கனியுமோகாதல்_77
உள்ளே சுந்தரம் தம்பதியனரும் மைதிலியும் நுழைந்தவுடன் சோஃபாவில் அமரச் சொல்கிறார் சீதாராமய்யர்.
தயக்கத்துடன் மைதிலி நிற்பதைப் பார்த்து பூமா, 'மைதிலி, உங்காம் மாதிரி நெனச்சுக்கோ. நெனச்சுக்கோ என்ன, உங்காமே தான். உட்காரும்மா.'
அந்த ஹாலின் தோற்றம் கலையழகோடு நிறைந்திருந்தது. பெரிய பெரிய படங்கள், சோஃபாக்களின் கம்பீரம், மூலைகளில் புராதன சிலைகள்.. சிப்பாய் ஈட்டியுடன், அம்பாரி யானை, பெரிய ஷோ கேஸில் சின்ன சின்ன கைவினைப் பொருட்கள், க்ரூப் ஃபோட்டோக்கள் இரண்டு மூன்று ... கொஞ்சம் பிரமிப்பாகவும் மிடில் க்ளாஸ் பயமும் கலந்து மௌனத்தில் ஆழ்ந்திருந்தன கௌரியின் மனம் சற்று.
'மொத மொதல்ல வந்திருக்க நம்மாத்துக்கு. வா மைதிலி. ரூமெல்லாம் பாரு.'
மூன்று பெட்ரூம்கள் .. படுக்கைகள் ராஜ தனத்துடன். முரளி அவன் அறைக்கு அவள் வரும்போது அவசர ஒப்பனையை முடித்திருந்தான். ஒரு ஹலோ வெல்கம் அவளுக்கு புன்னகையுடன். வேஷ்டி ஜிப்பா சகிதம் நின்று கொண்டிருந்தான். பெரிய வாட்சும் ஜிப்பாவைத் தாண்டி ஜொலித்த தங்க ச்செயினும் அவனுடைய ஸ்டேடஸை வெளிப்படுத்திக் கொண்டிருந்தன.
சமையல் உள்ளில் லக்ஷ்மியின் வாசம் பிரதிபலித்தது. மேடையில் க்ரேனைட் கற்கள் கண்ணாடிகளாய் உருவங்கள் தெரியும் அளவிற்கு பளிச். ஸ்டீல் கூடையில் துலக்கிய பாத்திரங்களின் ஜொலிப்பு.
கடைசியில் ஸ்வாமி அறையையும் காட்டுகிறாள். பெரிய பெரிய ஸ்வாமி படங்கள், அவர்களின் குலதெய்வமான வைதீஸ்வரர் நடுவில். நான்கில் இரு கைகளை அபயக்கரங்களாக உயர்த்தி காட்சி கொடுத்த மஹாலக்ஷ்மியின் படம் மைதிலிக்கு வித்யாசமாக இருந்தது. பூஜா ரூமிற்கென்றே ஒரு நறுமணம், ஸ்வாமிப் படங்கள் சூடிக் கொண்டிருந்த பூக்களாலாலும் தினமும் ஏற்றி வைக்கும் ஊதுபத்திகளின் நறுமணத்தினாலும்.
'என்ன பார்க்கர? மஹாலக்ஷ்மி படம் வித்யாசமா இருக்கேன்னா? அவ பாம்பே மஹாலக்ஷ்மி ஸ்வரூபத்தில நார்த்துல வாங்கினது. முரளி கல்யாண பேச்சு ஆரம்பிக்கர சமயத்துல இவ வந்தா நம்மாத்துக்கு. நீயும் லக்ஷ்மி ஸ்லோகங்கள்லாம் நன்னா சொல்லுவியாமே. உங்க அம்மா சொன்னா.'
'வா, மைதிலி. உட்கார்ந்து பேசலாம். சங்கோஜ படாதே. உன்னோட ஒரு எஸ்ஸுக்காகத் தான் காத்துண்டிருக்கோம். மனசுல எது தோணினாலும் கேள். அன்னிக்கு முதல் தடவையா பேசினதால சரியா உனக்கு பேச தோணியிருக்காது. இப்போ பேசு. தைரியமா பேசு.'
'பூமா, ஏன் மைதிலிய அவசரப் படுத்தற. பாவம் வெயில்ல வந்திருக்கா மூணு பேரும். களப்பா இருப்பா. முதல்ல அவாளுக்கு ஏதாவது கொடுக்கலாம் சாப்பிட குடிக்க.'
பூமா உள்ளே செல்கிறாள். அவளைத் தொடர்ந்து மைதிலியும் செல்கிறாள். ஆறு ஆர்னமென்டல் தட்டுகளில் அசோகா மற்றும் முறுக்கு வகையறாக்களை நிரப்பி அவளிடமே ஹாலுக்கு கொண்டு செல்லச் சொல்கிறாள் பூமா.
இரண்டு பெற்றோர்கள் இரண்டு டபுள் ஸோஃபாவில் எதிர் எதிராகவும் மைதிலியும் முரளியும் எதிர் எதிராக ஸிங்கிள் சோஃபாக்களிலும் அமர்கிறார்கள். எல்லோருக்கும் நடுவே ஒரு பெரிய கண்ணாடி டீப்பாயில் ஆறு பக்ஷணத் தட்டுகள்.
மெள்ள மெள்ள பேச்சுகள் ஆரம்பிக்கிறது.
'மைதிலி, முரளி ஆஃபீஸுக்கு போனியாமே? நன்னா இருக்கா அவன் ஆஃபீஸ். பிடிச்சிருந்ததா உனக்கு? ஒரு தெரு தள்ளி புதுசா இடம் வாங்கியிருக்கான். சாப்டுட்டு பேசிட்டு நாம எல்லாரும் அங்க போகலாம்.'
'பூமா, அன்னிக்கு அவாத்துல பேசின அளவு கூட மைதிலி இங்க பேசமாட்டேங்கறாளே. நன்னா பேசும்மா. நாங்க மூணு பேருமே வள வளன்னு பேசிண்டே இருப்போம். கூச்சமோ சங்கோஜமோ வேண்டாம். வக்கீல்னா பேசிண்டே இருப்பேன்னு நெனச்சா இப்படி ஸைலண்டா இருக்கியே. அப்பா அம்மா உன்ன பயமுறுத்தி அழச்சிண்டு வந்தாளா இங்க.'
சீதாராமய்யர் இப்படி சொன்னவுடன் சுந்தரம் அசட்டு சிரிப்போடு, 'அவதான் உங்காத்துக்கு போய் பேசிட்டு வரலாம்னு சொன்னதால தான் நாங்களும் வந்தோம் இங்க. பேசு கொழந்த. அவா தான் ஃப்ரீயா பேசறாளோண்ணோ. உன் மனசுல என்ன இருக்கோ அதப் பேசு. நாங்க இருக்கோமேன்னு பார்க்காத.'
ஒரு எம்பராஸிங் நெளியல் மைதிலியிடமிருந்து. சீதாராமய்யர் புரிந்து கொள்கிறார்.
'வெட்கப் படறா போல இருக்கு. அம்மா மைதிலி, எங்களுக்கு உங்காத்து சம்பந்தம் பிடிச்சிருக்கு. அத விட உன்ன என் புள்ளையாண்டானுக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு. நீயும் உன் வாயால சொல்லிட்டேனா கல்யாணத்த ஜாம் ஜாம்னு சீக்கிரமே முடிச்சுடலாம்மா.'
'எங்காத்து ஸ்டேட்டஸ்ஸ பார்த்து பயப்படாத. எங்க அப்பா எனக்காக சம்பாதிச்சத வெச்சிண்டு நான் வளர்ந்தேன். நான் சம்பாதிச்சத அஸ்திவாரமா வெச்சிண்டு என் பையன் வளர்ரான். நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து ஒழச்சு உங்க சந்ததிகளுக்கு சேர்க்கப் போறேள். மொத்தத்துல புத்திய கொண்டு உழச்சா நன்னா இருக்கப்போறோம். நீ படிச்சவ. பிக்ஷேஸ்வரன் கிட்ட நல்ல பேர் எடுத்துருக்கே. நன்னா வருவ. பணம் காசெல்லாம் பகவான் அள்ளி கொடுக்கறது. நல்லவாளுக்கு நல்லதையே செய்வார்.'
'நீ உன்னோட ப்ரொஃபஷன்ல நன்னா ஃபோகஸ் பண்ணு. இங்க உனக்கு ஒரு கொறையும் இல்லாம நாங்க பார்த்துக்கறோம். நீங்க ரெண்டு பேரும் நன்னா வரணும். அதப் பார்த்து பார்த்து உன்ன பெத்தவாளும் நாங்களும் சந்தோஷப் படணும். எனக்கென்னவோ உனக்காகவே முரளி கல்யாணம் இவ்வளவு நாள் தள்ளிப் போயிருக்குன்னு நெனைக்கிறேன்.'
'அப்பா அம்மாவ பிரிஞ்சிருக்கணுமேன்னு கவலைப் படறியா? அவா எங்க இருக்கா? ராயப்பேட்டாலேந்து கூப்ட்டா மைலாப்பூர்ல அவா காதுகள்ல விழுந்து சித்த நாழில பொண்ண பார்க்க ஓடி வந்துடப் போறா.'
'எங்க பையன பத்தி நாங்களே சொன்னா, எங்காத்து நாயனத்த நாங்களே எடுத்து வாசிக்கற மாதிரி இருக்கும். அவன் உன் கிட்ட சொன்ன மாதிரி, புது ஆஃபீஸ அவன் வாங்கியிருக்கிற ஃப்ளேட்லேயே ஆரம்பி. பிரமாதமா வருவ.'
மைதிலியிடமிருந்து மௌனத்தை தவிர வேறு ஏதும் வரவில்லை.
'ஏண்டி மைதிலி, மாமா இவ்வளவு தூரம் சொல்லிண்டிருக்கார் இல்லையோ? ஏதாவது பேசு. பேசணும்னு தான வந்த. அதுவும் நீ சொல்லித்தான நாங்களே வந்தோம் இங்க.'
கௌரி இப்படி சொன்னவுடன் மைதிலி, 'அதான' என்று யோசிக்கிறாள். கொஞ்சம் தயக்கம் கலைகிறது.
'மாமா, இவ்வளவு தூரம் நீங்க பேசினேள். எனக்கு நம்பிக்கையெல்லாம் கொடுக்கறேள். இருந்தாலும், என் மனசுல திரும்ப திரும்ப கல்யாணத்த கொஞ்சம் தள்ளி போடலாம்னு தோணறது. பகவனோட சித்தமோ என்னவோ, என்னோட ஸீனியர் கேஸ்கள் அத்தனையும் நான் ஹாண்டில் பண்ணவேண்டிய சூழல் வந்துடுத்து. அதுல ஃபோகஸ் பண்ண ஆரம்பிச்சா உங்க பையனோட கூட சரியா பேச முடியுமான்னு தெரியல.'
'இப்ப என் மேல உங்க பையனுக்கும் உங்களுக்கும் இருக்கற ஆர்வம் கல்யாணத்துக்குப் பிறகு நான் கேஸ் கட்டுகள்ல மூழ்கிண்டு இருந்தா, இருக்குமோ இருக்காதான்னு தெரியல. என் ஸீனியரோட லெகஸிய காப்பாத்தற பெரிய பொறுப்பு என் தலை மேல விழுந்திருக்கு. இதெல்லாம் என்ன பெத்தவாகிட்ட சொன்னா புரிஞ்சிக்க மாட்டேங்கறா. அவாளுக்கு என் கல்யாணம் சீக்கிரம் நடக்கணுங்கறதுதான் பிராதனமா தெரியறது.'
'ஆசையா உங்க பையன் கல்யாணத்த பண்ணிண்டதுக்கு பிற்பாடு நான் அவருடைய பர்ஸனல் வாழ்க்கைக்கு என்னோட ப்ரொஃபஷனல் சூழ்நிலை தடையா இருக்க கூடாது பாருங்கோ! தேவையில்லாம நீங்க எல்லாரும் சந்தோஷ குறைவோட என்ன ஒரு பாரமா சுமந்துடக் கூடாது இல்லையா?'
அவள் பேசுவதை உன்னிப்பாக கவனித்த முரளி பேசத் துவங்குகிறான்.
'மைதிலி, நான் குறுக்கிட்டு பேசறது எங்க அப்பா அம்மாக்கு பிடிக்காம இருக்கலாம். இந்த கேள்விக்கு நான் பதில் சொல்றது தான் பொருத்தமா இருக்கும்னு நான் நெனச்சு ஆரம்பிக்கிறேன். உன்னோட ப்ரொஃபஷன் பத்தி நாலட்ஜ் எனக்கு இல்லாம இருக்கலாம். முதல்ல நீ ப்ரொஃபஷனையும் பர்ஸனல் லைஃபையும் திரும்பத் திரும்ப மிக்ஸ் பண்ணி கன்ஃபூஸ் பண்ணிண்டு மத்தவாளையும் சிரமப் படுத்திண்டிருக்கன்னு தோணறது. ப்ரொஃபஷன் இஸ் எ பார்ட் ஆஃப் பர்ஸனல் லைஃப். சில சமயம் நம்ம பர்ஸனல் லைஃபுல இருக்கற சந்தோஷமான நேரங்கள ப்ரொஃபஷன் கெடுக்கலாம். இதெல்லாத்தையும் அப்பைக்கப்ப காம்ப்ரொமைஸ் பண்ணிண்டு வாழறதுல தான் சந்தோஷம் இருக்கு. உனக்கு தான் பர்ஸனல் அப்ஸ்டகிள்ஸ் இடையில வரும்ங்கறது இல்ல. எனக்கும் வரலாம். இதுல உன் ப்ரொஃபஷன் என் ப்ரொஃபஷன் இப்படியெல்லாம் பார்க்க முடியாது. ஏதோ நீ பேசறத பார்த்தா என்ன பிடிக்கலையோன்னு ஒரு சந்தேகம் கூட எல்லாருக்கும் வரலாம். அப்படி ஏதாவது இருந்தா சுத்தி வளைக்காம ப்ளெய்னாவே சொல்லிடலாம். உன்ன எனக்கு மனப்பூர்வமா பிடிச்சிருக்கு. என்ன பெத்தவாளுக்கும் ஒன்ன பெத்தவாளுக்கும் இந்த சம்பந்தத்துல பிடித்தம் இருக்கு. திரும்ப திரும்ப நாங்க உன்ன நன்னா வெச்சிப்போம்னு சொல்லிண்டே இருக்கறதுல அர்த்தம் இல்ல. கரெக்டா சொல்லணும்னா நீதான் உன்ன நன்னா வெச்சிக்கணும். கல்யாணத்துக்கு அப்புறம் உன்னோட லட்சியம் கனவு எல்லாத்துக்கும் யூ ஷுட் ஒன்லி bபீ ரெஸ்பான்ஸிபிள். அதுக்கு உன்னோட ஃபோகஸ்தான் ப்ரைம். வீணா எதையெல்லாமோ மனசுல வெச்சிண்டு கொழப்பி கொழப்பி... தீர்வில்லாம.. எனக்கு இது நல்லதா படல.'
அவனுடைய பேச்சில் ஆடித்தான் போய் விட்டாள் மைதிலி. அன்று அவன் ஆஃபீஸில் ஸாஃப்ட்டாக இவளிடம் பேசிய அதே முரளியா இது? 'மேடம்', 'மிஸ்' இவையெல்லாம் எங்கே போய் விட்டது? தொடர்கிறான். ஆண்மைக்கே உண்டான கம்பீரமும் தைரியமும் உள்ள முரளியின் பேச்சில் சிறிது உள்ளூர மயங்கித்தான் போயிருந்தாள் மைதிலி.
தேவைப்படும்போது ஒரு ஆணின் ஆளுமை கம்பீரத்தை வெளிப்படுத்த வேண்டும். அந்த வெளிப்பாடு முரளியிடம் நேர்த்தியாக இருந்தது.
'பர்ஸனல் லைஃபையும் ப்ரொஃபஷனல் லைஃபையும் ஒண்ணா சேர்த்து குழப்பிக்காதீங்க மேடம். சரியான நேரத்துல வர வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க.' அன்று வழுதி சொன்னது சட்டென்று மைதிலியை தொட்டுச் சென்றது.
'லுக் மைதிலி. இந்த அலையன்ஸுல நாங்க தோக்கணும்னு நெனச்சி நீ பேசறதா இருந்தா லெட் அஸ் பார்ட் அஸ் ஃப்ரெண்ட்ஸ், ஸின்ஸ் வீ ஹேட் எனஃப் டாக்ஸ். பட் எங்க எல்லாரோட கவலை நீ இந்த அலையன்ஸுல தோத்துடக் கூடாதுங்கறதுதான். அப்புறம் உன் இஷ்டம்.'
பொறுமையிழந்து இப்படி சொல்லிவிட்டு எழுந்து கொள்கிறான். அவனை உட்கார சொல்கிறார்.
சிறிது நிஸப்தம் அனைவரிடத்தும். தலையை குனிந்து கொண்டு யோசித்துக் கொண்டிருந்தாலும், மைதிலிக்கு தன்னையே எல்லோரும் பார்ப்பது போன்ற உணர்வு.
சில மணித்துளிகளில் மைதிலியிடமிருந்து ஒரு மெல்லிய குரல் சுந்தரத்தைப் பார்த்து.
'அப்பா, எனக்கு சம்மதம் பா. ஆனா....'
அனைவர் முகத்திலும் ஒரு பிரகாசம்.
'இன்னும் என்னம்மா 'ஆனா'. நீ எதா இருந்தாலும் அவா கிட்டயே சொல்லு.'
'இருங்கோ மிஸ்டர் சுந்தரம். என்ன சொல்றான்னுதான் கேட்கலாமே.'
'மாமா, குறஞ்ச பக்ஷம் மூணு நாலு மாசம் கழிச்சு கல்யாணத்த வெச்சுக்கலாமா?'
பூமா இப்போது ஆரம்பிக்கிறாள்.
'அன்னா நீங்க சித்த மைதிலி ஸீட்டுக்கு போங்கோ. மைதிலி, நீ வாம்மா இங்க.'
தனக்கு பக்கத்தில் மைதிலி உட்கார்ந்தவுடன் அவள் கைகளை பற்றுகிறாள்.
'சமத்து மைதிலி நீ. என் பையன் கிடக்கான். அவன் கோபத்தையெல்லாம் பெரிசா எடுத்துக்காத. மூணு மாசம் தான. தாராளமா எடுத்துக்கலாம். அதுவரைக்கும் அடிக்கடி முரளி கூட பேசு. ஒருத்தருக்கொருத்தர் நன்னா புரிஞ்சுக்கோங்கோ. எங்க காலத்துலதான் இதுமாதிரி பேச அனுமதிக்க மாட்டா. உங்க பேரண்ட்ஸோட பேசி மூணு நாலு மாசம் கழிச்சே நிச்சய தார்த்தத்துக்கும, மேரேஜுக்கும் டேட் ஃபிக்ஸ் பண்றோம். போதுமா?'
'பூமா, கடைசியா பொண் பார்க்கறதே இல்லாம இப்படி ப்ரொஸீட் பண்றேளே. இது ஞாயமா?'
'சார், வேணும்னா ஃபார்மாலிடிக்காக பொண் பார்க்கறதையும் வெச்சிண்டா போச்சு. எங்காத்து மனுஷாளுக்கும் சொன்ன மாதிரி ஆச்சு.'
இறுக்கமாக சிறிது நேரத்திற்கு முன்பு இருந்த உறவுகள் இன்பமாக உரையாடல்களை துவங்குகின்றன.
'முரளி, நாங்க எங்களுக்குள்ள பேசிண்டிருக்கோம். நீ வேணா மைதிலியை அழச்சிண்டு எங்க ரூமுக்கு போய் பேசிண்டிரேன்.'
'நானே சொல்லணும்னு நெனச்சேன்னா. நீங்க முந்திண்டுட்டேள். மைதிலி, போம்மா. கோபமா அவன் பேசினதுக்கு உள்ள போய் ரெண்டு சாத்து சாத்து.'
பூமா இப்படி சொல்ல, கல கல.
தொடரும்...
No comments:
Post a Comment