*தீபஷ்வினியின்*
தாய் மடி(சிறுகதை)
“தனிமையின் துயரம்,
இத்தனை கொடியதா.!!!
தாய்மடி தேடி ஓடும் சிறு குழந்தை போல..
இயற்கை அன்னையின் மடி தேடி ஓடுகிறது என் கால்கள்.!!!!
பெட்டியில் துணிகளை எல்லாம் பார்த்து பார்த்து அடுக்கி கொண்டிருந்தாள் சியாமளா
*அம்மாக்கு, அப்பாக்கு, தம்பிக்கு, அவங்களுக்கு, இவங்களுக்கு*…” என்று, தான் வாங்கியதை எல்லாம்* ஒவ்வொருத்தருக்கும் சந்தோஷமாக எடுத்து வைத்தாள். அப்பொழுது,
“அம்மா அம்மா” என்று ஓடி வந்து தாய் சியாமளாவின் கழுத்தை கட்டிக்கொண்டனர் அவளது இரு குழந்தைகளுமான, கிரண், மற்றும் சஞ்சய்..
“என்னடா தங்கங்களா உங்களுக்குத் தேவையானது எல்லாம் நீங்களே எடுத்து வச்சிட்டீங்களா”.
“ம்ம்ம் எஸ் மாம் எடுத்து வச்சிட்டோம்…” என்று ஒரே நேரத்தில் இருவரும் சொல்ல…
“சரி போய்த் தூங்குங்க, காலையில் சீக்கிரம் எழுந்திரிக்கனும்”
“சரிமா” என்ற இரு குழந்தைகளும்.. தாயின் கன்னத்தில் முத்தம் வைத்துவிட்டு, தங்களது அறைக்குச் செல்ல,
சியாமளா தன் கணவன் கண்ணனின் வருகைக்காகக் காத்திருந்தாள், அவளுக்கு ஏன் இவ்வளவு சந்தோசம்???
ஐந்து வருடம் கழித்து நாளை அவர்கள் தன் தாய் நாட்டிற்குக் கிளம்புகிறார்கள், அதனால் வந்த மகிழ்ச்சி…
ஆம் அவர்கள் வசிப்பது வெளிநாட்டில், சியாமளாவிற்கு , கல்யாணத்திற்கு வரன் பார்க்கும் போது , கண்ணனின் ஜாதகம் பொருந்தி வர. மாப்பிள்ளைக்கு வேலை வெளிநாட்டில் என்றதும், அந்தக் குடும்பமே சந்தோசப்பட்டது, சியாமளாவை தவிர,
தன் விருப்பமின்மையை அவள் தன் தாயிடம் கூறிவிட்டாள்…
இதைக் கேள்விப்பட்ட கண்ணனனோ சியாமளாவிடம் பேச வேண்டும் என்று சொல்லி மறுநாளே வந்து நின்றான்.
ஒரு காஃபி ஷாப்பில், இருவரும் சந்தித்தனர், “ஏன் என்னைப் பிடிக்கலையா சிமி…?” என்று நேரடியாக விஷயத்திற்கு வந்தான் கண்ணன்.
அவன் சிமி என்று கூப்பிடவும் அவனைப் பார்த்து அவள் முழிக்க
அவள் முழிப்பதை பார்த்தவன், “உனக்கு நான் வச்ச செல்ல பேர் ஏன் பிடிக்கலையா” என்று கேட்டான்.
அவளோ மனதுக்குள் “நானே கல்யாணம் வேண்டாம் என்று சொல்லிட்டு இருக்கேன், இதுல செல்ல பேரு வேற, ஹய்யோ” என்று மானசீகமாகத் தலையில் அடித்துக் கொண்டாள்.
அவளின் முகப் பாவனைகளைப் பார்த்தவன் “சரி சொல்லு ஏன் என்னாச்சு எதுக்குக் கல்யாணம் வேண்டாம் என்று சொல்ற வேற யாரையாவது” என்று முடிக்காமல் நிறுத்த…
கண்ணன் அப்படிக் கேட்கவும் அவனை முறைத்தவள், “ஹலோ, இங்க பாருங்க ரொம்ப யோசிக்காதீங்க, எனக்கு வெளிநாட்டு மாப்பிள்ளை தான் வேண்டாம் என்று சொன்னேன், கல்யாணமே வேண்டாம் என்று சொல்லல புரியுதா. இங்க இருந்தா, நினைச்ச நேரத்துல எங்க வீட்டுக்கு வரலாம், ஒர் ஆத்திர அவசரத்துக்கு உடனே வர முடியும் ஆனா வெளிநாட்டுல இருந்தா அப்படி வர முடியுமா” என்று படபடவென்று காரணத்தை விளக்
அவள் யாரையும் காதலிக்கவில்லை என்பதில் நிம்மதியுற்றவன் “நீ சொல்றது எனக்குப் புரியுது சிமி. ஒரு மூணு வருஷம் தான், அதுக்கு அப்புறம், நாம இங்க இந்தியாவுக்கே திரும்ப வந்திடலாம். எனக்கு உன்னை ரொம்பப் பிடிச்சிருக்கு சிமி…” என்று கண்ணோடு கண் நோக்கி கண்ணன் தன் விருப்பத்தைச் சியாமளாவிடம் கூறினான்.
ஏனோ கண்ணன் அப்படிக் கேட்டது பிடித்திருந்தது அவளுக்கு, ஆனாலும் மனதுக்குள் சிறு சுணக்கம்.. “எனக்கு யோசிக்கணும்…” என்றாள்
“நல்லா யோசி, நல்ல முடிவா சொல்லு, நான் காத்திருப்பேன்…” என்றான் கண்ணன்…
இதிலேயே தெரிந்தது அவனுக்குத் தன்னை ரொம்பவும் பிடித்துவிட்டது என்று, “சரி…” என்று தலையாட்டிவிட்டு வீட்டுக்கு வந்தாள் சியாமளா..
அங்குத் தன் தாயின் தோழிகள் வந்திருப்பதைக் கண்டவள், “வாங்க ஆன்ட்டி…” என்றவள் தன் அறைக்குள் செல்ல அப்பொழுது.
“அடியே சாந்தி நீ கொடுத்துவச்சவடி, உன் பொண்ணு அமெரிக்காவில் போய் வாழ போறா…” என்று சொல்லவும்.
”ஆமாடி சுலோ, எனக்கு எவ்வளவு பெருமையா இருக்கு தெரியுமா, யாராவது என்கிட்ட உன் பொண்ணை எங்க கட்டிகொடுத்துருக்கேன்னு கேட்டா, நானும் வெளிநாட்லன்னு பெருமையா சொல்லிக்கலாமில்ல” என்று பூரித்தாள் சியாமளாவின் அன்னை சாந்தி.
தாயின் பேச்சை கேட்ட சியாமலாவின் நினைவில் தன் தாயும், தந்தையும் சரி, ஏன் தன் தம்பிக்கூட, ஒருவித உற்சாகத்துடனே இருப்பதை.
“அப்போ நான் இவர்களை விட்டுத் தூரமா போறது இவங்களுக்குக் கவலையில்ல, பொண்ணு வெளிநாட்டில் வாழ போறான்னு பெருமையா சொல்லிக்கனும் என்று நினைக்கிறாங்களா…” என்று நினைத்தவள். ஒரு முடிவுடன் போனை எடுத்து அதில் கண்ணனின் நம்பரை அழுத்தி திருமணத்திற்குச் சம்மதம் தெரிவித்தாள்.
கல்யாணமும் விமர்சையாக நடந்து. ஒரு வாரம் கழித்துத் தன் கணவனுடன் அயல்நாட்டிற்குப் புறப்பட்டாள் சியாமளா.
கண்ணனின் அன்பில் திளைத்தற்குப் பலனாக மூன்று மாதம் கழித்துச் சியாமளா கருவுற்றாள்.
கண்ணன் அவளைக் கண் இமை போலத் தாங்கினான். ஆனாலும் அவளுக்கு அந்த நேரத்தில் அவளது “தாய் மடி” தேவை பட்டது. உள்ளுக்குள் மறுகினாலும், அதைத் தன் கணவனிடம் காட்ட வில்லை..
ஏழாம் மாதம் வளைகாப்பு நடத்த வேண்டும் என்று அவள் மாமியார் சொன்னதும் சந்தோஷமாகச் சம்மதித்தாள் சியாமளா. தாய் நாட்டிற்குப் போகபோகிறோம் என்ற ஆவலில் ஆனால் அது சிறிது நேரம் தான்..
எல்லோரும் இங்கு வருவதாகச் சொல்லி விட்டனர். மீண்டும் உள்ளுக்குள்ளே மருகினாள்.
ஏழாம் மாதம் வளைகாப்பும் விமர்சையாக நடத்தினான் கண்ணன்..
தன் தாயிடம் சியாமளா “அம்மா பிரசவம் வரை இங்கே இருமா” என்று கேட்டாள்.. அவளுக்குத் தாயின் மடியில் படுக்கணும், தாயின் கையால் சமைத்து வாய்க்கு ருசியா சாப்பிடவேண்டும் போல் இருக்கத் தாயை இங்குத் தங்க சொன்னாள்
“இல்லடாமா, அப்பா தம்பி பாவம் இல்லையாடா, நான் இல்லாம, சாப்பாட்டுக்கு என்ன பண்ணுவாங்க, எவ்வளவு நாள்தான் ஹோட்டல்ல சாப்பிட முடியும்” என்று சொல்லவும்.
“ம்ம்ம் சரி மா, நீ கிளம்பு” என்று மட்டும் கூறினாள்.
மாமியாரோ ஒரு படி மேல், “இங்க பாரு சியாமளா, இப்போதான் உனக்கு மசக்கை குறைஞ்சிட்டே, இனி அவனைப் பக்கத்துலே இருங்கன்னு தொந்தரவு பண்ணாதே, அவன் ஒழுங்கா வேலை பார்த்தா தான் கல்யாணத்துக்கு வாங்கின கடனை அடைக்க முடியும். கார்த்திகாக்கும் கொஞ்சம் நகை நட்டு சேர்க்க முடியும்” என்று சொல்ல..
அதற்கும் ஒன்னும் சொல்ல வில்லை அவள் கண்ணனிடம் கேட்டால் கண்டிப்பாக இந்தியா அனுப்பிவைப்பான் தான் ஆனால், எங்க அம்மா கூடதான் இருக்கனும் என்று ஒரு கண்டிஷன் சொல்லுவான், அதற்கு நான் இங்கிருப்பதே மேல் என்று தோன்றும்…
பிரசவ நாள் நெருங்கியது, கண்ணனிடம் மெதுவாகக் கேட்டாள், “இந்தியா போகலாமா எனக்கு எல்லாரையும் பார்க்கனும் போல் ஆசையா இருக்கு” என்றாள் ஏக்கத்துடன்
“இல்லடா இப்ப முடியாது, இயர் எண்டிங் வேற லீவு கிடைக்காது , அதான் உன் அம்மாவும், என் அம்மாவும் வராங்களே…” என்று முடித்து விட்டான்..
பிரசவ நேரம் நெருங்கவும், சியாமளாவின் தாய்க்கு விசா பிராப்ளம். மாமியார்க்கு மூட்டு வலியாம். கடைசி நேரத்தில் இருவருமே வர முடியவில்லை..
ஒருவாரம் கழித்து. சியாமளா அழகான ஒரு பெண் குழந்தைக்குத் தாயானாள், தன் மகளுக்குக் கிரண் என்று பெயர் சூட்டினாள், அந்த மழலையின் முகம் பாத்து, தன் மன சுணக்கத்தையெல்லாம் மறந்தாள், தன் மகள்தான் தனக்கு உலகம் என நினைத்தாள்,
கண்ணன் கூடக் கிண்டல் செய்வான் “இப்பொழுது எல்லாம் என்னை நீ கண்டுக்கவே மாட்டேன்கிறே சிமி” என்று.
“இவரைக் கண்டுக்காமதான் அடுத்து என் வயிற்றில் வளருதாக்கும்” என்று சிரித்துக்கொள்வாள் சியாமளா.
ஆம் மகள் கிரண் பிறந்து ஒரு வருடம் ஆகியிருந்தது மீண்டும் கருவுற்றிருக்கிறாள், ஆனால் அப்பொழுது இருந்த ஏக்கம் இப்போழுது இல்லை.
ஏன் இப்பொழுதெல்லாம் போனில் மாமியாரின் குத்தல் பேச்சுக்கூடக் கண்டுக்கவே மாட்டாள், இந்தக் காதில் வாங்கி அந்தக் காதில் விட்டு விடுவாள்..
மகன் சஞ்சய் பிறந்தான், இரு குழந்தைகளும் அவளுக்கு உலகம் என்று ஆனார்கள்..
இடையில் ஒரு தடவை இந்தியாக்கு போயிட்டு வரியா என்று கண்ணன் கேட்க
“இல்ல நீங்க சொன்னீங்கல்ல, இன்னும் கொஞ்ச நாள் தானே அதுக்கு அப்புறம் நாம இந்தியாக்கு நிரந்தரமா போய்டலாம்ன்னு அப்பவே போகலாம்” என்று கூறிவிட்டாள்.
“சரிடா…” என்றவன் வேறு ஏதும் சொல்ல வில்லை.
மூன்று வருடம் என்று சொன்னவன், வேலை பளுவினால் ஐந்து வருடமாக மாறிப் போனது. இவளோ தன் மனதை மறைத்து தன் கணவனுக்காகப் பொருத்துக் கொண்டாள்
பக்கத்து வீட்டு ஆஷா கூடச் சிரித்தாள், “போ சியாமி, நீதான் இந்தியா போகணும்ன்னா இப்படிச் சந்தோசப்படுற, ஆனா எனக்கெல்லாம் அப்படி இல்லபா, இங்க இருக்கதான் பிடிச்சிருக்கு…”
*ஒவ்வொருதற்கும் ஒவ்வொரு விதமான பிடித்தம்*ஆஷா, உனக்கு இங்க பிடிச்சிருக்கு. எனக்குத் தாய் நாடுதான்* பிடிச்சிருக்கு. இப்போ *என் குழந்தைகளை எடுத்துக்கோ*. *அவங்களுக்குத் தாத்தா, பாட்டி, மாமா அத்தைன்னு* எல்லோரையும் தெரியும், போட்டோவிலும், ஸ்கைப்லயும் தான் பார்க்கிறாங்க*, பேசுறாங்க, இத நான் விரும்பல, அவங்க அந்த உறவுகளை மனசால உணரனும்னுதான் நான் நினைக்கிறேன்…”
“என்னமோ போ நீயும் உன் சென்ட்டிமென்ட்டும். சரி சரி இந்தியா போயிட்டு எப்போ இங்க ரிட்டன்”
“இல்ல ஆஷா அவர் சொன்ன மாதிரி ஐந்து வருடம் முடிஞ்சிருச்சி, இனி இந்தியாவில் போய் எதாவது பிஸ்னெஸ் பண்ணிக்கலாம்ன்னு சொன்னாங்க”
“சோ உன்னோட சுயநலத்துக்காக, அவரை இங்க இருந்து கூட்டிட்டு போற சியாமி நீ…” என்று சொல்லிவிட்டு ஆஷா சென்று விட்டாள்..
“என்னோட சுயநலத்துக்காகவா” என்று சியாமளா யோசித்துக் கொண்டிருக்கும் போது, குழந்தைகள் சியாமளாவை கூப்பிட, அவர்களின் மேல் கவனம் சென்றது..
இதோ நாளை கிளம்புகிறார்கள். அதான் அவ்வளவு சந்தோசம்,
வேளையில் இருந்து கண்ணன் வந்தான், அவன் முகம் குழப்பத்தில் இருந்தது, அதைக் கவனித்தவள் “என்னாச்சிப்பா ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க” என்று கனிவுடன் கேட்டாள்.
அவள் கன்னத்தைத் தட்டியவன் “ஒன்னும் இல்லடா, நீ சாப்பிட்டியா, குழந்தைங்க தூங்கிட்டாங்களா, எல்லாம் பேக் பண்ணிட்டியா, சிமி…” என்று அவள் கவனத்தைத் திருப்பினான்..
“ம்ம்ம் ஆச்சுங்க எல்லாம் எடுத்து வச்சிட்டேன், அவ்வளவா ஒன்னும் இல்ல, நம்ம திங்க்ஸ், பசங்க திங்க்ஸ், கிட்சன் திங்க்ஸ், அது தவிர, மத்த திங்க்ஸ் எல்லாம் இங்க இருந்தது தானே”
“சரி டா நீ தூங்கு” என்ற கண்ணன் படுத்து விட..
சியாமளாவும் படுத்து விட்டாள். *அவள் முகத்தில் தாய் நாட்டிற்குச் செல்கிறோம் என்ற சந்தோசம். ஆனால் தூங்கும் மனைவியின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்த கண்ணனோ யோசனையில்
விமானத்தில் அமர்ந்திருந்த, சியாமளாவின் மனது இப்பொழுது லேசானது போல் இருந்தது..
சென்னை விமான நிலைதில், விமானம் தரையிரங்கியது. செக்கிங் எல்லாம் முடித்து வெளியே வந்தார்கள், அங்கு ஒரு பக்கம் கண்ணன் குடும்பத்தினர். மறு பக்கம் சியாமளா குடும்பத்தினர்..
கண்ணன் தன் குடும்பத்தை நோக்கி செல்ல, சியாமளாவும் தன் தாயை பார்த்துக்கொண்டே, கண்ணனின் பின்னால் சென்றாள்..
அங்குக் கண்ணனின் தாய், மகனையும், பேர குழந்தைகளையும் நலம் விசாரித்தவர், சியாமளாவை ஒரு பொருட்டாகக் கூட நினைக்க வில்லை
அவளுக்கு மாமியாரை பற்றித் தெரியும் ஆதலால், அதைக் கண்டுகொள்ளாமல் கண்ணனிடம் “நான் அம்மாவை பார்த்துட்டு வரேன்…” என்று சொல்லிவிட்டு, அவன் பதிலை எதிர் பார்க்காமல் சென்று விடவும்.
கண்ணனின் தாயாரோ, “என்னடா உன் பொண்டாட்டி, என்கிட்ட ஒரு வார்த்தைகூடப் பேசாம போறா”
“விடுங்கம்மா, ரொம்ப வருஷம் கழிச்சி பார்க்கிறால்ல, பேசிட்டு வரட்டும்” என்று முடித்துவிட்டான்
நலம் விசாரிப்புகள் முடிந்து, எல்லோரும் கிளம்பினார்கள், சியாமளாவின் தாயாரோ, “எப்போ வீட்டுக்கு வருவீங்க மாப்பிள்ளை” என்று ஆர்வத்துடன் கேட்க
“அடுத்த வாரம் வரோம் அத்தை” என்றான்
“சரி மாப்பிள்ளை” என்று அவரும் பதில் பேசாமல் முடித்துக் கொண்டார்…
அவர்கள் இந்தியா வந்து இரண்டு மாதம் ஆனது, சியாமளா மிகவும் சந்தோசமாக உணர்ந்தாள், தாய் வீடு சென்று வந்தாள், தன் தோழிகளைச் சந்தித்தாள், நிறையக் கோவில்களுக்குச் சென்று வந்தாள்.. ஆறு மாதம் கடந்த நிலையில் ஒருநாள்.
கண்ணன் அவளிடம், “நாம் இன்னும் ஒரு வாரத்தில், யு எஸ் கிளம்ப வேண்டும்” என்று கூறினான்
“என்ன யு எஸ்க்கா ஏன் அங்குத் தான் வேலையை விட்டாச்சே” என்றாள் புரியாமல்
“இல்ல சிமி வேலையை விடல, லாங் லீவ் தான் எழுதி குடுத்தேன்”
புரியலை?
“இல்ல சிமி உன்கிட்ட சொன்னமாதிரி, ஐந்து வருஷத்தில் இங்க வந்திடலாம்ன்னு தான் நினைச்சேன். ஆனா, என்னை ரிலீவ் பண்ண மாட்டேன்னு சொல்லிட்டாங்க. உங்களுக்குத் திறமை இருக்கு லாங் லீவ் வேன்னா எடுத்துக்கோங்கன்னு சொன்னாங்கடா. நாம இங்க கிளம்புறதுக்கு ஒரு நாள் முன்னாடி தான் சொன்னாங்க, உன்கிட்ட எப்படிச் சொல்றதுன்னு நினைச்சிட்டு வந்தேன், ஆனா உன் முகத்துல பார்த்த சந்தோஷத்தை கெடுக்க விரும்பல, அதனால்தான் உன்கிட்ட அப்ப சொல்லலடா”
“இங்க வந்து ஆறு மாசம் ஆகிடுச்சே நீயும் எல்லோரையும் பார்த்தாச்சு. எல்லா இடத்துக்கும் போய் வந்தாச்சு. இனி முடிவு உன் கையில்” என்று சொல்லிவிட்டு சென்று விட்டான் கண்ணன்.
சியாமளா அப்படியே கட்டிலில் அமர்ந்தாள். அவளை யோசிக்க விடாமல், மாமியாரின் குரல் அழைக்க. அறையை விட்டு வெளியே வந்தாள்..
அங்குத் தன் தாய் வந்திருப்பதைக் கண்டவள் “அம்மா எப்போ வந்தீங்க அப்பா வரலையா”
“இல்ல சியாமா, நான் மட்டும் தான் வந்தேன். உன்னையும் பசங்களையும் பார்க்கணும் போல் இருந்ததா. அதான் பார்த்துட்டு போலாம்ன்னு வந்தேன்டா”
இதைத்தான் சியாமளா விரும்பினாள், நினைத்த நேரத்திற்கு, தாயை பார்க்கலாம், தானும் தாய்விட்டுற்கு செல்லலாம், சொந்த பந்தம் எல்லாம் இங்கிருக்க, அங்குச் சென்றால் தனிமையில் வாடனும்” என்று நினைத்தவள் கண்ணனிடம் பேச முடிவு செய்தாள் இங்கேயே இருந்து பிஸ்னெஸ் பண்ணலாம் என்று சொல்ல வேண்டும் என மனதில் நினைத்துக்கொண்டாள்..
அன்று இரவு ஒரு கல்யாண ரிசப்ஷன் கண்ணனின் தந்தை வழி சொந்தம் என்பதால் எல்லோரும் சென்றனர், ரிசப்ஷன் நல்ல படியாக முடிய கண்ணன் குடும்பம் கிளம்பும் போழுது, ஒரு பெண்மணி கண்ணனின் தாயாரை ரொம்ப நாள் கழித்துப் பார்த்ததும் அவரை,விட மனம் இல்லாமல் பேசிக்கொண்டே இருந்தார்,
குழந்தைகள் வேறு அழ ஆரம்பித்து விட்டனர், சியாமளா மெதுவாக.. “அத்தை கிளம்பலாமா, குழந்தைங்க தூக்கத்துக்கு அழராங்க” என்று சொல்ல..
அதுவோ அவளது மாமியாரின் தோழியின் காதில் விழ “ஏன் ரமா, உன் மருமகளுக்கு இங்கிதமே தெரியாதா, நம்ம பேசிட்டு இருக்கோம் வாங்கன்னு கூப்பிடுறா, எல்லாம் நீ கொடுக்குற இடம், அதுவும் இல்லாம வெளிநாட்டல இருக்கோம்கிற திமிரு…” என்று சொல்ல..
அதற்குச் சியாமளாவின் மாமியார் என்ன சொல்லுவார் என்று தெரியும் அவளுக்கு, இங்கு வந்த இந்த ஆறு மாதத்தில் அதைதானே சொல்லி காட்டுகிறார்
“வெளிநாட்டுல இருந்த மாதிரி இங்க சொகுசா இருக்க முடியாமா” என்று அடிக்கடி எல்லா விஷயத்திலும் குத்தி காட்டுவார், ஆனால் இது பழகிப்போன விஷயம் ஆதலால் கண்டு கொள்ள மாட்டாள். மீறிப் பேசினால் வீடே இரண்டாகிவிடும் அதனால் எதற்கு வம்பு என்று வாயை மூடிக் கொள்வாள்.
ஆனால் அதை அடுத்த வீட்டு பெண்மணி சொல்வதைப் பொறுக்க முடியவில்லை அவளால், அதனால் இத்தனை நாளாகத் தன் மனதில் அடக்கி வைத்திருந்த ஆதங்கத்தை எல்லாம் இடம் பொருள் பாராது வெடித்து விட்டாள்.
*ஒரு நிமிஷம், நீங்க சொல்றது எனக்குப் புரியலை வெளிநாட்டில் இருக்கிறா, வெளிநாட்டுல இருக்கிறான்னு சொல்றீங்களே. உங்களுக்கு என்ன தெரியும் அங்க நான் படுற கஷ்டம், அம்மா, அப்பா சொந்தம் பந்தம் எல்லாரையும் விட்டுட்டு தனிமையில வாடினது உங்களுக்குத் தெரியுமா, பிரசவ காலத்தில அம்மாவை பார்க்கனும் அவங்க மடியில் தலை வச்சு படுக்கனும், அவங்க கையால சாப்பிடனும் என்று எவ்வளவு ஏக்கம் இருந்தது தெரியுமா? அதையும் சூழ்நிலை கருதி பொருத்துக்கிட்டேன்*…”
“பிரசவ வலியில நான் துடிச்சி பயந்து கத்தினப்ப. என் கணவனைத் தவிற யார் இருந்தா என் பக்கத்துல. ஆனா அந்த நேரத்தில. என்னைச் சுமந்த என் தாயோட வலியை நினைச்சுப் பொருத்துக்கிட்டேன், அப்புறம் என் குழந்தைகள்தான் என் உலகம்ன்னு ஆனாங்க, இருந்தாலும் மனசால தனிமையா உணர்ந்தேன், கணவர் கூட இருந்தாலும் அவருக்கு இருந்த ஆஃபிஸ் டென்ஷன்ல என்கூட நேரம் செலவழிக்க முடியல. அதை நான் குத்தம்ன்னு சொல்லல, அவர் வேலை அப்படின்னு புரிஞ்சிகிட்டேன்….”
“எத்தனை நாள் எல்லாரையும் பார்க்கனும்ன்னு நினைச்சு அழுதுருக்கேன் தெரியுமா? பொண்ணுங்களுக்குக் கல்யாணம் ஆகிட்டா பெத்தவங்களைப் பிரிஞ்சி, புது உறவுகளோடு சேரும் போது ஒரு பயம் வரும். அதைப் போக்கி நாங்க இருக்கோம்ன்னு சப்போர்ட் பண்ணாம, தொட்டதுக்கெல்லாம் குத்தம் சொல்றதையே வேலையா வச்சிருக்கீங்க நீங்க எல்லாம்…”
“பேசாம இருந்தா ஊமைகோட்டான்னு சொல்றீங்க. பேசினா வாயாடின்னு சொல்றீங்க, நாங்க என்னதாங்க பண்றது. நாங்க புகுந்த வீடு வரும் போது பெத்தவங்கங்கள மறந்துட்டு வந்திடனும், ஆனா இங்க எங்களை என்னமோ எதிரியாவே பார்க்கிறது…”
“என்னவோ நாங்க வந்துதான் அவங்க பிள்ளைகளைப் பிரிக்கிற மாதிரி, அப்படி நினைக்கிறவங்க எதுக்கு அவங்க பையனுக்குக் கல்யாணம் பண்ணி வைக்கனும். மகனா அவங்களோடவே வச்சிக்க வேண்டியதுதானே. ஒரு ஆண் திருமணம் ஆன பிறகு. மகன் மட்டும் இல்ல ஒரு பொண்ணுக்கு புருஷன்.அவனுக்குப் பிறக்கிற குழந்தைகளுக்கு அப்பா. ஆனா அந்த ரெண்டு ரோலையும் செய்ய விடாம பண்றது எந்த விதத்தில் நியாயம், மீறி கேட்டா எங்க மேல குத்தம் சொல்ல வேண்டியது….” என்று தன் மனதில் உள்ளைதையெல்லாம் கொட்டியவள்…தன் மாமியாரையும்…அவர் தோழியையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு திரும்ப
அங்குத் தன் கணவன் கண்ணன் நிற்பதை கண்டு அதிர்ந்தாள். அவன் கண்ணில் கண்ட வேதனையைப் பார்த்தவள் செய்வதறியாது சூழ்நிலை கருதி விலகிச் சென்று தன் குழந்தைகளைக் கவனித்தாள்.
வீட்டிற்கு வந்தவுடன் கண்ணனின் தாய் பொறிய தொடங்கி விட்டார் “டேய் உன் பொண்டாட்டி இந்தப் பேச்சு பேசுறா, நீ அதை வேடிக்கை பார்த்துட்டு நிக்கிற. லலிதா என்னைப் பத்தி என்ன நினைப்பா…” என்று மகனிடம் சொன்னாலும், பார்வை என்னவோ சியாமளாவிடம் தான் இருந்தது…
சியாமளாவின் பார்வையோ தன் கணவனிடம் இருந்தது, அவள் மனதோ படபடவென்று அடித்துக்கொண்டது.
“தான் பேசியதற்குத் திட்டுவானோ, கோபப்படுவானா…” என்று சிறிது நேரம் அவனையே பார்த்தவள், அவன் முகத்தில் எதையும் கண்டுபிடிக்க முடியாது தன் அறைக்குள் சென்று விட்டாள்..
தன் அன்னையைச் சமாதானப்படுத்தி விட்டு, அறைக்குள் வந்த கண்ணன் அங்குக் கட்டிலில் குழந்தைகள் தூங்கி கொண்டிருக்கப் பக்கத்தில் அவர்களையே பார்த்தபடி அமர்ந்திருந்த மனைவியின் தோற்றம் கண்டு, அவள் அருகில் சென்று அமர்ந்தவன் அவளின் தோளில் கை வைக்க…
அவளோ அவனைக் கலக்கத்தோடும் பயத்தோடும் பார்க்க. அவளின் பார்வையின் அவனின் மனம் வலித்தது…
திடீரென்று அவளைத் தன் மடி சாய்த்தவன், அவள் தலையைக் கோதிக் கொண்டே “சிமி. சாரி டா, நான் வேலை வேலை என்று இருந்ததில் உன்னை உன் மனசை சரியா புரிஞ்சிக்கல உனக்குள் இவ்வளவு வருத்தம் இருக்கும்ன்னு நான் நினைச்சு கூடப் பார்க்கல, நான்தான் புரிஞ்சிக்கல நீயாவது சொல்லியிருக்கலாமே சிமி, உன் மனசுல இருக்கிறத என்கிட்ட பகிர்ந்திருக்கலாமே எனக்கு எங்க அம்மாவை பத்தி நல்லா தெரியும்.அவங்கள எதிர்த்து பேசினா, நிலமை இன்னும் மோசமாகும்னு நினைச்சுதான் நான் சைலன்ட்டா போயிடுவேன்.அதுனால உன் மனசு எந்த அளவுல பாதிக்கபட்டுருக்குன்னு இப்பதான் புரியுது. தப்புதான். நான் செஞ்சது.ரெண்டு சைடும் பேலன்ஸ் பண்ணியிருக்கனும். நான் நழுவறதுலயே இருந்துட்டேன்…”
“ஏன் இப்போ கூட மறுபடியும், உன் கிட்ட கேட்காம, யூ. எஸ் போறதுக்கு எல்லாம் ரெடி பண்ணிட்டேன்…” என்று பேசிக்கொண்டே போனவன்,
“போதும் சிமி வெளிநாட்டு மாப்பிள்ளை வேண்டாம் என்று இருந்த உன்னைக் கல்யாணம் பண்ணி உன் மனசை புரிஞ்சிக்காம தவிக்க விட்டுட்டேன்.இனியும் அந்தத் தப்பை செய்ய மாட்டேன்.நாம மறுபடியும் யூ.எஸ் போக வேண்டாம், இங்கேயே இருக்கலாம் சரியா…” என்றபடி அவள் முகத்தைக் கண்ணன் பார்க்க
தன்னை உணர்ந்து பேசும் தன் கணவனையே கண்கள் கலங்க இமைக்காது பார்த்தவள்….
“நீங்க எதுக்குப் பீல் பண்றீங்க. நானும்தானே உங்கள விரும்பி கல்யாணம் பண்ணிகிட்டேன். யூ.எஸ் வந்த புதுசுல ரொம்பக் கஷ்டமா இருந்தது என்னவோ உண்மைதான். ஆனா உங்க அன்பு அதைக் கொஞ்சம் குறைச்சிடுச்சு. பிரசவ நேரத்தில் நீங்க என்னதான் என்னைத் தங்கதட்டில் வச்சு தாங்கினாலும் என் மனசு என்னவோ என்னைப் பெத்தவளை தேடினதும் உண்மைதான்….”
“நான் பிடிவாதமா இந்தியா போயே ஆகனும் என்று நின்றிருந்தா நீங்களும் சம்மதிச்சிருப்பீங்க,ஆனா உங்களுக்கு இந்த வேலை எந்தளவு முக்கியம்ன்னு எனக்குத் தெரியும்பா. அதனால் தான் நீங்க நேரம் காலம் பார்க்காம வேலை பார்த்து டையர்டா வீட்டுக்கு வரும் போது.என் மன கஷ்டத்தைச் சொல்லி உங்களை வருத்தப்பட வைக்க முடியல. நீங்க எங்களுக்காகதானே உழைக்கிறீங்க.எங்களுக்கு என்னகுறை வச்சீங்க அப்படியிருக்கும் போது எப்படி நான் உங்களைக் கஷ்டப்படுத்துவேன். எதோ ஆதங்கத்துல அப்படிப் படபடன்னு பேசிட்டேன்…”
“ஆனா இப்ப நினைச்சு பார்க்கும் போது ஒரு பொண்ணுக்கு கல்யாணம்ன்னு ஒண்ணு நடந்துருச்சின்னா, புகுந்த வீடுதான் நிரந்தரம், ஆனா இந்தப் பாழா போன மனசு சாகிற வரை தன் அப்பா அம்மாவை மறக்காதே. என்ன பண்ண முடியும். அது நாங்க வாங்கிட்டு வந்த வரம் அப்படி,சரி நமக்குதான் சொந்தபந்தங்கள் அருகாமை கிடைக்கல, நம்ம பசங்களுக்குத் தேவை என்று தான் இங்க நிரந்தரமா வர ஆசைப்பட்டேன்.ஆனா இங்க பணத்துக்குக் கொடுக்கிற மரியாதைய பாசத்துக்குக் கொடுக்க மாட்டேங்கிறாங்க… ம்பச், சொந்தங்களோட அருமை தெரியாத இடத்தில் என் பசங்கள வளர்க்க விரும்பல….நாம மறுபடியும் யூ.எஸ் க்கே போகலாம்” என்றாள் சியாமளா.
தன் மனைவியின் மன துயரத்தினை அறிந்தவன். தன்னால் முடிந்த மட்டும் அவளைத் தனிமையில் விடாது பார்த்துக் கொள்ள வேண்டும் என்று மனதினில் உறுதி எடுத்தவன். அவளின் நெற்றில் இதழ்பதித்து விட்டு“சரிடா நீ தூங்கு நான் நம்ம யூ. எஸ் போறதுக்கு உன்டான வேலையைப் பார்க்கிறேன்” என்றவன் அவளைக் கட்டிலில் படுக்க வைத்துவிட்டு அறையை விட்டு வெளியேறினான்…
ஒரு வாரம் கழித்துச் சென்னை விமானநிலைத்தில்…. தன் தாய் தந்தையிடத்தில் கண்ணீருடன் விடைபெற்றாள் சியாமளா. தன் மனதில் இருப்பதை அறிந்து கொண்ட கணவன் தன்னைத் தனிமையில் விட மாட்டான் கண்டிப்பாகத் தாய் மடி தாங்குவான் என்ற நம்பிக்கையில், சந்தோசமாகவே விமானம் ஏறினாள்…
************◆◆◆◆◆***********
No comments:
Post a Comment