வசந்த காலம் வருமோ?-68
By N Krishnamurthy
சுப்புலக்ஷ்மி அத்திம்பேர் வீட்டு சாஸ்திரிகளைப்பார்த்து கல்யாணத்திற்கு நாள் குறிக்க கேட்டுக்கொண்டாள்.
பிப்ரவரி இருப்பத்தியேழும்,மார்ச் ஆறாந்தேதியும் குறித்துக்கொடுத்தார் அவர். காமாக்ஷியையும் கலந்து கொண்டு மார்ச் ஆறாந்தேதியில் கல்யாணத்திற்கான நாளாக முடிவு செய்தனர்.
கல்யாண மண்டபம் பிக்ஸ் செய்ய ஆசிரம செக்ரட்ரி புண்ணியம் கட்டிக்கொண்டார். மறைமலை நகரிலிருந்த சங்கீதா கல்யாண மண்டபத்தை 20% டிஸ்கவுண்டுடன் அவர் புக் பண்ணி கொடுத்தார்.
" செலவுக்கு என்ன பண்ண போற" என்றாள் அத்தை சுப்புலக்ஷ்மியிடம்.அதற்கு சுப்புலக்ஷ்மி பதினைந்து வருடம் முன் வாய கட்டி,வயத்த கட்டி, சேலையூரில், இன்ஸ்டாமென்ட்டில் ஒரு க்ரவுண்ட் வாங்கி போட்டிருந்தாகவும், அது இப்போது இருபத்தி ஐந்து லக்ஷத்துக்கு போவதாகவும், அதை விற்க ஏற்பாடு செய்திருப்பதாகவும் கூறினாள்.
நான் கூரப்பொடவைக்கும், திருமாங்கல்யத்துக்கும் பொறுப்பேத்துகிறேன்" என்றாள் அத்தை.
"நேக்கே நெறைய செஞ்சிருக்கேள். இப்போ இது வேற.வேணுமான்னு பாத்துகோங்கோ" எள்றாள் சுப்புலக்ஷ்மி."யாருக்கடி செய்ய போறேன். நம்ப ராதிகாவுக்கு தானே" என்று கூறினாள் அத்தை. சுப்புலக்ஷ்மி அத்தையின் கைககளை பிடித்துக்கொண்டு " உங்க ரெண்டு பேர் ஆதரவு இல்லேன்னா நான் இருந்த எடத்துல என்னிக்கோ எருக்கு மொளச்சிருக்கும்" என்றாள் கலங்கிய கண்களுடன். அதற்கு அத்தை" கல்யாண விஷயத்தை பேசறச்ச தத்துபித்துன்னு பேசாத. கண்ணை தொடச்சுக்கு.
சொந்தகார மனுஷான்னு இருந்துண்டு இது கூட செய்யலேன்னு அப்புறம் மனுஷ பிறவி எடுத்ததுக்கு அர்த்தமே இல்லாம போயிடும்" என்றாள். பின்னர் விடை பெற்றுக்கொண்டு சுப்புலக்ஷ்மி வீடு திரும்பினாள்.
அன்று மதியம் இரண்டு மணி இருக்கும். வாசலில் ஆட்டோ வந்து நின்ற சத்தம் கேட்டு சுப்புலக்ஷ்மி கதவை திறந்து பார்க்க, ஆட்டோவிலிருந்து ராஜேஸ்வரி வெளிப்பட்டாள்.
"வாங்கோ" என்று அவளை சுப்புலக்ஷ்மி வரவேற்றாள்." என்ன மாமி.பொண்ணுக்கு கல்யாணம் வரதாமே" என்றாள் ராஜேஸ்வரி."ஆமாம்.நானே உங்களுக்கு சொல்லணம்னு நெனச்சென்" என்றாள் சுப்புலக்ஷ்மி.
" நல்ல சமாஜாரத்தை யார் வழியா கேட்டாலும் சந்தோஷம்தான்.
மைதிலி மாமி தான் நேத்தைக்கு சொன்னா" என்றாள் ராஜேஸ்வரி.
பிறகு தன் ஹேண்ட் பேக்கிலிருந்து ஒரு செக்கை எடுத்து அதை சுப்புலக்ஷ்மியிடம் கொடுத்தாள்.செக்கை பார்த்த சுப்புலக்ஷ்மி அதிர்ந்து போனாள். பணத்தை குறிக்கும் இடத்தில் இருபத்தி ஐந்தாயிரம் என்று எழுதியிருந்தது.
" என்ன மாமி இது. இவ்வளவு பெரிய தொகயை தரேள்.இதை வாங்கிக்க நேக்கு ஏது அருகத. நான் உங்களுக்கு என்ன செஞ்சிருக்கேன்.பிரதி உபகாரமா என்னதான் செய்ய முடியும் " என்றாள் சுப்புலக்ஷ்மி செக்கை வாங்காமலே.
ராஜேஸ்வரி அவளிடம் " என்ன வேத்து மனிஷயா ஏன் நெனக்கறேள்.உங்க கூட பொறந்த தங்கயா நெனச்சுகோங்கோ. எனக்கு இருக்கறது ஒரு பையன். பொண்ணு பெத்துகணம்னு ஆசபட்டேன். ஆனால் என் ஆச நிறைவேரல. என் பொண்ணுக்கு நான் செய்யற மாரி வெச்சுகோங்கோ" என்றாள். பின்னர் அவள் செக்கை வற்புறுத்தி சுப்புலக்ஷ்மியிடம் கொடுத்தாள்.
"கல்யாணத்துக்கு இருந்து நடத்தி கொடுத்தூட்டு அமெரிக்கா போகலாம் " என்ற சுப்புலக்ஷ்மி
" மார்ச் ஆறாந்தேதி முஹுர்த்தம் வெச்சிருக்கு "என்றாள்.
ராஜேஸ்வரி அவளிடம் " நேக்கு ஒண்ணும் ப்ராபளம் இல்ல.சங்கர க்ருஷ்ணனுக்கும் ஏப்ரல் பதினைஞ்சு வர லீவுதான்.ஆனா நான் எங்காத்துகாரரை கேட்டு பாக்கறேன். அது வர அவர் சமாளிக்க சம்மதிச்சார்னா நேக்கு ஓ.கே" என்றாள். பின்னர் ராஜேஸ்வரி " நான் வந்தது வேறு விஷயத்துகாக. சங்கர க்ருஷ்ணன் தீக்ஷதர் க்ருதிகளை கத்துகணம்னு ஆசைபடறான். அதுக்கு சரியான குருவை தேடிண்டிருக்கேன். உங்களுக்கு தெரிஞ்சவா யாராவது இருந்தா சொல்ல முடியுமா" என்று கேட்டாள். இதற்கு சுப்புலக்ஷ்மி "அடையார்ல ராம க்ருஷ்ணன்னு ஒத்தர்இருக்கார். அவர் தீக்ஷதர் க்ருதில அத்தாரிட்டி. நேக்கு அவர் தூரத்து சொந்தம். வயசு அறுபத்தஞ்ச தாண்டீட்த்து.இப்பெல்லாம் பொதுவா யாருக்கும் சொல்லிதர ஒப்புகறதில்ல.அவர் கிட்ட கேட்டு பாக்கறேன். உங்க பையனுக்கு அதிர்ஷ்டம் இருந்தா உண்டு.ம்ருதுவே அவர் கிட்ட ஆறு மாசம் போயிண்டிருந்தா" என்றாள்.
ராஜேஸ்வரி தயக்கத்துடன் ",இப்போ உங்களுக்கு நெறய வேல இருக்கும். எப்ப முடியறதோ அப்ப சொல்லுங்கோ.நானும் வரேன். அவர பாத்தூட்டு வரலாம் " என்றாள். அதற்கு சுப்புலக்ஷ்மி "ஒண்ணு பண்ணுங்கோ. நாளைக்கு காத்தால ஏழு மணிக்கு உங்க பிள்ளையாண்டையானையும் கூப்டுண்டு இங்க வந்தூடுங்கோ. இங்கேந்து ராமக்ருஷ்ணன் சார் ஆத்துக்கு போலாம் " என்றாள். இதன் பின்னர் கல்யாண ஏற்பாடுகளை பற்றி கேட்டறிந்து விட்டு ராஜேஸ்வரி கிளம்ப ஆயத்தமானாள். கிளம்பும் போது அவள் சுப்புலக்ஷ்மியிடம் "தோ பாருங்கோ.ராதிகா கல்யாணத்துக்கு என்னால மேக்கொண்டு ஏதாவது ஒத்தாச செய்ய முடியும்னு நீங்க நெனச்சேள்னா தயங்காம கேளுங்கோ" என்றாள்.
No comments:
Post a Comment