முற்பகல் செயின்.. 21
By N Krishnamurthy
இருவரும் ஹாலில் போட்டிருந்த சோபாவில் அமர்ந்தார்கள். ஆவுடையப்பன் அவரிடம்" எனக்கு சொந்த ஊர் தென்காசி. எங்க அப்பா சிவசுப்பிரமணிய பிள்ளை,அங்கே பெரிய மிராசுதாராக இருந்தார். நான் அவருக்கு இரண்டாவது மகன். இங்கதான், தண்டையார்பேட்டையில் பெரிய டெக்ஸ்டைல்ஸ் கடை வச்சிருக்கேன். ஆவடை டெக்ஸ்டைல்ஸ்ன்ற பேர நீங்க கேள்விப்பட்டு இருப்பீங்க. எனக்கு ரெண்டு பொண்ணுங்க. மூத்த பொண்ணு கமலத்திற்கு கல்யாணம் ஆயிட்டது. இரண்டாவது பெண் உலகம்மை. இந்த பேரு பழசா இருக்கறதால உமான்னு கூப்ட்டே பழகிட்டோம். இப்போ உமாவுக்கு பையன் பாத்துகிட்டு இருக்கோம். யாரோ எங்க கிட்ட உங்கள பத்தி சொல்லி, உங்களுக்கு கல்யாண வயசுல ஒரு பேரன் இருக்கறதா சொன்னாங்க. அது விஷயமாக பாத்துட்டு போலாம்னு வந்தோம்" என்றார். இதற்குள் மீனாட்சி கோமதியிடம்" எம் பொண்ணு எம்.பி.ஏ முடிச்சிருக்கா. நல்ல பாடுவோ. சீர் செனத்தை பத்தி எல்லாம் நீங்கள் கவலைப்பட வேண்டாம். உங்களுக்கு வேண்டிய அளவுக்கு செய்வோம்" என்று கூறினாள். நமச்சிவாயத்தையும், கோமதியையும் இருவரும் பேசவே விடவில்லை.
பின்பு பேசிய ஆவுடையப்பன்" எனக்கு ஆம்பள பசங்க கிடையாது.பெரிய மாப்பிள்ளை பெங்களூர்ல செட்டில் ஆயிட்டார்.எனக்கு வர ரெண்டாவது மாப்பிள்ளை எனக்கு அப்புறம் என் கடையை பாத்துகிட்டு இருந்தாலே போதும்.ஏழு தலமுறைக்கு ஒக்காந்து சாப்பிடுற அளவுக்கு பணத்த சேத்து வச்சிருக்கேன்" என்றார்.
நமச்சிவாயத்திற்கு ஆவுடையப்பன் மீண்டும் காசிநாதனை நினைவூட்டினார். நமச்சிவாயம் " நீங்க உங்க பொண்ணு ஜாதகத்த கொடுத்துட்டு போங்க. என் பேரன் ஆபீஸ்ல இருந்து வந்ததும் அவன் கிட்ட இது விஷயமா பேசறேன். அப்புறம் அவனுடைய ஜாதகத்தையும் உங்க பொண்ணு ஜாதகத்தை பொருத்தி பார்த்துட்டு உங்களுக்கு விவரம் தெரிவிக்கிறேன்" என்றார். பின்பு மீனாட்சி கோமதியிடம் ஒரு பெரிய தட்டை வாங்கி அதில் தாங்கள் கொண்டு வந்த பல விதமான பழங்களையும், ஸ்வீட்டையும் வைத்து கொடுத்தாள். கிளம்பும் போதுஆவுடையப்பன் " சீக்கிரம் ஒரு நல்ல முடிவா தெரிவிப்பீங்கன்னு நெனைக்கிறேன்" என்று கூறி விட்டு சென்றார்.
மாலை ஆதித்யா ஆபிஸில் இருந்து வந்தவுடன் முதல் வேலையாக நமச்சிவாயம் ஆவடையப்பன் வந்து போனது பற்றி கூறினார்."நீ என்னப்பா சொல்ற" என்றார் நமச்சிவாயம்." என்ன, என்ன தாத்தா சொல்ல சொல்றீங்க" என்ற ஆதித்யா, பின் " அப்பா பண்ண தப்ப பையனும் பண்ணட்டும் என்கிறீர்களா" என்றான். நமச்சிவாயம் இதைக் கேட்டு உள்ளம் குளிர்ந்து போனார். "இல்லப்பா. அவங்க வந்துட்டு போனாங்க. அத சொல்ல வேண்டியது என் கடமை. அதான் சொன்னேன்" என்றார் . "தாத்தா இதற்கு சரியான பதில இன்னும் ஒரு வாரத்துக்குள் உங்களுக்கு சொல்றேன்" என்றான். ஆதித்யா. இன்னும் ஒரு வாரத்துல என்ன பதில் சொல்ல போகிறான் என்று இருவருக்கும் புரியவில்லை. ஆனால் ஒரு நாள் அந்த பதில் ஒரு பெண் உருவில் இருக்கும் என அவர்கள் எதிர்பார்க்கவில்லை.
No comments:
Post a Comment