Tuesday, January 9, 2024

வசந்தகாலம் வருமோ?-67

 வசந்தகாலம் வருமோ?-67

By N Krishnamurthy 

 முன்னுரை:

இன்றைய கதைக்கு போவதற்கு முன் ஒரு சிறு முன்னுரை. 

என் சிந்தனை அலைகள் 101 பதிவுகளை இரண்டு நாட்கள் முன் தொட்டது. அத்துடன் அதை நான்  நிறுத்திக்கொண்டேன்.ஒரு கால கட்டத்தில் என் சிந்தனை அலைகளை இந்த குழுவிலும் பதிவிட்டுக் கொண்டிருந்தேன்.  இது கதைக்கான குழு என்று *சொரணை* வந்ததும், இங்கு அதை பதிவிடுவதை நிறுத்திக்கொண்டேன்.

இதை ஒரு மினி சிந்தனை அலைகளாக வைத்துக்கொள்ளலாம்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை.விடுமுறை நாள். மதிய உணவிற்கு பிறகு நிறைய நேரம் கிடைக்க, விஸ்ராந்தியாக இருந்தேன்.

முன்பெல்லாம் டிசம்பர் சீசனில் சாபாக்களில் பழியாக கிடப்பேன். ஒரே நாளில், நான்கு கச்சேரி நேரில் கேட்குமளவிற்கு கர்னாடகா சங்கீதம் என்னை கட்டிப்போட்டிருந்தது அல்லது ஆட்டிப்படைத்துக்கொண்டிருந்தது. சில வருடங்களாக, சபாக்களுக்கு சென்று, நேரில் சங்கீத கச்சேரிகளை கேட்பது மிகவும் குறைந்துவிட்டது. சில வருடங்கள் ஒரு கச்சேரிக்கு கூட போக இஷ்டம் இல்லாமல் போனது. 

இப்படி ஆனதிற்கு பெரும்பங்கு டெக்னாலஜிக்கு உண்டு.படுக்கை அறையின் சுகத்தில், காசை வீணாக்காமல்,சங்கீதம் கேட்க முடிகிறது.

இன்னொரு காரணம்,எனக்கு குருவான எனது மூத்த சகோதரரை நான் இரண்டு வருடம் முன் இழந்ததுதான். அவர் தான் என் குரு. இப்படி நான் சொல்லும்போது, சங்கீதத்தை நான் நன்றாக பாடுவேன், அதற்கு அவர் குரு என்றெல்லாம் தப்பு கணக்கு போட வேண்டாம். அவர் மகா ரசிகன். என்னை விட அனேகம் மடங்கு. நான் எப்போதாவது,மூட் இருக்கும்போதுதான், சங்கீதத்தை கேட்பேனென்றால் ,அவர் தூங்கும் நேரம் தவிர மீதி நேரங்களில் ரேடியோ மற்றும் டேப்பில் கச்சேரிகளை கேட்டுக்கொண்டே இருப்பார். 

கடவுள் எனக்கு அளித்த பெருங்கொடை நல்ல  சங்கீதத்தை கேட்டு அனுபவித்து கிட்டத்தட்ட ஒரு சமாதி நிலைக்கு பல சமயம் என்னை தள்ளுவதுதான்.பாடகர் வாயை திறந்து ஆலாபனையை ஆரம்பிக்கும்போது, கிட்டத்தட்ட ஐம்பதிற்கு மேற்பட்ட ராகங்களை கண்டுபிடிக்கும் வித்தையை பல வருடங்களில் நான் வளர்த்துக் கொண்டிருக்கிறேன். ( எனது மூத்த சகோதரருக்கு  சுமார் எழுபதிற்கு மேல் ராகங்கள் அத்துபடி)

மற்றபடி எங்கள் இருவருக்கும் குரல் வளம் கிஞ்சித்தும் இல்லை. நான் பாடினால் தெரு நாய் கூட ஓடிவிடும்.எனவே அந்த விஷப்பரிட்சையை நான் செய்வதே இல்லை. இன்னொன்று ராகங்களின் ஆரோஹாணம், அவரோஹணங்களை நான் அறியேன். ஆனால் பல ராகங்களின் ஜீவ ஸ்வருபத்தை நன்றாக அறிவேன்.

தற்சமயம் கச்சேரிகளுக்கு நேரில் செல்லாமால் விடுவதற்கு அடுத்த ஆனால் முக்கிய காரணம்,சபாக்கள் இப்போதெல்லாம் பணம் பண்ணுவதில் குறியாகிவிட்டதே.

உதாரணத்திற்கு, ஒரு நல்ல சபாவில், கடைசி ரோ சீட்டிற்கே ஐந்நூறு ரூபாய் அழ வேண்டும் என்பது பகல் கொள்ளை என்பது என் அவிப்ராயம். இதைத்தவிர சூடான பஜ்ஜி அல்லது கீர வடை மற்றும் காபிக்கு வேறு செலவழிக்க வேண்டும்!

இனி நேற்றைய அனுபவத்திற்கு வருகிறேன்.

யூ ட்யூப்பில் தேடி, M.L.V யின் நளினகாந்தி ராகத்தில் அமைந்த "நீ தய ராதா நீரஜாக்ஷி" என்ற G.N.B சாரின் வர்ணத்தை கேட்டு மெய்மறந்தேன்.

G.N.B சார் சிறந்த வாக்கேயக்காரர் (பாடல்புனைபவர்) என்று எவ்வளவு பேர் அறிவீர்கள். அவர் பல இசை மேதைகளை உருவாக்கியவர். 

M.L.V,  தஞ்சாவூர் கல்யாண ராமன், திருச்சூர் ராமசந்திரன் என்று பட்டியல் நீண்டு கொண்டே போகும்.

M.L.V யை பற்றி நான் ஒன்றும் புதிதாக சொல்ல வேண்டியதில்லை.

திருச்சூர் ராமசந்திரன் பாடும் பாணி மட்டுமில்லாமல், குரலும் கிட்டத்தட்ட G.N.B சாரை போலவே இருக்கும்.

தஞ்சாவூர் கல்யாண ராமன் ஒரு ஜீனியஸ். இவரது கச்சேரியை முன் வரிசையில் அமர்ந்து G.N.B சாரே கேட்பதோடு மட்டுமில்லாமல்,இவரிடம் சில குறிப்பிட்ட பாடல்களை சொல்லி "அவைகளை உன்னிடம் நான் சொல்லிக்கொள்ளணம்" என்பார் என படித்தேன்.

இது கல்யாணராமனின் பாடும்திறனுக்கு எடுத்துக்காட்டா அல்லது G.N.B. என்னும் இசை சாம்ராஜ்ய சக்ரவர்த்தியின் அடக்கத்திற்கு எடுத்துக்காட்டா என புரியவில்லை.

அடுத்து  தேடிப்பார்த்து நான்  கேட்டது ராமசந்திர மூர்த்தி என்ற இளம்பாடகர் செகந்திராபாத்திலுள்ள கலாசாகரம் சபாவிற்கு பாடிய முழு நேர கச்சேரி.

இவர் பாட்டு வேறு லெவல். இவர் ஒரு காலத்தில் NRI என்று அறிகிறேன். இவர் பாடுவதை போன்றே, ஆளும் நேர்த்தியாக இருக்கிறார். இவரை பார்க்கும்போது ,என்னுடைய சங்கர க்ருஷ்ணன்தான் ஞாபகத்திற்கு வந்தார்.

ஆரம்பத்தில் மாயா மாளவ கௌளத்தில் "மேரு சாமானமெவரு" வை பின்னி பெடலெடுத்தார். இவரது கல்யாணி RTP (ராகம்,தானம்,பல்லவி) அட்டகாசம்.சர்க்கரை பந்தலில் தேன் மழை பொழிந்தாற்போல் இருந்தது எனலாம். இந்த சின்ன வயதில் இவ்வளவு ஞானமா?

அடுத்து நான் கேட்டது ராகா (ரஞ்சனி,காயத்ரி) சகோதரிகளின் பாட்டு.

கடவுள் கர்நாடக சங்கீதத்திற்கென்றே இவர்களை உருவாக்கி உள்ளான் போலும். இவர்களது பாடல்களை கேட்டுக்கொண்டே இருக்கலாம். பெண்பாடகிகளில் இவர்களுக்கே எனது முழு மதிப்பெண்.

ஆரம்பத்தில் வயலினை வாசித்துக்கொண்டிருந்தவர்கள்,பின்னர் வாய்ப்பாட்டிற்கு மாறினார்கள்.நேற்று நான் கேட்ட இவர்களது கமாஸ் ராக RTP யை என்னால் மறக்கவே முடியவில்லை. அதில் அவர்கள் பாடிய ராக மாலிகை ராகங்களை கேட்டதும் நான் விண்ணில் பறந்தேன் என்றால் அது மிகையாகாது. அதிலும் காயத்ரி என்னமாய் சொக்கு பொடி போடுகிறார். இவருக்கு ராகத்தின் மேலுள்ள ஆளுமையும், ஸ்வரத்தை அவர் கையாளுவதும் கேட்டால் ஆச்சர்யமாக இருக்கிறது. நல்ல வேளை இந்தமாதம் 13 ஆம் தேதி சென்னையில் இவர்கள் செய்யப்போகும் ஒரு கச்சேரிக்கு ஆன் லைனில் டிக்கட் வாங்கி விட்டேன்.

இனி இன்றைய வசந்த காலம் வருமோ?விற்கு திரும்புவோம்.

----------------------------------------------------------

"என்ன மாமி செய்யப் போறேங்கோ"என்றாள்  மைதிலி .

"பொண் பாக்றதுக்கு வேற என்ன பண்றது.பஜ்ஜி,ரவா கேசரி தான்"  என்றாள் சுப்புலக்ஷ்மி.  வாழைக்காயை பஜ்ஜிக்காக நறுக்க ஆரம்பித்தாள் மைதிலி. ரவையை  பாணலியில் போட்டு லேசாக வறுக்க ஆரம்பித்தாள் சுப்புலக்ஷ்மி. ஒரு பெரிய பில்டரில் பத்து  ஸ்பூன் பொடியை போட்டு கொதிக்கும் நீரை பில்டரில் ஊற்றினாள் ம்ருதுளா. கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்தில் டிபன், டிகாகக்ஷன்  ரெடியானது. "அவா டிபன் எடுத்துண்டதும் பாலை சூடு பண்ணிக்கலாம் " என்றாள் மைதிலி. இதற்குள் வாசலில் ஒரு ஆட்டோ வந்து நின்றது. அதிலிருந்து சுப்புலக்ஷ்மியின் அத்தையும், அத்திம்பேரும் இறங்கினார்கள். அவர்கள் இருவருக்கும் மைதிலியையும், ம்ருதளாவையும் அறிமுகப்படுத்தினாள்

சுப்புலக்ஷ்மி.சுப்புலக்ஷ்மியின் அத்தை " ஏண்டி சுப்பு இதான் நீ சொன்னியே, உங்கிட்ட பாட்டு காத்துண்டு,இப்போ பெரிய பாடகிகளுக்கு சமானமா பாடறதூன்னு, அந்த பொண்ணா "என்று கேட்டாள்.

"ஆமா அத்தை" என்றாள் சுப்புலக்ஷ்மி. ம்ருதுளாவை பார்த்த சுப்புலக்ஷ்மியின்  அத்தை " இவ்ளோ சின்ன வயசுல ரொம்ப நண்ணா பாடறேன்னு உனக்கு எல்லாரும் சர்டிபிகேட் கொடுக்கறாளாமே.

எல்லாம் கடவுளுடைய அனுகிரகம். பூர்வ  ஜென்ம வாசனையும் சேந்திருக்கு" என்றாள்.

இதற்குள் ம்ருதுளா ராதிகா டிரஸ் செய்வதற்கு உறுதுணையாக  இருக்க தலைப்பட்டாள்.

சரியாக 3:55 க்கு வாசலில் ஒரு ஆட்டோ வந்து நின்றது. ஆட்டோவில் இருந்து 55  வயது தக்க,நெற்றியில் ஓரு கீற்று விபூதீயை  அணிந்த  மாமியும், இருபத்தி ஐந்து மதிக்கத்தக்க மாநிறமான  ஆனால் களையான முகமுடைய வாலிபனும் இறங்கினார்கள். இருவரும் உள்ளே நுழைந்தார்கள்.  சுப்புலக்ஷ்மி, மைதிலி ஆகியோர் அவர்களைப் பார்த்து "வாங்கோ வாங்கோ" என்று வரவேற்றார்கள்.அந்த மாது  சுப்புலக்ஷ்மியிடம் ஒரு தாம்பாளத்தை வாங்கி அதில் தான் கொண்டு வந்திருந்த பழம்,வெற்றிலை, பாக்கு,ஸ்வீட் ஆகியவைகளை அடுக்கி வைத்தாள். அவர் இருவரும் ஹாலில் இருந்த சோபாவில் அமர்ந்து கொண்டார்கள். சுப்புலக்ஷ்மி அவர்களுக்கு முதலில் அத்தையையும், அத்திம்பேரையும் அறிமுகப்படுத்தினாள். கண்ணனும், அவன் அம்மா காமாக்ஷியும்  பெரியவர்களுக்கு கை கூப்பி நமஸ்கரித்தார்கள்.

இதன் பின் சுப்புலக்ஷ்மி அவர்களுக்கு  மைதிலியை அறிமுகப்படுத்தினாள்.

 "டிபன் எடுத்துக்கலாமே" என்றாள் சுப்புலக்ஷ்மி.

"முதல்ல பொண்ண பாத்துடலாமே" என்றாள் காமாக்ஷி. ம்ருதுளா  ராதிகாவை அழைத்து வந்தாள்.அவள் கண்ணனுக்கும்,காமாக்ஷிக்கும்நமஸ்காரம் செய்தாள்.  " ஒக்காந்துகோம்மா" என்ற காமாக்ஷி பழத்தட்டை அவளிடம் கொடுத்தாள். ராதிகாவை நோக்கி " நீதான் அனாதை ஆசிரமத்தில் எல்லாருக்கும் பாட்டு சொல்லிக் கொடுக்கறயாமே. கேள்விப்பட்டேன்.உன்ன பாட்டு பாடு ன்னு சொல்லறதல  அர்த்தம் இல்லைன்னு நேனைக்கிறேன்" என்றாள் காமாக்ஷி.  பின்பு அவள்  கண்ணனை பார்த்தாள். அவன் அம்மாவிடம்  " நான் கொஞ்சம் ராதிகா கிட்ட  பேசணம் " என்றான்.   சுப்புலக்ஷ்மியின் அத்தை காமாக்ஷியிடம் " உள்ள போய் ரெண்டு பேரும் பேசீட்டு வரட்டுமே" என்றாள். ராதிகா எழுந்து உள்ளே செல்ல, கண்ணன் அவளை  தொடர்ந்தான்.

அறைக்குள்ளே போனதும்  கண்ணன் அவளிடம் " நான் உன்ன பலமுறை ஆசிரமத்தில் பாத்திருக்கேன். நீ பசங்களுக்கு பொறுமையா  பாட்டு சொல்லி  கொடுக்கும் போது இந்த சின்ன வயசுல நீ இவ்வளவு சமூக சேவை செய்றேன்னு  சந்தோஷப்பட்டு இருக்கேன். உன்னை எனக்கு  பிடிச்சிருக்கு உன்னை கல்யாணம் பண்ணிக்கிறதல  எனக்கு ஒன்னும் பிராப்ளம் இல்ல. ஆனா ஒரு பாயிண்ட்டை நான்  தெளிவா சொல்லணும்னு ஆசைப்படறேன். உங்கம்மா மாறி, எங்க அம்மாவும் வாழ்க்கைல நெறைய தியாகம் பண்ணி என்னை  இந்த லெவலுக்கு கொண்டு வந்து இருக்கா.  அம்மான்னா நேக்கு உயிர் . அதுக்காக கல்யாணம் ஆன உடனே உன்னை விட்டு கொடுத்துட்டு அம்மா சொல்ற  பேச்சயே கேட்டுண்டிருக்கவும் மாட்டேன் .அம்மாக்கு வேண்டிய முக்கியத்துவம் கொடுப்பேன். உன் கிட்ட நான்  கேட்டுக்கறதெல்லாம்   நீ எங்க அம்மாவை  உன் அம்மா மாதிரி நெனச்சுகணம்.நானும் உங்க அம்மாவை எங்க அம்மா மாதிரியே நெனைச்சு நடத்துவேன். உனக்கு சரின்னு பட்டா உங்க அம்மா நம்ப கூட வந்து இருந்துக்கலாம். என்ன சொல்றே" என்றான். ராதிகா சிரித்துக் கொண்டு 

 " நான் என்ன சொல்லணும் நினைச்சேனோ அது அவ்வளவையும் நீங்களே முழுசா சொல்லிட்டேள். இனிமே நான் சொல்றதுக்கு என்ன இருக்கு" என்று கூறினாள். 

" அதெல்லாம் இருக்கட்டும்.என்ன உனக்கு பிடிச்சு இருக்கா"  என்றான்  கண்ணன். 

" பிடிச்சிருக்குன்னு ஒத்த  வார்த்தல சொல்ல நேக்கு இஷ்டம் இல்லை,ஏன்னா  எனக்கு உங்கள ரொம்ப பிடிச்சிருக்குன்னு சொல்ல வந்தேன்" என்று சொல்லி சிரித்தாள். கண்ணன் முகத்தில் பிரகாசம் தெரிந்தது. இருவரும் வெளியே வந்தனர். இருவரும் சிரித்தபடியே வரும் பொழுது பெரியவர்களுக்கு ஓரளவுக்கு நடந்திருப்பது புரிந்தது.

இப்பொழுது சுப்புலக்ஷ்மியின்  அத்திம்பேர்  காமாக்ஷியை பார்த்து  " "அப்போ முகூர்த்தத்துக்கு நாள் வைக்கலாம்னு நெனைக்கிறேன்"என்றார்.

"ஆமாம்"  என்றாள்  அவள்.

 "  சீர் செனத்தி  எல்லாம் பத்தி பேசலாமா" என்றாள் அத்தை . காமாக்ஷி " எங்களுக்கு சொந்த அப்பார்ட்மெண்ட் இருக்கு. நாலு பேருக்கு  சமைச்சுக்கற மாதிரி பாத்திரங்கள் எல்லாம் இருக்கு. இவனுக்கும் ஒரு அளவுக்கு கை நெறைய சம்பளம் வரது. அதனால எங்களுக்கு ஒண்ணும் சீர் செனத்தி தேவையில்லை. கட்டின  பொடவையோடு ராதிகா எங்காத்துக்கு வந்தாலே எங்களுக்கு சந்தோஷம் தான்" என்றாள். இதைக் கேட்டு மனம் நெகிழ்ந்தாள்  சுப்புலக்ஷ்மி .அப்போது சுப்புலக்ஷ்மியின்  அத்தை "  ஒண்ணும் செய்யாத எங்களால எங்க பொண்ண  அனுப்ப முடியாது. பையனுக்கு டிரஸ் வாங்கி கொடுத்து, கையில 2000 ரூபாய் கொடுத்துடறோம். ராதிகாவுக்கு ஏற்கனவே மூணு பவுன்ல ஒரு செயின் போட்டுண்டு இருக்கா. இது தவிர  அஞ்சு பவுன்ல ரெட்டை வட செயின் போட்டுடறோம். உங்காளாள முடிஞ்சா கூர பொடவையை வாங்கி,ஒரு மாங்கல்யத்தையும் நீங்க செய்யுங்கோ.

கல்யாணத்தை டீசண்டா பண்ணிடறோம் என்ன சொல்றேள்" என்றாள்.  காமக்ஷி "  இதெல்லாம் வேண்டாம்னு நான் அப்பவே சொல்லிட்டேன். இருந்தாலும் உங்க திருப்திக்கு நீங்க செய்யறதா இருந்தா செஞ்சுக்கோங்க .

ஆனா ஒரே ஒரு விஷயத்தை நான் கண்டிப்பா சொல்ல வேண்டி இருக்கு" என்றாள். இது என்னவாக இருக்குமோ என சுப்புலக்ஷ்மி பயந்தாள் .பின்னர் பேசிய காமாக்ஷி  " கல்யாணத்துக்கு ஆற சாப்பாடு செலவ  நம்ம ரெண்டு பேரும் சரிபாதியா பிரிச்சுக்கணும்" என்றாள். சுப்புலட்சுமி " இப்படி ஓத்தர் , ரெண்டு பேர் இருக்கறதனால தான் நாட்டுல மழை பெய்யறது  என நினைத்துக்கொண்டாள். பின்பு காமாக்ஷி "  யாராவது ஜோசியர் இருந்தா, நல்ல தேதியா பாத்து குறிச்சிண்டு  சொல்லுங்கோ. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் முகூர்த்தத்த  வெச்சிகலாம்.மாசி,பங்குனில முடிஞ்சா நண்ணா இருக்கும்" என்றாள். பின்பு எல்லோருக்கும் டிபனும்,காப்பியும் ம்ருதுளாவும்,ராதிகாவும்  கொண்டு வந்து கொடுத்தார்கள். டிபன்  முடித்து, காபி சாப்பிட்டு விட்டு கண்ணனும், காமாக்ஷியும்  கிளம்பும்போது மணி 5:45 ஆகியிருந்தது . அப்ப நாங்களும் கிளம்பறோம் என்றாள்  சுப்புலக்ஷ்மியின் அத்தை .சுப்புலக்ஷ்மி ",ரொம்ப இருட்டூடித்தே. நீங்க ரெண்டு பேரும் இருந்துட்டு நாளைக்கு காலைல போலாமே" என்றாள். "  இல்லம்மா ஒரு ஆட்டோ புடிச்சு எங்களை ஏத்தி விட்டுடு" என்றாள் அத்தை. சுப்புலஷ்மி அத்தைக்கு குங்குமம் கொடுத்தாள். ராதிகா,

சுப்பு லக்ஷ்மி, ம்ருதுளா,மைதிலி ஆகியோர்  அத்தையையும், அத்திம்பேரையும் நமஸ்கரித்தார்கள். ராதிகா வெளியில் போய் அவர்கள் செல்வதற்கு ஒரு ஆட்டோ பிடித்துக் கொண்டு வந்தாள். அடுத்த சில  நிமிஷங்களில் அவர்கள் கிளம்பினார்கள். மைதிலி சுப்புலக்ஷ்மியிடம்  " அப்ப நாங்களும்  கெளம்பறோம் மாமி" என்றாள். அவர்களுக்கு வெற்றிலைபாக்கு மஞ்சள் வைத்து கொடுத்த பின்  சுப்புலக்ஷ்மி மைதிலியிடம் இரண்டு எவர்சில்வர் சம்படங்களை கொடுத்தாள். 

"இது எதுக்கு மாமி" என்றாள்  மைதிலி. " பெரிசா ஒண்ணும் இல்ல. ஒரு சம்படத்ல ரவா கேசரி, இன்னொரு சம்படத்தல கொஞ்சம் பஜ்ஜியும் போட்டு கொடுத்து இருக்கேன்.உங்காத்து மாமாவுக்கும், மாமனார்,மாமியாருக்கும் கொடுங்கோ " என்ற சுப்புலக்ஷ்மி மைதிலியின் கைகளை பிடித்துக் கொண்டு "  நீங்க வந்து ஒத்தாசையா இருந்தது ரொம்ப சந்தோஷம்" என்றாள்.

" இத்தோட எங்களை கூப்பிடறத  நிறுத்திடாதீங்க மாமி. கல்யாணத்துக்கும் எவ்வளவு முடியுமோ அவ்வளவு ஹெல்ப் பண்றோம்" என்றாள் மைதிலி . " நீங்க இல்லாம கல்யாணமா"  என்றாள்  சுப்புலக்ஷ்மி. பின்பு மைதிலியும், ம்ருதுளாவும்  வீட்டிற்கு கிளம்பினார்கள்.

No comments:

Post a Comment