Sunday, January 7, 2024

வசந்த காலம் வருமோ?-64

 வசந்த காலம் வருமோ?-64

By N Krishnamurthy 

திங்கட்கிழமையிலிருந்து எல்லாமே ரொட்டினாக செல்ல ஆரம்பித்தது. மாலை 8 மணிக்கு போன் அடிக்க, மைதிலி போனை எடுத்தாள். மறுமுனையில் இருந்து ராஜேஸ்வரி "என்ன மாமி வந்து சேர்ந்துட்டேளா" என்று கேட்டாள். "ஆமாம். இன்னிக்கு காலைல தான் வந்தோம்" என்றாள்  மைதிலி." நீங்க வந்து எங்களுக்கு ஹெல்ப் பண்ணினது ரொம்ப சந்தோஷமா இருந்தது .எங்க  நாத்தனாரும்,அவ  ஆத்துக்காரரும் உங்களை ரொம்ப தேங்க்  பண்ண சொன்னா" என்றாள் மைதிலி. இதை கேட்ட ராஜேஸ்வரி " இதுக்கு எதுக்கு மாமி தேங்க்ஸ் எல்லாம். ஒத்தருக்கு ஒத்தர் ஒத்தாச பண்றது அதிசயமா என்ன" என்றாள்.

"யார் பேசறது" என்று ஜாடையில் கேட்டாள் ம்ருதுளா. போனின் ஸ்பீக்கரை ஒரு கையால் மூடிக்கொண்ட மைதிலி 'ராஜேஸ்வரி மாமி' என்று கூறினாள்." நீ பேசினதுக்கு அப்புறம் என்கிட்ட குடு" என்றாள் ம்ருதுளா. மைதிலி பேசி முடித்ததும் போனை ம்ருதுளாவிடம் தந்தாள். 

ம்ருதுளா" என்ன மாமி சௌக்கியமா" என்றாள். " சௌக்கியமா இருக்கேம்மா.நீ எப்படி இருக்க" என்றாள் ராஜேஸ்வரி." நான் நண்ணாயிருக்கேன் மாமி. ஆமாம். சனிக்கிழமை கச்சேரி எப்படி இருந்தது மாமி" என்று கேட்டாள் ம்ருதுளா. இதற்காகவே காத்திருந்த ராஜேஸ்வரி " நீ அவன்கிட்டயே பேசி தெரிஞ்சிக்கோ"  என்று கூறி போனை சங்கர க்ருஷ்ணனிடம் கொடுத்தாள். போனை வாங்கியவன்" ஹலோ ம்ருதுளா.ஹவ் ஆர் யூ" என்றான். அருகில் மைதிலி இல்லாததை உறுதி செய்து கொண்ட ம்ருதுளா,  மெல்லிய குரலில் அவனிடம் "ம்ருதுளா என்று நீட்டி முழக்கி  கூப்பிட வேண்டாம். ம்ருதுனு, வேண்டியவா  எல்லாம் கூப்டற மாரி, கூப்டலாமே"என்றாள். உடனே சங்கர க்ருஷ்ணன் "ஓகே.இனிமே   அப்படியே கூப்டறேன்" என்றான். " அன்னைக்கு உங்க கச்சேரி எப்படி இருந்தது" என்றாள் அவள். அதற்கு அவன்  "நேக்கு தெரிந்த வரையில் நான் நண்ணாதான்  பாடினேன். பல பேர் என்னை பாராட்டினா. ஆனால் ரெவ்யூ எப்படி வரும்னு நேக்கு தெரியலை" என்றாள்."வொரி பண்ண வேண்டாம். ரெவ்யூ நாண்ணாதான் வரும்.

அடுத்த கச்சேரி எங்கே"  என்று கேட்டாள் ம்ருதுளா. " வர வெள்ளிக்கிழமை சாயங்காலம் ஹம்சத்வனிக்கோசரம்   இந்திரா நகர்  யூத் ஹாஸ்டல்ல கச்சேரி இருக்கு. I shall feel  happy if you can make it" என்றான். " சரி.வரதுக்கு முயற்சி பண்றேன்" என்றாள்.

" அப்படி சொல்லாத. அவசியம் வரணம்" என்றான் அவன்.  ம்ருதுளா பதிலுக்கு " நேக்கு வரணம்னுதான் இருக்கு.அப்பா, அம்மா பர்மிஷன் தரணம்" என்றவள் " நீங்க ஒண்ணு பண்ணுங்க. அப்புறமா உங்கம்மாவை வுட்டு இது விஷயமா எங்கம்மா கிட்ட பேச சொல்லுங்கோ" என்றாள்." Done" என்ற அவன் "Bye ம்ருது" என்று போனை டிஸ்கனக்ட் செய்தான். அவன் தன்னை அவ்வாறு அழைத்தது அவளை  ஆனந்த வெள்ளத்தில் ஆழ்த்தியது. இது போன்ற சின்ன சின்ன விஷயங்களால் தானே அன்பும், இணக்கமும் வளர்கின்றன. மாறாக சிறு சிறு பிணக்குகள் கூட அன்பை வளர்க்கிறது என்பதை கண்கூடாக பார்க்கிறோம்.

புதன்கிழமை மதியம் மூன்று மணி இருக்கும். ராஜேஸ்வரியும், சங்கர க்ருஷ்ணனும்  திடீரென்று சாரங்கன் வீட்டில் நுழைந்தார்கள்.

 " இவன் வர வெள்ளிக்கிழம  சாயங்காலம்  ஹம்சத்வனிக்கோசரம்   இந்திரா நகர்  யூத் ஹாஸ்டல்ல பாடறான். கச்சேரி விஷயமா ம்ருதுளா கிட்ட ஏதோ கேக்கணும்னு சொன்னாதால இவனை கூப்பிட்டிண்டு வந்தேன்" என்றாள்  ராஜேஸ்வரி மைதிலியிடம்." அதுக்குதான் வரணமா என்ன?  இல்லைன்னா நீங்க வரக்கூடாதா" என்றாள் மைதிலி. ஹாலில் ஏதோ பேச்சு சத்தம் கேட்கவே ம்ருதுளா  தன் ரூமிலிருந்து ஹாலுக்கு வந்த போது, அங்கே ராஜேஸ்வரியையும், சங்கர க்ருஷ்ணனையும் பார்த்து" ஹலோ. வாங்கோ" என்றாள். "காபி கலக்கறேன்  மாமி" என்று சொல்லிவிட்டு, பதிலுக்கு காத்திருக்காமல், அவர்கள் இருவருக்கும் காபி கொண்டு வந்து கொடுத்தாள் மைதிலி.

சங்கர  க்ருஷ்ணன் ம்ருதுளாவை பார்த்து "கச்சேரி விஷயமா நான் உன் கிட்ட கொஞ்சம் கன்சல்ட் பண்ண வேண்டி இருக்கு" என்றான். அதற்கு ம்ருதுளா "நேக்கு தெரிஞ்சத சொல்றேன்" என்றாள்.  "ஒண்ணும் இல்ல. ஓரளவுக்கு தயார் பண்ணிட்டேன். இருந்தா கூட அன்னிக்கு கல்யாணத்துல நீ பாடின "ஸ்ரீக்ருஷ்ணம் பஜ மானச" நேக்கு ரொம்ப பிடிச்சு போயிடுத்து. தீக்ஷதருடைய   கீர்த்தனை புக் வாங்கி வச்சிருக்கேன். அத பார்த்து ரெண்டு நாளா அந்த பாட்டை பாடம்  பண்ணிண்டு இருக்கேன் .நீ இத ஒரு தடவை பாடிக் காட்டினயான  நல்லா புரிஞ்சுக்கலாம்னு நெனக்கறேன் "என்றான். ம்ருதுளா" ஸ்ரீ கிருஷ்ணன் பஜ"வை  பாட ஆரம்பித்தாள்.

"ஸங்க சக்ர கதா பத்ம வன மாலம்" என்ற சரணம் வருகிற  இடத்தில் நெரவல் செய்து ஸ்வரம் பாடி காண்பித்தாள்.  அவள் பாடும் பொழுது தன்னை மறந்து கிருஷ்ணன் "பிரமாதம்" என்றான். " தோடியை பத்தி முழுசா புரிஞ்சுகணம்னா T.R.ராஜரத்னம் பிள்ளைவாளின் தோடியை கேட்டாலே போறும்.நாதஸ்வரத்ல அவர் போடற பிடியை வாய் பாட்ல பாட முடியுமான்னு தெரியல.கிட்டத்தட்ட தோடிய நாதஸ்வரம் மாதிரி பாடினவர் மதுரை சோமுதான் " என்ற ம்ருதுளாவின் பேச்சை கேட்ட ராஜேஸ்வரி" இந்த சின்ன வயசுல இவ்ளவு இசை ஞானம் இவளுக்கு இருக்கறதுக்கு தெய்வ அனுக்கிரஹம் பரிபூர்ணமா இருக்கறதுதான் காரணம்" என்று மனதுக்குள் எண்ணிக்கொண்டாள்.

இதன் பிறகு அவன் பாட வேண்டிய மீதி பாடல்கள் லிஸ்ட்டை  அவளிடம் காண்பித்து  அவை விஷயமாக அவள் கமெண்ட்டை  கேட்டு அறிந்து கொண்டான் . கிளம்பு முன் ராஜேஸ்வரி மைதிலியிடம் "சனிக்கிழமை கச்சேரிக்கு நீங்களும் ,ம்ருதுளாவும் அவசியம் வந்தூடுங்கோ " என்று கேட்டுக்கொண்டாள்.

"அதுக்கென்ன.வந்தா போச்சு" என்றாள் மைதிலி. ம்ருதுளா வேண்டுமென்றே " சனிக்கிழமை சாயங்காலமா.நேக்கு முடியும்ணு தோணலை. அன்னிக்கு தான் என் ப்ரண்ட் ச்யாமளா ஆத்துக்கு வரேன்னு பிராமிஸ் பண்ணியிருக்கேன்" என்றாள். இதைக்கேட்ட சங்கரகிருஷ்ணன் முகம் காற்றிழந்த பலூன் போலானது. மைதிலி அவளிடம் "ச்யாமளா ஆத்துக்கு இன்னூரு நாளக்கு வரேன்னு சொல்லீட்டா போச்சு" என்றாள். "சரிம்மா அப்படியே பண்ணிடறேன் " என்றாள் ம்ருதுளா.

சங்கரகிருஷ்ணன் முகம் இதைக்கேட்டு சூரியனை கண்ட தாமரை போல மலர்ந்தது. அவன் அவளுக்கு கண்களாலேயே நன்றி

சொல்ல அவள்ஒரு சிறு புன்னகையால் அதனை ஏற்றுக்கொண்டாள். இந்த நாடகத்தை ராஜேஸ்வரி, கண்டும் காணாதது போல், ரொம்பவே ரசித்தாள்.

பின்னர் ராஜேஸ்வரியும், சங்கர கிருஷ்ணனும் அவர்கள் இருந்த ஹோட்டலுக்கு திரும்பினார்கள்.

No comments:

Post a Comment