கல்கி
சிறுகதை - ஏழாவது இடம்!
Published:10th Jan, 2024 at 3:15 PM
“எனது எழில் ஏழாவதாகவா? ச்சே! மானமே போச்சு! எப்போதும் முதலிடத்தில் வந்து வெற்றிகொடி நாட்டும் என் எழில் ஏழாவதாக!” புலம்பினான் விஷ்வா.
‘ஆறு மனமே ஆறு!’ பாடியவாறே அன்பு மனைவி சுசீ அப்போது வர,
“உன் பாட்டை நிறுத்து சுசீ!”
“என்ன ஆச்சு? பாட்டை ஏன் நிறுத்தணும். எனக்குப் பிடிச்ச பாட்டு.”
பதில் கூறியவளை முறைத்தான்.
“ஏதாவது குறை வெச்சேனா? இப்படி ஏழாவதாக வந்து எல்லாரும் துக்கம் விசாரிக்கும்படியாக ஆயிடுச்சே!”
“எப்போதும் முதலிடத்திலேயே வர முடியுமா? லீவ் இட் விஷ்வா!”
“லீவ் இட்! லீவ் இட்! ஈஸியா சொல்லிட்டே... என்னால முடியாது.”
“ரிலாக்ஸ் டியர்!”
“ரிலாக்ஸ் ஒண்ணுதான் குறைச்சல். பாத்து பாத்து எல்லாம் கொடுத்தது வேஸ்ட். இரண்டாவதாகவாவது வந்திருக்கலாம்.”
“அநாவசியமாக திட்டறீங்க. எழில் பாவம். வெளில நிக்கறா.”
“நிக்கட்டும். போய்க் கொஞ்சப் போறதில்லை. ஃப்ரெண்ட்ஸ் சர்க்கிள்ல எழிலைப் பத்தி எவ்வளவு பெருமையா பேசுவேன்னு உனக்கே நல்லா தெரியும். ஒரு நாள் சாப்பாட்டை கட் பண்ணு!”
“நீங்க பேசறது உங்களுக்கே சரின்னு படுதா? சாப்பாட்டை கட் பண்ணி எழிலை பட்டினி போடறது கூடாதுங்க. ச்சும்மா புலம்பாம இருங்க!”
“புலம்பாம இருக்க முடியலையே. எத்தனை கோச்சிங்? எவ்வளவு பணம் செலவு? எல்லாமே வேஸ்ட்!”
“வேஸ்ட்டுன்னு ஏன் சொல்றீங்க? இந்தத் தடவை அதிர்ஷ்டமில்லைன்னு நெனைச்சு மன்னிச்சுடுங்க!”
“மன்னிப்பாவது – மண்ணாங்கட்டியாவது? நாலு சாத்து சாத்தலாம்போல இருக்கு.”
“அருமை பெருமையா வளர்த்தது சாத்தவா? போன தடவை, முதலாவதாக வந்த எழிலோட சேர்த்து நம்மை இன்டர்வ்யூ பண்ணி டீவியில காட்டினது, பேப்பர்ல போட்டது எல்லாம் மறந்து போச்சா என்ன? அப்ப பெரிசா பீத்திக்கிட்டீங்களே!”
“அது போன வருஷம். இப்ப? ஒரு அடியாவது கொடுக்கணும்.”
“வேணும்னா என்னை அடிங்க. பாவம் எழில்!”
“ரொம்ப சப்போர்ட் பண்றே சுசீ!”
“ப்ளீஸ் கூல் விஷ்வா! உங்களுக்க பி.பி. ஏறப் போகுது. எழில் நம்ம வளர்ப்பு.”
“சரி! சரி! உனக்காக எழிலை மன்னிக்கிறேன். இப்ப உன் கையால ஒரு கப் சூடா காபி கொண்டு வா. தொண்டை வறண்டு போச்சு.”
புன்னகைத்தவாறே உள்ளே சென்றாள் சுசீ.
தம்பதிகளிடையே நடந்த இந்த காரசாரமான விவாதம் தன்னைப் பற்றி என்பதை அறியாது, வெளியே உள்ள லாயத்தில் அமைதியாக நின்று தண்ணீர் அருந்திக்கொண்டிருந்தது டெர்பி குதிரைப்பந்தயத்தில் ஏழாவதாக வந்த எழில்.
No comments:
Post a Comment