Sunday, December 31, 2023

வசந்த காலம் வருமோ?- 59

 வசந்த காலம் வருமோ?- 59

By N Krishnamurthy 

விரதம், நாந்தி முடிந்து பகல் சாப்பாட்டு கடை ஒரு மணிக்கு ஆரம்பிக்கப்பட்டது. ஐட்டங்கள் அதிகம் இல்லாமல் இருந்தாலும், சுவை மிகவும் நன்றாக இருந்தது. கேட்டரிங்

சர்வீசை சேர்ந்த ஒருவரே பந்தி விஜாரணை செய்து கொண்டிருந்தாலும், ரகுவும் பந்தி விஜாரணை செய்து கொண்டிருந்தான்.

ஏழு மணிக்கு  ஜானவாசம் ஆரம்பித்தது. தல்லாகுளம் பிரசன்ன வெங்கடேச பெருமாளையும்,

தாயாரை சேவித்த ஸ்ரீவத்சன் அங்கிருந்து  ஜானவாசத்திற்கே உண்டான ஓபன் டைப் காரில் மண்டபம் வரை பவனி வந்தான்.

அவனை சுற்றி வாண்டுகள் கூட்டம் சொல்லி மாளாது.

ஜானவாசம் முடிந்ததும் நிச்சயதார்த்தம் தொடர்ந்தது.

இதன் பின் அனைவரும் அவரவர்கள் இடத்திற்கு சென்று டிரஸ் மாத்திக் கொண்டு சாப்பாட்டுக்கு வந்து சேர்ந்தார்கள்.

சாப்பிட்டு முடித்தவுடன் ம்ருதுளா, சங்கர க்ருஷ்ணனிடம் அடுத்த நாள் ஒரு மணி நேர கச்சேரிக்கு என்ன என்ன பாடப் போகிறாள் என்று கூறி, பின்னர் இது தவிர  தோடி ராகத்தில் ஒரு பாட்டு பாடலாம்னு இருக்கேன். "தோடி உங்களுக்கு பழக்கம் தானே" என்று கேட்டாள். என்ன பாட்டு என்று சொல்லவில்லை. "தோடியா. இட் ஈஸ்  ஓகே வித் மீ" என்றான் சங்கர க்ருஷ்ணன்.

மறுநாள் காலை முஹுர்த்தம் பத்து- பத்தரை மணிக்குள் இருந்ததால், காசி யாத்திரை,ஊஞ்சல்,பாலும் பழமும் கொடுத்தல்,பிடி  சுத்தி போடல், ப்ரவரம்  போன்றவைகள் முடிக்கப்பட்டன.

கன்யாதானம் முடிந்ததும்,பத்தே கால் மணிக்கு வசுமதியின் கழுத்தில் ஸ்ரீவத்சன்   மூன்று முடிச்சு போட்டு அவளை தன் மனைவியாக ஆக்கிக்கொண்டான்.

அதை தொடர்ந்து மெட்டி அணிவிப்பது, சப்தபதி, அம்மி மிதித்தல்,அருந்ததி பார்த்தல், பொரியிடுதல் ,க்ருகபிரவேசம்   போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

மதியம் சாப்பாடு பிரமாதமாக இருந்தது. மாப்பிள்ளை வீட்டார்கள் யார் சமைப்பது என்று கேட்டு தெரிந்து கொண்டார்கள். கேட்டரிங் சர்வீஸ்க்கு சமையலை கொடுப்பது என்பது அந்த காலத்தில் இல்லாமல் இருந்ததால் அந்த மாதிரி அரேன்ஜ் செய்திருப்பதை கண்டு  எல்லோரும் ஆச்சரியப்பட்டார்கள்.

மூன்று மணிக்கு நலங்கு வைத்துக் கொள்ளலாம் என்று இரு வீட்டாரும் தீர்மானம் பண்ணினார்கள். மூன்றே காலுக்கு நலங்கு ஆரம்பமானது. வழக்கம் போல தேங்காய் உருட்டுதல், தலைக்கு மேல் மேல் சுட்ட அப்பளத்தை உடைப்பது, மாப்பிள்ளை முகத்தின் முன்  கண்ணாடியின் பின்புறத்தை காட்டுவது போன்ற வழக்கமான சம்பிரதாயமான நிகழ்ச்சிகள் நடைபெற்றதும், பிள்ளையின் அம்மா வசுபதியை  பார்த்து "ஒரு பாட்டு பாடம்மா" என்றாள். வசுமதி மாமியாரிடம் "நேக்கு குரல் அவ்வளவு நண்ணா இருக்காது. நான் பாட ஆரம்பிச்சா கூட்டமே காலியாயிடும்.நேக்கு பதிலா  என் மாமா பொண்ணு ம்ருதுளாவ  பாட சொல்றேன்" என்று சொன்னாள். இதை  கேட்ட பிள்ளை வீட்டுக்காரர்களை சேர்ந்த ஒரு மாமி "ரெண்டு வருஷமா மெட்ராஸ்ல சபாவுல பாட்டு பாடி, சுப்புடு சாரையே அசர வெச்ச அந்த ம்ருதுளாவா" என்று கேட்டாள்.  "ஆமாம்.நீங்க சொல்ற அதே ம்ருதுளாதான்" என்று பெருமையுடன்  சொன்னாள்  வசுமதி.

ம்ருதுளா, தொண்டையைக் கனத்துக் கொண்டு பாட ஆரம்பிக்கு முன்  குறுக்கிட்ட வசுமதி" ஆறு மணிக்கு ம்ருதுளாவோட  கச்சேரி இருக்கு. இப்போ ஒரு சேஞ்சுக்கு ஒரு சினிமா பாட்டு பாடட்டும்" என்றாள்.  கொஞ்ச நாட்கள் முன்பு திரைக்கு  வந்து, சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கும் இதய கமலம் படத்திலிருந்து "உன்னை காணாத கண்ணும் கண்ணல்ல" பாடலை பாட ஆரம்பித்தாள் ம்ருதுளா. மெய்மறந்து பாடிக் கொண்டிருந்தவள்,  கண்ணை நாற்புரமும் சுழலவிட்டு   சங்கர க்ருஷ்ணன் எங்கே இருக்கிறான் என்று பார்த்தாள். கூட்டத்தில் அவனை கண்டுபிடிக்க முடியவில்லை. தான் அவனை  தேடுவதாக எல்லோருக்கும் தெரிந்தால் நன்றாக இருக்காது என்று நினைத்துக் கொண்டு, மீண்டும்  மெதுவாக கூட்டத்தில் தன் பார்வையை ஓடவிட்டாள். "இன்று நீ ஒரு பாதி, நான் ஒரு பாதி" என்ற இடம் பாடலில் வரும் பொழுது, அவன்  அவள் பார்வைக்குத் தெரிந்தான். அவனைப் பார்த்ததும், பார்க்காத மாதிரி பார்வையை திருப்பினாள்   ம்ருதுளா. சங்கர க்ருஷ்ணன் அவள் பார்வையால், உடம்பில் மின்சாரம் பாய்ந்தது போல உணர்ந்தான். இதையெல்லாம் வசுமதி  கவனித்துக் கொண்டிருந்தாள்

" ஒரு கல்யாணத்தில், இன்னொரு கல்யாணம் நிச்சயமாகும் என்று சொல்வார்கள். இது  சரியாக இருக்கும் போல இருக்கிறது" என்று அவள் நினைத்தாள். ம்ருதுளா  பாடி முடித்ததும் பயங்கர கரகோஷம் கிடைத்தது. பிள்ளை வீட்டை சேர்ந்த  ஒரு மாமி " சுசிலா அம்மா பாடுற மாதிரியே இருந்தது. கொஞ்சம் கூட வித்தியாசமே கண்டுபிடிக்க முடியல" என்று கூறினாள். நலங்கு  முடியும் சமயத்தில் ரங்க நாயகி அங்கு உட்கார்ந்து கொண்டிருந்தவர்களிடம்"  சாயங்காலம் ஆறு மணிக்கு, இப்ப பாட்டு பாடின  என்னோட என்னோட தம்பி பொண்ணு, ஒரு மணி நேரம் கச்சேரி பண்ண போறா. பத்திரிக்கையில்  இத போட முடியாம ஆயிடுத்து" என்றாள்.

 எல்லோரும் முகம் கழுவிக்கொண்டு வந்தபோது, சமையல்காரர் தொண்ணையில் மிச்சர் மற்றும் மைசூர் பாகு வைத்து எல்லோருக்கும் கொடுத்தார். தொடர்ந்து காபி கொடுக்கப்பட்டது.

No comments:

Post a Comment