வசந்தகாலம் வருமோ?-87
By N Krishnamurthy
குருசாமி அய்யர் "என்னம்மா இது" என்றார். ராஜேஸ்வரிக்கு சப்த நாடியும் ஒடுங்கியது. பயத்தில் முகம் வியர்த்தது. "சரி.ஜாதகங்கள் பொருந்துவில்லை போல இருக்கிறது. இவ்வளவு நாள் நாம் எடுத்துக்கொண்ட முயற்சிகள் வியர்த்தமாகி விட்டதே. இதை கேட்டால் சங்கர க்ருஷ்ணன் மனம் என்ன பாடு படும் "என்றெல்லாம் நினைக்க ஆரம்பித்தாள். மார்கபந்துவின் முகத்திலும் பயத்தின் ரேகைகள் தெரிய ஆரம்பித்தன.
பின்னர் குருசாமி ஐயர் முகம் மலர, ராஜேஸ்வரியிடம் " என்னம்மா இது"என்று மீண்டும் கூறி " ரெண்டு ஜாதகமும் இவ்ளோ நண்ணா பொருந்தறத நான் பாத்து ரொம்ப நாள் ஆச்சு. பத்து பொருத்தமும் இருக்கு. இங்லீஷ்ல "மேட்பார் ஈச் அதர்"னு சொல்வாளே அது போல ஜாதகங்கள் பொருந்தி இருக்கு. நீங்க தாராளமா மேல் கொண்டு ஏற்பாடுகள செய்யலாம். ரெண்டு பேருக்குமே குரு பலன் வந்துடுத்து. எனக்கு தெரிஞ்சு, இந்த ரெண்டு ஜாதகக்காராளுக்கும் இன்னும் ஆறு மாசத்துக்குள்ள கல்யாணம் நடக்க 100% வாய்ப்பு இருக்கு" என்றார். இதைக் கேட்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்த ராஜேஸ்வரி இரண்டு 500 ரூபாய் நோட்டுகளை எடுத்து குருசாமி அய்யரிடம் கொடுத்தாள். "என்னம்மா.எதேஷ்டமா கொடுக்கறேளே" என்றார் ஜோசியர். அதற்கு ராஜேஸ்வரி "நீங்க இப்ப சொன்ன வார்த்தைக்கு நான் இன்னும் நிறைய கொடுத்து இருக்கணும்.
நீங்க ஜாதக பொருத்தம் பாத்து கொடுக்கல. என் வயித்துல பால்னா வாத்திருக்கேள்" என்றாள். பின்பு இருவரும் அவரிடமிருந்து விடை பெற்று, சந்தோஷத்துடன் தங்களுடைய Flat க்கு திரும்பினார்கள். திரும்பும் வழியில் உள்ள ஸ்வீட் கடையில் அரை கிலோ திருநெல்வேலி அல்வா வாங்கிக்கொண்டாள் ராஜேஸ்வரி.
(மார்க பந்துவும், சங்கர க்ருஷ்ணனும் ஸ்வீட் கிடைத்தால் விட மாட்டார்கள்).
வீட்டிற்கு வந்ததும் ராஜேஸ்வரி சங்கர க்ருஷ்ணனுக்கு அல்வாவை கொடுத்தாள்."என்னம்மா விசேஷம்" என்றான் அவன். அவனுக்கு அவர்கள் ஜோசியரிடம் சென்று வந்தது தெரியாது. ராஜேஸ்வரி அவனிடம் விஷயத்தை விளக்கி " முதலும்,முக்யமானதுமான படியை கடந்தூட்டோம்.இனிமேயும் எல்லா தடைகளையும் தாண்ட அந்த மார்கபந்துதான் வழி காட்டணம்"என்றாள்.
இதற்கு சங்கர க்ருஷ்ணன் "நிச்சயம் வழி காட்டுவார். சொந்த பையனுக்கு வழி காட்டாம வேற யாருக்கு வழி காட்ட போறார்"என்று சொல்லி சிரித்தான். இதற்கு ராஜேஸ்வரி
" சந்தோஷமான ந்யூஸை கேட்டதும் நோக்கும் ஜோக் அடிக்க தோண்றதா.நான் விரிஞ்சிபுரத்திலுள்ள சுவாமி மார்கபந்துவை சொன்னேன் " என்றாள். அருகிலிருந்த மார்கபந்து இந்த ரசமான நாடகத்தை பார்த்து ரசித்துக்கொண்டிருந்தார்.
இதற்கு பத்து நாட்கள் முன்பு, சாரங்கனுக்கு ஒரு நாள் ரங்கநாயகிடமிருந்து ஒரு தபால் வந்தது. அதில் ரகுநந்தன் ஜாதகம் இணைக்கப்பட்டிருந்தது. இதன் பிறகு ரங்கநாயகி சாரங்கனிடம் போனில் பேசினாள். " தோ பார்டா, சாரங்கா. ரகுநந்தனுடைய அம்மா அவ பையன் ஜாதகத்தை அனுப்பி உன்னிடம் சேர்ப்பிக்க சொன்னா. அது உனக்கு நான் அனுப்பிச்சிருக்கேன். உன் பொண்ணுக்கு எப்ப கல்யாணம் பண்றயோ, அது உன் இஷ்டம். எதுக்கும் இந்த பையனுடைய ஜாதகத்தை, நம்ப ம்ருதுளா ஜாதகத்தோடு பொருத்திப் பார். சரியா பொருந்தினா உன் இஷ்டப்படி கல்யாணத்தை வச்சுக்கலாம்" என்றாள். "சரிக்கா, அதுக்கு என்ன. பாத்துட்டா போச்சு" என்றான் சாரங்கன். ரங்கநாயகி தான் செய்வது எவ்வளவு பெரிய தவறு என்று தெரிந்தும் ,வேறு வழியின்று இவ்வாறு செய்தாள். மதுரை ஜோசியர் ராமசாமி , ஒரு வேளை தப்பாக பார்த்திருக்கலாமோ என்ற நப்பாசை அவளுக்கு இருந்தது.
அடுத்த நாள் சாரங்கன் ரகுநந்தனுடைய ஜாதகத்தையும், ம்ருதுளாவுடைய ஜாதகத்தையும் எடுத்துக்கொண்டு போய் தெரிந்த ஜோசியரிடம் காட்டினான். அதை பார்த்த அவர் "ரெண்டு ஜாதகமே ரொம்ப நல்லா இருக்கு. ஆனா ஒரு வேடிக்கை பாருங்க. இரண்டு ஜாதகத்துக்கும் ரெண்டுக்கு மேல பொருத்தமே இல்லை. இவாளுக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறது உசிதமே கிடையாது " என்று உதட்டை பிதிக்கினார். சாரங்கனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை . சரி, எப்படி இருந்தாலும் இப்போதைக்கு கல்யாணம் இல்லை என்ற தன்னுடைய கோட்பாட்டிற்கு ஜோசியர் சொன்னது உதவியாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டான். இதை முதலில் ரங்கநாயகிக்கு கூற வேண்டும் என்று நினைத்தான். பின்பு இது ஒன்றும் சந்தோஷமான சமாச்சாரம் இல்லையே, எனவே சஷ்டி அப்த பூர்த்தியின் போது ரங்கநாயகியிடம் இதை தெரிவித்துக் கொள்ளலாம் என்று நினைத்தான்.
இதற்குள் ரகுநந்தனுடைய பெற்றோர்க்கும் பத்திரிக்கையை அனுப்பி வைத்தான் சாரங்கன்.
அடுத்த நாள் காலை ரகுநந்தனுடைய தாய் சாரங்கனக்கு போன் செய்தாள்." மாமா.பத்திரிக்கை வந்து சேர்ந்தது. நாங்க வரலாம்னு இருக்கோம்.
டிக்கட் புக் பண்ண சொல்லியிருக்கேன் "என்றவள், போகிற போக்கில் கேட்பது மாதிரி "பையனுடைய ஜாதகம் அமிச்சிருந்தேனே.
ஜோசியர் கிட்ட காம்பிச்சேளா" என்றாள்.
சாரங்கன் என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் ஒரு நிமிடம் யோசித்தான். பின்பு இதை இப்படியே வளர விடக்கூடாது, அப்படி விட்டால் அவர்களுக்கு அனாவசியமாக ஒரு நம்பிக்கை கொடுத்த மாதிரி ஆகிவிடும் என்று நினைத்து "ஆமாம் மாமி.ரெண்டு ஜாதகத்தையையும் ஜோசியர் கிட்ட காட்டினேன். உங்க பையன் ஜாதகம் ரொம்ப நண்ணா இருக்காம். ஆனா ரெண்டு பேர் ஜாதகத்துக்கும் துளிக்கூட பொருத்தமே இல்லை அப்படின்னு ஜோசியர் சொல்லீட்டார். அதனால இதல மேற்கொண்டு என்ன பண்ண முடியும்னு நேக்கு தெரியல" என்றான். இதைக் கேட்ட ரகுநந்தனின் தாய்க்கு சொல்ல முடியாதபடி ஏமாற்றமும்,எரிச்சலும் ஏற்பட்டது. அவள் சாரங்கனிடம்" சரி மாமா. நம்ப என்ன பண்ண முடியும் .எல்லாம் அந்த பெருமாள் கையில தானே இருக்கு" என்று கூறி போனை வைத்து விட்டாள். இதற்குப் பிறகு உடனடியாக அவள் ரகுநந்தனுக்கு போன் செய்தாள்.
" டேய் ரகு . வசு மாமா அறுபதுக்கு மெட்ராஸ் போறதுக்கு டிக்கெட் புக் பண்ண வேண்டாம். நாமெல்லாம் போக போறது இல்லை" என்றாள். "என்னம்மா சொல்ற நீ. அவர் 60 க்கு போயிட்டு அப்படியே மீதி விஷயத்தையும் பேசிட்டு வந்துடலாம்னு சொன்ன" என்றான். அதற்கு அவள் " அந்த பிராமணன் கிட்ட இப்பதான் பேசினேன். ஜாதகம் பொருந்தலைன்னு சாக்கு சொல்லிட்டார். நேக்கு என்னமோ அந்த பொண்ண நம்பளுக்கு கொடுக்கிறதுக்கு அவாளுக்கு இஷ்டம் இல்லைனு நெனைக்கிறேன். அப்படி இருக்கும்போது நம்ப ஏன் அவாத்து பங்ஷனுக்கு போகணம்" என்று கூறினாள். ஏமாற்றம் அடைந்த ரகுநந்தன் "சரிம்மா. நான் டிக்கெட் புக் பண்ணல" என்று கூறி போனை வைத்தான்.
இதன் பிறகு ஜோசியரிடம் சென்று வந்த விவரத்தை சாரங்கன் மைதிலிக்கு கூறினார் . அவர் சொல்லுவதை எல்லாம் அருகில் இருந்த ம்ருதுளா கேட்டுக் கொண்டிருந்தாள்.
அவள் சிறிது நேரத்தில் அருகில் இருந்த டெலிபோன் பூத்துக்கு சென்று வசுமதிக்கு போன் செய்தாள்.
" அக்கா நீ நண்ணா இருக்கயா" என்று கேட்டாள். அதற்கு வசுமதி "நான் நண்ணா இருக்கேன். எதுக்கு போன் பண்ணி இருக்கே "என்று கேட்டாள்.
" ஒரு குட் நியூஸ் சொல்ல போறேன் அக்கா" என்றாள் ம்ருதுளா.
"என்ன சங்கர க்ருஷ்ணன் போன் பண்ணாரா" என்று கேட்டாள் வசுமதி. "இல்லக்கா. அதைவிட ரொம்ப சந்தோஷமான சமாச்சாரம்" என்றாள் ம்ருதுளா .
அதற்கு வசுமதி "ரொம்ப தான் பீடிக போடாத, விஷயத்தை சொல்லு. கேட்கலைன்னா நேக்கு தலையே வெடிச்சூடும் போல இருக்கு" என்றாள்.
" அப்பா என்னோட ஜாதகத்தையும், உங்க மச்சினர் ஜாதகத்தை எடுத்துண்டு போய் ஜோசியர் கிட்ட காமிச்சிருக்கார். இரண்டு ஜாதகத்தலையும் ஒரு பொருத்தம் கூட இல்லைனு ஜோசியர் சொல்லிட்டாராம்" என்றால் ம்ருதுளா. இதைக் கேட்ட. வசுமதி "அப்பா . இத கேட்ட உடனே ஒரு மைசூர்பாகை வாயில போட்டுக்கணும் போல இருக்கு. நல்ல நியூஸாதான் சொன்ன. நம்ம முதல் கட்ட பரிட்சையை தாண்டிட்டோம். இனிமே அடுத்த கட்ட பரிட்சைக்கு பிரிப்பேர் பண்ணிக்கணும்" என்றாள்.
No comments:
Post a Comment