முற்பகல் செயின்.. 7
By N Krishnamurthy
திருமணத்திற்கு முதல் நாள் காலை ஏழு மணிக்கு நமச்சிவாயம், கோமதி, திருவை அழைத்துப்போக கார் வந்தது.
மண்டபத்தை அடைந்ததும், காசிநாதன், காந்திமதி மற்றும் அவர்களைச்சேர்ந்த முக்கியப்பட்டவர்கள் அவர்களை வரவேற்றினர். மாலை, மாப்பிள்ளை அழைப்பு சுருக்கமாக முடிந்தது.
ரிசப்ஷனுக்கு நித்யாவை தயார் செய்ய அருகிலிருந்த ப்யூட்டி பார்லலிருந்து வந்திருந்த பெண் நித்யாவின் நிறத்தை மாநிறத்திலிருந்து சிகப்பாக்க முயன்று கொண்டிருந்தாள்.
அலங்காரம் முடிய கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் ஆனது.திரு, ப்ரவுன் கலர் சூட் அணிந்து வெள்ளை நிற ஷர்ட்டுக்கு மாறினான். ஸ்ட்ரைப்ஸ் போட்ட டையையும் மாட்டிக்கொண்டான்.
நமச்சிவாயம் வெள்ளை நிற அரைக்கை ஷர்ட்டும், எட்டு முழ மில் வேஷ்டியையும் அணிந்து கொண்டார். கோமதி நீல நிற பட்டு புடவையில் மிக கண்ணியமாக தெரிந்தாள்.
நித்யா, குஜாரத் ஸ்டைலில் புடவை அணிந்து வித்யாசமாக காட்சி அளித்தாள். கிட்டத்தட்ட அதே ஸ்டைலில் வேறு கலர் புடவையில் வித்யா இருந்தாள். சற்று உற்றுப்பார்க்கும்போதுதான் வித்யாவையும், நித்யாவையும் பிரித்து அடையாளம் கண்டு கொள்ள முடிந்தது.
ஆறரை மணிக்கு ரிசப்ஷன் ஆரம்பமானது. மெல்லிசை கச்சேரி குழுவினர் பாடல்களை காது செவிடாக்கும் சத்தத்தில் பாட ஆரம்பித்தனர்.
கொஞ்சம் கொஞ்சமாக, விருந்தினர்கள் வர ஆரம்பித்தனர்.சொந்த பந்தங்களை விட,காசி நாதனின் டிபார்ட்மெண்ட்டை சேர்ந்தவர்களும்,அவரது நண்பர்களுமே அதிகமாக வந்தனர்.
பரிசுப்பொருள்களுடன் நின்றவர்களின் வரிசை நீண்டு கொண்டே போனது.
மேடையின் மேல் புது மண தம்பதிகளுடன் நின்று கொண்டிருந்த காசிநாதன் வந்த விருந்தினர்களை திருவுக்கு அறிமுகப்படுத்தினார்.
தனது மாமனாருடன் பணி ஆற்றிக்கொண்டிருந்த பல ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுடன் கை குலுக்கியபோது , தனது மாமனாரின் செல்வாக்கை கண்டு வியந்து போய் பிரமிப்படைந்தான் திரு.
இப்படிப்பட்ட செல்வாக்குள்ளவர் தனது மகளை தனக்கு கொடுத்தது, தனது பெற்றோர்கள் ஒடாய் உழைத்து தன்னை இந்த நிலைக்கு உருவாக்கியதால் தான் என்ற உண்மையை ஏனோ அவன் மறந்து போனான். இது போல்தான் நிறைய குடும்பங்களில் நடக்கிறது.
நித்யாவுக்கு வந்த பரிசுப்பொருள்களில் பத்தில் ஒன்று கூட திருவுக்கு வரவில்லை. காசிநாதன் உறவினர்களுடனும், நண்பர்களுடனும் சேர்த்து திரு,நித்யாவை கிட்டத்தட்ட நூறு போட்டாக்களில் க்ளிக் செய்தார் போட்டோகிராபர்.
மறு நாள்திருமணமும் ஆடம்பரமாக நடந்தது.திடிரென்று மண்டபத்தில் போலீஸ் பட்டாளம் கூடியது. தமிழ்நாட்டின் முதலமைச்சர் வந்திருந்து, பூங்கொத்து கொடுத்து மணமக்களை வாழ்த்தினார்.பலமுறை காசிநாதன் வற்புறுத்தியும்,வேலை பளு காரணமாக அவர் உணவருந்தாமலேயே சென்றார்.
வேடிக்கை என்னவென்றால் நமச்சிவாயத்தையும்,கோமதியையும் முக்யஸ்தர்கள் எவருக்கும் முஹுர்தத்தன்றோ,முந்திய நாளோ அறிமுகப்படுத்தவே இல்லை. இதை திரு உணர்ந்ததாகவே தெரியவில்லை. ஏதோ சொந்தக்காரர் வீட்டு திருமணத்திற்கு வந்த மன நிலையில் இருந்தார் நமச்சிவாயம்.
பணம் பத்தும் செய்யும் என இத்திருமணம் கண்கூடாக காட்டியது.
No comments:
Post a Comment