வசந்தகாலம் வருமோ?-80
By N Krishnamurthy
சிறிது நேரத்தில் வசுமதியிடமிருந்து ஃபோன் வந்தது. முதலில் பத்மநாபனிடம் வசுமதி கொஞ்ச நேரம் பேசிவிட்டு" அம்மா கிட்ட போன கொடுங்கப்பா" என்றாள். ரங்கநாயகி
" என்னடி நண்ணா இருக்கயா? குளிச்சிண்டு இருக்கயா" என்று கேட்டாள். " தினம் குளிச்சிண்டு இருக்கேன் . அத பத்தி நீ கவலைப்படாதே" என்றாள் வசுமதி நக்கலாக. "நான் அத கேக்கலடி"என்றாள் ரங்கநாயகி." நீ எதைக் கேக்கறேன்னு தெரியும். அப்படி ஏதாவது இருந்தா முதல்ல உங்கிட்ட தான் சொல்லுவேன்" என்றவள்" என்றவள் "என் சின்ன மாமியார் போன் பண்ணாளா" என்றாள்."ஆமாம்.அது எப்படி நோக்கு தெரியும்".
"நெறைய ஃப்ரி டைம் இருக்கறதால கொஞ்சம் ஜோசியம் கத்துண்டு வரேன்.அதலதான் தெரிஞ்சுது"என கிண்டல் அடித்தவள் "அவ எதுக்கு உனக்கு போன் பண்ணா" என்று கேட்டாள்.
ரங்கநாயகி விஷயத்தை கூற வசுமதி"நீ ஏம்மா வேண்டாத விஷயத்ல மூக்கை நொழைக்கற. மாமா நெம்பரை அவாகிட்ட கொடுத்தூட்டு அவாளையேநேரடியாக கான்டாக்ட் பண்ண சொல்லியிருக்கலாமே"என்றாள்."அது மொறை இல்லடி" என்றாள் ரங்கநாயகி. வசுமதி "இப்ப நீ பண்ண போறது தான் மொறை இல்ல.நோக்கு கடைசிலதான் புரியும்" என்று சொல்லி பேச்சை முடித்தாள். பத்பநாபனிடம் விஷயத்தை கூறிய ரங்கநாயகி " இவ எதுக்கு இந்த விஷயத்ல இவ்வளவோ கொதிக்கறா" என்றாள். அதற்கு பத்பநாபன் " வசு என்ன சொன்னாலும் அதல ஒரு அர்த்தமும், ஞாயமும் இருக்கும்" என்றார்.
"உங்க பொண்ண நீங்கதான் மெச்சுகணம் " என்றாள் ரங்கநாயகி.
இதெல்லாம் முடிந்தவுடன் ரங்கநாயகி சாரங்கனுக்கு போன் செய்தாள். போனை எடுத்த சாரங்கன் "என்னக்கா எல்லாம் சௌக்கியம் தானே. அத்திம்பேர் எப்டி இருக்கார் "என்று கேட்டான்." எல்லாரும் சௌக்கியம் தான்டா என்றாள் அவள்." வசு சௌக்கியமா இருக்காளா? உனக்கு தெரியுமா? வசுவும்,ஸ்ரீவத்சனும் இங்க வந்துட்டு போனா" என்று கூறினான். "ஆமாடா. வசு சொன்னா" என்று கூறினாள் அவள்."என்னக்கா ஏதாவது விசேஷம் உண்டா" என்று கேட்டான் சாரங்கன். " இன்னைக்கு வரைக்கும் ஒண்ணும் இல்லடா" என்றாள் ரங்கநாயகி பின்னர் அவள்" ம்ருதுளா எப்படி படிச்சிண்டு இருக்கா. இந்த வருஷம் பைனல் இயர் இல்லையா "என்று கேட்டாள். "ஆமாக்கா. இந்தா வருஷத்தோட முடியறது" என்றான் சாரங்கன். "அப்போ அவ ஜாதகத்தை ஜோசியர்கிட்ட காமிச்சி, பாக்க ஆரம்பிக்க வேண்டாமா" என்றாள் ரங்கநாயகி.
"முதல்ல படிச்சு முடிக்கட்டும் அக்கா. அப்புறம் ஒரு வருஷம் அவ வீட்ல விஸ்ராந்தியா இருக்கட்டும். சங்கீதத்தில் ரொம்ப ஈடுபாடு இருக்கு. இன்னும் கொஞ்சம் கத்துக்கணும்னு பாக்கறா.கல்யாணம், கார்த்தி ஆயிடுத்தானா, குழந்தை, குட்டி ,குடும்பம்னு ஆயிடும் .அதக்கப்புறம் பாட்டுல ஈடுபாடு போயிடும். அதனால இன்னும் ஒரு வருஷம் கல்யாணத்தை தள்ளிப் போடலாம்னு யோசிக்கிறேன்" என்றான்.
"என்னடா இப்படி பேசற. ஒரு நல்ல இடம் தகஞ்சா பொண் குழந்தைகளை கல்யாணம் பண்ணி கொடுக்கறதானே நம்ப பழக்கம். இங்க பார், நான் சொல்றத கேளு. வசுவோட ஒண்ணு விட்ட மச்சினன் இருக்கான். அவன் பேரு ரகுநந்தன். பாக்க ராஜாவாட்டம் இருக்கான்.ஜெய்ப்பூர்ல இருக்கான்.C.A படிச்சிருக்கான்.கை நெறய சம்பளம். பிக்கல்,பிடுங்கல் இல்ல.நல்ல குடும்பம்" என்று அவள் சொன்னதை கேட்ட அவன் "ஆமாக்கா. அந்த பையன் கூட சமீபத்தில நம்பாத்துக்கு வந்திருந்தான்" என்றான் சாரங்கன்.
"அந்த பையனுக்கு பொண்ணு தேடிண்டிருக்கான்னு நியூஸ் வந்திருக்கு. நீ கூட ம்ருதுவுக்கு அந்த பையனை பாக்கலாமே"என்றாள். "பாக்கலாம் அக்கா. நல்ல பையன் தான் ஆனா இப்போதைக்கு ம்ருதுக்கு கல்யாணத்துக்கு என்ன அவசரம் .ஒரு வருஷம் போகட்டும்னு நெனைக்கிறேன்" என்றான்.
" நான் சொல்றத சொல்லீட்டேன். அப்புறம் உன் இஷ்டம்" என்றாள் ரங்கநாயகி மன வருத்தத்துடன்.
No comments:
Post a Comment