Tuesday, January 23, 2024

முற்பகல் செயின்..14

 முற்பகல் செயின்..14

 By N Krishnamurthy 

வந்த சிறுவன்,ஆதித்யா இருப்பதையே சட்டை செய்யாமல்,நேராக நமச்சிவாயத்திடம் சென்று"தாத்தா ஒரு மணிக்கு சாப்பாடு கொண்டு வரட்டா" என்றான்.

" சரிடா அப்பு. ஆனால் சாப்பாடும், பொறியலும் இன்னும் கொஞ்சம் கூட வைக்கணம்னு உங்க அப்பத்தா கிட்ட சொல்"என்றார்.

"ஆரு தாத்தா விருந்தாளி வந்திருக்காக"என்றான் சிறுவன்.

"என் பேரன் வந்திருக்கான்டா"என்றார் நமச்சிவாயம் பெருமையுடன்.

"இவுகதானா அது " என்றான் அப்பு ஆதித்யாவை சுட்டிக்காட்டி." ஆமாண்டா" என்றார் நமச்சிவாயம்.

ஆதித்யாவை பார்த்து இருகரங்களையும் குவித்து "சார்.வணக்கம்"என்றான் அப்பு. பதிலுக்கு ஆதித்யா அவனை இழுத்து அணைத்துக்கொண்டு "உன் பெயர் என்ன" என்றான். "எம்பேர் அப்புலிங்கம் சார்.என்ன எல்லோரும் அப்பூன்னே கூப்பிடுவாங்க. நீங்க கூட அப்டியே கூப்பிடலாம்" என்றான்.

"ஆமாம் அப்பு நீ என்ன படிக்கற. உங்க அப்பா என்ன பண்றாங்க"என்றான் ஆதித்யா. அதற்கு அப்பு "சார் நான் போர்த் ஸ்டாண்டார்ட் படிக்கிறேன்.என் அப்பா, அம்மா ரெண்டு பேரும் ஒரு ஆக்சிடண்ட்ல காலமாய்ட்டாங்க. ஆனா நான் அனாத இல்ல சார்.என்ன கண்ணும் கருத்துமா கவனிச்சுக்க என் தாத்தா, பாட்டி இருக்காங்க. உங்களுக்கு ஒண்ணு தெரியுமாங்க சார். என்படிப்பு செலவுக்கு உங்க தாத்தா மாசாமாசம் நூறு ரூபா கொடுக்றாங்க சார்.ஆனால் நான் பெரியவன் ஆகி சம்பாரிச்சதும் அவருக்கு அந்த பணத்த மொத்தமா திருப்பி கொடுத்திடுவேன் சார்"என்றவன் ஆதித்யாவிடம்"சார் இவங்க ரெண்டு பேரும், பேச்சு துணைக்கு கூட ஆளில்லாம இவ்வளவு வருஷமா இருக்காங்க. நீங்க ஏன் சார் இவங்களை வந்து கவனிக்கல" என்றுகேட்டான். இந்த கேள்வியை கேட்டு மிரண்டு போன நமச்சிவாயம் அப்புவை பார்த்து கோபத்துடன் "என்ன சொல்ற நீ.கெளம்பி போ " என்றார்.

அப்புவுக்கு தான் தவறாக பேசிவிட்டோம் என்று தெரிந்தது. அவன் கண்களில் நீர் துளிர்த்தது. 

தன் கண்களில் திரண்ட நீரை கைகளால் துடைத்துக்கொண்ட ஆதித்யா அப்புவை இழுத்து கட்டிக்கொண்டு"அப்பு, நீ கேட்டதல தப்பே இல்லடா.அந்த கடவுள் எனக்கு இப்பதான் புத்திய கொடுத்திருக்கார்" என்றான் நாத்தழுதழுக்க.

நமச்சிவாயம் ஆதித்யாவிடம் "சமயல் அறை மேடை மேல் தேய்த்து வைத்திருக்கும் டிபன் கேரியர் இருக்கும். அதை அப்புவிடம் கொடு" என்றார். டிபன் கேரியரை பெற்றுக்கொண்ட அப்பு நமச்சிவாயத்திடம். " நான் வரேன் தாத்தா.நான்ஏதாச்சும் தப்பா பேசியிருந்தா மன்னிச்சூடுங்கோ"என்று கூறி வீட்டை விட்டு வெளியே சென்றான்.

No comments:

Post a Comment