Saturday, January 27, 2024

வசந்த காலம் வருமோ?- 86

 வசந்த காலம் வருமோ?- 86

By N Krishnamurthy 

ராஜேஸ்வரிக்கு வசுமதி  போன் செய்து ஒன்றரை மணி நேரம் கழித்து, ராஜேஸ்வரி வசுமதியின் வீட்டுக்கு போன் செய்து வசுமதியிடம் தன்னுடைய விலாசத்தை டிக்டேட் செய்தாள். பின்பு அவள் வசுமதியிடம்" நீ எழுதி இருப்பதை நேக்கு படிச்சு  காமி.ஏதாவது தப்பு இருந்தா சொல்றேன்" என்றாள். அதன்படியே வசுமதி படிக்க " ஓகே எல்லாம் சரியா இருக்கு. ஜாதகத்தை அனுப்பிச்சு வைக்கறயா" என்று கூற வசுமதியும்  சாரங்கனிடமிருந்து பெறப்பட்ட ம்ருதுளாவின்  ஜாதகத்தை ராஜேஸ்வரிக்கு அனுப்பி வைத்தாள்.

அன்று ஆபீசிலிருந்து வீட்டிற்கு போன் செய்த மார்க், ராஜேஸ்வரியிடம் "நவம்பர் 23 ஆம் தேதி கெளம்பி 24 ஆம் தேதி மத்தியானம் மெட்ராஸ் போற மாதிரி மூணு டிக்கெட் ப்ளாக் பண்ணிட்டேன். வெல தான் கொஞ்சம் கூட. வழக்கத்தை விட 20% கூட ஆயிடுத்து "என்றார் அதற்கு ராஜேஸ்வரி "பணத்தை மறந்துடுங்கோ. டிக்கெட் கிடைச்சுதேன்னு சந்தோஷப்படுங்கோ" என்றாள். 

நவம்பர் 24 ஆம் தேதி மதியம் ஒரு மணிக்கு ராஜேஸ்வரி மார்கபந்து மற்றும் சங்கர க்ருஷ்ணன் சென்னை ஏர்போர்ட்டில் இறங்கி,சுப்பு லக்ஷ்மியின் வீட்டிற்கருகிலிருந்த,தங்களது த்ரீ பெட்ரூம் பிளாட்டிற்கு டாக்ஸியில் சென்றார்கள். (முக்கியமானதை வாசகர்களுக்கு சொல்ல மறந்து விட்டேன். போனமுறை ராஜேஸ்வரி அமெரிக்கா போய் சேர்ந்த இரண்டு மாதத்திற்கு பிறகு ஒரு நாள், சுப்புலக்ஷ்மி  ராஜேஸ்வரியை  போனில் கூப்பிட்டு" மாமி நீங்க இங்க வாடகைக்கு இருந்த Flat  இப்போ வெலைக்கு வரது. அங்க இருந்த  மாமா,மாமி  ரெண்டு பேரும் பொண்ணோடு கூடவே சிங்கப்பூர்ல போய் இருக்கணும்னு முடிவு பண்ணிட்டா. நான் அவா  சிங்கப்பூர்  நம்பர உங்களுக்கு கொடுக்கறேன். உங்களுக்கு இஷ்டம் இருந்தால் நீங்க அவா கிட்ட பேசிட்டு அதை  வாங்கிக்கலாம்" என்றாள். இதைக் கேட்ட ராஜேஸ்வரி மிகவும் சந்தோஷத்துடன் "நிச்சயம் எங்களுக்கு அந்த எடம் வேண்டி இருக்கும்" என்று  சொல்லி சிங்கபூர்  நம்பரை எழுதி வாங்கிக் கொண்டாள். பிறகு சிங்கப்பூருக்கும் அமெரிக்காவுக்கும் உள்ள டைம் டிஃபரென்ஸை பார்த்துவிட்டு, ஒரு ஞாயிறு அன்று அவள் சிங்கப்பூருக்கு போன் அடித்தாள். தன்னை அறிமுகம் செய்து கொண்ட உடன் அந்த சிங்கப்பூர் மாமி " உங்களை  நேக்கு இன்னும் நண்ணா  ஞாபகம் இருக்கு. வீட்ட ரொம்ப நேர்த்தியா வெச்சிண்டு இருந்தேள். அது நேக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. உங்கள போலவா வாங்கிண்டா எங்களுக்கும் சந்தோஷமா இருக்கும்" என்று கூறி "எங்க ஆத்துக்காரர் கிட்ட போனை கொடுக்கிறேன்" என்று சொன்னாள். அந்த மாமியுனுடைய வீட்டுக்காரர் ராஜேஸ்வரியிடம் வீடு குறைந்தபட்சம் என்ன விலைக்கு தரலாம் என்று கூறினார் . ராஜேஸ்வரி"  நான் ஒரு அரை மணியில் உங்களை மறுபடியும் காண்டாக்ட் செய்யறேன்" என்று கூறிவிட்டு மார்கபந்துவிடம் விஷயத்தை கூறினாள். "இப்போதைக்கு அந்த வீடு நமக்கு தேவையா" என்று கேட்டார்  மார்க். அதற்கு ராஜேஸ்வரி " எனக்கென்னமோ அது மிகவும் அவசியம்ன்னு படர்து. அதுக்கு என்ன காரணம்னு சமயம் வரும்போது நானே உங்களுக்கு சொல்றேன்" என்று கூறினாள். பின்பு சிங்கப்பூருக்கு போன் செய்து மார்கபந்து வீட்டு ஓனரிடம் பேசி இன்னும் கொஞ்சம் விலையை குறைத்து பேரம் பேசி முடித்தார். "இப்போதைக்கு 10% அட்வான்ஸ் பண்ணிடறேன். நீங்க எப்போ இந்தியா வரணும்னு சொல்றேளோ, அப்ப நாங்க வந்து மீதி அமௌன்ட்டை கொடுத்து ரிஜிஸ்டர் பண்ணிக்கிறோம்" என்றார் மார்க்.  "அப்படியே செய்யலாம். நாங்கள் டிசம்பர்ல இந்தியா வர போறோம். சாவி என்னமோ சுப்புலக்ஷ்மி மாமி கிட்ட தான் இருக்கு. நீங்க நாங்க வரதுக்கு முன்னாடி இந்தியா போனாலும் எங்காத்துலே தங்கிக்கலாம்" என்று கூறினார் அந்த சிங்கபூர் மாமா. அடுத்த ஒரு மணி நேரத்தில் வீட்டு விலையில் 10% ஐ அந்த சிங்கப்பூர் ஆசாமிக்கு டிரான்ஸ்பர் செய்தார் மார்க்)

ஏர்போர்ட்டில் இருந்து வீட்டிற்கு செல்கிற வழியில் இருந்த ஒரு நல்ல வெஜிடேரியன் ஹோட்டலில் பகல் உணவை முடித்துக் கொண்டார்கள். டாக்ஸி நேராக சுப்புலக்ஷ்மி வீட்டிற்கு சென்றது. இவர்களைப் பார்த்ததும் சுப்புலக்ஷ்மிக்கு ஆச்சரியமாகிவிட்டது. " என்ன கொஞ்சம்  முன்னாடியே வந்திருக்கேளே" என்று கேட்டாள். ராஜேஸ்வரி "சாரங்கன் மாமா 60 க்கு எங்களை கூப்ட்டு இருக்கா. அதையும் சேர்த்து முன்னாடியே வந்துட்டோம்' என்றாள் 

ராஜேஸ்வரி. பின்பு சுப்புலக்ஷ்மி அந்த Flat இன் சாவியை  கொடுத்தாள்.  பின்பு அவள் " ஒரு அரை மணி கொடுத்தேள்னா சமச்சு டுவேன். சாப்ட்டு போயிடலாம் " என்றாள். " இல்ல மாமி. நாங்க வர வழியில் சாப்ட்டூட்டோம்" என்று கூறிய ராஜேஸ்வரி, சாவியை வாங்கிக்கொண்டு அந்த த்ரீ பெட்ரூம் பிளாட்க்கு  அவர்களை அழைத்து சென்றாள். ஒரு மணி நேரம் ரெஸ்ட் எடுத்துக் கொண்ட பின் சங்கர க்ருஷ்ணனிடம் ராஜேஸ்வரி" நாங்க கொஞ்சம் வெளியில போயிட்டு வரோம். ஆத்துல இருக்கயா" என்று கேட்டாள். "சரிம்மா"என்றான் அவன். சங்கர க்ருஷ்ணனுடைய ஜாதகத்தையும், ம்ருதுளாவின் ஜாதகத்தையும் எடுத்துக்கொண்டு, மார்கபந்துவை கூட்டிக்கொண்டு,  பழய  மாம்பலம் நக்கீரன் தெருவில் இருந்த, தனக்குத் தெரிந்த கும்பகோணம் ஜோசியர் குருசாமி ஐயர் வீட்டிற்கு ராஜேஸ்வரி சென்றாள். குருசாமி அய்யர் ராஜேஸ்வரியை  பார்த்து" வாங்க.வாங்க பாத்து ரொம்ப நாள் ஆச்சு" என்று கூறினார். ராஜேஸ்வரி அவரிடம் "இதுதான் என் ஆத்துக்காரர். பையன் கல்யாணம் விஷயமா, பையன், பொண்ணு, ஜாதகத்தையும்  எடுத்துண்டு வந்திருக்கேன். நீங்கதான் பொருத்தம் பாத்து தரணும் "என்று கூறினாள். இரண்டு ஜாதகத்தையும் குருசாமி அய்யரிடம் நீட்டினாள் ராஜேஸ்வரி. இரண்டு ஜாதகங்களையும்15 நிமிடத்திற்கு மேல் பொறுமையாக  பொருத்திப் பார்த்தார் ஜோசியர்.

ராஜேஸ்வரி முதல் முறையாக மேடை ஏறி கச்சேரி செய்யப்போகிறவள் மனநிலையில்,நெர்வஸாக  இருந்தாள். குருசாமி அய்யர் என்ன சொல்லப் போகிறாரோ என்ற பதபதைப்பில் இருந்தாள்.

No comments:

Post a Comment