Wednesday, January 31, 2024

வசந்த காலம் வருமோ?- 89

 வசந்த காலம் வருமோ?- 89

By N Krishnamurthy 

ராஜேஸ்வரி சொன்னதை கேட்டதும் மைதிலிக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை. ராஜேஸ்வரி இப்படி கூட கேட்பாள் என்று அவளுக்கு தெரியாமல் இருந்தது. 

ரங்கநாயகி முகத்தில் எள்ளும், கொள்ளும் வெடித்தது. கோமளம் திகைத்து நின்றாள். வசுமதி மட்டும் இது நிகழப்போவது என்று முன்பாகவே தெரிந்ததால், தன் முகத்தில் எந்த உணர்ச்சியும் காட்டாமல் இருந்தாள். சாரங்கனும் இதை எதிர்பார்க்கவில்லை.

முதலில்  நிசப்தத்தை கலைத்த ரங்க நாயகி "இது என்ன அந்நியாமா இருக்கு" என்றாள். வசுமதி எழுந்து  அவள் அருகில் வந்து "அம்மா, நீ கொஞ்சம் பேசாம வாய மூடிண்டு  இருக்கயா" என்று கூறினாள். பின்பு அவள்  மைதிலியிடம் "மாமி.   நீங்க இதுக்கு இப்போ  பதில் சொல்ல வேண்டாம். ராஜேஸ்வரி மாமிக்கு நான் பதில் சொல்றேன்" என்று கூறினாள் . ராஜேஸ்வரி  யிடம் வசுமதி " மாமி நீங்க திடுதிப்புன்னு உங்க மனசுல இருக்கறத சொல்லீட்டீங்க. நாங்க இத எதிர்பாக்கல. எங்களுக்கு என்ன  பதில் சொல்றதுன்னு இப்போ தெரியல . இது விஷயமா நாங்க எங்களுக்குள்ள ஆலோஜனை பண்ணணம். பண்ணிட்டு தான் ஒரு முடிவுக்கு வரணும். அதுக்கு அப்புறம் தான் உங்ககிட்ட தெரிவிக்கணும். அதனால இப்போதைக்கு எங்களால் பதில் சொல்ல முடியாது. அரை நாள் டைம் குடுங்கோ. நாங்க தீர்மானம் பண்ணினதக்குப்புறம் உங்களுக்கு கால் பண்றோம். அப்புறமா தேவைப்பட்டால் நீங்க வரலாம்" என்றாள்." சரி" என்று சொன்ன ராஜேஸ்வரி "நாங்கள கெளம்பறோம் "என்று கூறிய ராஜேஸ்வரிக்கும், மார்கபந்துவுக்கும், சங்கர க்ருஷ்ணனுக்கும் முகூர்த்த தாம்பூல பைகளை கொடுத்து வழி அனுப்பி வைத்தாள் வசுமதி. ராஜேஸ்வரி போகும் போது, வசுமதி மறக்காமல் சங்கர க்ருஷ்ணனின் ஜாதகத்தை வாங்கிக் கொண்டாள்.

திரும்பிப்போகயில் ராஜேஸ்வரியும், மார்கபந்துவும் ஒருவொருக்கொருவர் பேசிக்கொள்ளவே இல்லை. வீட்டை அடைந்ததும் மார்கபந்து ராஜேஸ்வரியை பார்த்து " அவா ஒத்துப்பான்னு நெனக்கறயா" என்று கேட்டார். சங்கர க்ருஷ்ணன் அவனது அறைக்கு சென்று விட்டான் என்பதை உறுதி செய்து கொண்ட

ராஜேஸ்வரி அவரிடம் "I dont know. I am keeping my fingers crossed "என்றாள். பின்னர் அவள் "மைதிலி மாமி ரொம்பவே நல்லவ. கள்ளம் கபடு இல்லாதவ.சாரங்கன் சாரும் அப்படித்தான். ரங்க நாயகியை நெனச்சாத்தான் நேக்கு பயமா இருக்கு. நான் மைதிலி மாமி கிட்ட இதை ப்ரபோஸ் பண்ணினதுமே ரங்கநாயகி சொன்னத கேட்டேளா?

ம்ப நல்லகாலம், ஸ்ரீராமனுக்கு எதிரி கூட்டத்ல விபீஷணன் கெடச்ச மாதிரி வசு நமக்கு கெடச்சிருக்கா.

ஒரே ஒரு புள்ளிலதான் மைதிலி மாமி இந்த சம்மந்தத்தை ஏத்துகாம போக வாய்ப்புண்டு. அதுக்கு பதிலா நான் ஒரு பிரம்மாஸ்தரத்தை கைவசம் வெச்சிண்டிருக்கேன்" என்றாள். மார்கபந்து அவளிடம் "நம்ப கல்யாணத்துக்கு உங்காத்துல எதிர்ப்பு வந்தபோது, நீ அத சமாளிச்சவிதம் என் கண்ணுலே நிக்கறது "என்றார்.

ராஜேஸ்வரி அதுக்கு "பொம்மனாட்டீன்னா எல்லாரும் வீக் மைண்டுன்னு நெனைக்கறா.பாடி வீக்கா இருந்தாலும், பொம்மனாட்டிக்கு இருக்கற மனோ தைர்யம் அசாத்யமானது. அதுவும் ஏதாவது கஷ்டம்னு வந்தூட்டா அதை அவ எதிர் கொள்ளச்சே தெய்வமே அவளுக்கு உறுதுணை செய்யும்"என்றாள்.

மார்கபந்து, ராஜேஸ்வரி கல்யாணம் முதலில் காதலாக மலர்ந்து பின்னர் அரேன்ஜ்டு கல்யாணமாக முடிந்தது.

மார்கபந்து அப்போது எம்.பி.யே படித்துக்கொண்டிருந்ததால்,வேலையில்லாத அவருக்கு தன் செல்லப் பெண்ணை கல்யாணம் செய்து வைக்க மீனமேஷம் பார்த்தார்

 ராஜேஸ்வரியின் அப்பா சபேச ஐயர். ஆனால் ராஜேஸ்வரி விடாப்பிடியாக "மணந்தால் மார்கபந்துவைத்தான் மணப்பேன், இல்லாவிட்டால் காலம் முழுவதும் கன்னியாகவே இருந்து விடுவேன்"என்று தந்தையிடம் சொல்லிவிட்டாள்.

காலப்போக்கில் பெண்ணின் பிடிவாதம் தளர்ந்து விடும் என எதிர்பார்த்த சபேச ஐயருக்கு, ஆறு மாதம் கழிந்தும்,ஏமாற்றமே மிஞ்சியது.வேறு வழியில்லாமல் அவர் மகள் மார்கபந்துவை மணக்க பச்சை கொடி காட்டினார். திருமணமாகி பத்து வருடம் கழித்து மாப்பிள்ளை அமெரிக்காவில் உயர்ந்த பதவியில் அமர்ந்து கை நிறைய சம்பாதிக்க ஆரம்பித்ததும் தான், தன்னுடைய முடிவு தவறாக போயிருக்கும் என்று சபேச ஐயர் புரிந்து கொண்டார்.

ராஜேஸ்வரிக்கு தன்னை மாதிரியே தன் மகனும் காதலில் ஜெயிப்பான் என்ற நம்பிக்கை உண்டு.

No comments:

Post a Comment