Friday, January 19, 2024

முற்பகல் செயின்..10

 முற்பகல் செயின்..10

By N Krishnamurthy 

அந்த வாரம் போன் செய்தபோது நித்யா வந்து சேர்ந்ததை திரு சொன்னான்.

இப்போதெல்லாம்  திருவிற்கு தொடர்ந்து அப்பா,அம்மாவுடன் பேசுவதற்கு நேரமே கிடைப்பதில்லை. 

சில மாதங்கள் போனதும் ஒரு சனிக்கிழமை திரு நமச்சிவாயத்திற்கு போன் செய்து "அப்பா.அம்மா கிட்ட போன கொடுங்க"என்றான். கோமதி போனை எடுத்தவுடன் திரு

 " அம்மா.நீ பாட்டியாகப்போற"

என்றான். இந்த செய்தியை கேட்ட கோமதி சந்தோஷத்தில் திக்குமுக்காடிப்போனாள்."அவள நல்லா பாத்துகோடா.அதிகம் வேல செய்யவிடாதே. இந்த சமயத்ல நான் மட்டும் அவ கூட இருந்தா எவ்வளவு நல்லா இருக்கும்"என்றாள். போனை நமச்சிவாயத்திடம் கொடுக்கு முன் கோமதி நித்யாவிடம் பேசினாள்.

"சேதியை கேக்கவே சந்தோஷமா இருக்கம்மா. டாக்டரை போய் பாத்தயா.அவுக கொடுக்கற மருந்து மாத்ரைகள விடாமா சாப்பிடு.பிடிக்குதோ, பிடிக்கலையோ வேளா வேளைக்கு சாப்பிடு."என்றாள்.

"சரிங்க அத்தை "என்றாள் நித்யா.போனை கோமதியிடமிருந்து வாங்கிய நமச்சிவாயம் " திரு.சந்தோஷமா இருக்கப்பா.நித்யாவை நல்ல கவனிச்சுக்கோ"என்றார்.

நித்யாவிற்கு ஏழாவது மாதம் நடந்து கொண்டிருந்தபோது, அவளுக்கு உதவ,காந்திமதி அமெரிக்கா போனாள்.

நித்யாவிற்கு எந்த நிமிடமும் பிரசவமாகலாம் என்றிருக்கும் போது,கோமதி மைலாப்பூர் சென்று கற்பகாம்பிகையை வழிபட்டு, நித்யா நல்லபடியாக  பெற்று பிழைக்க வேண்டுமென வேண்டிக்கொண்டாள்.

மறு நாள் மாலை ஆறு மணிக்கு திரு போன் செய்து ஆண் குழந்தை பிறந்திருப்பதாக வும், தாயும் ,சேயும் நலமெனவும் கூறினான்.

பிரசவம் ஆன நான்கு மாதம் கழித்து காந்திமதி இந்தியா வந்தாள். ஒருநாள் நமச்சிவாயத்தின் வீட்டிற்கு வந்து திரு கொடுத்தனுப்பிய துணிமணிகளையும்,

சில பொருட்களையும் தந்தாள். குழந்தை ஆதித்யா நமச்சிவாயம் ஜாடையாக இருப்பதாக கூறி,நன்றாக முகம் பார்த்து சிரிக்கிறான் என்றும் சொன்னாள். குழந்தையின் போட்டோக்களை காட்டினாள்.

மூன்று  வருடம் போனதும், திருவும் நித்யாவும் மூன்று வார விடுமுறையில் இந்தியா வந்தார்கள். முதல் வாரம் நமச்சிவாயம், கோமதியுடன் கழித்தார்கள். வந்த அடுத்த நாளே குழந்தை ஆதித்யா தாத்தாவிடம் ஒட்டிக்கொண்டான்.

தினமும் தாத்தா சொல்லும் கதையை கேட்ட பின்தான் தூங்கப் போவான். இருபத்தி இரண்டு வருடம் முந்தைய திருவின் நடவடிக்கைகளை முற்றிலுமாக ஞாபகப்படுத்தினான் ஆதித்யா. நமச்சிவாயத்திற்கு இது ஆச்சர்யமாக இருந்தது. "தாத்தாவை அப்படியே கொண்டு வந்திருக்கான் பேரன்" என்று பெரியவர்கள் சொல்லும்போது ஜாடையிலும் மட்டுமில்லாமல், குணாதியத்திலும் ஒற்றுமை இருப்பதை இப்போது கண் கூடாக பார்த்தார். உதாரணத்திற்கு அவர் மல்லாக்க படுத்து ,ஒரு கால் மேல் இன்னொரு கால் போட்டு தூங்குவது மாதிரியே ஆதித்யாவும் தூங்கினான்.

இருந்த ஒரு வாரம் முழுவதும் தாத்தா,தாத்தா என்று  தாத்தா புராணம் தான்.

"தாத்தா பேர் என்னடா" என்று கோமதி கேட்டால் "நம்சி" தாத்தா என்பான் தன் மழலை குரலில். அந்த வாரம்முடிவில் காசிநாதன் பெண்ணையும், மாப்பிள்ளையையும் அழைத்து செல்ல கார் அனுப்பியிருந்தார். ஆதித்யா தாத்தாவின் தோளை விட்டு இறங்க மறுத்து அடம்பிடித்தான். திரு குழந்தையை வலுக்கட்டாயமாக அவரிடமிருந்து தூக்கினான். ஆதித்யா பயங்கரமாக அழ ஆரம்பிக்க, அவனை அடிக்க நித்யா கையை ஓங்கினாள்.

"வேண்டாம்மா.அவன அடிக்காத. குழந்தைக்கு என்ன தெரியும்" என்று கூறி ஆதித்யாவை திரும்ப தூக்கிக்கொண்டு ",தோ பார்டா குட்டி. நீ இப்போ அப்பா ,அம்மா கூட போவயாம். தாத்தா பின்னாலே இன்னொரு கார்ல வருவாங்களாம் " என்று சமாதானப்படுத்தி அவனை திரும்பவும் திருவிடம் கொடுத்தார்.

No comments:

Post a Comment