

யோசித்துக் கொண்டே இருக்கிறாள் பர்முடேஷன் காம்பினேஷனில்.

'என்ன மைதிலி, வருத்தமா இருக்கா. உனக்கு தெரியாம உன்ன பத்தி தெரிஞ்சுக்க நான் முயற்சி பண்ணினதுல.  இதுல ஏதாவது தப்பு இருக்கா?'

'நத்திங்' என்று சொல்லிவிட்டு எழுந்து வந்து பூமாவிடம் பாத்ரூம் செல்ல வழி கேட்கிறாள்.

பாத்ரூம் கதவை தாழிட்டுக் கொண்டு ஒரு அழுகை.  அவளையும் அறியாது.  பல விதமான கேள்வி பதில்கள்.

'எங்கேயோ எப்படியோ தவறு நடந்திருக்கு.  ஆனா அதுக்காக உண்மைய சொல்லி ஜெயஸ்ரீக்கு ஒரு நெருடல கொடுத்து,  முரளியை ஏமாத்தி, பெத்தவாள ஏமாத்தி...  வாய்ப்பில்லை.  அது மாத்திரம் இல்ல நன்னாவும் இருக்காது. கடவுள் விருப்பங்களை ஏற்றுத்தானே ஆக வேண்டியிருக்கு.  ஜெயஸ்ரீக்கு வாக்கு கொடுத்தாச்சு.  எல்லார் முன்னிலையிலும் முரளிக்கும் ஓகே சொல்லியாச்சு.  இனி சொல்லி என்னத்த சாதிக்கப் போறோம்?.  பழச மறந்துட்டு நம்பிக்கையோட கடவுள் விட்ட வழியில புது வாழ்க்கைய தொடருவோம்.  மே bபீ, டைம் ஷுட் bபீ தி ஹீலர்.  பார்க்கலாம்.  அட்லீஸ்ட், ஃப்ரம் நௌ லெட் மீ ஃபோகஸ் ஆன் ப்ரொஃபஷன்'

'ஸ்ரீக்கு ப்ரொஃபஷன்ல நல்ல ஒரு ஈடுபாடு கொடுத்துட்டு, அவன் நாலு காசு சம்பாதிச்சோண்ண அப்பா கிட்ட பேசி சம்மதம் வாங்கிண்டு கல்யாணப் பேச்சை அவன் கிட்ட ஆரம்பிக்கலாம்னு நெனச்சேன்.  அப்பா அவன கொட்டாங்கச்சி வக்கீல்னு சொன்னது சுருக்குனு அன்னிக்கு இருந்ததால கொஞ்சம் தள்ளிப் போட நெனச்சேன்.  ஆனா ஸ்ரீ இப்படி ஒரு முடிவெடுத்து ஜெயஸ்ரீக்கு ஓகே சொல்லுவான்னு நான் எதிர்பார்க்கவே இல்ல.'

மண்ணுல போட்ட எல்லா விதைகளுமா மொளச்சுடறது?  பூக்கறதெல்லாம் காச்சுடறதா என்ன?  கேட்கறதெல்லாம் கெடச்சுட்டா விதிங்கற வார்த்தை ஒண்ணு இருக்குமா என்ன?

குளிர்ந்த நீரைத் தொட்டு கண்களை லேசாக அலம்பிக் கொள்கிறாள்.  தன் கையில் வைத்திருந்த கைக்குட்டையில் ஒத்திக் கொள்கிறாள் கண்களை.

வெளியே வந்து நேராக முரளியிடம் சம்பாஷணைகளை தொடர்கிறாள்.

'சாரி, ஏதோ சொல்லிண்டிருந்தேள்.  டிஸ்டர்ப் ஆயிடுத்து.'

'ஸ்ரீதர் சாரைப் பத்தி?'

'ம்ம்ம்....'

'அவர் கிட்ட என்ன பத்தி உங்க கிட்ட எடுத்து சொல்லி ரெகமெண்ட் பண்ண கூட  சொன்னேன் தெரியுமா?'

சொல்லிவிட்டு வெகுளித்தனமான வெளிப்பட்ட அவனுடைய சிரிப்பு.  அவளும் சிரித்தாள்.  மைதிலியின் சிரிப்பின் வேறு அர்த்தம் முரளிக்குப் புரிய வாய்ப்பில்லை.

'டுடே ஐ ஆம் ஹாப்பி.  கல்யாணம் நடக்கிறபோது நடக்கட்டும்.  ஆனா இன்னிக்கே இப்பவே நாம ஹனிமூன் போற உணர்வ உன்னோட ஒரு எஸ் கொடுத்துருக்கு.  இத சொல்லும் போது உனக்கு சிரிப்பு வரலாம்.  ஆனாலும் என்னோட ஃபீல் உண்மை.'

'நீ இனிமே உனக்கு வர கஷ்டங்களெல்லாத்தையும் என் தலைல போடு.  நான் பார்த்துக்கறேன்.  ஐ ஸ்வேர் bபை ஸேயிங் திஸ், ட்ரஸ்ட் மீ ... ஃபார் எவர்.'

'மைதிலி, கிளம்பலாமா? ரொம்ப நாழி ஆச்சே வந்து.'

அப்பாவின் குரலைக் கேட்டு எழுத்து கொண்டு ஹாலுக்கு வருகிறாள்.

'முரளி, என்னடா சொக்கு பொடி போட்ட?  நம்மாத்து மஹாலக்ஷ்மி முகத்துல இப்படி ஒரு சந்தோஷம்?'

கொஞ்சம் நாணம் எட்டிப் பார்த்தது.

'இவ்வளவு தூரம் வந்துட்டேள்.  ரெண்டாவது தெருவுல முரளி வாங்கியிருக்கிற வீட்ட பார்த்துட்டு வரலாமா சுந்தரம் சார்?'

'த்தேங்க்ஸ் அப்பா, ஞாபக படுத்தினதுக்கு.  சித்த நாழியில ரெடியாயுடறேன்.  நீங்க அது வரைக்கும் பேசிண்டிருங்கோ.'

'கிளம்பும்போது ஒரு டார்ச் லைட்டையும் எடுத்துக்கோ.  இருட்டற சமயம்.  அங்க கரெண்ட் கெடையாதோன்னோ?'

சீதாரமய்யருக்கும் பூமாவிற்கும் ஒரே சந்தோஷம்.  தங்கள் பையன் விரும்பிய பெண்ணையே அவனுக்கு முடித்து வைத்ததில் ஒரு பெருமிதமும் அதில் கலந்திருந்தது.

விருப்பமானவுடன் திருமணம் என்ற பாதை மாறி  விரும்பிய முரளியுடன் மைதிலியின் திருமணம் நிச்சயிக்கப் படுகிறது.

விருப்பத்தை சொல்லத் தெரியாது தயங்கிய ஸ்ரீதரின் திருமணம் அவனை விரும்பிய ஜெயஸ்ரீயுடன் நிச்சயமாகிறது.

காதலர்கள் மணமுடிப்பது அழகுதான்.  ஆனால் அவரவர்களுக்குள் பூட்டி வைக்கும் காதல் கனிவது அகஸ்மாத்தாக நடந்தால்தான் உண்டு.

மலர்ந்த காதல் கனியவில்லை மைதிலியைப் பொருத்த மட்டில்.  கனிவதற்கான அடுத்தடுத்த கட்டங்கள் அவளுக்காக அமைத்துக் கொடுக்காதது இறைவன் குற்றமாக கூட இருக்கலாம்.  

காலம் பிரித்தது அவளை ஸ்ரீதரிடமிருந்து.  அதே காலம் அவளுடைய சாதனைகளுக்காக முரளியோடு சேர்த்து வைக்கிறதோ என்னவோ?

மைதிலி அடக்கிக் கொண்ட சோகங்கள் முரளியின் அன்பால் கரைய வேண்டும்.  

கரையும் என்ற நம்பிக்கையுடன் கதை நிறைவு.

வணக்கத்துடன்

பாஸ்கர் சத்யா

No comments:

Post a Comment