Monday, January 1, 2024

வசந்த காலம் வருமோ?- 60

 வசந்த காலம் வருமோ?- 60

By N Krishnamurthy 

மாலை சரியாக 5:50 க்கு  ம்ருதுளா, சங்கர க்ருஷ்ணன் மற்றும் பத்மநாபனின் நண்பர் வரதனுடைய பையன் ராமானுஜமும்  மேடையில் அமர்ந்தார்கள். ராஜேஸ்வரி தம்புரா வாசிப்பதாக இருந்தது. ராமானுஜம் மதுரையில் சில கச்சேரிகள் செய்து கொண்டிருந்ததால், அவனுக்கு தெரிந்த  ஒரு சவுண்ட் சிஸ்டத்திலிருந்து மைக் மற்றும் ஸ்பீக்கர் முதலியவற்றை ஏற்பாடு செய்திருந்தான்.

முதலில் ராஜேஸ்வரி மைக்கை பிடித்து "வந்திருக்கும் எல்லோருக்கும் நமஸ்காரம். புதுமண தம்பதிகள் வசுமதிக்கும், ஸ்ரீ வத்சனுக்கும் எல்லோர் சார்பிலும் வாழ்த்துக்களை கூறிக் கொள்கிறேன். இன்னும் கொஞ்ச நேரத்தில் குமாரி ம்ருதுளா சாரங்கன் அவர்கள் பாடுவார்கள்.ஏற்கனவே சென்னையில் இரண்டு சங்கீ சீசன்களில் பிரமாதமாக பாடி, சுப்புடு போன்ற ஜாம்பவான்களின் கவனத்தை ஈர்த்தவள் ம்ருதுளா . இவளுடைய கீர்த்தியை நான், சொல்வதை விட இவளுடைய கச்சேரி முடிந்ததும்  நீங்களே புரிந்து கொள்வீர்கள். பக்க வாத்யமாக வயலினில் சங்கர க்ருஷ்ணன்  தொடர்கிறார். இவர் அமெரிக்காவில் குவாண்டம் மெக்கானிக்சில் மாஸ்டர் டிகிரி செய்து கொண்டிருக்கிறார். வயலின் தவிர வாய்ப்பாட்டும் இவருக்கு வரும். திரு. ராமானுஜம் அவர்கள் இந்த இளம் வயதிலேயே மிருதங்கத்தில் தனக்கென ஒரு பாணியை  அமைத்து கொண்டு வாசித்து வருகிறார். முடிக்கு முன் ஒரு சிறு விஷயத்தை சொல்லிக்கொள்ள  ஆசைப்படுகிறேன். சங்கர க்ருஷ்ணன் எனது பையன்"  என்று கூறி முடித்தாள். பின்பு ம்ருதுளாவிற்கு பின்புறம் உட்கார்ந்து அவள் தம்புராவை  மீட்ட ஆரம்பித்தாள்.

"வாக்குண்டாம் நல்ல மனம் உண்டாம்" என்று விருத்தத்தில் ஆரம்பித்து, தீக்ஷதரின்

"ப்ரணமாம்யஹம் ஸ்ரீ கௌரி சுதம்" என்ற பாடலுடன் கச்சேரியை  ஆரம்பித்தாள்.  இதை தொடர்ந்து  ஆரபியில் "ஸ்ரீ சரஸ்வதி நமோஸ்துதே" என்ற பாடலையும், ஆபோகியில் "சபாபதிக்கு வேறு தெய்வம் சமானம் ஆகுமா" என்ற பாடலையும் பாடிவிட்டு பூர்வி கல்யாணி ராக ஆலாபனை செய்தாள். ஆலாபனை முடிந்ததும் சங்கர க்ருஷ்ணன் வயலின் வாசிக்க ஆரம்பித்தான். பின்பு ம்ருதுளா   தீக்ஷதர்வாளின் " மீனாட்சி மேமுதம் தேகி" என்ற பாடலை ,சிறிது ஸ்வரம் போட்டு பாடினாள்.  இதன்பிறகு ஒரு நிமிடம் தோடி ராக ஆலாபனை செய்ய ஆரம்பித்தாள்.

தோடியில் அவளை தொடர்ந்த சங்கர க்ருஷ்ணன், தோடியில் அவள் என்ன பாட போகிறாள் என்ற எதிர்பார்ப்பில் இருந்தான். அவன் வாசித்து  முடிந்தவுடன், தீட்சதரின்"ஸ்ரீ க்ருஷ்ணம் பஜ மானச" என்ற  பாடலை பாடினாள். க்ருஷ்ணம் என்று வரும்போது எல்லாம் அவள் தன்னைக் கூப்பிடுவதாக  நினைத்து மகிழ்ந்தான்

அவன். அவள் ஏன் தன்னிடம் இந்த பாடலை பாடப்போவதாக  கூறவில்லை என்று அவனுக்கு அப்பொழுது தான் புரிந்தது. இதை ஒரு சர்ப்ரைஸ் எலிமெண்டாகவே வைத்துக் கொண்டிருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறாள் போலும் என அவன் நினைத்தான். கடைசியில் "மங்களம் கோசலேந்திராய" என்று முடித்தவுடன், கச்சேரியை கேட்டுக் கொண்டிருந்தவர்கள் எழுந்து நின்று கைதட்டினார்கள். தங்களுக்குள் பலர்  " "அசாத்யமாக பாடுகிறாள் இந்தப்பெண். சீக்கிரம் மிகப்பெரிய பாடகியா  வந்து விடுவாள்" என்று பேசிக் கொண்டார்கள்.

கச்சேரி முடிந்ததும் பையன் வீட்டார் பலர் ம்ருதுளாவை நேரில் சந்தித்து அவளை வானளாவ புகழ்ந்தார்கள். சங்கர க்ருஷ்ணன் அவளிடம் "Sri krishnam baja maanasa was fantastic" என்றான். அவள் அவனிடம் இந்த பாடல் குருவாயூர் க்ருஷ்ணனை பற்றியது என்றாள்.

No comments:

Post a Comment