திருச்சிகதைகள்-5
‘பாத்துப்பா! ஜாக்கிரதை' என அவனது கையை பிடித்து சாலையை கடக்கும்போது தான் கவனித்தேன், முழங்கைக்கு கீழே மணிக்கட்டு வரை சருமம் அவ்வளவு மிருது சாஹுலுக்கு. 50 வயதிலும் இன்னும் அதே 4 வயது குழந்தை முகம்.
அர்ரைவல் பகுதியிலிருந்து பஹ்ரைன் விமான தளத்தின் வெளியே கார் பார்க் வந்து அவனிடமிருந்த ஒரே பெட்டியை கார் bootஇல் போட்டு விட்டு வண்டியை எடுத்து நெடுஞ்சாலை வந்தவுடன்...
'சொல்லுப்பா.. திருச்சியெல்லாம் எப்பிடியிருக்கு?'
'நல்லா போய்ட்டிருக்குண்ணே! வேலை வாங்கி கொடுத்ததுக்கு ரொம்ப நன்றி. அம்மா சந்தோசப்பட்டாங்க. இத்தினி வருஷம் கழிச்சு ஐம்பது வயசுல கல்ஃப் ஜாப்.. சந்தோசமா இருக்கு'.
'ICWA படிப்புக்கு இங்க அவ்ளவா ஸ்கோப் இல்லன்னாலும், ஏதோ உனக்கு நல்ல நேரம் இங்க வேலை கெடச்சதுப்பா. சரி.. திருச்சில என்ன விசேஷம்?'
'திருச்சிக்கென்னண்ணே! சூப்பரா இருக்கு. மாமு இன்னமும் கடிகாரக்கடை போறாங்க. அம்மாக்கு வயசாச்சு. வீடு வாங்கின கடன் கொஞ்சம் பாக்கி. நம்ம தென்னூர் ஏரியா தர்கா, தோப்பு எல்லாம் இன்னம் அப்பிடியே இருக்கு'
திருச்சி பற்றி யாராவது பேசினாலே மனம் குதூகலமாகும். கருப்பு வெள்ளையில் ஃப்ளாஷ்பேக் மாதிரி பழைய நாட்கள் மனத்திரையில் ஓடும். வெளியே லேசான மழை. சாலையின் ஈரத்தில் வண்டி வெண்ணெய் மாதிரி வழுக்கிக்கொண்டு பஹ்ரைன் ஏர்போர்ட் சர்வீஸ் கம்பெனி தாண்டி ரவுன்டபௌட் வந்து நின்றபோதும் மனம் இன்னும் திருச்சியில்..
1970களில்.. தென்னூர் அமிருதீன் ஆசுபத்திரி தாண்டி ஜெனரல் பஜார் தெருவில் நுழைந்து இருபது முப்பது வீடுகள் தள்ளி இடது புறம் பெரிய மோரியை தாண்டினால் நாங்கள் வசித்த பென்ஷனர் காரத்தெருவு. சுமார் ஐம்பது குடும்பங்களே உள்ள அந்த தெருவில் எங்களைத்தவிர எல்லோருமே இஸ்லாமியர்கள். நான் அப்போது ஏழாம் வகுப்பு. செஞ்சோசப்ஸ். என் தம்பி ரவியுடன் பாதி நேரம் ஏதாவது ஒரு வீட்டில் விளையாடிக்கொண்டிருப்பேன்.
மற்ற பசங்களுடன் சேர்ந்து நானும் ரவியும் உருது சரளமாக பேசுவோம். 'இதாகே! உதர் ஜாகே!' (இந்தாடி! அங்க போடி!) ... 'ஆப்பா! வக்கத் ஹோகயா.. மை ஜாத்தாவூன்' ( அக்கா! நேரமாச்சு நான் போறேன்) என கூட விளையாடும் சிறுவர் சிறுமிகளிடம் சகஜமாக பேசிக்கொண்டிருப்போம்.
அக்கம்பக்கத்தில் பாபு, பர்வின், ஃபரிதா, சீரின், நஸ்ரின் மற்றும் பக்கத்து வீட்டு கௌஹர், ஃபாரூக், அஃப்ரோஸ், ரஹமத்தி எல்லோரும் நண்ப/நண்பிகள். மாலை குர்ஆன் சொல்லிக்கொடுக்கும் நானி வரும்வரை சிறுமிகள் எங்களோடு விளையாடிக்கொண்டிருப்பார்கள்.
தினமும் எங்களுடன் விளையாடும் பர்வின் திடீரென வராமல் வீட்டு ஜன்னல் வழியாக நாங்கள் விளையாடுவதை பார்த்துக் கொண்டிருப்பதும், 'ஏய் பர்வின்! இதர் ஆகே' என நாங்கள் கூப்பிட சட்டென உள்ளே மறையும்போது தான் கவனிப்போம், அவள் தாவணிக்கு மாறியிருப்பதை. எதற்கு திடீரென தாவணி என ஊகிக்கும் வயது இல்லை எங்களுக்கு அப்போது.
முதலியார் சத்திரம் ஒர்க் ஷாப்பில் வேலை செய்யும் ஹஃபீஸ் பாய் சைக்கிளை வெளியே இறக்கிய பின் வாயிலிருந்து சிறிது எச்சிலை விரலில் எடுத்து சக்கரத்தில் வைத்து காற்று வெளியே வருகிறதா என்று பார்ப்பார்.
தெருவில் நடக்கும் எல்லா முஸ்லிம் திருமணங்களுக்கும் அழையா விருந்தாளி நாங்கள். காலை ஸ்கூல் கிளம்பும்போது லௌட் ஸ்பீக்கரில் 'மெ ஷாயர் தோ நஹி' பாட்டு ஒலித்தால் ஏதோ ஒரு வீட்டில் கல்யாணம் எனத்தெரிந்துகொள்வோம். சாயங்காலம் ஸ்கூல் விட்டதும் நேராக அங்கே ஓடிப்போய் பந்தலில் விளையாடிக்கொண்டிருப்போம், உதடுகளில் 'ஜூட்டு போலே கவ்வா காட்டே' பாடலை முனுமுனுத்தபடி.
என் அக்கா மற்றும் பக்கத்து வீட்டு பாத்திமா, மும்தாஜக்காவுடன் புத்தூர் அருணா அல்லது கெயிட்டி தேட்டரில் பாபி, அன்ஹோனி, ஜன்ஜீர் படங்கள் பார்ப்போம். அவர்கள் வீட்டில் வீட்டில் எப்பவும் குஸ்கா வாசனை. ரவா பாயசம் கொடுப்பார்கள். முன்னறையில் ஈரத்துணியுடன் நடிகை ரேகா அல்லது மும்தாஜ் படமிட்ட காலண்டர் தொங்கும்.
வீட்டின் பின்பக்கம் தோப்பில் விளையாடும்போது மோரியில் விழுந்த கோலிகுண்டை இடது கையால் எடுத்து சட்டென பின் பக்கம் துடைத்துக்கொண்டு கையை மோந்து பார்ப்பது..(தனியாக அதற்கு அடி விழும்)
மாலை 7 மணிக்கு பள்ளி வாசலுக்கு வெளியே மந்திரித்து அவர்கள் நம் தலையில் ஸ்ஸ்ஸூ என ஊதுவதை இரண்டாம் தடவையும் வாங்க வரிசையில் நிற்பது...
சந்தோஷமான தருணங்கள் பல..
அந்த தெருவில் அப்போது புதிதாக குடி வந்தவன் அஷ்ரஃப். அப்பா இல்லாமல் குடும்ப பாரம் முழுவதும் அவன் மேல். அம்மா, தம்பி, தங்கை மற்றும் திருமணமான அக்கா, அக்காவின் நான்கு வயது பையன் மற்றும் 6 மாதக்குழந்தை.. ஓட்டு வீடுகளுக்கு நடுவே ஒரு வெற்றிடத்தில் குடிசை போட்டு தன் பெரிய குடும்பத்துடன் இருந்தான். பாலக்கரை எடத்தெருவில் கடிகார ரிப்பேர் கடை வைத்திருந்தான்.
கடை விடுமுறையான ஞாயிறன்று பக்கத்தில் பாத்திமாக்கா வீட்டில் கடிகார பாகங்களை தரையில் பரத்திப்போட்டு ரிப்பேர் செய்வான். யாரும் அதற்கு ஆட்சேபணை தெரிவிப்பதில்லை. வேலையின் நடுவே பன்னிரண்டு மணிவாக்கில் தொழுகை அழைப்புக்கான பாங்கு ஓதும் சத்தம் கேட்டு எழுந்து பள்ளிவாசல் பக்கம் ஓடுவான். அப்பா இல்லாத குறையாய் தன் குடும்பத்தையும் தன் அக்காள் குடும்பத்தையும் பார்த்துக்கொண்டான் அஷ்ரஃப். சைக்கிளில் விசுக் விசுக்கென அலைந்து தினமும் ஓடியாடி உழைப்பவன். தலையில் சிலுப்பி நிற்கும் வணங்காமுடி மற்றும் காவி பற்கள். கண்களில் லட்சியம் தெரியும்.
ஒருநாள் ரோட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென தூரத்தில் புகை. ஒரே சத்தம். கூட்டம். ஓடிப்போய் பார்த்தால் அஷ்ரஃப்பின் குடிசை எரிந்துகொண்டிருந்தது. அவன் கடைக்கு போயிருந்தான். எல்லோரும் பக்கெட் தண்ணீருடன் ஓட, தீயணைக்கும் வண்டி வந்து தண்ணீர் அடித்தது. பாதி தீயை அணைக்க, உள்ளே இருந்து அஷ்ரஃபின் அம்மா, தங்கை, தம்பி என எல்லோரையும் வெளியே கொண்டு வந்தார்கள். சைக்கிளை போட்டுவிட்டு ஓடி வந்த அஷ்ரப் ஓவென அலறினான். எங்கும் பெண்களின் மரண ஓலம். அக்காவின் ஆறுமாத குழந்தை உட்பட குடும்பத்தில் பாதி பேரின் இறந்த உடல்களை வெளியே கொண்டு வந்தார்கள்.
அஷ்ரஃபை இருவர் பிடித்துக்கொள்ள, அவன் திமிறி குடிசைப்பக்கம் ஓட முயன்றான். திடீரென குடிசையின் பக்கவாட்டில் சிறிய ஓட்டையிலிருந்து அக்காவின் நான்கு வயதுப்பையன் வெளியே ஓடி வந்தான். எல்லோருக்கும் பெரும் அதிர்ச்சி, பாதி பேர் இறந்தும் இவன் எப்படி, எங்கே ஒளிந்திருந்தான் என.
பாதி தலைமுடி எரிந்து தலையில் நெறுப்புக்கங்குகள், முழு அம்மணமாக சதையும் தோலுமாக வெளியே ஓடி வந்த சிறுவனை காதர்மாமு ஓடிப்போய் கைகளை பிடித்து தூக்க, அவன் 'ப்ளக்'கென வழுக்கிக்கொண்டு விழுந்தான். அடுத்த நொடி காதர்மாமு கையில் அரை ஜான் அகலத்தில் சிறுவனின் கைப்பகுதியின் தோல் மசித்துணி போல.. அதிர்ச்சியுடன் தரையில் கிடந்த குட்டிப்பையன் கையை பார்த்தார். முழங்கைக்கு கீழே மணிக்கட்டு வரை வெள்ளையும் சிகப்பும் கலந்த நிறத்தில் வெறும் சதை..
இனி பதிவின் முதல் வரிக்கு போகலாம்.
பென்சில் ஓவியத்துடன்..
(சீதாபதி ஶ்ரீதர்)
மீள் 2019
#திருச்சிகதைகள்
No comments:
Post a Comment