Friday, January 12, 2024

வசந்த காலம் வருமோ?- 71

 வசந்த காலம் வருமோ?- 71

By N Krishnamurthy 

ஹோட்டலுக்கு போன சில நிமிடங்களிலேயே ராஜேஸ்வரி மைதிலியை ஃபோனில் தொடர்பு கொண்டாள். அவள் மைதிலியிடம் வாடகைக்கு வீடு எடுக்கப்போகும்  விஷயத்தை கூறி " நாளைக்கு காலைல 6:30 மணிக்கு நான் சுப்புலக்ஷ்மி மாமி  ஆத்துக்கு வந்துடுவேன். பால் காய்ச்சறதுக்கு நீங்களும் அங்கே வந்துடுங்கோ. மறக்காம ம்ருதளாவ கூப்டுண்டு வாங்கோ " என்று கேட்டுக்கொண்டாள்.

"சரி மாமி நான் அப்படியே செய்யறேன்" என்றாள் மைதிலி.

மறுநாள் காலை 6:30 மணிக்கு முதலில்  ராஜேஸ்வரியும் சங்கர க்ருஷ்ணனும், அதை அடுத்த பத்து நிமிஷத்தில் ம்ருதுளாவும், மைதிலியு ம் சுப்புலக்ஷ்மியின்  வீட்டுக்கு வந்து சேர்ந்தார்கள். அங்கிருந்து எல்லோரும் நடந்தே,  ராஜேஸ்வரி குடியேறப் போகும் அப்பார்ட்மெண்டுக்கு சென்றார்கள். உள்ளே சென்றவுடன் பூஜை அறையை துடைத்து சுத்தம் செய்தாள் ராஜேஸ்வரி. அடுப்பில் பாலை வைத்துக் காய்ச்சினாள்  சுப்புலக்ஷ்மி. பால் நன்றாக பொங்கி வந்ததும் ,அதை இறக்கி, பூஜையறையில் முன் உள்ள அம்மன் படத்துக்கு முன்னால் வைத்தாள். அங்கிருந்த பஞ்சமுக வெள்ளி குத்துவிளக்கில், வாங்கிக் கொண்டு வந்திருந்த திரியை போட்டு,  எண்ணெயை விட்டவள்   வெற்றுப் பெட்டியை ம்ருதுளாவிடம் கொடுத்து, ஏற்றச்சொல்லி கேட்டுக்கொண்டாள் ராஜேஸ்வரி. ராஜேஸ்வரி,மைதிலி,சுப்புலக்ஷ்மி,ராதிகா ஆகியோர் மீதி முகத்திலிருந்த திரியை    ஏற்றினார்கள். விளக்கேற்றியவுடன்  ராஜேஸ்வரி சமையல் ரூமில் இருந்த ஆறு டம்ளர்களை எடுத்து, எல்லாவற்றிலும் பாலை நிரவி எல்லோருக்கும் கொடுத்தாள். தானும் குடித்தாள்." புதுசா குடி வந்திருக்கா. ஒரு நல்ல பாட்டா படினா  சந்தோஷமா இருக்குமே" என்றாள் சுப்புலக்ஷ்மி ம்ருதுளாவை பார்த்து. "என்ன பாட்டு பாடறதோ  மாமி"  என்று கேட்டாள் அவள். " நோக்கு ஹிரண்மயீம் லக்ஷ்மீம் சதா பஜாமி  தெரியுமோன்னோ அதயே பாடு" .என்றாள்

சுப்புலக்ஷ்மி. ம்ருதுளா தீக்ஷதரின் "ஹிரண்மயீம் லக்ஷ்மீம்

சதா பஜாமி" யை மிக நேர்த்தியாக பாடினாள்.

அவள் அப்பாடலை பாடிய விதத்தை  கண்டு ராஜேஸ்வரி அசந்து போனாள்.அவள்  பாடி முடித்ததும் சுப்புலக்ஷ்மி அவளை கட்டிக்கொண்டு " நாளுக்கு நாள் உன் குரல் மெருகு ஏறிண்டே போறது" என்றாள்.

சங்கர க்ருஷ்ணன் அவள் பாடிய விதத்தை பார்த்து கிறங்கிப்போனான்.

"கடவுளே.எப்படியாவது எங்களை சேத்து வெச்சுடு" என்று மனமுருகி வேண்டினான்.

 இதன்பின் மைதிலி ராஜேஸ்வரியிடம் " நான் இப்ப ஆத்துக்கு  போணம். சமையல் வேலையை இப்ப ஆரம்பிச்சாதான் டயத்துல  இவளை காலேஜுக்கும், எங்க ஆத்துக்காரரை ஆபீசிக்கும் அனுப்ப முடியும்" என்றாள்." சரி போயிட்டு வாங்கோ"  என்று விடை கொடுத்தாள் ராஜேஸ்வரி. தான் போய் வருவதாக சங்கர க்ருஷ்ணனுக்கு  கண்ணாலே சேதி சொன்னாள் 

ம்ருதுளா. பத்து நிமிஷங்களில் அப்பார்ட்மெண்ட்டை பூட்டிக்கொண்டு ராஜேஸ்வரி,சங்கர க்ருஷ்ணன், சுப்புலக்ஷ்மி மற்றும் ராதிகா சுப்புலக்ஷ்மியின்  வீட்டை அடைந்தார்கள். அங்கே பத்து  நிமிடங்கள் பேசிக்கொண்டு இருந்து விட்டு ராஜேஸ்வரி சுப்புலக்ஷ்மியிடம் " நாளைக்கு   நானும், இவனும்  சாமான்களை எடுத்துண்டு அப்பார்ட்மெண்டுக்கு வந்துடுவோம் "என்று கூறினாள்." உங்களுக்கு ஏதாவது ஹெல்ப் வேணும்னா சொல்லுங்கோ.நான் செய்யறேன்"  என்றாள் சுப்புலக்ஷ்மி."  எங்க கிட்ட மொத்தம் நாலு சூட்கேஸ் இருக்கு .அத கொண்டு வந்தா போதும். இப்போதைக்கு ஒண்ணும் ஹெல்ப் தேவ படாது " என்ற ராஜேஸ்வரி, சங்கரகிருஷ்ணனை அழைத்துக்கொண்டு விடை பெற்று ஹோட்டலுக்கு திரும்பி  சென்றாள்.இதன் பின் சுப்புலட்சுமி ராதிகாவிடம் " என்னைக்கு துணிமணி எல்லாம் வாங்க தி.நகர் போலாம்" என்று   கேட்டாள். "நீ சொல்லும்மா. என்னிக்காயிருந்தாலும்  நேக்கு ஒண்ணும் பிராப்ளம் இல்ல" என்றாள் ராதிகா." மைதிலியயும், ம்ருதுளாவையும் கூப்டுண்டு போலாம்னு நெனக்கறேன்.நீ என்ன சொல்ற"  என்றாள் சுப்புலக்ஷ்மி"நானும் அதே தான் நெனச்சேன்" என்றாள் ராதிகா. " அப்போ ஒண்ணு  பண்ணலாம். இந்த சனி ஞாயிற்றுக்கிழமையும் ம்ருதுளாவுக்கு காலேஜ் இருக்காது. அந்த சமயத்தில் போயிட்டு வந்துடலாம்" என்றாள்  சுப்புலக்ஷ்மி. "சனி ,ஞாயிற்றுக் கிழமைல  தி.நகர்ல  கும்பல் பயங்கரமாக இருக்கும் டி பரவாயில்லையா" என்றாள் சுப்புலக்ஷ்மி.

 "தி.நகர்ல கும்பல் இல்லாத நாள் உண்டா என்ன.  சனி ஞாயிறுகளில்  கொஞ்சம் கூடுதலா இருக்கும் அவ்வளவுதான்" என்றாள் ராதிகா. 

அன்று  இரவு மைதிலிக்கு போன் செய்த சுப்புலக்ஷ்மி

" சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை, சாப்பாட்டுக்கு அப்புறம், தி.நகர் போய் கொஞ்சம் துணிமணி வாங்கிண்டு வந்துடலாம்னு இருக்கேன். நீங்களும், ம்ருதுளாவுமம் வந்தா ரொம்ப ஹெல்புல்லா  இருக்கும்" என்றாள். அதற்கு மைதிலி "அதுக்கு என்ன மாமி.போலாம்" என்று கூறினாள்.

No comments:

Post a Comment