வசந்தகாலம் வருமோ?-74
By N Krishnamurthy
ரிசப்ஷன் ஆரம்பமானது. மணமக்களின் இடப்புறமிருந்த மேடையில் நடுநாயகமாக ம்ருதுளா உட்கார, அவளது இடப்பக்கம் சங்கர க்ருஷ்ணனும், வலப்பக்கம் ராமனுஜமும் அமர்ந்தார்கள்.வழக்கம் போல ராஜேஸ்வரி ம்ருதுளாவுக்கு பின்புறம் அமர்ந்து தம்புரா மீட்ட ரெடியானாள். சுப்புலக்ஷ்மி பாட்டு டீச்சர் என்பதால் வந்திருந்த கூட்டத்தில் பலர் நல்ல சங்கீத ஞானஸ்தர்களாக இருந்தனர்.
கச்சேரி ஆரம்பமானது. சௌராஷ்ட்ரத்திலமைந்த தியாகராஜ சுவாமிகளின் "ஸ்ரீகணபதினி"யை ம்ருதுளா பாடத்தொடங்கினாள்.
சுருக்கமாக,ஸ்வரம் போடாமல் ஆனால் அழகாக சௌராஷ்ட்ரத்தை அளித்தாள்.இதை தொடர்ந்து வசந்தா ராகத்தை பிரிஸ்க்காக ஆலாபனை செய்து, தீக்ஷதிரின் " ராமசந்த்ரம் பவயாமி" கிருதியை பாடி " ஸாகேத நகரே நிவஸந்தம் " என்ற இடத்தில் நிரவல் செய்து ஸ்வரம் பாடினாள்.அவள் வசந்தாவை கேட்ட பலர் மெய்மறந்து "உச்" கொட்டினார்கள். வயலினில் சங்கர க்ருஷ்ணன் ம்ருதுளாவின் வசந்தாவை அழகாக ரீ ப்ரொடீஸ் செய்தான். இதனை தொடர்ந்து ஆனந்த பைரவியை விஸ்தாரமாக ஆலாபனை செய்தாள். தனது கற்பனையை சேர்த்து சங்கர க்ருஷ்ணன் ஆனந்த பைரவியை வயலினில் மெருகேற்றினான்.
ஸ்யாமா சாஸ்திரிகளின் "மரி வேறு கதி எவ்வரம்மா" என்ற பாட்டை ஆரம்பித்தாள். அவள் நா ஆனந்த பைரவியை அமுதமென பொழிந்தது. ஸ்யாமா சாஸ்திரிகள் எழுத்தில் காட்டியிருந்த உருக்கத்தை, தன் குரலில் காட்டினாள் ம்ருதுளா. அவளது பாடும் திறனை கண்டு சங்கர க்ருஷ்ணன் அதிசயத்தான். அவளுக்கு இணையாக ஆனந்தபைரவியை வயலினில் கொண்டுவர அவன் தன் முழுத் திறமையையும் காட்டவேண்டியிருந்தது.
"மதிலோ" என்ற இடத்தில் நிறுத்தி ஸ்வரப்ரஸ்தாரம் செய்ய ஆரம்பித்தாள். ம்ருதுளாவும்,சங்கர க்ருஷ்ணனும் போட்டி போட்டுக்கொண்டு தத்தம் திறமையை காட்டுவதைக் கண்ட ராமானுஜமும் மம்ருதங்கத்தின் நாதத்தை சுநாதமாக்கினான். கடம் இல்லாததால் அவன் இருவருக்குமே வாசிக்க நேர்ந்தது. ஆனந்த பைரவி முடிந்ததும், கேட்டுக் கொண்டிருந்தவர்களின் கரகோஷத்தால் அந்த மண்டபமே அதிர்ந்தது.சிறிது இடை வெளி கொடுத்த ம்ருதுளா அடுத்து சாவேரியில், பெரியசாமித்ததூரனின் "முருகா" வை பாடினாள்.
இதை அடுத்து மகாகவி பாரதியின் "கண்ணன் மன நிலையை தங்கமே தங்கம், கண்டு வர வேணுமடி தங்கமே தங்கம் " பாடலை ராகமாலிகையாக அமைத்து பாடினாள்.
கண்ணன்,ராதிகா திருமணத்தில் இந்த பாட்டின் பொறுத்தத்தை அறிந்தவர்கள்பாராட்டினார்கள்.
கடைசியில் "பவமான"பாடி கச்சேரியை முடித்தாள்.
கச்சேரி முடிந்ததும் முதலில் ராமகிருஷ்ணன் ம்ருதுளாவிடம் "என்ன பிரமாதமா வசந்தாவ பாடின.ரொம்ப த்ருப்தியா இருந்தது. ஆனந்த பைரவிய ஜாமாச்சூட்ட. உன் கொறல் நேக்கு என்.சி.வசந்த கோகிலத்தை ஞாபகப்படுத்தறது" என்றவர் சங்கர க்ருஷ்ணணிடம் "நோக்கு வாய்ப்பாட்டும் தெரியர்தனால வயலின்ல சில பிடிகளை அனாவச்யமா வாசிக்கற.அடுத்த க்ளாஸ்ல ராம சந்த்ரம் பாவயாமியை கத்து கொடுக்கறேன்"என்றார்.பின்பு சுப்புலட்சுமி அவருக்கு ராமானுஜத்தை அறிமுகப்படுத்தினாள். அவர் ராமானுஜத்திடம் "குரு யாரோ" என்று கேட்டார்." சாத்தூர் சங்கரன் பிள்ளை என்பவரிடம்தான் போயிண்டிருக்கேன் மாமா" என்றான். "நல்லா வாசிக்கிறப்பா. இன்னும் மூணு நாலு வருஷத்துல நீ பெரிய பெரிய மிருதங்க வித்வானாக ஆயிடுவ" என்றார்."எல்லாம் உங்கள போல பெரியவா ஆசீர்வாதம் தான் மாமா "என்றான் அவன்.இதன்பின் ராமானுஜம் ம்ருதுளாவிடம் நைட் ஆம்னி பஸ் புக் பண்ணி இருக்கேன், பத்து மணிக்கு கெளம்பறது, அதுக்குள்ள போணம்" என்றான். அவனை சுப்புலக்ஷ்மியிடம் அழைத்துச் சென்று விஷயத்தை கூறினாள் ம்ருதுளா." அப்ப நீ போய் சாப்டூட்டு வாப்பா" என்றாள் சுப்புலக்ஷ்மி. அவன் சாப்பிட்டு வந்தவுடன் அவனுக்கு முகூர்த்தம் தாம்பூலத்தை கொடுத்து, அத்துடன் ஆயிரம் ரூபாய் சம்பாவனை செய்தாள் சுப்புலக்ஷ்மி. அதை முதலில் வாங்கிக்கொள்ள ராமானுஜம் மறுத்தான். "நீ வாங்கிண்டு தான் ஆகணும்" என்று கூறி வற்புறுத்தி, அவன் கையில் அந்தப்பணத்தை திணித்தாள் சுப்புலக்ஷ்மி
No comments:
Post a Comment