Friday, January 19, 2024

வந்தவன் - சுஜாதா

 வந்தவன் - சுஜாதா

(மிகவும் புகழ்பெற்ற இந்த ஓரங்க நாடகம் சுஜாதாவின் நாடகங்கள்:முழுத்தொகுப்பு' புத்தகத்தில் உள்ளது).

                 => Shared by Rmohanavel<=

கிளப் ,ஹோட்டல் ,காப்பிக் கடை ,மெஸ் என்கின்ற எந்த ரகத்திலும் சேராத நடுத்தரமான மணிஸ் கபேயின் பதினைந்துக்கு இருபது அடி இடத்தை ஹால் என்று சொல்ல முடியாது. அதில் மூன்று அழுக்கு மேஜைகளும் , அவற்றின் அருகே இருந்த முக்காலிகளும் அந்த இடத்தின் வியாபார ஆரோக்கியத்தை தெரிவிக்கின்றன.

இடது பக்க பட்சண அலமாரி ஏறக்குறைய காலியாக இருக்கின்றது. மேல் தட்டில் மட்டும் இரண்டு மைசூர் பாக் ரசம் போன கண்ணாடிக்கு அருகே . திருப்பதி வெங்கடாசலபதிக்கு ஒரு ஊதுபத்தி , ஓரத்தில் கையலம்ப ஒரு டிரம் தண்ணீர் , அதன் அருகே ஒரு அலுமினிய தம்ளர். நடுவே பின்புறத்தில் பழைய புடவை திரையாகத் தொங்கும் வாசல் .விளிம்பில் புகைத் தடங்கள்  அங்கேதான் சமையல் எங்கின்றன. வலது பக்க ஓரத்தில் கல்லா மேஜை . அறையில் யாரும் இல்லை.

நேரம் இரவு சுமார் 9.30. அப்பொழுது அங்கு நுழையும் இளைஞன். அவனை இருபத்திரெண்டு வயது மதிக்கலாம்.  முகத்தில் ஏழு நாள் தாடி . சட்டைப் பையில் ஓரத்தில் தையல் பிரிந்திருக்கின்றது . லாண்டரியை நெடுநாளாகப் பார்த்திராத பாண்ட் உருட்டையாக பைஜாமா ஷேப்பிற்கு வந்திருக்கின்றது. அரதல் செருப்பு.

" யாரும் இல்லையா " என்ற இவனின் குரலுக்கு 

மணி ஐயர்" யாரு?

"இந்த வேளையில் வந்திருக்கேள் ?எல்லாம் மூடியாச்சே ! என்றபடி பிரவேசிக்கும் இவரைப் பற்றி ...

அவருக்கு வயது ஐம்பது இருக்கும். இடது கையில் கட்டியிருக்கும் கடிகாரம் ஒன்றுதான் சற்று விலையுயர்ந்தது என்று தெரிகின்றது. அவர் முகத்தில் வசீகரமும் சட்டென்று சிரித்து பேசும் விருப்பமும் தெரிகின்றது.

" வாடிக்கையாய் வர வேண்டியவர் ஒருத்தர் வரணும். சினிமாவுக்கு  போயிருக்கார். வந்ததும் மூடிடுவேன். அவருக்கு சாப்பாடு எடுத்து வெச்சிருக்கு "

" சாப்பாடு எக்ஸ்ட்ராவா இல்லையா "

" மன்னிச்சுக்கோங்கோ.அவருக்கு வைச்சது அதைப் போட்டா சில்லை ஒடைச்சுடுவார் 

"நல்ல பசியில் வந்திருக்கேன் "

"பக்கத்துல வெங்கடா லாட்ஜ் இருக்கு அங்க போனா சுடச்சுட சப்பாத்தி கிடைக்கும். ஓ ..இன்னைக்கு திங்கட்கிழமையா ? ஸ்டேஷனுக்கு பொடி நடையா போனா பக்கத்துல டீக்கடைல குஸ்கா ,பாயா ,குருமான்னு எதாவது கிடைக்கும்.'

"அங்கெல்லாம் போனா சந்தடி ஜாஸ்தி. அதென்ன மைசூர் பாகா. அதாவது கொடும் "

( ஒரு அசட்டு சிரிப்புடன் ) அத நான் ரெகமெண்ட் பண்ண மாட்டேன். கட்டி தட்டிப் போச்சு .

மணி ஐயர் வந்தவனை பரிதாபமாகப் பார்த்து யோசித்து " வேணா ஒன்னு பண்ணலாம்.அஞ்சு நிமிஷத்துல உப்புமா கிண்டித் தரச் சொல்கின்றேன். 

திரையை நோக்கி " லட்சுமி .ஒரு இரண்டரை பிளேட் உப்புமா கிண்டிடறியா ? பசியோட ஒரு கஸ்டமர் வந்திருக்கிறார்".

பதிலாக ஒரு குரல் " ரவை இல்லை .நேத்தே தீந்து போச்சு. '

"ஒரு நிமிஷம் பாய் கடையில கால் கிலோ ரவை வாங்கிண்டு வரேன்.

மணி ஐயர் போய் ரவை வாங்கி ( கடன் சொல்லித்தான் ) வந்து உப்புமா தயாராகும் அந்த இடைப்பட்ட சில நிமிடங்களில் சம்பிரதாயமாக இவர்களுக்குள் நடை பெறும் சிறு உரையாடலில் மணி ஐயரின் முன்கதை நமக்கு சொல்லப்படுகின்றது.

“ஏன் ஐயரே , ஓட்டல் இவ்வளவு க்ஷீணமா இருக்கே.ஹோட்டல் ?

“ ஷ் ! ஹோட்டல்னு இரைஞ்சு சொல்லாதீர். கார்பரேஷன்காரா காதில் விழுந்தா வரிய உசதிப்பிடுவா. மெஸ்ன்னு சொல்லி நடத்திண்டு இருக்கேன். இருபது , இருபத்தைந்து பேர் வாடிக்கையா வந்திண்டு இருக்கா. அவாளுக்கு சமைச்சுண்டு நாங்களும் சாப்பிட்டுண்டு இருக்கோம். இடம் சொந்தமா இருக்கறதால சமாளிக்க முடியறது. 

“ஏன் ? இடிச்சு ரீ மாடல் பண்ணி நல்லா நடத்தலாமே ?”

“ க்கும் . ரவைக்கே கடன் சொல்லி வாங்கிண்டு வந்திருக்கேன். கல்லாவுல இருனூறு ரூபாய் விழும். ஆனா அடுத்த நாளுக்கு நூற்று ஐம்பது ரூபா வேனுமே. ஆனா ஒரு காலத்துல நன்னா இருந்தவன்தான். பாராசூட் சில்குல. ஜிப்பா போட்டுண்டு  கை நிறைய மோதிரம் போட்டுண்டு , “ மணிஸ் கபே பிராமணாள் காப்பி சாப்பாடு  ஓட்டல்ன்னு போ போட்டு நட்த்திண்டு இருந்தவ்ந்தான். ஜே, ஜே-ன்னு வியாபாரம் நடக்கும். இட்லிக்கு க்யூ நிக்கும். ரேடியோ என்ன ஐஸ் பெட்டி என்ன , வாழைத்தண்டு விளக்கு என்ன …

“ அதெல்லாம் என்ன் ஆச்சு 

“ எல்லாம் போயிடுத்து . இது ஒண்ணுதான் ( வாட்சைத் தட்டி காட்டி ) இது ஒண்ணுதான் மிச்சம். எங்க ஓட்டலில் வேலை கத்துண்ட ஒருத்தன் சரக்கு மாஸ்டர் வெளியே போய் எனக்கு எதிராவே கடை போட்டான்.  அப்புறமா இந்த தொழிலில் போட்டி அதிகம். அஞ்சு பைசா குறைத்தே வித்தான். ஜனக்களுக்கும் ஏ.சி , பேமிலி ரூம் இதுதானே பிடிச்சிருக்கு.என்னால போட்டி போட முடியல. அப்புறம் என்ன ? என் மொத்த பணத்தையும் கோஷ்டியா ஒழிச்சா. பிரண்டோட சேர்ந்து இங்க் பேக்டரி வைச்சேன். பாண்டே இல்லாமல் மச்சினனுக்கு கடன் கொடுத்தேன். நடுல கார்பரேஷன் எலெக்‌ஷன் வேற .அதுல பணம் போச்சு.

ஆனா பணம் போனதும் நிம்மதி வந்தாச்சு. பணம் இருந்தப்போ ஈன்னு இளிச்சிண்டு இருந்த கூட்டம் இப்ப இல்ல. நிம்மதியா இருக்கேன், எதோ பசின்னு உங்கள மாதிரி வரவாளுக்கு வயிறு நிறைய போட்ட திருப்தி இருக்கு “

தயாராகி வந்த உப்புமாவை தட்டில் போட்டு                      “தொட்டுக்க சர்க்கரை வைச்சிருக்கேன். பிரமாதமா இருக்கும் .சாப்பிடுங்கோ “ என்றவர் அவன் ஆவலாய் சாப்பிடுவதை பாசத்தோடு பார்க்கிறார்.

சாப்பிட்டு முடித்தவுடன் “ எவ்வளவு தரணும் “ என்றவனிடம் 

“ என்ன பெரிசா இருக்கு போய் .. சரி ஒரு ரூபாய் கொடுங்கோ “ என்கிறார் மணி ஐயர். 

“ நூறு ரூபாய்க்கு சில்லரை இருக்குமா “ என்றவனிடம் "இருக்காதே. பார்க்கிறேன் “ என்று கல்லாவை திறக்கும் மணி ஐயரிடம் வந்தவன் கத்தியை காட்டி

“ஐயரே வீணா குத்து படாதே. கல்லால இருக்கும் மொத்த பணத்தையும் எடு. கையில இருக்க வாட்சையும் கொடு" என்று மிரட்டுகிறான். 

மணி ஐயர் பயந்து போய் “ ஒண்ணும் பண்ணிடாத . எல்லாத்தையும் எடுத்துக்கொள். “ என்று வாட்சையும் கழற்றி கொடுக்கிறார். வந்தவன் எல்லாவற்றையும் எடுத்துக் கொண்ட

“ போறதுக்கு முன்னால ஒன்னு சொல்றேன். என்னை கிராதகப் பயல்ன்னு நினச்சுப்ப.உள்ள வந்தவன விசாரிச்சு திங்க கொடுத்தவன் கிட்டயே திருடிட்டுப் போறேன்னு நினைச்சுப்ப . பரவாயில்ல அய்யரே ! உனக்கு ஒரு நிழல் இருக்கு. அடுத்த வேளை சோத்துக்கு ஒரு உத்தரவாதம் இருக்கு. ஒரு சம்பாத்யம் இருக்கு. எனக்கு அது ஒண்ணும் கிடையாது. படிச்சேன். என்ன பிரயோஜனம்.? இப்போ நான் தின்னது மூனு நாளைக்கு அப்புறம் திங்கற முதல் ஆகாரம். எங்கப் பார்தாலும் போட்டி . ..நாய்ப்பிழைப்பு .. நம்பினா நம்பு நம்பாட்டி போ.நான் செய்யற முதல் திருட்டு இது… உன்ன மாதிரி அப்பாவி கிட்டதான் என்னால திருட முடியும். நாணயமா சம்பாதிக்க  முயற்சித்து எனக்கு அலுத்து போச்சு. உன் கதைய சொன்ன ! என் கதையில ஏழ்மையையும் பசியையும் தவிர வேறு ஒன்றும் கிடையாது. ஸாரி !

வந்தவன் விருட்டென்று கிளம்பிப் போக , திடுக்கிட்டு அவன் சென்ற திசையைப் பார்த்துக் கொண்டிருந்தார் மணி ஐயர்

=============

இந்த இடத்தில் நாடகம் முடிந்து இருந்தால் அது சுஜாதாவின் நாடகமும் இல்லை. மணி ஐயரின் கேரக்டரும் முழுமை அடைந்ததாகாது ..

பின்னர் ?

==================

திடீரென்று ஞாபகம் வந்தவராய் மணி ஐயர் வெளியே செல்கின்றார். 

மணி ஐயரின் குரல் மட்டும் கேட்கிறது.

“ சொல்ல மறந்துடேனே. அந்த வாட்ச்சைக் கொஞ்சம் அப்பப்ப ஆட்டிக்கோங்க. அப்பதான் ஓடும் “ என்று சொல்லி விட்டு கல்லாவில் வந்து உட்கார்ந்து கொள்கின்றார். 

அவரின் மனைவி ஒரு டம்ப்ளரை கலக்கி கொண்டே உள்ளே நுழைந்து “ போய்ட்டாரா? பயத்த கஞ்சி கொஞ்சம் சுடப்பண்ணி கொண்டு வந்தேன் “

( திரை விழுகின்றது )

No comments:

Post a Comment