Friday, January 19, 2024

முற்பகல் செயின்.. 9

 முற்பகல் செயின்.. 9

By N Krishnamurthy 

நித்யா காசிநாதன் வீட்டிற்கு சென்ற பிறகு 10 நாள் கழிந்தும்  போனே வரவில்லை. பின்பு ஒரு நாள் காந்திமதி, கோமதிக்கு போன் செய்து "சௌக்கியமா இருக்கீங்களா சம்பந்தி" என்று வழக்கமாக கேட்பது போல் கேட்டுவிட்டு"  நித்யா இன்னும் கொஞ்ச நாள் இருக்கணும்னு ப்ரியபடறா. இதல  உங்களுக்கு ஒண்ணும் ப்ரோப்ளம் இல்லையே" என்றாள் . அவளிடம் கோமதி "எனக்கென்ன பிராப்ளம். ஒண்ணும் கிடையாது. அவளுக்கு எங்க  இருக்கணம்னு இஷ்டமோ அங்கு இருக்கட்டும்"என்றாள்.

காந்திமதி " சரிங்க. சாரை  கேட்டதாக சொல்லுங்கள்" என்று ஃபோனை வைத்து விட்டாள்.  கோமதிக்கு இதை நித்யா தன்னிடம் சொல்லி இருக்கலாமே என்ற வருத்தம் தான் மேலோங்கி நின்றது.

கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் நித்யா தாய் வீட்டிலேயே தங்கி இருந்தாள். வேறு பிள்ளையை பெற்றவர்ளாக இருந்தால் இதை ஒரு பெரிய பிரச்சினையாக ஆக்கி  இருப்பார்கள். ஆனால் நமச்சிவாயமும், கோமதியும் சாதாரண பெற்றோர்கள் இல்லையே. எனவே அவர்கள் இதை ஒரு பொருட்டாக நினைக்கவில்லை.

இரண்டரை மாதங்கள் கழிந்ததும் திரு, நித்யாவுக்கு விசா எடுத்து அனுப்பி இருந்தான்.அந்த வாரம் நமச்சிவாயத்திடம் பேசும் போது அவன் இந்த விஷயத்தை கூறினான். பின்பு ஏதோ நினைத்துக் கொண்டவன் போல "ஏம்பா கல்யாணத்திற்கு செலவழித்து இருப்பேங்களே. அந்த பணத்துக்கு என்ன பண்ண போறீங்க. அது எவ்வளவுனு சொன்னீங்கன்னா  நான் அத அனுப் பிடறேன்" என்றான். 

" வேண்டாம்பா. என்னுடைய பென்ஷன் சேமிப்பிலிருந்து   அது சரி பண்ணிட்டேன். நீ அத அனுப்ப வேண்டாம்" என்று கூறினார். மீண்டும் திரு அவரிடம்"வேண்டும்னா அனுப்புறேன் பா" என்று கூறினான். 

" இப்போதைக்கு வேண்டாம்ப்பா. தேவைப்பட்டால் நானே உன் கிட்ட கேக்கறேன்" என்றார்  நமச்சிவாயம். நித்யாவுக்கு திருவே டிக்கெட் எடுத்து அனுப்பி இருந்தான்.

நித்யா அமெரிக்காவிற்கு கிளம்புவதற்கு   முதல் நாள் அவள் காசிநாதன் வீட்டில் இருந்து நமச்சிவாயம் வீட்டிற்கு தந்தை, தாயுடன் வந்திருந்தாள். வந்தவுடன் அவள் நமச்சிவாயத்திடம் " என்ன மாமா சௌக்கியமா" என்றும் கோமதியை பார்த்து " நல்லா  இருக்கீங்களா" என்றும் கேட்டாள்.  " நாங்க நல்லாத்தான் இருக்கோம்" என்றார் நமச்சிவாயம்.

 " நாளைக்கு ராத்திரி பிளைட்ல நான் கெளம்புறேன். அவர் விசா ஏற்பாடு பண்ணி இருக்கார். உங்க கிட்ட சொல்லி இருப்பார்னு என்று நெனைக்கிறேன்" என்றாள். "ஆமாம்மா , சொல்லி இருக்கான்" என்ற கோமதி "ஜாக்கிரதையா போயிட்டு வாம்மா. முன்பின் தெரியாத இடம்.பார்த்து பழகு. பக்குவமா நடந்துக்கோ" என்று அறிவுரை கூறினாள். இவர்களை விட்டு பிரியப்போகிறோம் என்ற சந்தோஷத்தில் நித்யா மிகவும் ஆதூரத்துடன்  கோமதியை பார்த்து " அத்தை. நான் பாத்து போறேன். நீங்க உடம்ப பாத்துக்கோங்க. வேளா வேளைக்கு பிரஷர் மாத்திரை விடாம சாப்பிடுங்க " என்று கூறி,  நமச்சிவாயத்திடம் " சரி மாமா. நீங்களும் உடம்ப பாத்துக்கோங்க" என்று சொல்லிய பின்  கிளம்பினாள். திடீரென்று நினைத்துக் கொண்ட காசிநாதன் " நீங்கள் ஏர்போர்ட்டுக்கு வரதா  இருந்தா சொல்லுங்க. நான் கார் அனுப்பி வைக்கிறேன்" என்று சொன்னார்.

அதற்கு நமச்சிவாயம் "நாங்க அங்க வந்து என்ன பண்ண போறோம். அதான் நித்யா இப்போதே வந்து எங்ககிட்ட சொல்லிட்டு கெளம்பராளே. நாங்க ஏர்போர்ட்டுக்கு  வரல" என்றார். இது காசிநாதனுக்கு மிகவும் சௌகரியமாக போனது. ஏர்போர்ட்டில் நித்யாவுடன்  தனியாக பேசிக் கொண்டிருக்கலாம் என்று அவர்  குடும்பத்தார்  நினைத்தார்கள் . இரண்டு மணி   முன்னதாகவே ஏர்போர்ட்டுக்கு போயிருந்த காசிநாதன் குடும்பத்தினர், நித்யாவும் கிட்டத்தட்ட ஒன்றரை  மணி நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள்.

பின்னர்  அமெரிக்கா செல்லும் விமானத்தை பிடிப்பதற்கு முன் உள்ள ஃபார்மாலிட்டிகளை நிறைவேற்றுவதற்காக கியூவில் நின்று  கொண்டாள் நித்யா.

No comments:

Post a Comment