Monday, January 1, 2024

இரட்டைப் பிள்ளையார்.

 இரட்டைப் பிள்ளையார்.

குடும்பத்தை மட்டும் காப்பாற்றும் என்பதல்லாமல் அவர்களது வம்சத்தையும் வாழ வைக்கும் இரட்டை பிள்ளையார் வழிபாடு:

பிள்ளையார் வழிபடுவதற்கு மிகவும் எளிமையான  கடவுள்.எந்த காரியத்தை தொடங்கினாலும் பிள்ளையாரது அருள் இல்லாமல் அந்த காரியம் வெற்றி அடைவது இல்லை.எந்த பூஜையை செய்வதானாலும் முதலில் பிள்ளையாரை வணங்கி விட்டே பூஜையை செய்ய வேண்டும் என்பார்கள். அதற்குக் காரணம் வினைகளையும் தடைகளையும் தீர்ப்பவர் வினாயகர் என்பது நம்பிக்கை. ஒருவர் தொடங்க உள்ள அல்லது தொடங்கிய காரியங்கள் தொடர்ந்து நடந்தேறவும் அக்காரியத்தில் இயற்கையான தடைகள் ஏற்பட்டு விடாமலிருப்பதற்கும், அக்காரியம் வெற்றி பெறுவதற்காகவும் வினாயகரை மஞ்சள் சந்தனம் போன்றவற்றை கூம்பு வடிவில் பிடித்து  வழிபட வேண்டும்.

சிவ பெருமான் கூட,பிள்ளையாரை  வணங்கிய பிறகுதான் திரிபுரசம்ஹாரம்  செய்து முடித்தார் என புராணங்கள் கூறுகின்றன

ஒரு பிள்ளையாரை வணங்கினாலே நமக்கு பலன் கிடைக்கிறது என்றால் இரட்டை பிள்ளையாரை வணங்கினால் இருமடங்கு பலன்கள் கிடைக்கும்.

இந்த நம்பிக்கை பொய்த்து விடக் கூடாது என்பதற்காகத்தான் அந்த வினாயகரே வியாச முனிவர் கூறிய மகாபாரதத்தை எழுதத் துவங்குவதற்கு முன்னால் தன்னைப் போலவே இன்னொரு உருவத்தை தன் அருகில் படைத்து அதை தானே (கண்ணாடியில் தன் பிம்பத்தைப் பார்ப்பது போல) வணங்கிய பின் மகாபாரதத்தை எழுதத் துவங்கியதாக ஒரு புராணக் கதை உண்டு. அதாவது பிள்ளையாரே தனது பிம்பமான இன்னொரு பிள்ளையாரை தோற்றுவித்து, அதை வணங்கி துதித்த பின்னரே தனது காரியத்தை துவக்கியதாக ஐதீகம். இதுவே இரட்டை பிள்ளையார் எனும் எண்ணம் துவங்கிய கதை.

முன் காலங்களில் வைதீக பூஜைகளில் முக்கியமாக பண்டிதர்கள் எனப்பட்ட வைதீகக் குடும்பங்களை சேர்ந்தவர்கள் வீடுகளில் பூஜைகளை செய்யும்போது குடும்பத்தின் மூத்தவர் செய்யும் பூஜையில் தம் குடும்பத்திற்காக ஒரு பிள்ளையாரையும், தமது வம்சாவளியினருக்காக இன்னொரு பிள்ளையாரையும் மஞ்சளில் பிடித்து வைத்து அந்த இரண்டிற்குமே ஒரே நேரத்தில் பூஜைகளை செய்வார்களாம்.

 இரட்டை பிள்ளையாருக்கு பூஜை செய்வதை மிகுந்த புண்ணியம் என்பார்கள். அது குடும்பத்தை மட்டும் காப்பாற்றும் என்பதல்ல, அவர்களது வம்சத்தையும் வாழ வைக்கும் என்பார்கள். யாராக இருந்தாலும் பிள்ளையாரை வழிபட்ட பிறகே எந்த காரியத்தையும் துவக்க வேண்டும் என்பது இறைவனின் கட்டளை என்பதினால் வினாயகரின் பூஜையை துவக்கும் முன்னால் கூட வினாயகரின் உருவத்திற்கு முன்னால் மஞ்சளில் பிடித்து வைத்த ஒரு வினாயகரை 'விக்னம் தீர்ப்பாய் வினாயகா'' என வேண்டிக் கொண்டு அதற்குப் பிறகு வினாயகர் பூஜையை ஆரம்பிப்பதாக ஒரு ஐதீகம் இருந்துள்ளது.

வினாயகர் ஒருவர் மட்டுமே வேறு அவதாரம் எடுக்கவில்லை என்பது தனிச் சிறப்பு. முதலில் அவர் அவதரித்தபோது மனிதத் தலைக் கொண்டு அவதரித்தார். ஆனால் கடவுளின் ஒரு குறிப்பிட்ட நாடகத்தில் அவருடைய தாயாருக்காக அவர் தனது தலையை இழக்க நேரிட்டபோது அவருடைய தாயாரின் வேண்டுகோளை ஏற்று அவருடைய தந்தையே அவருக்கு இன்னொரு முகத்தை - யானை முகத்தை- தந்து அவரை உயிர்பித்தார். அதனால்தான் முதலில் மனிதத் தலையுடன் இருந்த வினாயகரை வணங்கி உன்னைப் போலவே விக்னம் இல்லாமல் அனைத்தும் இருக்கட்டும் என பிரார்த்தனை செய்து கொண்டு பல சக்திகளைப் பெற்று தடைகளை விலக்கும் சக்தியைப் பெற்று இருந்த யானை முகத்தைக் கொண்ட வினாயகரை பூஜையை செய்வதான ஐதீகத்தில் ஏற்பட்டதே இரட்டைப் பிள்ளையார் பூஜைகளும். 

எதற்காக இந்த இரட்டை பிள்ளையார் வழிபாடு துவங்கியது என்பதற்கு ஒரு காரணம் உள்ளது. நாம் செய்யும் எந்த பூஜைகளும் தடங்கல் இன்றி நடத்திக் கொடுக்க அந்த வினாயகரே இரண்டு நிலைகளை எடுப்பாராம். முதலில் தன் அடிமையான விக்னேஸ்வரனை அனுப்பி விக்னங்களை கிரகித்துக் கொள்ளுமாறு கூறியபின் தான் வந்து அமர்ந்து பூஜைகளை ஏற்பாராம்.

இதற்கும் ஒரு பின்னணி காரணக் கதை உள்ளது. முன் ஒரு காலத்தில் காலரூபி என்றொரு வடிவமற்ற அசுரன் இருந்தான். அவனுடைய வேலை ஒவ்வொரு காரியத்திலும் எத்தனை தடைகள், விக்னங்கள் மற்றும் இடையூறுகளைத் தர முடியுமோ அத்தனையையும் தருபவனாக இருந்தான். அதனால் அவன் செயலை விக்னத்தை தருபவன் என்பார்கள். அனைத்து ரிஷி முனிவர்களும் காலரூபியினால் அவதிப்பட்டார்கள். அவர்களால் யக்னங்களையும் யாகங்களையும் சரிவரச் செய்ய முடியவில்லை என்பதினால் அவர்கள் வினாயகரிடம் சென்று அவரை தமக்கு உதவுமாறு வேண்டினார்கள். 

அவர்களது கோரிக்கையை ஏற்றுக் கொண்ட வினாயகரும் அந்த காலரூபியை  போர் புரிந்து அழித்தார்.  மரணம் அடையும் முன்னால் அவன் வினாயகரின் கால்களில் விழுந்து சரணாகதி அடைந்தான். தனக்கும் அவருடைய காலடியில் ஒரு இடம் தருமாறு கேட்டுக் கொள்ள அவரும்  அவனிடம் கூறினார்  'உனக்கு நான் இன்று முதல் விக்னேஸ்வரன் என்று பெயர் தருகிறேன்.  எனக்கு பூஜை செய்பவர்கள் முதலில் 'விக்னேஸ்வரா, எனக்கு வர உள்ள விக்னங்களை நீயே விலக்குவாய்'  என உன் பெயரை உச்சரித்து, உன்னை பூஜை இடத்தில் இருந்து விலக்குமாறு என்னிடம் வேண்டுவார்கள்.  ஆகவே எனக்கு செய்யப்படும் பூஜையில் உனக்கும் ஒரு சிறு பங்கு இருக்கும்.   நீயும் வர உள்ள அனைத்து விக்னங்களையும் கிரகித்துக் கொண்டு சென்று விடுவாய்.  ஆகவே இன்று முதல்  நீ என்னுடைய எந்த  பக்தர்களுக்கும் உன்னுடைய செயல்களினால் தடைகளையும், துன்பங்களையும்  தரக்கூடாது.  ஆனால் அதே சமயம் எனக்கு அபசாரம் செய்பவர்களையும், என்னை உதாசீனப்படுத்துபவர்களையும் நீ பல விதமான விக்கினங்களில் சென்று அவர்களுடைய செயல்களுக்கு தடைகளை செய்யலாம்.  இதற்கு மாறாக நீ நடக்கக்கூடாது," என்று ஆணையிட்டார்.

ஆகவேதான் அந்த காலரூபியை விக்னேஸ்வரனாக  பிடித்து வைத்து 'விக்னங்களை கிரகித்துக் கொள்வாய்' என வேண்டிக் கொண்டு அடுத்து வினாயகருக்கு பூஜையை துவக்குவார்கள்.  அதனால்தான் முதலில் இரு உருவங்களை வைத்து வினாயகர் பூஜை செய்யும் பழக்கம் ஏற்பட்டது.

பக்தர்கள் விநாயகரை வழிபடும்போது எல்லாம் விக்கினனையும் வழிபட வேண்டும் என்று விநாயகர் கூறுகிறார்.விநாயகரும்,விக்கினனுமே இரட்டை பிள்ளையாராக உருவானார்கள்.

இன்னொரு கதையின்படி வினாயகர்  இரண்டு உருவங்களில் இருந்தவர்  என்பதினால் பூஜைகளில் வர உள்ள அனைத்து தடைகளையும், விக்னங்களையும் மனிதத் தலையுடன் அவர் அவதரித்த முதல் பிள்ளையார் நிலையில் இருந்து கொண்டு கிரகித்துக் கொள்வாராம். அதன் பின் கஜமுக வினாயகர் நிலையை எடுத்துக் கொண்டு  வினாயகருக்கு செய்யப்படும்  பூஜைகளை ஏற்றுக் கொண்டு பூஜை செய்பவர்களுக்கு அருள் புரிவாராம். ஆக வினாயகரே இரு நிலைகளில் - அதாவது இரட்டை பிள்ளையார் நிலையில் - இருந்து கொண்டு பூஜைகளை ஏற்றுக் கொள்வதான ஐதீகத்தில் பிறந்ததே  இரட்டை பிள்ளையார் பூஜை என்று கூறுவார்கள்.

ஒற்றை அல்லது இரட்டை பிள்ளையார் என எப்படி இருந்தாலும் பிள்ளையார் எனும் மூலக் கடவுளின் தத்துவம் வியப்பானது !! ஒவ்வொரு கடவுளையும் எடுத்துக் கொள்ளுங்கள். அவர்களுக்கு இயற்கையில் அமைந்த ஒரே ஒரு உருவம் மட்டுமே  உண்டு.  மற்றவர்கள் அனைவருமே அவர்களுடைய துணை கடவுட்கள் மற்றும் அவதாரங்களே.

சிவன் என்றால் ஒரு குறிப்பிட்ட உருவத்தில் மட்டுமே அவரைக் காண்பார்கள். ஆனால் அவருக்கு பல ரூபங்களும் அவதாரங்களும் உண்டு. துணை அவதாரங்களும் துணை கடவுட்களுமாக அவருடைய உடலில் இருந்து பலர் தோன்றி உள்ளனர்.   உதாரணமாக ருத்திரன், பைரவர், சிவலிங்கம், நடராஜர் போன்ற பல உருவங்கள் சிவபெருமானுக்கு உண்டு என்றாலும் சிவன் என்றால் இப்படி என்று கூறும் விதத்திலான ஒரு குறிப்பிட்ட மூலத் தோற்றம் அவருக்கு உண்டு.

அது போலவே விஷ்ணுவிற்கும் நரசிம்மர், கிருஷ்ணர், ராமர், தசாவதாரம்  எனப் பல்வேறு அவதார ரூபங்கள் மற்றும் அவதாரங்கள் உண்டு என்றாலும்  அவருக்கும் இப்படி என்று கூறும் விதத்திலான ஒரு குறிப்பிட்ட தோற்றம் உண்டு. 

இப்படியாக ஒவ்வொரு கடவுளுக்கும் அது ஆண் கடவுள் என்றாலும் சரி, பெண்ணினமாக இருந்தாலும் சரி பல்வேறு ரூபங்கள் மற்றும் உருவங்கள் உண்டு என்றாலும், அந்த உருவங்களின் மூலம்  அவர்கள் பல்வேறு விதமாக  ஆராதிக்கப்பட்டாலும் ஒரு குறிப்பிட்ட தோற்றத்தில்தான் அவர்களை அடையாளம்  காண்பார்கள்.

ஆனால் இதில் விதி விலக்காக உள்ளவர்  வினாயகர்  மட்டுமே.  மூலக் கடவுளான வினாயகரை  மட்டுமே  யானை முகத்தவனாகவே வழிபடுகிறோம். அவர் ஒரு முக வினாயகராக  இருந்தாலும் சரி, பஞ்சமுக வினாயகராக  இருந்தாலும் சரி, அவர் வேறு அவதாரத்தில்  காட்சி தரவில்லை.  யானை முகனாகவே காட்சி தருகிறார். ஒரே ஒரு இடத்தில் மட்டுமே மனிதத் தலையுடன் காட்சி அளித்தாலும் பிள்ளையார் என்றால் யானை முகத்தவரே. எனக்குத் தெரிந்தவரை இந்த உலகிலேயே மனித உருவுடன் வினாயகர்  உள்ளது கூத்தனூர் அருகே உள்ள தில தரப்பன புரி ஆலயத்தில் மட்டுமே என்பதை அதனால்தான் முதல் பகுதியில் சுட்டிக் காட்டபட்டுள்ளது.

உண்மையைக் கூறினால் ஓற்றையோ, இரட்டையோ எந்தப் பிள்ளையாரை வணங்கினாலும் அவர் அருள் புரிவார் என்றாலும் ஒரு சில நேரங்களில், ஒரு சில காரியங்களுக்காக ரெட்டை பிள்ளையாரை வணங்கித் துதிப்பது மிக்க நல்ல பலனைத் தரும். அதற்கும் காரணம் இல்லாமல் இல்லை. 

ஆனால் இரட்டை வினாயகர்  எல்லா ஊர்களிலும் இருப்பதில்லை. சில ஆலயங்களில் மட்டுமே உள்ளனர்.  இரட்டைப் பிள்ளையாரை எப்படி வழிபடுவது? அதற்கு என்ன முறை?? 

சரி ரெட்டை பிள்ளையார் இல்லாத ஊர்களில் உள்ளவர்கள் அவரை எப்படி பூஜிக்கலாம்? 

பாகம்-2ல் தொடரும்.

இரட்டைப் பிள்ளையார் வழிபாடு:

குடும்பத்தை மட்டும் காப்பாற்றும் என்பதல்லாமல் அவர்களது வம்சத்தையும் வாழ வைக்கும் இரட்டை பிள்ளையார் வழிபாடு பாகம்-2(தொடர்ச்சி):

வினாயகர் ஒருவருக்கு மட்டுமே குறிப்பிட்ட உருவம் இல்லாமல் பூஜை செய்ய முடியும். 

சந்தனம் அல்லது மஞ்சளில் பிடித்து வைத்த கூம்பை (சிறு முக்கோண மலை வடிவம்) தட்டில் பிடித்து வைத்து அதையே பிள்ளையாராக பாவித்தே பல பூஜைகளும் செய்யப்படுகின்றன.

ஆகவே இரட்டைப் பிள்ளையாரை உடனடியாக தரிசனம் செய்ய முடியாதவர்கள் ஒருசெவ்வாய் கிழமையில் ஏதாவது ஒரு இடத்தில் உள்ள (ஆலயம் சிறப்பானது) அரச மரத்தின் அடியில் கெட்டியான சந்தனத்தால் அல்லது மஞ்சளினால் பிடித்து வைத்த இரண்டு பிள்ளையார்களை வைத்து தமக்குத் தேவையான வேண்டுகோளை நிறைவேற்றித் தருமாறு இரட்டைப் பிள்ளையாரை வேண்டிக் கொண்டு அந்த இரு கூம்புகளையும் இரண்டு பிள்ளையார்களாக பாவித்து அதற்கு பூஜை செய்ய வேண்டும். 

அதன் பிறகு அந்த மரத்துடன் இரண்டு பிள்ளையாரையும் பிரதட்சிணம் செய்து விட்டு வந்து விட வேண்டும். 

இப்படியாக ஐந்து செய்வாய் கிழமை பூஜை செய்ய வேண்டும். 

இடையில் ஏதாவது காரணத்தினால் தடைப்பட்டாலும் அதை தொடரலாம். 

ஆனால் மொத்தம் ஐந்து செவ்வாய் கிழமைகளில் செய்ய வேண்டும் என்பது நியமம். 

அரச மரம் இல்லாத இடத்தில் எப்படி பூஜை செய்வது? 

அரச மரம் பிள்ளையாருக்கு பிடித்தமான மரம் என்பதால்தான் எளிதில் அங்கு தோன்றி கோரிக்கைகளை ஏற்பார் என்பது ஐதீகம். 

அரச மரம் இல்லாத ஊர்களில் அங்குள்ள வினாயகரின் சன்னதியில் சந்தனத்தில் அல்லது மஞ்சளில் பிடித்து வைத்த இரண்டு பிள்ளையார்களை வைத்து பூஜை செய்தப் பின் அந்த ஆலயத்தை சுற்றி பிரதட்சிணம் செய்யலாம். 

பிள்ளையாருக்கு தனி சன்னதி இருந்தால் அதை மட்டும் சுற்றி பிரதட்சிணம் செய்யலாம். 

அடுத்த கேள்வி அப்படி பிடித்து வைக்கும் பிள்ளையாருக்கு என்ன மாதிரியான பூஜையை செய்வது?

இதுவும் மிக எளிதானது. 

பிடித்து வைக்கும் பிள்ளையாருக்கு சந்தன குங்குமம் இட்டு, மலர்கள் தூவி (அருகம் புல் விஷேசம்) உங்கள் கோரிக்கையை மனதார கூறி அவரை வேண்டிக் கொண்டு உங்களுக்கு தெரிந்த வினாயகர் தோத்திரத்தைக் கூறி பூஜிக்க வேண்டும். 

வினாயகர் மந்திரங்கள் தெரியாதவர்கள் வினாயகர் அகவலை படித்தால் போதும். அதுவே வினாயகரை பூஜிக்கும் சிறந்த ஸ்துதி ஆகும்.

ஐந்து வாரமும் புதியதாக சந்தனம் அல்லது மஞ்சளில் பிள்ளையாரைப் பிடித்து வைத்து பூஜை செய்ய வேண்டும். 

பூஜை முடிந்த பின் அதை அப்படியே அரச மரத்தடியில் அல்லது பிள்ளையார் சன்னதியில் வைத்து விட்டு வந்து விடலாம். 

தோஷம் எதுவும் இல்லை. 

அரச மரத்தடியில் பூஜை செய்த பின் ஏதாவது ஒரு கோவிலில் உள்ள வினாயகரின் சன்னதிக்குச் சென்று தம்முடையக் கோரிக்கையை அவரிடம் வைத்து அங்கேயே அவரிடம் வேண்டிக் கொண்டு, அது நிறைவேறினால் இரட்டைப் பிள்ளையாருக்கு அர்ச்சனை செய்வதாக சங்கல்பம் செய்து கொண்டு வர வேண்டும். 

ஐந்தாவது வார பூஜை முடிந்ததும் நீங்கள் எந்த ஆலயத்தில் சென்று பிள்ளையாரை வழிபடுகிறீர்களோ அங்கு உள்ள ஏதாவது ஒரு பண்டிதருக்கு வெற்றிலைப், பாக்கு, தேங்காய், பழம் சகிதம் உங்களால் முடிந்த அளவு பணத்தைத் தந்து (இருபத்தி ஒன்று, ஐம்பத்தி ஒன்று அல்லது நூற்றி ஒன்று என்ற கணக்கில்) அவரை நமஸ்கரித்து விட்டு வர வேண்டும். 

ஐந்து செவ்வாய் கிழமைகளிலும் அப்படி செய்யத் தேவை இல்லை. 

ஐந்தாவது வார இறுதிப் பூஜைக்குப் பிறகே அதை செய்ய வேண்டும். 

ஐந்து வார பூஜை செய்தப் பின் மீண்டும் அதை செய்ய வேண்டியது இல்லை. 

பிரச்சனைகள் மெல்ல மெல்ல விலகத் துவங்கும் என்பது நம்பிக்கை. 

ஆனால் நிச்சயமாக அதீதப் பயன் இதில் உண்டு என்பது மட்டும் நிச்சயம். 

ஐந்து செவ்வாய் கிழமைகள் பூஜை முடிந்தப் பிறகு எப்போது முடிகிறதோ இதற்குக் காலக் கெடு கிடையாது , நீங்கள் செல்லும் எந்த ஊரிலாவது உள்ள இரட்டை பிள்ளையார் ஆலயத்துக்குச் சென்று உங்களுடைய அதே கோரிக்கையை அவரிடம் மானசீகமாகக் கூறி அவருக்கு அர்ச்சனை செய்து விட்டு வந்து விடலாம். 

கூடுமானவரை அதையும் செவ்வாய்க் கிழமை அன்று செய்வதில்தான் அதிகப் பலன் உண்டு. 

இன்னொரு முக்கியமான விஷயம். ஐந்து வார பூஜையையும் செவ்வாய் கிழமையில்தான் செய்ய வேண்டும்.

இரட்டை பிளளையாரை வழிபட வேண்டிய பரிகார முறைகள்:

திருவோண நட்சத்திரத்தில் இரட்டை பிளளையாருக்கு மாம்பழங்கள் நிவேதனம் செய்து ஏழை   தம்பதிகளுக்கு அளித்தால் கணவன் மனைவி உறவு மேம்படும்.

திருவாதிரையன்று ,வில்வ மாலை தொடுத்து இவரை வழிபட்டால் நோய் நொடிகள் குணமாகும்.

பஞ்சமி திதியில் பஞ்சாமிர்த அபிஷேகம் செய்து வழிபட்டால் கடன் பிரச்சினை தீரும்.

ஒவ்வொரு மாத ரோகிணி நட்சத்திரத்தின் போது சந்தனத்தை தங்கள் கைகளாலேயே அரைத்து இரட்டை பிள்ளையார் செய்து வணங்கினால் கடன் தொல்லை நீங்கும்.

சங்கட ஹர சதுர்த்தியன்று ,விரதமிருந்து இரட்டை பிள்ளையாரை வழிபடுவதால் லக்ஷ்மியின் அருளும் கிடைக்கும்.

திருமணத்தடையை போக்குவதில் இரட்டை பிள்ளையார் சிறப்பு வாய்ந்தவர்.

திருமணத் தடை நீங்க திங்கள்தோறும் 16 வாரங்கள் எண்ணெய் விளக்குயேற்றி இரட்டை பிள்ளையாரை வழிபட  வேண்டும்.

குறிப்பிட்ட நாளுக்குள் நல்ல சேதி வரும்.

செவ்வாய் கிழமை நாக தோஷம் உள்ளவர்கள் வணங்க தோஷம் விலகும்.

சனிக்கிழமை பழம் வைத்து இரட்டை பிள்ளையாரை வழிபட்டு வந்தால் சனி தாக்கம் குறையும்.

மயிலாடுதுறை அருகிலுள்ள திருவேள்விக்குடி ஆலயத்தில் உள்ள இரட்டை பிள்ளையாரின் பெயர் சங்கல்ப வினாயகர் என்பது. அவரை ஆதி வினாயகர் என்றும் கூறுகிறார்கள். 

இங்குள்ள பிள்ளையாருக்கு தேய்பிறை சதுர்த்தி திதி, திருவோணம், திருவாதிரை, விசாக நட்சத்திரங்களும், திதிகளில் பஞ்சமியும் விஷேசமான தினங்களாகக் கருதப்படுகிறது. 

இந்தப் பிள்ளையாருக்கு திருவோண நட்சத்திரத்தில் மாம்பழங்கள் நெய்வேத்தியம்  செய்து ஏழைத் தம்பதிகளுக்கு தானம் செய்தால், கணவன்-மனைவி உறவு பலப்படுவது மட்டும் இல்லாமல் குடும்பத்தில் மகிழ்ச்சியும் பொங்கும். 

திருவாதிரை நட்சத்திரத்தன்று வில்வ மாலை போட்டு வழிபட்டால் நோய் நொடிகள் குணமாகும், உடல் ஆரோக்கியம் சீர்படும். 

பஞ்சமி திதியில் பஞ்சாமிர்த அபிஷேகம் செய்து வழிபட்டால் கடன் பிரச்சினைகள் தீரும். செல்வம் பெருகும். 

விசாக நட்சத்திரத்தன்று பலவிதமான பூக்களால் தொடுத்த மாலையைப் போட்டு துதித்தால் குடும்பத்தில் சுப காரியங்கள் தடையின்றி நிறைவேறும் என்பார்கள் . 

அது மட்டும் அல்ல பெற்றோர்களை பிரிந்து வாடும் குடும்பத்தினர் இங்கு வந்து சங்கல்பம் செய்து கொண்டு பூஜித்தால் பிரிந்தவர் ஒன்று கூடுவர் என்பதும் உண்டு.

இது போல திருவையாறு ஐயாரப்பன் ஆலயத்தில் உள்ள இரட்டை பிள்ளையாரின் முன்னால் நெய் விளக்கு ஏற்றி வழிபட்டால் கல்வியில் சிறந்து விளங்கலாம் . 

பொதுவாகவே திருமணமாகாத பெண்கள் சந்தன அபிஷேகம் செய்து வழிபட்டால் திருமணத் தடைகள் நீங்கும். 

சங்கட ஹர சதுர்த்தியில் வழிபட கணவன் மனைவி ஒற்றுமை வலுப்படும். குடும்பத்தில் சுபகாரியங்கள் தடையின்றி நடைபெறும்.

திருவண்ணாமலையில் மிக பழமை வாய்ந்த கோயில்களில் இரட்டை பிள்ளையார் ஆலயமும் ஒன்று. 

கிரி வலம் செல்லும் வழியில் இந்த ஆலயத்தைக் காண முடியும். 

இந்த ஆலயம் உள்ள சாலையை இரட்டை பிள்ளையார் கோயில் தெரு என அழைக்கிறார்கள். 

இந்த ஆலயத்தில் உள்ள இரட்டை பிள்ளையாருக்கு நெய்தீபம் ஏற்றி, அருகம் புல் சாற்றி வழிபட்டால் சகல தோஷங்களும், பாவங்களும் நீங்கும் என்பது நம்பிக்கை .

மதுரை மீனாக்ஷி அம்மன் ஆலயத்தில் உள்ள இரட்டை வினாயரும் மிகச் சிறப்பானவர். 

அது போலவே திருவான்மியூரில் உள்ள இரட்டை வினாயரும் மிகச் சிறப்பானவர் .

கடலூரில் உள்ள புதுப்பாளையம் இரட்டைப் பிள்ளையார் ஆலயமும் மகத்துவமானது . 

அது போலவே திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் ஆலயத்தில் உள்ள இரட்டை வினாயரும் சிறப்பானவர் 

அவர்களை வலம்புரி வினாயகர் மற்றும் பாதிரி வினாயகர் என்ற பெயர்களில் அழைக்கிறார்கள். 

இவர்களை வணங்கினால் நவக்கிரகங்களினால் ஏற்பட்ட அனைத்து தோஷங்களும் வெகு விரைவில் விலகும் என்பது ஐதீகம் .

தஞ்சை மாவட்டத்தில் குடந்தைக்கு அருகில் உள்ள பாபநாசத்தில் உள்ள இருநூறு ஆண்டுக்கும் மேற்பட்ட ஆலயத்தில் காணப்படும் தாமோதர வினாயகர் எனும் பெயரில் உள்ள இரட்டைபிள்ளையார் 

மிக சக்தி வாய்ந்தவராக காணப்படுகிறார் .


No comments:

Post a Comment