Tuesday, January 23, 2024

முற்பகல் செயின்..15

 முற்பகல் செயின்..15

By N Krishnamurthy 

அப்பு சென்றவுடன் ஆதித்யா நமச்சிவாயத்திடம் "என்ன தாத்தா.இவன் அப்பா, அம்மாவிற்கு என்ன ஆச்சு "என்று கேட்டான். அவர் அதற்கு "அது ஒரு பெரிய சோக கதை"என்றவர் "அப்புவின் அப்பா கணேசலிங்கமும், அம்மா பொற்கொடியும் மூணாவது தெருவுல இருந்தாங்க. அவுங்க பக்கத்து வீட்லதான் தன்னுடைய தாத்தா, பாட்டீன்னு அப்பு நம்பற ஈஸ்வரி ஆச்சியும், அவுங்க புருஷன் ராமலிங்கமும் இருந்தாங்க. அப்புவின் அப்பா,அம்மா ரெண்டு பேரும் ஒரு நாள் மதுராந்தகத்ல நடக்கற அண்ணன் பையன் கல்யாணத்துக்கு ஒரு டாக்சி ஏற்பாடு பண்ணி போனாங்க. அப்புவுக்கு கொஞ்சம் ஜுரமா யிருந்ததால அவன ஈஸ்வரி ஆச்சிகிட்ட விட்டூட்டு போனாங்க. அப்பு மட்டும் பொழைக்கணம்னு எழுதி வெச்சிருக்கான் அந்த கடவுள்.

செங்கல்பட்டை தாண்டி போகயில, அவங்க பயணிச்ச கார் மேல மணல் லாரி மோதியது. அந்த இடத்திலேயே  கணேசலிங்கமும், பொற்கொடியும் இறந்துபோய்ட்டாங்க. ட்ரைவர் பலத்த காயத்துடன் தெய்வதீனமா உயிர் தப்பினார். அப்புவை அவன் பெரியப்பா வளர்க்க வேண்டியதாயிடுச்சு.

இன்சூரன்ஸ் பணம் எட்டு லக்ஷம் அவருக்கு கெடச்சுது. அப்புவின் பெரியம்மாவுக்கு அப்புவ வளக்கறதுக்கு துளிக்கூட இஷ்டமில்லை. ஈஸ்வரி ஆச்சிக்கும், ராமலிங்கத்துக்கும் குழந்தை இல்லை .ஒரு நாள் அப்புவின் பெரியப்பா ராமலிங்கத்திடம் விஷயத்தை சொல்லி, அவனை வளர்ப்பதில் தனக்கு விருப்பமிருந்தாலும், அவ்வாறு செய்ய முடியாத சூழ் நிலையில் இருப்பதை விளக்கி,இரண்டு லக்ஷம் ருபாயை அவனை வளர்க்க தருவதாக கூறினார்.

ராமலிங்கம் தம்பதிகள் மூன்றே மூன்று கோரிக்கைகளை அவர் ஏற்றால் அப்புவை தாங்கள் ஏற்று வளர்ப்பதாக கூறினார்கள்.

முதலாவது சட்டப்பூர்வமாக கோர்ட் அனுமதியுடன் தாங்கள் வளர்க்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

இரண்டாவது, அவனை  வளர்க்க ஒரு பைசாகூட தரக்கூடாது.

மூன்றாவது அப்புவுக்கு பதினெட்டு வயது வரும்வரை அவனுக்கு தாங்கள் சொந்த தாத்தா,பாட்டி இல்லை என்ற உண்மையை சொல்லக்கூடாது. அது வரையில் அவர்கள் வேண்டுமானால் அப்புவை பார்க்க வரலாம்.ஆனால் ராமலிங்கமோ, ஈஸ்வரியோ, யாராவது ஒருவர் முன்னிலையில்தான் குழந்தையை பார்த்து பேசலாம்.

இந்த கண்டிஷன்களை கேட்ட ஆதித்யாவின் பெரியம்மா, கையை விட்டு காசு தர வேண்டாம் என்பதை கேட்டு பெருமகிழ்ச்சி அடைந்தாள்.அவர்கள் கேட்டுக்கொண்ட படியே அப்பு கை மாறினான். இன்று வரை அப்பு அவர்களை சொந்த தாத்தா, பாட்டி என்றே நினைத்துக்கொண்டிருக்கிறான்" என்று நமச்சிவாயம் முடித்தார். அக்கதையை கேட்ட ஆதித்யா "பாவம் அந்த பையன் "என்று பெரு மூச்சு விட்டான்.

No comments:

Post a Comment