Saturday, January 13, 2024

முற்பகல் செயின்..4

 முற்பகல் செயின்..4

By N Krishnamurthy 

வீட்டின் கூடத்தில் இருந்த  பிளாஸ்டிக் இழையால் பின்னப்பட்ட, 

பழைய சோபாவில் அவர்கள் இருவரையும் அமரச் சொன்னார் நமச்சிவாயம். அங்கிருந்த ஸ்டீல் மடக்கு நாற்காலியை விரித்து அமர்ந்து கொண்ட அவர் "சொல்லுங்க" என்றார் வந்தவரை பார்த்து.

இவர்களுடன் சேர்ந்து உள்ளே நுழைந்த டிரைவர், கையில் இருந்து ஒரு கனமான பையை காந்திமதியிடம் கொடுத்தார். காந்திமதி கோமதியிடம் "ஒரு தாம்பாளம்  குடுங்க" என்று கூறி, தாம்பாளத்தை வாங்கி அதில் டிரைவர் கொடுத்த பையிலி ருந்து ஐந்து  ஆப்பிள்,ஒரு அன்னாசிப்பழம், மலை வாழைப்பழம் ஒரு டசன்,1/2 கிலோ திராக்ஷை,அரை கிலோ திருநெல்வேலி அல்வா பாக்கெட்,வெற்றிலை, பாக்கு  மற்றும் ஐந்து முழத்திற்கு குறையாமல் மதுரை மல்லி ஆகியவற்றை வைத்து அடுக்கி கோமதியிடம் கொடுத்தாள். 

வந்தவர் பேச ஆரம்பித்தார்.

" என் பெயர் காசிநாதன். சொந்த ஊர் அம்பாசமுத்திரம். மெட்ராஸ்ல முப்பது வருஷமா இருக்கோம். அப்பா சிவசுப்பிரமணியப்பிள்ளை  ஊரிலேயே பல வருஷம் தாசில்தாராக  பணியாற்றி இருக்கிறார். நான் தற்சமயம் தமிழ்நாடு வேர் ஹவுசிங் கார்ப்பரேஷனில் அண்டர் செகரட்டியாக இருக்கேன். போன வருஷம் தான் IAS கெடச்சது. இவங்க என்னுடைய ஒய்ப் காந்திமதி. எனக்கு இரண்டு பெண்கள். பெரியவள் நித்யா. அடுத்தவள் வித்யா. இருவருக்கும் இன்னும் கல்யாணம் முடிக்கவில்லை. நித்யா கல்யாண விஷயமாக பாத்துக்கொண்டிருந்தபோது  உங்க  பையன் திருஞானசம்பந்தம் ஜாதகம் எங்களுக்கு கெடச்சது. உங்க மனைவி அதை யாரோ உறவினரிடம் கொடுத்திருக்கிறாங்க  போலயிருக்கு. ஜாதகத்தை எங்கள் ஜோசியருடன் காட்டியதில் இரண்டு ஜாதகங்களும் பொருந்துவதாக கூறுகிறார்" என்று கூறி சிறிது இடைவெளி விட்டு விட்டு பிறகு

 " எங்களுக்கு நிறைய பெரிய இடங்களில் இருந்து ஜாதகம் வந்தன. இருந்தா கூட நாங்க உங்களைப் போல, நம்ம சமூகத்தை சேர்ந்த  சேர்ந்தவராக உள்ள  நல்ல குடும்பத்தில்  சம்பந்தம் வைத்துக் கொள்ள ஆசைப்படறோம். அது விஷயமாகத்தான் பேச வந்தோம்" என்றார். உள்ளிருந்து வந்த கோமதி இருவருக்கும் ஆரஞ்சு ஜூசை கொண்டு வந்து கொடுத்தாள். இருவரும் ஜூசை அருந்தினர். 

நமச்சிவாயம்"  எங்களுக்கு இருக்கறது ஒரே பையன். பி.ஹெச்.டீ முடிச்சூட்டு  அமெரிக்காவில வேலை செய்யறான்"  என்று கூறினார். பின்னர் அவர் காசிநாதனிடம்"   உங்க பொண்ணு ஜாதகத்தை கொடுத்துட்டு போங்க. அத நாங்க எங்க ஜோசியர் கிட்ட காட்டிட்டு பொருத்தம் பார்க்கிறோம். அதன் பின்பு உங்களுக்கு தகவல் சொல்லி அனுப்பறோம்.அப்புறம் எல்லாம் ப்ராப்தப்படி நடக்கட்டும்" என்றார். இதற்குள் கோமதி குறிக்கிட்டு காந்திமதியிடம் " பொண்ணு போட்டோ இருந்தா குடுங்க. பையனுக்கு அத அனுப்பி வைக்கிறோம்" என்று கூறினாள். இதற்காகவே ஒரு கவரில் போட்டு வைத்திருந்த நித்யாவின் போட்டோவை கோமதியிடம் காந்திமதி நீட்ட , கவரில் இருந்து போட்டோவை எடுத்து பார்த்த கோமதி " பெண் லட்சணமாக இருப்பதாக" நினைத்தாள்.

இதன்பின் காசிநாதன்" கிட்டத்தட்ட 25 வருஷம் கவர்மெண்ட் சர்வீஸில் இருக்கறேன். அதிகம் பிக்கல் பிடுங்கல் கிடையாது. சென்னையில நங்கநல்லூரில் சொந்த வீட்ல இருக்கோம். கடவுள் வேண்டியதக்கு மேல எங்களுக்கு கொடுத்திருக்கான். நித்யா போன வருஷம் தான் பிகாம் கம்ப்ளீட் பண்ணி இருக்கா. வித்யா தற்சமயம் பிஎஸ்சி முதல் வருஷம் படிச்சிண்டு இருக்கா. நீங்க பொருத்தம் சரியா இருக்குன்னு சொன்னீங்கன்னா எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் கல்யாணத்த  வச்சுக்கலாம்.நீங்க எதிர்பார்க்கிறதுக்கு மேல சீர்,செனத்தி பண்ணி நாங்க கல்யாணத்தை நடத்தி கொடுக்க முடியும்" என்றார். அவர் பேச்சில் உங்களைவிட நாங்கள் பல மடங்கு உயர்ந்தவர்கள் என்று பொருள் தொக்கி நிற்பது நமச்சிவாயம் உணர்ந்து கொண்டார். எனவே அவர் காசிநாதனிடம் " பணம் என்னங்க பணம். இன்னைக்கு வரும் நாளைக்கு போகும். நமக்கு வேண்டியது நல்ல குணம் தான். நான் ஜோசியர் கிட்ட பாத்துட்டு வந்ததுக்கு அப்புறம் உங்களுக்கு போன் பண்ணி முடிவு சொல்லிடறோம். அதுக்குள்ள பையனுக்கு போட்டோ அனுப்பிச்சு அவன்  சம்மதத்தையும் வாங்கிறோம்"என்றார். "அப்ப நாங்க விடை  பெத்துகறோம்" என்றார் காசிநாதன். அவர்கள் இருவரையும் வழி அனுப்பி வைத்தார்கள்  நமச்சிவாயமும் கோமதியும்.

அவர்கள் போன பிறகு நமச்சிவாயம் கோமதியிடம்"  அந்த ஆள் என்ன பேசினான் பாத்தியா.தன் கிட்ட பணம் கொட்டி கிடக்கு  என்று சொல்லாமல் சொல்றான்.IAS ம் படிச்சு வாங்கினது இல்லை. கவர்மெண்ட்டா கொடுத்ததுதான். எனக்கென்னமோ இந்த இடம்  சரிப்பட்டு வரும்னு தோணலை" என்றார். அதற்குள் கோமதி " நம்மதான் வாழ் நாள் பூரா கஷ்டப்பட்டூட்டோம்.. பையனாவது நல்லபடியா, சந்தோஷமா, வசதியோட இருக்கட்டுமே. அத ஏன் நீங்க கெடுக்கறீங்க. பொண்ணு போட்டோவ்ல பாக்குறதுக்கு லட்சணமா இருக்கா. முதல் வேலையா இன்னிக்கே திருவுக்கு போட்டோ அனுப்பி வைங்க. இந்த வாரம் முடிவுல திரு போன் பண்ணும் போது நம்ம இது விஷயம் பற்றி அவங்க கிட்ட பேசலாம். நீங்க ரெண்டு ஜாதகத்தையும் எடுத்துட்டு போய்  நம்ப ஜோசியர் கிட்ட காட்டிட்டு வந்துடுங்க" என்றாள்.

திரும்பி செல்கின்ற வழியில் காந்திமதி மெல்லிய குரலில் கணவனிடம் " என்னங்க ரொம்ப சாதாரண குடும்பமா இருக்கும் போல இருக்கே. சோபாவ பாத்தீங்களா. பத்து வருஷ பழசாயிருக்கும் போல. அவரும் கொஞ்சம் ரோஷக்கார மனுஷனா இருப்பாரோ? இந்த சம்பந்தம் ஒத்து வருமா" என்றாள். இதைக் கேட்ட காசிநாதன் சிரித்துக்கொண்டே 

" போடி பைத்தியம். சேறாயிருக்கற வயல பாப்பயா,அதல வளர்ற நெல்ல பாப்பயா?  உன் பொண்ணு இங்கயா குடும்பம் நடத்த போறா. கல்யாணம் ஆனா அமெரிக்காவுல போய் செட்டில் ஆயிடுவா. அந்த பையனுக்கு நிச்சயம் ஒரு வருஷத்துக்கு 50 லட்சத்தை குறையாமல் சம்பளம் இருக்கும். கல்யாணம் ஆனதுக்கப்புறம் இவங்களால ஒண்ணும் ஆக போவதில்லை .பணமில்லாதவந்தான் குணத்தைப்பத்தி பேசுவான். வேலைய பாப்பையா" என்றார்

(தொடரும்)

No comments:

Post a Comment