வசந்த காலம் வருமோ?- 62
By N Krishnamurthy
அடுத்த நாள் சனிக்கிழமை காலை அஒன்பது பத்தரை ராகு காலம் ஆதலால் பதினோரு மணிக்கு பையன் வீட்டார்கள் வசுமதியை கூப்பிட்டுக்கொண்டு திருச்சி போவதாக முடிவாகியிருந்தது.
பாலிகை தெளித்து முடித்ததும் ஒன்பது மணிக்குள் சாப்பாடு கடை முடிந்து விட்டது கட்டு சாதக்கூடை (மிளகாய்பொடி தடவிய இட்லி, புளியோதரை,தயிர்சாதம்,கருவடாம் மோர் மிளகாய்,எலுமிச்சை ஊறுகாய், பூசணிக்காய்,வாழைக்காய்,அவரைக்காய்,கோஸ்,கேரட்,வாழை இலை) கேட்டரிங் காரர்களால் பஸ்ஸில் வைக்கப்பட்டது.
ஸ்ரீவத்சனின் அப்பா கட்டுசாத கூடை வைத்தவர்களுக்கு நூறு ரூபாயும்,வாத்யம் விசித்தவர்களுக்கு நூறு ரூபாயும் மரியாதை செய்தார்.
பத்மநாபன் ஸ்ரீவத்சனின் அப்பாவையும் ,அவரை சேர்ந்த மறற்ற ஆண்களையும் உட்கார வைத்து சந்தனம் காட்டி,கல்கண்டு கொடுத்து ,தேங்காய்,வெற்றிலை பாக்கு பழம் போட்ட முஹுர்த்த பைகளை கொடுத்தார்.
பெண்ணையும் பையன் வீட்டுக்காரியாக நினைத்து முஹுர்த்த தாம்பூல பை தருவதும் வழக்கம்.பத்மநாபன் வசுமதிக்கு முஹுர்த்த தாம்பூல பை கொடுத்து அதனுடன் ஐந்நூறு ரூபாயை பிறந்த வீட்டு பணமாகத் தந்தார்.
இதெல்லாம் முடிந்ததும் ராஜேஸ்வரி பத்மநாபனிடம் " மாமா எங்களுக்கு 12 மணிக்கு பிளைட். நாங்க இப்ப கிளம்பினா சரியா இருக்கும்" என்றாள். பத்மநாபன்ன் ரங்கநாயகி திரும்பிப் பார்த்தார். குறிப்பறிந்து ரங்கநாயகி, ஒரு எவர்சில் தட்டில் ஒரு புடவை, ரவிக்கை துண்டு,மஞ்சள்,வெற்றிலை பாக்கு ராஜேஸ்வரிக்காகவும், வேஷ்டி மற்றும் துண்டு சங்கர க்ருஷ்ணனுக்காகவும் வைத்து ராஜேஸ்வரியிடம் பத்மநாபனும்,ரங்கநாயகியும் சேர்ந்து கொடுத்தார்கள்.அதைப் பெற்றுக் கொள்ளு முன் ராஜேஸ்வரி சக்கரவர்த்தி தம்பதிகளுக்கும், ராஜகோபாலன் தம்பதிகளுக்கும் நமஸ்காரம் செய்தாள். சங்கர க்ருஷ்ணனும் அது மாதிரியே செய்தான். ருக்மணி அவளைப் பார்த்து " தீர்க்க சுமங்கலியா இரும்மா. நீ பழகுற விதத்தை பார்த்தா அந்நிய மனுஷ மாதிரியே தோணல. ஏதோ எங்க சொந்தக்காரா மாதிரியே இருக்க.
கொஞ்ச நாள்ல உன் பையனும் பாட்டுல கொடி கட்டி பறப்பான்னு நெனைக்கிறேன். பையனுக்கு கல்யாணம்னா எங்களுக்கு சொல்லி அனுப்பு. அவசியம் வந்து கலந்துகிறோம்" என்றாள்.
அதைக் கேட்ட ராஜேஸ்வரி " உங்களுக்கு சொல்லாம இருப்பேனா மாமி" என்றாள்.பின்பு ராஜேஸ்வரி மைதிலியிடமும், சாரங்கனிடமும் ம்ருதுளாவிடமும் விடை பெற்றுக்கொண்டாள். சங்கர க்ருஷ்ணன் ம்ருதுளாவிடம் (அவள் தனியா இருக்கும் போது) " ஓகே ம்ருதுளா, நான் போய் வறேன். ஞாபகம் வச்சுக்கோ" என்றான். முதல் முறையாக ம்ருதுதளா முதலாம் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு" எப்படி மறக்க முடியும் . என்னை இன்னமே ம்ருதூன்னு கூப்ட்டா போறும் "என்று கூறினாள். இந்த பதிலால் சங்கர க்ருஷ்ணன் புளஹாங்கிதம் அடைந்து,விண்ணில் பறப்பது போல உணர்ந்தான். ராஜேஸ்வரி ஸ்ரீவத்சன், வசுமதி அருகில் சென்று "நாங்கள் போய் வருகிறோம்.ஆல் தி பெஸ்ட் இன் லைஃப்" என்று கூறினாள். அவர்கள் இருவரும் அவளுக்கு நமஸ்காரம் செய்தார்கள். வசுமதியை தூக்கி நிறுத்திய ராஜேஸ்வரி, தன் கையில் இருந்த, முதல் இரவு துணிக்கடையில் வாங்கி வந்திருந்த பார்சலை எடுத்து அவளிடம் கொடுத்தாள். அதை வசுமதி பிரித்துப் பார்க்க அதில் ஜாக்கெட் டுடன் கூடிய ஒரு பட்டுப் புடவையும், ஒரு டெரி காட்டன் சற்றும் இருந்ததை கண்டு " எதுக்கு மாமி இது. நேத்து வேற நீங்க ஓதியிட்டேள் போல இருக்கே" என்றாள். இதைக் கேட்ட ராஜேஸ்வரி" ஏம்மா நான் செய்யக்கூடாதா" என்று கேட்டாள்.
ஸ்ரீ வத்சன் சங்கர க்ருஷ்ணன் கையைப் பிடித்துக் கொண்டு "Nice to meet you. If you happen to be in Trichy, please come to our house" என்று கூறினான்.
இதற்குள் ராஜேஸ்வரி சொல்லி அனுப்பி இருந்த டாக்ஸி வந்தது. ராஜேஸ்வரியும், சங்கர க்ருஷ்ணனனும் அதில் ஏறி ஏர்போர்ட்டுக்கு பயணம் செய்தார்கள். ஏற்கனவே ரங்கநாயகி சாரங்கனிடம் "நீயும் மைதிலியும், வசுமதி கூட போய்ட்டு, ஒரு நாள் இருந்து நாளைக்கு மெட்ராஸ் போகலாம்" என்றாள். "நானும் இவா கூட போறேன்" என்றாள் ம்ருதுளா. "அதுக்கு என்ன. பேஷா போயிட்டு வாயேன்" என்றாள் ரங்கநாயகி.
சாரங்கன் பத்மநாபனிடம் " நான் வோணா திருச்சி போயிட்டு நாளைக்கு மறுபடி மதுரைக்கு வந்துடட்டமா. எல்லாத்தையும் செட்டில் பண்றதுக்கு சௌரியமாக இருக்கும்" என்றான். " அதெல்லாம் வேணாம் சாரங்கா. நானே பாத்துக்கறேன். திருச்சியில் இருந்து நேர, மெட்ராஸ் போ,ய் ஆபீஸ் அட்டென்ட் பண்றத பாரு" என்றார்.
புது மணதம்பதிகள் எல்லோர் காலில் விழுந்து நமஸ்கரித்தார்கள்.
No comments:
Post a Comment