Saturday, January 13, 2024

முற்பகல் செயின்..5

 *முற்பகல் செயின்..-5* 

By N Krishnamurthy 

மறுநாள் முதல் வேலையாக நமச்சிவாயம் நித்யாவின் போட்டோவை ஏர் மெயிலில் திருவுக்கு அனுப்பி வைத்தார். அந்த வாரம் திரு போன் செய்தபோது கோமதி அவனிடம் காசிநாதன் பெண் கொடுக்க வந்து  பேசிவிட்டு போய் இருப்பதை பற்றி கூறினாள். "இப்போதைக்கு என்னமா கல்யாணத்துக்கு அவசரம்" என்றான் திரு. " அதெல்லாம் இல்லடா.அது அது காலாகாலத்ல நடக்கணம்" என்றாள் கோமதி."  சரிம்மா உங்க இஷ்டம் .போட்டோ வரட்டும். நான் பார்த்தூட்டு  சொல்றேன்" என்றான்.

அடுத்த பத்து நாட்களில் இரு முறை போன் செய்து விட்டார் காசிநாதன்.

 "இன்னும் என் பையனிடம் இருந்து பதில் வரவில்லை. வந்தவுடன் உங்களை நானே கூப்பிடுகிறேன்" என்றார் நமச்சிவாயம்.

12  நாட்களுக்கு கழித்து திரு போன் செய்தான். கோமதியிடம் "பெண்ணை  உங்களுக்கு பிடித்திருக்கிறதா அம்மா"என்றான்.

 " ஏம்ப்பா பொண்ணுக்கென்ன.  மூக்கு முழியமா இருக்கா. உனக்கு பிடிக்கலையா என்ன. எங்களுக்கு நல்லா பிடிச்சிருக்கு" என்றாள். "சரிம்மா உங்களுக்கு ஓகேன்னா எனக்கும் ஓ.கே தான்" என்றவன்  பின்பு அவளிடம்"  எனக்கு இதற்காக முப்பது  நாள் லீவு போட வேண்டி  இருக்கும். இரண்டு மாதம் கழித்து தான் லீவுக்கு அப்ளை செய்ய முடியும். அதுக்கேத்த மாதிரி முகூர்த்தத்தை வைத்துக் கொள்ள சொல்லுங்கள்.

வழக்கமா அடிக்கற பத்திரிக்கையை அப்பாவை விட்டு அடிக்க சொல்லீடுங்க.  என் ப்ரண்ட்சுகளுக்கு கொடுக்க நான் வந்ததும் இங்க்லீஷ் பத்திரிகை அடிச்சுகறேன்"  என்றான். 

மறுநாள் நமச்சிவாயம் காசிநாதனுக்கு விஷயத்தை சொன்னார். அந்த ஞாயிற்றுக்கிழமை காசிநாதன் மற்றும் காந்திமதி  அவர்கள் வீட்டிற்கு வந்து  நமச்சிவாயத்துடனும்,கோமதியுடனும் கலந்து பேசினார்கள். இரண்டு மாதம் கழித்து ஒரு முகூர்த்தத்தை பார்க்கச் சொன்னார் நமச்சிவாயம். பின்பு கோமதியிடம் காந்திமதி ஒரு பெரிய லிஸ்ட்டை  கொடுத்து " சீர்,செனத்தி எல்லாம் இந்த லிஸ்டில் குறிச்சிருக்கேன். நீங்க பாத்துட்டு மேற்கொண்டு ஏதாவது தேவைப்பட்டால் எனக்கு சொல்லுங்க" என்றாள்.திருமணத்திற்கு நமச்சிவாயத்தின் சைடிலிருந்து எவ்வளவு பேர் வருவார்கள் போன்ற மற்ற விவரங்களை கேட்டு பெற்றார் காசிநாதன். அதன் பிறகு கோமதி காந்திமதியிடம் " நாங்க ஒரு நாள் வந்து உங்க பொண்ண பாக்கணுமே" என்றாள். அதற்கு காசிநாதன்"  என்னைக்கு வரவேங்கேன்னு  சொல்லுங்க. நான் கார அனுப்பி வைக்கிறேன்" என்றார். நமச்சிவாயம்  அவரிடம் " கார்  தேவையில்லை. நாங்க ஆட்டோ பிடிச்சு  வந்து விடுகிறோம்.வர  வெள்ளிக்கிழமை மத்தியானம் நாலு மணிக்கு மேல வருகிறோம்" என்றார்.

காசிநாதன் அவரிடம் " நான் என் பொண்ணு ஜாதகத்தை கொடுத்தேன் இல்லையா.அதல  கடைசிலே என்னுடைய வீட்டுஅட்ரஸ்,  போன் நம்பர் எல்லாம் கொடுத்து இருக்கு" என்றார்.நமச்சிவாயம் "ஆமாம். அதை நான் பார்த்திருக்கிறேன்" என்று கூறினார்.

திரும்பி செல்லும்போது காந்திமதி காசிநாதனிடம் " இவர் தன்மானத்த விடாப்பிடியா பிடிச்சிண்டிருப்போர் போல இருக்குதங்க. பையன் இவர கொண்டு வராம இருக்கணம்"என்றாள். அதற்கு காசிநாதன் " பையன் ரொம்ப வருஷமா அமெரிக்காவுல இருக்கான். பணத்தோட அருமை புரிஞ்சிருக்கும்.ரஇல்லேன்னா கூட நித்யா அவன மாத்திடுவா.நம்ப கதைய எடுத்துக்கோ.ஆரம்பத்தல நானும் இப்படித்தானே இருந்தேன். நீ வந்துதானே என்னை மாத்தின" என்றார். இது பாராட்டா அல்லது கண்டனமா என்று தெரியவில்லை. கல்யாணத்திற்கு முன் காசிநாதனும் தன்மானம்தான் பெரிது என ஒத்தை காலில் நிற்பார்.காந்திமதியின் அப்பா கதிரேசன் பிள்ளை கொழுத்த பணக்காரர். அவருக்கு திருநெல்வேலி ஜங்ஷன் அருகில் ஒரு நகைக்கடை தவிர வேறு பல கடைகளும் இருந்தன. காசிநாதன் அந்த காலத்து B.A (HONS). தன் குடும்பத்தில் இல்லாத ஒன்று(படிப்பு) காசிநாதனிடம் இருந்ததால், அவரையே மாப்பிள்ளையாக்கிக்கொண்டார் கதிரேசன் பிள்ளை. கல்யாணம் முடிந்த கொஞ்ச நாட்களிலேயே பணம் தந்த சுகத்தில் மூழ்கிய காசிநாதன் தன்மானத்தை மட்டுமா கைவிட்டார், பெற்றோர்களையே கை விட்டு விட்டு  சென்னைக்கு குடியேறினார்.

சொன்னபடி அடுத்த வெள்ளிக்கிழமை நாலு மணிக்கு நமச்சிவாயமும்,கோமதியும்  ஆட்டோவில் காசிநாதன் வீட்டுக்கு சென்றார்கள். வீடு படோடாபமாக இருந்தது. வீட்டின் ஹாலில் மூன்று பேர் அமரக்கூடிய மற்றும்  இரண்டு பேர் அமரக்கூடியதாகவும் சோபா செட்டுகள் இருந்தன. ஜன்னல்களில் திரைச்சீலைகள் தொங்கின. சந்தனம் அதிகமாக இருந்தால் உடல் முழுதும் தடவிக்கொள்வது போல, முன்னூறு சதுர அடி ஹாலில் மூன்று பேன்கள் சுற்றிக்கொண்டிருந்தன். இரண்டு சோபாவுக்கும் நடுவில் இருந்த டீ பாய் மேல்  தினசரி பேப்பர்களும், மாதாந்திர சஞ்சிகைகளும் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. ஒரு மூலையில் டெலிபோன் ஸ்டேண்ட் மேல் டெலிபோன் இருந்தது. ஐந்து நிமிடம் கழித்து நித்யாவை கூட்டிக்கொண்டு வித்யா வந்தாள். 

" உட்கார்ந்து கொள்ளம்மா" என்றாள் கோமதி. அவர் எதிர் சோபாவில் நித்யா உட்கார்ந்தாள். அவள் அருகில்  வித்யா உட்கார்ந்தாள்.நித்யா மாநிறம் என்றால் வித்யா நல்ல வெளுப்பு. "பாட்டு வருமா அம்மா" என்று கேட்டாள் கோமதி. இதற்கு நித்யா பதில் சொல்வதற்கு முன் காந்திமதி" அவளுக்கு பாட்டெல்லாம் அவளோ இன்ட்ரஸ்ட் இல்ல. பாட்டுக்கு செலவழிக்க நேரம்  வேஸ்ட்டீன்னு நெனைக்கறவா நித்யா. அதுக்கு பதிலா அந்த சமயத்துல நிறைய புஸ்தகம் படிப்போ" என்று பெருமையாக கூறினாள். பின்பு கோமதி பேச வேண்டுமே என்ற சம்பிரதாயத்திற்காக நித்யாவிடம் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தாள். இதன் பிறகு காந்திமதி இருவருக்கும் இரண்டு பிளேட்டுகளில் பஜ்ஜியும் ,மைசூர் பாகையும் கொண்டு வந்து கொடுத்தாள். அவற்றை  சாப்பிட்ட நமச்சிவாயத்திற்கு அவை ஏதோ ஓட்டலில் இருந்து வாங்கிக் கொணடு  வரப்பட்டிருக்கின்றன

என்று நிச்சயமாக தெரிந்தது. சாப்பிட்டு முடித்தவுடன், காபி கொடுக்கப்பட்டது. காப்பி சாப்பிட்டதும் காந்திமதி "நீங்க ஏதாவது வேற ஏதாவது நித்யா கிட்ட பேசணுமா" என்று கேட்டாள் .இதற்கு கோமதி"  இல்லம்மா எங்களுக்கு ஒண்ணும் பேசறதுக்கு இல்லை" என்று கூறினாள். பின்பு நமச்சிவாயம் காசிநாதனை பார்த்து " நீங்க முகூர்த்தத்துக்கு மண்டபத்தை ஃபிக்ஸ் பண்ணிட்டு எனக்கு சொல்லுங்க பத்திரிக்கை அடிக்கணம். பத்திரிகையில் போட வேண்டிய விஷயத்தையும் குறிச்சி கொடுத்துடங்கோ" என்றார். இதன் பின்  நமச்சிவாயத்தை பார்த்த காசிநாதன் "கல்யாணத்துக்கு முதல் நாள் மாலை ரிசப்ஷனை வைத்துக் கொள்ளலாம்னு இருக்கேன்.  எனக்கு ஆபீஸ்ல இருந்து நிறைய பேர் வருவார்கள். மேல் அதிகாரிகள், ஏன் சில மந்திரிகள் கூட வரக்கூடும்" என்று கூறினார். இதைக் கேட்டு நமச்சிவாயம் "அதுக்கு என்ன.உங்க சௌகர்யபடியே அப்படியே செய்து விடுங்கள்" என்றார்.

அப்போது நித்யா காந்திமதியிடம் சென்று அவள் காதில் ஏதோ கிசுகிசுத்தாள். உடனே காந்திமதி கோமதியை  பார்த்து " நித்யா மாப்பிள்ளையின் போட்டோ கிடைக்குமா" என்று கேட்கிறாள் என்றாள். அதற்கு  கோமதி " நானே எடுத்துக் கொண்டு வர வேண்டும் என்று இருந்தேன். மறந்துவிட்டது. நான் அனுப்பி வைக்கிறேன்" என்றாள்.  இதற்கு காசிநாதன் " நீங்க திரும்பி காரிலே போய்விடலாம். நீங்கள் இறங்கிய பின் டிரைவரிடம் போட்டோவை கொடுத்து அனுப்புங்கள். அவர் எங்களிடம் சேர்த்து விடுவார் " என்று கூறினார் .வேறு வழி இல்லாமல் நமச்சிவாயம் இந்த ஏற்பாட்டிற்கு ஒத்துக் கொள்ள வேண்டியதாயிற்று. ஆவர்கள் கிளம்புவதற்கு முன் , ஏதோ மறந்து போய் ஞாபகம் வந்த மாதிரி, நித்யா இருவரையும் நிற்க வைத்து நமஸ்காரம் செய்தாள். காரில் ஏறு முன் காசிநாதன் நமச்சிவாயத்திடம்"அப்படியே மாப்பிள்ளையினுடைய போன் நெம்பரை குறிச்சு அனுப்புங்க. அவருடைய சட்ட,பேன்ட் சயிஸ் வேணும்னா போன் பண்ணி தெரிஞ்சிக்கறோம்" என்று கேட்டுக்கொண்டார்.

திரும்பி வீட்டிற்கு வந்ததும் திருவினுடைய முழு உருவ போட்டோவை தேடி கண்டுபிடித்து அதை ஒரு கவரில் போட்டு, அத்துடன் அவனது போன் நெம்பரையும் எழுதி ட்ரைவரிடம் கொடுத்தார் நமச்சிவாயம். அவரை பார்த்து  ட்ரைவர் "போயிட்டு வரேன். ஐயா" என்று கூறி விடை பெற்றார். நித்யா முதலில் நமஸ்காரம் செய்யாததை நமச்சிவாயம் சுட்டிக்காட்டிய போது கோமதி "விடுங்க .சின்ன பொண்ணு. ஏதோ பயத்தில கூட மறந்திருக்கலாம்.

அத விடுங்க. திரு போன் பண்ணா இதையெல்லாம் சொல்ல வேண்டாம் " என்றாள். நமச்சிவாயம் "நம்ப தகுதிக்கு மேலே இந்த சம்பந்தம் இருக்கு.

நம்ப தகுதிக்கு ஏத்த மாதிரி இருந்தா மரியாதையும்,மதிப்பும் கெடச்சிருக்கும்"என்று கூறி அங்கலாய்த்துக்கொண்டார். பதிலுக்கு கோமதி "இதோ பாருங்க. நான் அன்னைக்கு சொன்னது தான் இன்னைக்கும் சொல்றேன். நம்பளுக்கு மதிப்பு கிடைக்கலைன்னா பரவாயில்லைங்க. வாழ்நாள் பூரா நம்ம பையன் சந்தோஷமா இருந்தா அதுவே போதும்"என்றாள்.

(தொடரும்)

No comments:

Post a Comment