முற்பகல் செயின்..19
By N Krishnamurthy
ஆதித்யா "அப்புறம் எல்லாம் கடகட வென நிறைவேறின. நான் இந்தியா வந்து சேர்ந்தேன். இன்னும் மூன்று நாட்களில் வேலைக்கு சேர வேண்டும் "என்றான்.
கோமதி அவனிடம்"தோ பார் ஆதித்யா.நீ வசதியான சூழ் நிலையில் வளர்ந்த பிள்ளை. இங்கே அவ்வளவு வசதி இல்லை. ஒண்ணு பண்ணு,உங்க காசி நாத தாத்தா வீட்டில் இருந்து கொண்டு ஆபிஸ் போய், வா. சனி,ஞாயிறுகளில் இங்கே வரலாம்" என்றாள்.
இதைக்கேட்ட ஆதித்யா சூடானான். "பாட்டி,ராமன் இருக்குமிடந்தான் அயோத்தி என்பது போல நீங்கள் இருக்குமிடம்தான் என் இருப்பிடம். இதில் எந்த மாற்றமுமில்லை. வசதி என்பது மனதைப்பொருத்தது. ஏதேனும் வசதி குறைவாக இறந்தால் அதை ஏற்படுத்திக் கொள்வோம்." என்றான்.
நமச்சிவாயம் கட்டிலிலிருந்து எழுந்து அவனருகில் சென்று அவனை மூச்சு முட்ட இறுக கட்டிக்கொண்டார். கோமதி தன் கண்களில் கசிந்த நீரை துடைத்துக் கொண்டாள்.
அடுத்த நாள் நமச்சிவாயத்தை ஒரு ஈ.என்.டி டாக்டரிடம் சென்று காட்டி,காது மெஷின் வாங்கித்தந்தான். வீட்டுக்கு வந்ததும் கோமதி "இப்ப நல்லா கேக்குதா",என்றதும் நமச்சிவாயம் "நீ மூச்சு வுடற சத்தமே கேக்குதான்னா பாத்துகோயேன் "என்றார்.
"பாட்டி இனிமே தாத்தவ பத்தி நம்ப ரெண்டு பேரும் எதுவும் ரகசியம் பேச முடியாது" என சொல்லி சிரித்தான் ஆதித்யா.
டெலபோன் டிபார்ட்மெண்ட்டை கூப்பிட்டு ஆறு மாதமாக வேலை செய்யாமலிருந்த டெலபோனை சரி செய்தான்.
பாத்ரூமில் சரியாக வேலை செய்யாமலிருந்த இம்மர்ஷன் ஹீட்டரை எலக்ட்ரீஷியனை வைத்து சரி செய்தான்.
வீட்டில் பெருகிக்கிடந்த ஒட்டடைகளை ஒழித்து சுத்தம் செய்தான். அருகிலுள்ள ஹார்ட்வேர் கடையிலிருந்து அலுமினியம் ஏணியை வாங்கி, அதன் மூலம் ஃபேன்களின் இறக்கைகளின் மேலும், கீழுமுள்ள அழுக்கை துடைத்து சரி செய்தான். அதன்பின் ஃபேன்கள் வேகமாக ஓடும் அதிசயத்தை கண்டு கோமதி வியந்தாள்.
அன்று மாலை ஏழு மணிக்கு திரு ஆதித்யாவிடம் போனில் பேசினான். இதை தொடர்ந்து நித்யாவும் பேசினாள்.பின்னர் திரு
நமச்சிவாயத்திடம் பேச விரும்புவதாக சொல்ல, போனை நமச்சிவாயத்திடம் ஆதித்யா கொடுத்தான். திரு, பத்து நொடி பேசாமல் இருந்ததை கண்ட நமச்சிவாயம்
" திரு.நீ சௌக்யமா இருக்கயா.நித்யா எப்படி இருக்கா" என்றார்.
திரு தழு தழுத்த குரலில் "அப்பா நீங்க சுகமா?அம்மா எப்படி இருக்காங்க" என்றான்.
No comments:
Post a Comment