கூடாரவல்லி
அக்கார அடிசில்
மார்கழி 27
அக்கார அடிசில் என்பது வைஷ்ணவ ஆலயங்களில் இறைவனுக்குப் படைக்கப்படும் ஓர் நிவேதனமாகும்.
குறிப்பாக இது மார்கழி மாதம் 27 ஆம் நாள் செய்யப்படும். நெய்யுண்ணோம் பாலுண்ணோம் என்று பாவை நோன்பைத் துவங்குவோர் மிகையளவு நெய்யும் பாலும் கலந்து இப் பண்டத்தைச் செய்வர்.
பால், நெய், அரிசி, பயத்தம் பருப்பு வெல்லம், ஏலக்காய்த் தூள், பச்சைக் கற்பூரம் இவை கலந்து இது செய்யப்படுகிறது.
சாதமாக்கும்போது அரிசி நீரில் வேக வைக்கப்படும்.
இங்கோ அரிசி பாலில் வேக வைக்கப்படும். இது சர்க்கரைப் பொங்கல் போல திடமாகவும் இராது.
பாயசம் போல திரவமாகவும் இராது.
ஆண்டாள் சொன்ன ‘ அக்கார அடிசில்!’ உங்கள் வீட்டுக்கே வருவார் அரங்கன் !
பால்சாதம் மூடும் படியாக நெய் விட்டு பால் சாதம் செய்து கொடுக்கிறேன் என்று பாடுகிறாள் ஆண்டாள்.
அதுவும் எப்படி?
பாத்திரத்தில் இருந்து எடுத்தால், உணவில் கலந்திருக்கும் நெய்யானது, அப்படியே முழங்கை வரை வழியுமாம்!
அப்படி பாலும் நெய்யும் இனிப்பு மாகக் கலந்து படைக்கிறேன், எழுந்திருடா கண்ணு. என்ன இப்படி தூங்குகிறாய் என பாடி அழைக்கிறாள்.
அந்த பால் சாதம், பின்னாளில் அக்கார அடிசிலாகி விட்டது. அக்கார அடிசில் எனும் பெருமாளுக்கு பிடித்த உணவை, இன்றைய நாளில் செய்வோம்.
*அமுது செய்வித்து* ( *அம்சே* ) , அக்கம் பக்கத்தாருக்கு வழங்கி, ஆனந்தம் கொள்வோம் !
*அக்கார அடிசில் எப்படிச் செய்ய வேண்டும் ?* 👇
மதுரை அழகர் கோவில் ஸ்தானீக அர்ச்சகர் ஶ்ரீ அம்பி பட்டாச்சார்யர் எப்படிச் செய்ய வேண்டும் என விளக்குகிறார்.
***********************
தேவையான பொ௫ட்கள்
ஆண்டாள் செய்தாப்போல் நூறு தடா இல்லை னாலும் ஒரு லிட்டராவது வேண்டும்.
நீரே வேண்டாம். பாலிலேயே வேகவேண்டும். ஆகவே முடிந்த வரைக்கும் ஒரு லிட்டருக்குக் குறையாமல் பால், அரிசி, பாசிப் பருப்பு இரண்டையும் வெறும் வாணலியில் வாசனை வரும் வரை நன்றாக வறுத்துக்கொள்ள வேண்டும்.
பிறகு ஆறியதும் தண்ணீர்விட்டுக் களைய வேண்டும். அதனுடன் 3 கப் பாலைச் சேர்த்து குக்கரில் நன்றாக வேகவைக்க வேண்டும்
3 முறை விசில் சத்தம் வந்ததும் இறக்கிவைத்துவிட வேண்டும். அதன் பிறகு சூடு ஆறியதும் குக்கரைத் திறந்து சாதத்தை ஒரு குழிக்கரண்டியின் அடிபாகத்தால் நன்றாக மசிக்கவும்.
இப்போது, பொடித்து, நன்றாக தூள் செய்யப்பட்ட வெல்லம் ரெடியாக வைத்திருக்கிறோம்தானே ! அந்த வெல்லத்துடன் சிறிது தண்ணீர் விட்டு அடுப்பில் வைக்க வேண்டும்.
வெல்லம் நன்றாகக் கரைந்ததும் வடி கட்டி, பிறகு ஐந்து நிமிடங்கள் வரை கொதிக்கவிடவும்.
இப்போது அது கெட்டியானல் போதும், பாகு பதம் இருக்கவேண்டும் என்பதில்லை.
வேகவைத்திருக்கும் சாதத்தை இந்த வெல்லக் கரைசலில் சேர்த்து நன்றாகக் கிளறுங்கள்.
இப்போது பாதி நெய்யை ஊற்றுங்கள். எல்லாம் சேர்ந்து கெட்டியானதும் அடுப்பை அணைத்துவிடலாம்.
மீதியுள்ள நெய்யைச் சூடாக்கி அதில் முந்திரிப் பருப்பு, ஏலக்காய்த் தூள், உலர் திராட்சை ஆகிய வற்றைச் சேர்த்து வறுத்து, அக்கார அடிசிலில் கொட்டி நன்றாகக் கிளற வேண்டும்.
இந்த அக்கார அடிசிலின் விசேஷமே... இனிப்புச் சுவைதான்.
ஆகவே மூன்று கப் வெல்லம் என்பதே யதேஷ்டம். தேவை யென்றால் இன்னும் கொஞ்சம் சேர்க்கலாம்.
அப்படிச் சேர்ப்பதாக இருந்தால், நெய்யும் கொஞ்சம் சேர்க்க வேண்டும்.
சிறுவயதில், அக்கார அடிசில் பண்ணும் போது, அந்த வாசமே தெருவைத் தாண்டிப் போகும். கதவைத் திறந்து வையேன் டா.....
அக்கார அடிசில் வாசத்துக்கே பெருமாள் வந்துருவான் பாரு’ என்பாள் என் பாட்டி !
உங்கள் வீட்டிலும் இந்த நல்ல நாளில் அக்கார அடிசில் பண்ணி, பெருமாளுக்கு *அம்சே ( அமுது செய்ய )* பண்ணுங்கள்.
அக்கார அடிசில் சாப்பிட அந்த அரங்கனே ஓடி வருவான் உங்கள் அகத்திற்கு !
ஓம்நமோ நாராயணாய
ஸ்ரீஆண்டாள் தி௫வடிகளே சரணம்
🙏🙏🙏🏽
No comments:
Post a Comment