Saturday, January 27, 2024

வசந்த காலம் வருமோ?-85

 வசந்த காலம் வருமோ?-85

By N Krishnamurthy 

வசுமதி போனில் தொடர்ந்தாள்.

"ஸ்மார்த்தா , ஐயங்கார்ன்ற  பாயிண்ட்ட வச்சு இந்த  கேஸ் தோத்து போறதுக்கு வாய்ப்பு இருக்கு. நீங்க உங்க பையன் ஜாதகத்தை எடுத்துண்டு அவசியம் அறுபதாம் கல்யாணத்துக்கு வாங்கோ.முஹூர்த்தம்  முடிஞ்ச கையோட நீங்க உங்க ப்ரொபோஸ்ல மாமா,மாமி கிட்ட  சொல்லுங்க. நான் உங்களுக்கு ஃபுல் சப்போர்ட் பண்றேன்.எங்கம்மாவ நான் சரி கட்றேன்.

அப்புறம்பெருமாள் இருக்கார், பாத்துப்பார். எப்படி ஆனாலும்  சங்கர க்ருஷ்ணன், ம்ருதுளா  கல்யாணத்த  நம்ப நடத்தி ஆகணம் மாமி" என்று முடித்தாள் வசுமதி.

இதைக் கேட்ட ராஜேஸ்வரி மூன்று காரணங்களுக்காக ஆடிப் போனாள் .

முதலாவது, வசுமதிக்கு ம்ருதுளா மேலிருக்கும் அக்கறையையும் பாசத்தையும் கண்டு.

இரண்டாவது,ஒரு அற்ப  காரணத்திற்காக, ம்ருதுளா சங்கர க்ருஷ்ணன் கல்யாணம் நடைபெறாமல் இருக்க சிலர் கங்கணம் கட்டிக்கொண்டு இருப்பதை கேட்டு.

மூன்றாவது ம்ருதுளாவிற்கு தன் பையன் மேலிருக்கும் மையைலை பற்றி கேட்டு.  

"சரிம்மா, நான் எப்பாடு பட்டாவது   வந்துடறேன்" என்று கூறினாள். "இத சொல்றதுக்கோசரமா நீ போன் பண்ண? ஆத்து போன்லே ஐ.எஸ்.டி  கனெக்ஷன் இருக்கா' என்று கேட்டாள் ராஜேஸ்வரி.

"இல்ல மாமி. பக்கத்துல இருக்கற பூத்துக்கு தான் வந்து பண்றேன்" என்றாள் வசுமதி.

" ஐயோ பாவம். இந்த நெலமேல நடந்து வந்து பண்ணிருக்கயே" என்றாள் ராஜேஸ்வரி."அதனால என்ன மாமி.பரவாயில்ல.நான் நடந்து வரல. எங்காத்துகார் கார்ல கூட்டிண்டு வந்திருக்கார். அவர் வெளியில இருக்கார். தெய்வாதீனமா அவர் இந்த விஷயத்ல நேக்கு புல் சப்போர்ட் பண்றார் "என்றவள் "ம்ருதுளாவுக்கு வாழ்க்கையில ஆனந்தமும், அமைதியும்   கிடைக்கணம்னா நான் என்ன வேணா செய்யறதுக்கு ரெடியா இருக்கேன் மாமி" என்றாள்  வசுமதி. இதைக் கேட்ட ராஜேஸ்வரி" உன்ன போல சிலர்  இருக்கறதால தான்  உலகத்தில மழையே பெஞ்சிண்டிருக்கு. இவ்வளவு சின்ன வயசுல உன் அம்மங்காவுக்கு நல்லது நடக்கணம்னு கங்கணம் கட்டிண்டிருக்கயே.

உன்ன பாத்தா நேக்கு பெருமையா இருக்கு. நீ இப்ப பண்ற உதவிக்கு நான் எப்படி கை மாறு பண்ண போறேனோ"என்றவள் .

" நேக்கு ஒரு ஒத்தாசை பண்றயா . ம்ருதுளா ஜாதகத்தை மட்டும் இப்போ ஒரு காபி அனுப்ப முடியுமா.நீ வீட்டுக்கு போனதும் நான் உன்னை போன்ல கூப்ட்டு என் அட்ரசை தரேன்" என்றாள். " சரி மாமி.இப்போலேந்து ஒரு மணிக்கப்புறம் கால் பண்ணுங்கோ.

இன்னும் ரெண்டு நாள்ல உங்களுக்கு ம்ருது ஜாதகத்தை  அனுப்பி வைக்கறேன்" என்றாள்.

ராஜேஸ்வரி பின்பு பிரேக்பாஸ்ட் சாப்பிடுவதற்காக சமையலறைக்கு  வந்த மார்கபந்துவிடம் வசுமதி சொன்னதையெல்லாம் சொல்லி.                      " எப்படியாவது அவா அறுபதுக்கு போயாகணும். நீங்க என்ன செய்வேளோ, ஏது செய்வேளோ தெரியாது. டிக்கட்ட போட்டுடுங்கோ" என்றாள். அதற்கு மார்க் போலியான பௌயத்துடன் "அப்படியே பண்ணிடறேன் மை லார்ட்" என்றார். அதன் பின்பு அவரிடம் ராஜேஸ்வரி "முடிஞ்ச வரை சங்கர க்ருஷ்ணனிடம் இதைப்பற்றி இப்போது பேச வேண்டாம் .இந்த விஷயமெல்லாம் தெரிஞ்சா, அவன் ரொம்ப வருத்தப்படுவான்" என்றாள்.

No comments:

Post a Comment