Saturday, January 27, 2024

வசந்த காலம் வருமோ-79

 வசந்த காலம் வருமோ-79?

By N Krishnamurthy 

மறு நாள் ரகுநந்தனுடய அம்மா  ஸ்ரீவத்சனுக்கு  போன் செய்து, ரங்கநாயகியின்  வீட்டு டெலிபோன் நெம்பரை வாங்கிக்கொண்டு, ரங்கநாயகிக்கு போன் செய்தாள். போனை பத்மநாபன் தான் எடுத்தார்."ஹலோ.யார் பேசரது "" என்று அவர் கேட்டவுடன், அவள்

"நான் ஸ்ரீவத்சனின் சித்தி. ஜெய்ப்பூரில் இருந்து பேசறேன்"என்றாள். இதை கேட்ட பத்மநாபன் "உங்களை நண்ணா ஞாபகம் இருக்கு. சொல்லுங்கோ" என்றார்.

" நான் உங்க ஆத்து மாமி கிட்ட கொஞ்சம் பேசணும்" என்றாள் ரகுநந்தனின் தாய் ."சித்த இருங்கோ  கொடுக்கிறேன்" என்றவர் ரங்கநாயகியை கூப்பிட்டு,விஷயத்தை சொல்லி போனை அவளிடம் கொடுத்தார்.

ரகுநந்தனின் அம்மா " என்ன மாமி சௌக்கியமா" என்று விஜாரித்தாள்.  " நான்  நண்ணா இருக்கேன். நீங்க எப்படி இருக்கீங்க. ஆத்துல மாமா சௌக்கியமா.உங்க பையன் சௌக்கியமா இருக்காரா" என்று கேட்டாள் ரங்கநாயகி.

 " எல்லாரும் சௌக்கியம்தான். சௌக்கியத்துக்கு ஒண்ணும் கொறச்சல் இல்லை" என்று சொன்னவள் " ஒரு விஷயம் உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்" என்று நேரடியாக விஷயத்திற்கு வந்தாள்.  "சொல்லுங்க மாமி" என்றாள் ரங்கநாயகி. "என் பையன் ரகுநந்தனை உங்களுக்கு தெரியும்னு நெனைக்கிறேன். அவன் C.A முடிச்சுட்டு இங்க ஒரு கம்பெனியில் அசிஸ்டன்ட் அக்கவுண்ட்ஸ் மேனேஜரா வேலை செஞ்சுண்டு இருக்கான். இருபத்தி நாலு  வயசு ஆகறது. கல்யாணம் பண்ணலாம்னு இருக்கோம். நல்ல பொண்ணா இருந்தா பாக்கலாம்னு நெனைக்கும்போது உங்க தம்பி பொண் ஞாபகம் வந்தது" என்று கூறினாள். இதை  கேட்ட ரங்கநாயகி" ஆமாம் இந்த வருஷத்தோட அவ படிப்பு முடியறது. இப்ப பார்க்க ஆரம்பிச்சாதான் சரியான டயத்துல கல்யாணம் பண்ண முடியும்" என்றாள்.

 " நீங்க கொஞ்சம் உங்க தம்பிக்கு, எங்களுக்கு இந்த விஷயத்துல இன்ட்ரஸ்ட் இருக்குன்னு  கோடி காட்ட முடியுமா. அவாளுக்கும்  சரின்னு பட்டா  மேல் கொண்டு ஆக வேண்டியத  நம்ப பாக்கலாம்" என்றாள். "அதுக்கு என்ன மாமி செஞ்சுடறேன்" என்று கூறியவள் "இந்த நவம்பரில் என் தம்பிக்கு அறுபது வரது. சஷ்டி அப்த பூர்த்திய நாங்க தான் முன்னாடி இருந்து நடத்தணும். அந்த சமயத்துல நான் இது விஷயமா அவன் கிட்ட பேசிட்டு உங்களுக்கு ஒரு நல்ல முடிவா சொல்றேன்" என்றாள் ரங்கநாயகி. ரகுநந்தனின் தாயார் தாயார் " நவம்பருக்கு இன்னும் ஏழு மாசத்துக்கு மேல இருக்கு.அதுக்குள்ள என்ன வேணாலும் நடக்கலாம். நீங்க எதுக்கும் இப்பவே  போன் பண்ணி உங்க தம்பிக்கு ஒரு வார்த்தை சொல்லீட்டேங்கேன்னா நவம்பர்ல நிச்சயதார்த்தத்தை கூட வெச்சுகலாமே" என்றாள்."சரி மாமி. இதுவும் நல்ல ஐடியாவா  இருக்கு. நான் அவனுக்கு இப்பவே  போன் பண்ணிட்டு உங்களுக்கு சொல்றேன். உங்க நெம்பரை கொடுங்கோ" என்றாள்.

ரகுநந்தனின் தாயார்  ரங்கநாயகிக்கு தன் போன் நெம்பரை கொடுத்த பின் "சரி.வச்சூடட்டமா.உங்களுக்கு தான் சிரமம் கொடுக்கறேன்" என்று கூற,ரங்கநாயகி 

" உறவூன்னு அப்புறம் நாங்களெல்லாம் எதுக்கு இருக்கோம்" என்று கூறினாள். இதன் பின் லைனை துண்டிக்கப்பட்டது.

ரங்க நாயகி அருகிலிருந்த பத்மநாபனிடம் விஷயத்தை கூறினாள்.இதைக் கேட்ட அவர் "முதல்ல ஜாதகம் பொருந்தணம் . அவா ஜாதகத்தை அமிச்சாதானே பாக்கமுடியும் " என்றார்.

அதற்கு அவள் "ஜாதக பொருத்தம் பாக்றதெல்லாம் அப்புறம்தான். பஸ்சல எடம் கிடைக்க ஜன்னல் வழியா கைகுட்டைய போடரமாதிரி இது. சாரங்கனுக்கு போன் பண்ணி ஒரு வார்த்தை சொல்லீட்டா நல்லதில்லையா " என்றாள். "என்னமோ செய்"என்றார் அவர் அதிருப்தியாக. ரங்க நாயகி சாரங்கனுக்கு போன் செய்த போது லைன் கொஞ்சத்தில் கிடைக்கவில்லை.

No comments:

Post a Comment