Thursday, January 18, 2024

வசந்த காலம் வருமோ?- 77

 வசந்த காலம் வருமோ?- 77

By N Krishnamurthy 

சங்கர க்ருஷ்ணன் தனது வலது  கையை ரகுநந்தனிடம்  நீட்டி" I am Sankara Krishnan"  என்றான்.  ரகுநந்தன்  வேண்டா வெறுப்பாக அவன்  கையை குலுக்கி, தன்னை அறிமுகம் செய்து கொண்டான். அவர்கள் இருவரும் ஆங்கிலத்தில் பேசியதை தமிழ் ஆக்கம் செய்து கொடுத்திருக்கிறேன்.

ரகுநந்தன் சங்கர க்ருஷ்ணனை பார்த்து " நீங்கள் சென்னையில் தான் இருக்கிறீர்களா?" என்று கேட்டான். அதற்கு சங்கர க்ருஷ்ணன் "இல்லை.இல்லை. தற்காலிகமாக சென்னையில் இருக்கிறோம். நாங்கள் அமெரிக்காவில் வசித்து வருகிறோம்" என்று கூறினான். "அமெரிக்காவில்  சாப்ட்வேர் கம்பெனியில் வேலை செய்கிறீர்களா" என்று கேட்டான்  ரகுநந்தன்."  இல்லை. ஒரு யுனிவர்சிடியில் க்வாண்டம் மெக்கானிக்ஸில் மாஸ்டர்ஸ்  செய்து கொண்டிருக்கிறேன். இது தவிர வாய்பாட்டும், வயலினும் கற்றுக் கொண்டிருக்கிறேன்" என்று கூறினான். 

"  ஓ .க்வாண்டம்மெக்கானிக்ஸில், வாய்பாட்டு, வயலின் வித்யாசமான காம்பினேஷனாக இருக்கிறதே. சில சமயம் இது போன்ற விஷப்பரிக்ஷை செய்யும்போது எல்லாவற்றிலுமே அரை குறையாக போக வாய்ப்புக்கள் அதிகம்" என்றான் ரகுநந்தன்.

"உங்களுக்கு சங்கீதம் பிடிக்குமா" என்றான் சங்கர க்ருஷ்ணன்.

" சங்கீதமா.சுத்த போர். அது கேக்கற சமயத்தை ஷேர் மார்கட் பக்கம் செலவிட்டால் பணமாவது தேத்தலாம்" என்றான்.

"உங்களுடைய விருப்பு, வெறுப்புக்களைப்பற்றி கமண்ட் செய்ய எனக்கு இஷ்டமில்லை .நாகரீகமும் இல்லை" என்று அந்த சம்பாஷணைக்கு முற்றுப்புள்ளி வைத்தான் சங்கர க்ருஷ்ணன்.

ரகுநந்தனுக்கு   சங்கர க்ருஷ்ணனும், ம்ருதுளாவும் சங்கீதம் வழியாக  இந்த அளவு ஒன்று சேர்ந்து இருக்கிறார்கள் என்று புரிந்தது.

"இவனை இந்த சீன்ல இருந்து அப்புறப்படுத்தினால் தான்  நாம் ம்ருதுளாவை  திருமணம் செய்து கொள்ள முடியும் "  என்று நினத்த ரகுநந்தன், மகாதேவி பட வீரப்பா ஸ்டைலில் (அடைந்தால் மகாதேவி, இல்லையேல் மரணதேவி, ஞாபகம் இருக்கிதா?) யோசிக்க ஆரம்பித்தான்.

 சாப்பாட்டுக்கு இலை போட்டார்கள்.

ராஜேஸ்வரியையும், சங்கர கிருஷ்ணனையும்  பார்த்து"  நீங்களும் சாப்பிட வரலாமே" என்றாள் மைதிலி.

"இல்ல மாமி. எங்களுக்கு இன்னைக்கு சுப்பலக்ஷ்மி மாமி ஆத்ல  சாப்பாடு. உங்க கிட்ட ஊருக்கு போறோம்னு  சொல்லிண்டு போலாம்னு வந்தேன். வர வெள்ளிக்கிழமை நாங்க ரெண்டு பேரும் அமரிக்கா  கெளம்பறோம்" என்றாள் ராஜேஸ்வரி. சங்கர க்ருஷ்ணன் இந்தியா விட்டு போகப் போகிறான்  என்று கேட்டதும் ம்ருதுளாவின் கண்கள்  லேசாக கலங்கின. சாப்பிட்டுக் கொண்டிருந்த ரகு நந்தன்  சங்கர க்ருஷ்ணனை பார்த்து "அடுத்து எப்போது  இந்தியா வருவீர்கள்" என்று கேட்டான். 

 " அடுத்த டிசம்பர் மியூசிக் சீசனின் போது தான் வருவோம்" என்று கூறினான்  சங்கர க்ருஷ்ணன்.

"அப்பாடா இன்னும் கிட்டத்தட்ட ஒரு வருஷம் இருக்கு. அதக்குள்ள ஒரு வழியாக ம்ருதுளாவுக்கும் எனக்கும் கல்யாணத்தை முடித்தாக வேண்டம் "என்று நினைத்துக் கொண்டான் ரகுநந்தன். ராஜேஸ்வரியை  பார்த்து  மைதிலி " கொஞ்ச இருங்கோ. இவா சாப்ட்டு எழுந்ததும் நான் உங்களுக்கு வெத்தல, பாக்கு கொடுக்கிறேன்" என்றாள். அதற்கு  ராஜேஸ்வரி"  பரவாயில்ல மாமி. நிதானமா வாங்க" என்று கூறினாள். சாரங்கனும்,ரகுநந்தனும்  சாப்பிட்டு முடித்தவுடன் ராஜேஸ்வரிக்கு குங்குமம், வெற்றிலை பாக்கு கொடுத்தாள்   மைதிலி. " அடுத்த விசிட் அடுத்த  டிசம்பர் தான், இல்லையா?"  என்றாள்  ராஜேஸ்வரியிடம் மைதிலி. " சொல்ல முடியல மாமி. அடுத்த வருஷத்துக்குள்ள இவனுக்கு கல்யாணம் பண்ணிடலாம்னு இருக்கேன்.அது விஷயமா இந்தியா வந்து போறதுக்கும் சான்ஸ் இருக்கு" என்றாள் . இப்படி சொல்லும் பொழுது ராஜேஸ்வரி  ம்ருதுளாவை  கவனித்தாள். ம்ருதுளாவின் முகம் லேசாக வாட ஆரம்பித்ததை கண்ட ராஜேஸ்வரி மனம் வருந்தினாள்.பின்னர்  சங்கர க்ருஷ்ணனும், ராஜேஸ்வரியும் விடைபெற்று கொண்டு சுப்புலக்ஷ்மியின்  வீட்டிற்கு செல்ல ஆரம்பித்தார்கள். சாப்பிட்டு முடிந்தவுடன் ரகுநந்தன் மைதிலியிடம்"  சாப்பாடு ரொம்ப சூப்பரா இருந்தது மாமி"என்றான். "பிரமாதமா ஒண்ணும் பண்ணி போடலையே. இன்னிக்கு சாதாரண சமையல் தானே" என்றாள் அவள். ரகுநந்தனோ "சாதாரண சமையலே எப்படி இருந்தா, பிரமாதமான சமையல் எப்படி இருக்குமோ" என்றான் அவன்.எப்பாடு பட்டாவது  அவர்களை இம்ப்ரஸ் செய்தாக வேண்டும் என்ற காட்டாயத்தில் இருந்தான் அவன்.

எல்லோரிடமும் சொல்லிக்கொண்டு அவன் விடைபெற்றான்.

அவன் திருப்பிச் செல்லும் வரை ம்ருதுளா அவள் அறையிலிருந்து வெளியே வரவே இல்லை. அவள்  ரகுநந்தனை பார்க்க வேண்டாம் என்று இருந்ததோடு மட்டுமல்லாமல், சங்கர க்ருஷ்ணனை பிரியப்போவதால் தனக்கு ஏற்பட்ட துயரத்தை தன் கண்கள் மற்றவர்களிடம் காட்டி கொடுத்து விடுமோ என்ற பயந்தாள்.

No comments:

Post a Comment