Saturday, January 27, 2024

வசந்தகாலம் வருமோ?-82

 வசந்தகாலம் வருமோ?-82

By N Krishnamurthy 

மறுநாள் ரங்கநாயகி காலை  தலை வலியுடனே  எழுந்தாள்

.இரவு முழுவதும் மேற்க்கொண்டு என்ன செய்வது என்று யோசித்துக்கொண்டே இருந்தது, அவள் தூக்கத்தை தொலைக்க காரணமானது.

காலை பத்து மணிக்கு ரகுநந்தனின் தாய்க்கு போன் செய்தாள்.

"மாமி.நேத்தி என் தம்பி சாரங்கன் வேற விஷயமா போன் பண்ணான். அப்போ நான் அவங்கிட்ட நம்ப விஷயத்தையும் பேசினேன். அதுக்கு அவன் சரிக்கா,அவாள பையன் ஜாதகத்த அனுப்ப சொல்லூன்னு சொன்னான்" என்றாள்.

இதை கேட்ட ரகுநந்தனின் தாய் "ரொம்ப நல்லதா போச்சு. உங்க தம்பி அட்ரசை கொடுங்கே. இன்னிக்கே ரகு ஜாதகத்தை தபால்ல அனுப்பி வெச்சுடறேன்.

பொதுவா நாங்க ஜாத பொருத்தம் பாக்கறதில்லை.தயார் கிட்ட பூ போட்டுதான் பாப்போம்" என்றாள்.

ரங்கநாயகி அவளிடம் " நீங்க ஜாதகத்தை எனக்கு அனுப்புங்கோ.நான் என் தம்பிக்கு அத அனுப்பி வெக்கறேன்"என்று சொல்லி அவளிடம் தன் அட்ரசை கொடுத்தாள்.

இதற்கிடையில் மெட்ராசில்,மைதிலி சாரங்கனிடம் "என்ன விஷயம். முதல்ல அக்கா போன் பண்ணா. அப்பறம் அம்மா நேத்து உங்க கிட்ட பேசிண்டு இருந்தா. நல்ல இடம்னு பேச்சு அடிபட்டது" என்று கேட்டாள்.  சாரங்கன் அவளிடம் விவரத்தை கூறினான்.

" நீங்கள் சொன்னது தான் சரி.அவசரப்பட்டு இப்ப எதுவும் முடிவு பண்ண வேண்டாம். படிப்பு முடியட்டும். அதுக்கப்புறம் அவளையே கேப்போம். அவ எப்ப பண்ணிக்கிறேன் சொல்றாளோ,அப்ப பண்ணி வைக்கலாம். இன்னொரு விஷயத்தை பாக்கணும். பையன் அவ சங்கீதத்துக்கு உறுதுணையாக இருக்கணும். அப்படி இருந்தா தான் நம்ப அதுபோல வரன ஏத்துக்கணும். *அதுவுமில்லாம பாரின்ல* *இருக்கற பையன்னா* *வேண்டாம்* .என் பொண்ணை அப்பப்போ நான் பாக்கணம்" என்றாள்  மைதிலி மிக உறுதியாக. " நீ இதையெல்லாம்  எங்கிட்ட  சொல்லணமா என்ன . என் மனசுலேயும் இதே எண்ணம் தான் ஓடிண்டிருக்கு. அக்கா, இந்த பையன் விஷயத்தில்  ஏன் ரொம்ப இன்ட்ரஸ்ட் காமிக்கறான்னு நேக்கு தெரியல" என்று கூறினான் சாரங்கன்.

மூன்றே நாட்களில் ரங்கநாயகிக்கு ரகுநந்தனின் ஜாதகம் கிடைத்தது. ஏற்கனவே ம்ருதுளாவின் ஜாதக காபி அவளிடமிருந்தது.

சாப்பாடு முடிந்ததும் பத்பநாபன் "நான் கொஞ்சம் திருபரங்குன்றம் சுந்தர் ஆத்துக்கு போய்ட்டு வரேன்.திரும்பி வறதுக்கு சாயங்காலம் ஆயிடும்"என்று சட்டையை மாட்டிக்கொண்டு கிளம்பினார். சுந்தர் அவருடைய மிக நெருங்கிய நண்பர்.மாதம் ஒருமுறை இருவரும் சந்தித்து பேசிக்கொண்டிருப்பார்கள். ரங்கநாயகிக்கு இரண்டு ஜாதகத்தையும் எடுத்துக்கொண்டு அரசரடியில் இருக்கும் ஜோசியர் ராமசாமியிடம் காட்டினால் என்ன என்ற யோஜனை வந்தது. அவள் பத்மநாபனிடம் "நானும் வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளம் வர போய்ட்டு வந்தூட்றேன். வசுவோட ப்ரண்ட் மீனா திருச்சி போறாளாம்.வசு  கொஞ்சம் கொழம்பு வடாம் கேட்டிருந்தா.கொடுத்தூட்டு வரேன்"என்று பொய்யை சொன்னாள். ஜோசியரிடம் போகிறேன் என்றால் அதற்கு அவர் வேண்டாத கமண்ட் அடிப்பார் என்று அவள் நினைத்தாள். பத்பநாபன் அவளிடம் "சரி. பாத்து போய்ட்டு வா.ஒரு சாவி நான் எடுத்துண்டு போறேன்.இன்னூண்ண நீ எடுத்துண்டு போ"என்று கூறிவிட்டு,செருப்பை மாட்டிக்கொண்டு கிளம்பினார்.

அவர் சென்றதும் கிடு கிடுவென சாப்பிட்டுவிட்டு, பத்து பாத்திரங்களை கழுவி,மேடையின்மேல் வைத்துவிட்டு, வெளியே செல்லும் போது அணியும் புடவையை அணிந்து கிளம்ப ஒருமணி நேரம் பிடித்தது.

பஸ் பிடித்து அரசரடி ஜோசியர் ராமசாமி வீட்டை அவள் அடையும் போது மணி பன்னிரெண்டையை தொட்டது. ராமசாமிஅப்போதுதான் சாப்பிட்டுவிட்டு கைஅலம்பிக்கொண்டிருந்தார்.ரங்கநாயகியை பார்த்ததும்"வாங்க மாமி. சௌக்யமா. வசு ஷேமமாஇருக்காளா"என்று விஜாரித்தார். பாயை போட்டு அவளை அமரச்சொன்னார். ரங்கநாயகி இரண்டு ஜாதகங்களையும் கொடுத்து பொருத்தம் பார்க்கச்சொன்னாள்.

கண்ணாடி கூண்டிலிருந்து கண்ணாடியை எடுத்து, மூக்கின் மேல் பொருத்திக்கொண்ட ராமசாமி இரு ஜாதகங்களையும் ஆராய்ந்தார். பின்னர் அவர் ரங்கநாயகியிடம் பேச ஆரம்பித்தார்.

No comments:

Post a Comment