வசந்த காலம் வருமோ?-69
By N Krishnamurthy
மறு நாள் காலை சரியாக ஏழு மணிக்கு, ராஜேஸ்வரியும்,
சங்கர க்ருஷ்ணனும் சுப்புலக்ஷ்மியின் வீட்டுக்கு வந்து விட்டார்கள். ஆட்டோவை வெய்ட்டிங்கில் போட்டிருந்தாள் ராஜேஸ்வரி. சுப்புலக்ஷ்மி "காபி சாப்பிடலாமா" என்று கேட்டாள் ."இல்ல மாமி. காலையிலேயே காபி ஆயிடுத்து. ஆட்டோ வேற வெயிட்டிங்ல இருக்கு. நீங்க வந்தா கெளம்பி போயிடலாம்" என்றாள் ராஜேஸ்வரி.
சுப்புலக்ஷ்மி தலையை மட்டும் கோதிக்கொண்டு, ராதிகாவிடம் வீட்டைப் பார்த்துக் கொள்ள சொல்லிவிட்டு ராஜேஸ்வரி, சங்கரகிருஷ்ணனுடன் ஆட்டோவில் ஏறினாள். அடையார் பத்மநாப புரத்தில் உள்ள ராமகிருஷ்ணன் வீட்டிற்கு விரைந்தது ஆட்டோ. அந்த இடம் வந்ததும், ராஜேஸ்வரி ஆட்டோவுக்கு பணத்தை செட்டில் செய்தாள். பின்பு சுப்புலக்ஷ்மி வீட்டின் வாசலில் இருந்த காலிங் பெல்லை அழுத்த, உள்ளே இருந்து வந்த ஒரு மாமி. " அடடா. சுப்பு வா. பாத்து நாளாச்சு" என்றாள். "ஆமாம் மன்னி வரணம்னு நெனச்சுகறதோட சரி. வர முடியற்தில்ல" என்ற சுப்புலக்ஷ்மி,சங்கர க்ருஷ்ணனையும், ராஜேஸ்வரியையும் அழைத்துக் கொண்டு வீட்டுக்குள் நுழைந்தாள். அங்கு ஈசி காரில் அமர்ந்து கொண்டு காபியை ஆற்றி சாப்பிட்டுக் கொண்டிருந்தார் ராமகிருஷ்ணன்.
" சுப்புவா. என்ன அத்தி பூத்த மாதிரி இருக்கு" என்றார் அவர்." நானும் வரணம்னு பாக்கறேன் அண்ணா. வரமுடியல" என்று கூறிவிட்டு ராதிகாவிற்கு கல்யாணம் நிச்சயமாகி இருக்கும் விஷயத்தை கூறினாள். இதைக் கேட்ட ராமகிருஷ்ணன் "ரொம்ப சந்தோஷமா இருக்கும்மா " என்றவர் ராஜேஸ்வரி, சங்கர க்ருஷ்ணன் பக்கம் தன் பார்வையை திருப்பினார். சுப்புலக்ஷ்மி அவரிடம் "இது ராஜேஸ்வரி. மாமி அமெரிக்காவல இருக்கா. பையன் சங்கர க்ருஷ்ணன். வாய்ப்பாட்டு பாடறான், வயலினும் வாசிக்கிறான். போன சீசன்லயும்,இந்த சீசன்லயும் கொஞ்சம் கச்சேரி சான்ஸ் கிடைச்சிருக்கு. உங்ககிட்ட தீக்ஷதர் உருப்படிகள கத்துக்கணும்னு ஆசைப்படறான்" என்றாள். அதற்கு ராமகிருஷ்ணன்" நோக்கு தெரியுமே சுப்பு. இப்பெல்லாம் நான் யாருக்கும் சொல்லிக் கொடுக்கறது இல்லைனு" என்றார். சுப்புலக்ஷ்மி " இவா எனக்கு ரொம்ப வேண்டியவா .நீங்க தயவு பண்ணி இந்தப் பையனுக்கு தீக்ஷதர் க்ருதிகள பாடம் பண்ணி வெச்சேள்னா நேக்கு சந்தோஷமா இருக்கும் அண்ணா" என்றாள். ராமகிருஷ்ணன் சங்கர க்ருஷ்ணனை பார்த்து" நோக்கு ஏதாவது தீக்ஷதர் கிருதி பாடமாயிருக்கா" என்றார். "ஆமாம்" என்று தலையசைத்தான் சங்கர க்ருஷ்ணன். "அத பாடு பாக்கலாம் " என்றார் அவர். உடனே அவர் முன் அமர்ந்து கொண்ட அவன் " ஸ்ரீ கிருஷ்ணன் பஜ மானச" கீர்த்தனையை பாடினான். அதைக் கேட்டு ராமகிருஷ்ணன் "பரவாயில்லையே.நல்லா பாடறே. உச்சரிப்புலதான் அங்க இங்க கொஞ்சம் கவனிக்கணும். இந்த பாட்டு நீயே பாடம் பண்ணயா" என்று கேட்டார் . ஒரு நிமிஷம் தயங்கிய சங்கரக க்ருஷ்ணன் "ம்ருதுளா கிட்ட தான் கத்துண்டேன் " என்றான். உடனே ராமகிருஷ்ணன் சுப்பு லக்ஷ்மியை பார்த்து " ஏம்மா,எங்கிட்ட ரெண்டுமாசம் கத்துண்டாளே,அந்த குழந்தையையா இவன் சொல்றான்" என்றார். " ஆமாம் அண்ணா" என்றாள் சுப்புலக்ஷ்மி. " பரவாயில்ல. அந்த பொண்ணு நண்ணாதான் ட்ரெயின் பண்ணியிருக்கா.
எம்பேர காப்பாத்திடுவ போல இருக்கு" என்று சிரித்தார். பின்பு அவர் ராஜேஸ்வரியிடம் " நீங்க எங்க தங்கி இருக்கேங்க"என்று கேட்டார்." 'இப்போதைக்கு உட்லண்ட்ஸ் ஹோட்டல்ல தங்கி இருக்கோம்" என்றாள் ராஜேஸ்வரி. "எவ்வளவு நாள் கத்துக்கணும்னு ஆசைப்படறான்" என்று கேட்டார் அவர். உங்களால முடியும்னா ஒரு மூணு மாசம் கத்து கொடுத்தா பரவாயில்ல" என்றாள் ராஜேஸ்வரி. அதற்கு அவர் " தினந்தோறும் என்னால கத்து கொடுக்க முடியாது. வாரத்துக்கு நாலு கிளாஸ் எடுக்க முடியும். சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமையில கொஞ்சம் டைம் கூடவே சொல்லிக் கொடுக்கலாம்" என்றாள். இதைக் கேட்டு மிகவும் மனம் மகிழ்ந்த ராஜேஸ்வரி" நீங்க என்ன சொன்னாலும் சரி" என்று கூறினாள். அதன் பின்பு அவள் சுப்புலக்ஷ்மியை பார்க்க சுப்புலக்ஷ்மி ராமகிருஷ்ணனிடம் " ராஜேஸ்வரி மாமிக்கு கேட்க தயக்கமா இருக்கு. உங்களுக்கு எவ்வளவு பீஸ் வேணும்னு கேக்க விருப்பப்படறா" என்று கூறினாள். ராமகிருஷ்ணன் "நேக்கு பீஸ்னு ஒண்ணும் வேண்டாம். உங்களுக்கே இஷ்டப்பட்டு ஏதாவது கொடுக்கண்ம்னு தோணித்தானா குடுங்கோ. இந்த பையன் நான் சொல்லி தரதையெல்லாம் கத்துண்டான்னா அதுவே இவன் எனக்கு தர பீஸ்" என்றார் ராமகிருஷ்ணன்.
" புதன்கிழமை நல்ல நாளா இருக்கு. அன்னைக்கு மத்தியானம் மூணு மணிக்கு வந்துடு" என்றார் ராமகிருஷ்ணன் சங்கர க்ருஷ்ணனை பார்த்து. ராமகிருஷ்ணனின் மனைவி ஜானகி அவர்ளைப் பார்த்து "காபி சாப்பிடலாமே" என்றாள். அதற்கு சுப்புலக்ஷ்மி " இல்ல மன்னி.கார்த்தாலே காப்பி ஆயிட்டது. நாங்க கெளம்பறோம்" என்று கூறினாள். "கொஞ்சம் இருடி.ரொம்ப தான் பிகு பண்ணிக்கற" என்று கூறிய ஜானகி மூன்று டம்ளர்களிள் கருவேப்பிலை போட்ட மோரை கொண்டு வந்து கொடுத்தாள். பின்பு ராஜேஸ்வரிக்கும் சுப்புலக்ஷ்மிக்கும் குங்குமம் கொடுத்து வழி அனுப்பி வைத்தாள். வரும் வழியில் ஆட்டோவில் ராஜேஸ்வரி, சுப்புலக்ஷ்மியின் கைகளைப் பிடித்துக் கொண்டு " நீங்க பண்ண இந்த ஒத்தாசைக்கு எப்படி நன்றி சொல்லறதுன்னு தெரியல" என்றாள். அதற்கு சுப்புலக்ஷ்மி " ஏதாவது சொல்லாதீங்க. நேத்து நீங்க பண்ண ஒத்தாசையை விடுவா இது பெருசு" என்று கூறினாள். இருவரும் சுப்புலக்ஷ்மியின் வீடு வந்து சேர்ந்தார்கள். பின்பு அங்கிருந்து கிளம்பி ராஜேஸ்வரி சங்கர க்ருஷ்ணனுடன் வுட்லண்ட்ஸ் ஹோட்டலுக்கு சென்றாள்.
No comments:
Post a Comment