வசந்த காலம் வருமோ? -78
By N Krishnamurthy
சனி இரவு ட்ரெயின் பிடித்து திங்கட்கிழமை காலை ஜெய்பூருக்கு போய் சேர்ந்தான் ரகுநந்தன் . அவன் தாயார் "என்னடா,போன வேலை எல்லாம் முடிஞ்சிதா" என்றாள் "ஆமாம்மா. முடிஞ்சது. அப்படியே வசுபதி மன்னி மாமாவாத்துக்கும் போயிருந்தேன்" என்றான் அவன். அதற்கு அவள்
" டேய்.திருட்டு பயலே.
நீ அங்க போவேன்னு நான் எதிர்பாத்தேன்" என்றவள் " அந்த ம்ருதுளா பொண்ண பாக்கத்தானேபோனோ" என்று சொல்லி சிரித்தாள். "எப்படிம்மா" என்றான் அவன்."டேய்.நான் உன் அம்மாடா. பையன் மனசு அம்மாக்கு கூட தெரியாலேன்னா அப்புறம் என்ன இருக்கு. கல்யாணம் முடிஞ்சு, திருச்சிக்கு பஸ்ல வரச்சே நீ அந்த பொண்ணுகிட்ட வழிஞ்சுண்டு வந்தத பாத்தபோதே புரிஞ்சூட்த்து "என்றாள்.
" கிளியாட்டம் இருக்கா அவ. அந்த பொண்ண தான்டா நோக்கு பாக்கலாம்னு இருக்கேன் " என்றாள்.
" அம்மா ,நீ லேட்டா பாக்க ஆரம்பிச்சயானா அந்த கிளி பறந்தூடும்" என்றான் அவன்.
" என்னடா சொல்ற நீ? பூடகமா சொல்ற. நேக்கு ஒண்ணும் புரியல.செத்த விளக்கமா சொல்லு" என்றாள் அவள்.
" நோக்கு ஞாபகம் இருக்கா? வசு மன்னி கல்யாணத்தின்போது ம்ருதுளா கச்சேரி பண்ணச்சே , அவளுக்கு ஒரு பையன் வயலின் வாசிச்சானே,அவன் அமெரிக்காவில் இருக்கான். அவன் அங்க அடிக்கடி வந்து போயிண்டிருக்கான். அவனோட பார்வையே சரியில்லை. அதுதான் சொன்னேன் " என்றான்.
ம்ருதுளாவும், சங்கர க்ருஷ்ணனை விரும்புகிற மாதிரி இருக்கிறது என்ற விஷயத்தை மட்டும் அவன் அம்மாவிடம் கூற வில்லை .
"ஓ,அப்டியா. நான் ஒண்ணு பண்றேன். நமக்கு இண்ட்ரஸ்ட் இருக்கூன்ற விஷயத்தை வசு அம்மா ரங்கநாயகி காதுல போட்டுடறேன். நம்ம நேரடியா அவாள கேக்கறதை விட, ரங்கநாயகி கிட்ட சொன்னாதான் இந்த காரியம் நடக்கும்.சுபஸ்ய சீக்ரம்னுவா. அவ கிட்ட நான் இன்னிக்கே பேசிடறேன் " என்றாள் அவள். இப்படி யெல்லாம் நடக்கிறது என்பதைப்பற்றி ஏதுமறியாத ம்ருதுளா மெட்ராசில் சங்கர க்ருஷ்ணன் நினைவில் மூழ்கியிருந்தாள்.
அன்றைய இரவு தூக்கத்தில் அவளுக்கு ஒரு கனவு.
சங்கர க்ருஷ்ணன் அவளது கையை பிடிக்க வருகிறான்.மறைவில் ஒளிந்திருந்த ரகுநந்தன் சங்கர க்ருஷ்ணன் கையை தட்டிவிட்டி அவளின் கையை பிடிக்க வரும்போது, தேவதை போன்ற ஒரு பெண் ரகுநந்தனை கீழே தள்ளிவிட்டு ம்ருதுளாவின் கைகளை சங்கர க்ருஷ்ணன் கைகளோடு சேர்த்து வைக்கிறாள்.
அலார்ம் க்ளாக் ஒலி எழுப்ப தூக்கத்திலிருந்து ம்ருதுளா முழித்தாள்.
தனக்கு உதவிய தேவதையின் முகம் சரியாக அவளுக்கு ஞாபகம் வரவில்லை.
No comments:
Post a Comment