Monday, January 15, 2024

வசந்தகாலம் வருமோ?-73

 வசந்தகாலம் வருமோ?-73

By N Krishnamurthy 

அடுத்த சில நாட்கள் சுப்புலக்ஷ்மி மிகவும் பிசியாக இருக்க வேண்டி இருந்தது. துணிமணிகள்,

திருமாங்கல்யம், நகைகள் வாங்க மூன்று முறை தி.நகர் போகவேண்டி இருந்தது. ஒவ்வொரு முறையும் மைதிலி, ம்ருதுளா மற்றும் ராஜேஸ்வரி இவர்களில் யாராவது ஒருவர் அவளுடன் சென்று வந்தார்கள். 

சங்கர க்ருஷ்ணன், ராமகிருஷ்ணனிடம் ரெகுலராக  கற்றுக்கொள்ள ஆரம்பித்தான். ராமகிருஷ்ணன், அவனது பாடல்களை உள் வாங்கும் திறனை குறித்து மிகவும்  சந்தோஷமடைந்தார்.

ம்ருதுளா, சுப்புலக்ஷ்மியை பார்க்க அவள் வீட்டிற்கு வரும் போதெல்லாம், சங்கர க்ருஷ்ணன் Flatக்கும்போய் ராஜேஸ்வரியை பார்க்கும் சாக்கில், அவனையும் பார்க்கத்தொடங்கினாள். இருவரும் தங்கள் அன்பை, நேரடியாக, வெளிப்படையாக கூறத் தயங்கினாலும்,சமயம் கிடைக்கும் போதெல்லாம் அதனை குறிப்பால் உணர்த்த தவறியதில்லை.

ஒருதரம் அவள் அவனிடம் " அமெரிக்காவ்ல கேர்ல்ஸ்ஸெல்லாம் ப்ரீயா பழகுவாளாமே.அப்படியா" என்று கேட்க, அவன் "ஆமாம்.நேக்கே பல கேர்ல்ஸ் ப்ரண்டு இருக்கா.அதல ஒத்தி என்னை கல்யாணம் பண்ணிக்க சொல்லி வற்புறுத்தரா " என்று வேண்டுமென்றே அவளை சீண்டிப்பார்த்தான்.

ம்ருதுளாவிற்கு கண்களில் நீர் எட்டிப்பார்த்தது. அங்கிருந்து கிடு கிடுவென கிளம்பினாள். அவன் பல முறை கூப்பிட்டும் அதை சட்டை செய்யாமல் அங்கிருந்து ஒட்டம் பிடித்தாள்.பின்பு பல  நாட்கள் அவனுடன் பேசுவதில்லை.

சென்னைக்கு ஏதோ வேலையாக வந்த ஸ்ரீ வத்சன் அவனுடன் வசுமதியையும் அழைத்து  வந்திருந்தான். இருவரும் சாரங்கன் வீட்டிலேயே தங்கினார்கள்.

இரண்டாம்  நாள் ஆபீஸ் வேலையாக அவன் வெளியே சென்றிருந்தான். ம்ருதுளாவும் வசுமதியும்  தனியாக இருக்கும்போது, வசுவதி ம்ருதுளாவைப் பார்த்து "என்ன லேட்டஸ்ட் நியூஸ்" என்று கேட்டாள். ம்ருதுளா  இதற்கு வெகு நேரம் பதில் கூறவில்லை. ஏதோ நடந்திருக்கிறது என்று உணர்ந்த வசுமதி ம்ருதுளாவின்  முகத்தை கைகளால் உயர்த்தி " என்ன ஆச்சு? உங்களுக்குள்ள ஏதாவது சண்டையா" என்று கேட்டாள். இதைக் கேட்டதும்  உடைந்து போனாள் ம்ருதுளா.  நடந்து விவரத்தை நாத்தழுத்தழக்க கூறினாள். அவள் கூறி முடித்ததும் வசுமதி விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்தாள். 

" என்ன அக்கா, என் கஷ்டத்தை கேட்டூட்டு நீ பாட்டுக்கு சிரிக்கற " என்றாள். "ம்ருது,தோ பார். நீ இவ்ளவு அப்பாவியா ஏன் இருக்கயோ? சங்கர க்ருஷ்ணன் அப்படிப்பட்ட பையன் இல்லை. அவன் இதை சொல்லும் போது இதனால் நீ எப்படி அஃபெக்ட் ஆகறேன்னு பாக்கறதுக்கு சொல்லி இருக்கான்" என்று கூறினாள்.

" இல்லவே இல்லை.

 நீ ஏதோ எனக்கு  சல்ஜாப் சொல்ற. அவர் அப்படி சொன்னது  உண்மை தான்னு என் மனசுக்கு படற்து " என்று சொன்னாள்.

அன்று பிற்பகல்  வசுமதி,  ம்ருதுளாவை அழைத்துக் கொண்டு ராஜேஸ்வரியின்  Flatக்கு சென்றாள். அப்போதுதான் ராஜேஸ்வரி,சுப்பு லக்ஷ்மியுடன் வெளியில் போவதற்கு தயார் பண்ணிக் கொண்டிருந்தாள்.

"என்னம்மா புதுப்பொண்ணே.எப்படி இருக்க.ஏதாச்சும் விசேஷம் உண்டா" என 

ராஜேஸ்வரி வசுமதியை கேட்டாள்."நான் சந்தோஷமா இருக்கேன் மாமி.விசேஷம் இருந்தா  மூடி மறைக்க முடியுமா"என்றாள் சிரித்துக்கொண்டே.

"நோக்கு பேச கத்து கொடுக்கணமா என்ன "என்ற ராஜேஸ்வரி இருவரையும் பார்த்து"சுப்புலக்ஷ்மி மாமி வெய்ட் பண்ணிண்டிருப்பா.

நான் கெளம்பறேன்" என்று சொல்லிவிட்டு வெளியேறினாள்.

ராஜேஸ்வரி வெளியே போனவுடன் வசுமதி, சங்கர க்ருஷ்ணனிடம், ம்ருதுளாவின் மன வருத்தத்தை கூறினாள். " நான் சும்மா கிண்டலுக்காக அப்படி சொன்னேன். அவ அதை சீரியஸ்ஸாக எடுத்தூண்டூட்டா போல இருக்கு. நான் அதுபோல டைப் இல்லைன்னு அவ புரிஞ்சிண்டிருக்க வேணாமா? "என்றான். 

" ம்ருதுளா  அவளோட விருப்பத்தை உங்ககிட்ட ஓபனா சொல்ல முடியல. இது தெரியாத மாதிரி நீங்க நடிக்கிறீங்க. ம்ருதுளா பேர்ல மட்டும் ம்ருது இல்ல.அவளுக்கு பூஞ்ச மனசு. இது தெரிலயா உங்களுக்கு" என்று கூறினாள் .பின்பு சங்கர க்ருஷ்ணன் ம்ருதுளாவிடம் சாரி  கேட்டான்.  ம்ருதுள ஓரளவுக்கு சமாதானம் அடைந்தாள்.

பின்பு வீட்டிற்கு திரும்பும் வழியில், ம்ருதுளா வசுமதியிடம் "நேக்கு என்னமோ பயமா இருக்கு அக்கா" என்றாள். உடனே வசுமதி "என்ன பயம். உங்க லவ் கல்யாணத்தில முடியுமான்ற பயம்தானே" என்றாள்.

ஆமாமென்பதற்கு அறிகுறியாக தலையை ஆட்டினாள் ம்ருதுளா. வசுமதி ம்ருதுளாவிடம் " தோ பார். ராஜேஸ்வரி மாமி இதுல ரொம்ப குறியா இருக்கான்னு நேக்கு தெரியர்து. இரண்டாவது அவாத்தில மதுரைன்னு நெனைக்கறேன்" என்றாள்.  "என்ன அக்கா சொல்ற நீ, புரியலையே" என்றாள்  ம்ருதளா. 

"  மதுரையில சொக்கநாதரை விட மீனாட்சிக்கு தான் முக்கியத்துவம். அது போல தான் ராஜேஸ்வரி மாமியாத்துலயும்னு நெனைக்கிறேன். அந்த மாமி பேச்சுக்கு அவாத்து மாமா மறு பேச்சு சொல்ல மாட்டார்னு  நம்பறேன்" என்றாள். "இது ஓரளவுக்கு சரிதான் அக்கா. ஆனா நம்ம சைட நெனச்சாத்தான் நேக்கு பயமா இருக்கு" என்றாள். அதற்கு வசுமதி" நம்பாத்து பக்கமும் கிட்டத்தட்ட எல்லோரும் இதை ஒத்துப்பா. ஒரே ஒரு நபர்தான் பிராப்ளம் கிரியேட் பண்ண வாய்ப்பு இருக்கு" என்றாள். பயத்துடனும், ஆர்வத்துடனும் "யாரக்கா அது" என்றாள் ம்ருதுளா. அதற்கு வசுமதி " அது இப்போதைக்கு சஸ்பென்ஸ். நோக்கு தெரிய வேணாம். காலம், நேரம் வரும்போது நீயே அந்த நபர் யாருன்னு தெரிஞ்சுப்ப. கவலைப்படாதே,அந்த ஆளையும் நானே சமாளிச்சுடுவேன். உங்க காதல் கல்யாணத்ல நிச்சயம் முடியும்" என்று ஆறுதல் கூறினாள்.

இந்தசிறு பிணக்கால் ம்ருதுளா,சங்கர க்ருஷ்ணன் அன்பு, நல்ல உரமிட்ட பூச்செடி கிடுகிடுவன வளர்வது மாதிரி வளரத்தொடங்கியது.  

இதற்கு இடையில் ராதிகாவின் கல்யாண நாள் நெருங்கிக் கொண்டிருந்தது.

No comments:

Post a Comment